காற்றாடிகளை வரைதல்

காற்றாடிகளை வரைதல்

— உமா —

மனதின் ஒவ்வொரு மூலையிலும் முற்றுகையிட்டு, சிறு சிறு  தாக்குதல்களாக  வெடித்து  வெளிவந்த சிந்தனைச் சிதறல்களிடம் நான் தோற்றுக் கொண்டிருந்தேன்.

உடற்சோர்வும் மனதின் கனமும் சூழல் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி என்னை நகர்த்திக் கொண்டிருந்தன.

மெல்லியதாக மழை துமிக்க  ஆரம்பித்திருந்தது.

என்னைத் தவிர அனைத்தும் துரிதமாக இயங்குகின்றதென்பது  அந்த சுரங்க ரெயில் நிலையத்தை அடைந்ததும் உணரக்கூடியதாகவிருந்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் விரைந்து  வந்த மக்கள் திரள் என்னையும் தனக்குள் விழுங்கியிருந்தது.

நான் என்னை சுதாகரித்து, படிகளின் விளிம்புகளைக்கவனமாகக் பற்றிப்பிடித்து கீழிறங்கி குறித்த மேடைக்கு வரும் போது, நான் போகவேண்டியச் ரெயினும் அங்கு  வந்து நின்றது.

கதவுகள் அகலத் திறக்க இரு மருங்கிலும் வரிசைகள் பிரிந்து நின்றன.  

ரெயினிலிருந்து இறங்கிய ஒருவர் தானிறங்கிய பெட்டியைப் பார்த்துச் சத்தமாக  ஏதோ சொல்லிக் கொண்டு எம்மைக் கடந்து சென்றார்.

காற்றில் கலந்த அந்தச் சொற்களுக்கான  பதிலாக ஆவேசமான குரலொன்று உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தது.

அந்த வார்த்தைகளின் விகுதியில் ‘துருக்கி‘ .‘அராப்‘ என்ற சொற்கள் என் காதுகளில் விழுந்தன.

வழமையான இஸ்லாமிய வெறுப்பில் உண்டான வாக்குவாதம் என்ற நினைப்பில், ரெயினின் கம்பியொன்றை பிடித்தவாறு  உரத்துப் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை நோட்டமிட்டேன்.

ஒரு மேடைப் பேச்சை நிகழ்த்துவது போல் ஆக்ரோசமாக  ஒரு கறுப்பினப் பெண் பேசிக்கொண்டிருந்தார்.

உயர்ந்த மெல்லிய தோற்றம். குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி.

முகத்தில் கடுமையும் சிந்தனையும் கலந்த ஒரு உணர்வு.

கறுப்பு ஆடைகள். ஒரு டீ சேட்டிற்கு மேல் நீண்ட கறுப்பு நிறத்திலான பின்னப்பட்ட மேலங்கி.

காலின் நுனியில் சுருக்குவைத்த தொள தொளப்பான காற்சட்டை.

ஒரு காதில் தங்க நிறத்திலான வளையம் மற்றைய காதில் சிப் ஒன்றின்  கொழுவியின்  உருவத்திலான தோடு.

தோளில் தங்கநிறத்தில் சங்கிலிகள் பொருத்திய கறுத்த தோற்பை.

அதனுடன் கறுப்பு நிறத்திலான துணிப்பையொன்று.

அவர் பேசுவது ஆங்கிலமென அனுமானித்த பின், அவர் பேச்சில் எனது முழு கவனத்தையும் குவிக்கலானேன்.

கடுஞ்சொற்களுக்குள் பொதிந்திருந்த வாக்கியங்கள் அந்த ரெயின் பெட்டியின் எல்லாத் திக்குகளிலும் விசிறி விழுந்தன.

இந்த உலகத்தில் நாளுக்கு நாள் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

உலகெங்கும் Abusers ம் Paedophileகளும்.

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.

இந்த உலகம் வஞ்சகம் நிறைந்தது.

பத்து சிறிய பிள்ளைகளை வரிசையாக நிறுத்துங்கள்.

அதில் ஐந்து சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பார்கள். 

ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

அவர் ‘சிறிய  பத்து பிள்ளைகள்’ என்று  சொல்லும் போது தனது உடலைத் தாழ்த்திக்  கைகளினால் பத்து சின்ன அசைவுகளை செய்து காட்டினார்.

அவர் குரலில் பரிவும் ஆத்திரமும் கலந்திருந்தது.

அந்தக்குரல்  நிரக்கதியற்ற ஆயிரம் குழந்தைகளின் முகங்களை நினைவில் நிறுத்தின.

அவர்களின் விசும்பல்களின் ஒலிகள்  அவரின் குரலினூடாக  எதிரொலித்தன.

அவர் பேசும்  தொனியும் லாவகமும் அவர் ஒரு ஆசிரியையாக அல்லது ஒரு நாடகக் கலைஞராக இருக்கலாம் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது.

அவரது வார்த்தைகள் இடைவெளியின்றி சரளமாக வந்து விழுந்தன.  

கூரையில் சடசடவென வேகமாக விழும் மழைத்துளிகளின் ஓசையை  அவற்றில் தரிசிக்க முடிந்தது.

நீண்ட உரைகளை ஆற்றிய பயிற்சி அவருக்கு நிச்சயாக இருக்க வேண்டும்.

நான் நினைப்பது போலில்லாமல், அவரது அறச்சீற்றம்  அவருக்கு அந்தப்பயிற்சியைக் கொடுத்திருக்கலாம்.

அவர் தனது உணர்ச்சிகளைக் கொப்பளித்து  அக்கறையற்ற உலகம் மீது உமிழ்பவராகவும் இருக்கலாம்.

அவரது வார்த்தைகளில் Assaut, Paedophile, Abuse என்ற சொற்கள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன.

அந்த ரெயின் ஒவ்வொரு தரிப்பிடத்திலும் நிறுத்தப்பட்டு, அதனது பயணத்தை தொடரும் போதும் எந்தத் தடங்களுமின்றி  அவர் பேசிக் கொண்டேயிருந்தார்.

அடிக்கடி அவர் தான் நிற்கும் நிலையை மாற்றி , எல்லா பக்கங்களிலும் அமர்ந்திருந்த தனது சகபயணிகளை நோக்கி தனது கைகளை நீட்டியும், தனது உடல் மொழியினாலும் தனது  கருத்துகளுக்கு ஒரு வெளியை  உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.

ஒரு சாகசக்காரியின்  கைகளிலிருந்து காற்றில் மிதக்கும் பந்துகளாக அவர் வார்த்தைகள்  சுழன்ற வண்ணமிருந்தன.

அந்த வார்த்தைகளில் அப்பியிருந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இளகிய மனங்களை அவர் ஒவ்வொருவரினது முகங்களிலும் தேடிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்களில் அதிகமானோர்  அவரைச்  சட்டை செய்வதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களின் முகங்களிலும் பிற்பகலிற்கான அசதி ஒட்டியிருந்தது.

அவர்கள் தத்தமது உலகங்களைச் சுமந்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

எனது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இளம் மாணவிகள் அவரைப் பார்ப்பதும் தமக்குள் ஏதோ சொல்லிச் சிரிப்பதுவுமாக இருந்தார்கள்.

எனது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த எண்ணங்களுக்கு இசைவாகவே அந்தப் பெட்டியை நிறைத்த அவரது வார்த்தைகள் இருந்தன.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  

எமது கண்கள் சந்தித்துக் கொண்டபோதும் அவர் எந்த சலனமுமின்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

“நான் எனது நாட்டைவிட்டு வெளியேறுவதற்குமுன் ஒரு சிறுபிள்ளையை ஒரு பாதிரியாரின் பாலியல் இச்சையிலிருந்து காப்பாற்றினேன்.

எனது நண்பியும் பல சிறுவர்களைக் காப்பாற்றியுள்ளாள்”

அவர் தனது கடந்த காலங்களை மீட்டெடுத்து ஒரு அழகான எதிர்காலத்தை அமைக்க எடுக்கும் பிரயத்தனமாகவே  அவரது ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கும் விசும்பல்களைச் சிரிப்பொலிகளாக மாற்றக் கூடிய வலு அவரின் குரலுக்கு இருந்தது.

தான் இறங்கவேண்டிய தரிப்பிடத்தை அண்மித்ததும்,

கனிவும் துயரமும் கலந்த  குரலில் தனது உடலைத் தாழ்த்தி ஒரு வேண்டுகோள் விடுப்பது போல் பேசினார்.

சிறுவர்கள் அப்பாவித்தனமானவர்கள். உங்கள் குரூரமான செயல்களால்  அவர்களின் மென்மையான இதயங்களைக் சுக்குநூறாக்கிக்  காயப்படுத்தாதீர்கள்.

பெண்களின் உணர்வுகளை மதியுங்கள்! 

அவர்  ரெயினை விட்டு இறங்கி,விரைந்து,   ஸ்தம்பித்துச் செல்லும் சனத் திரளிற்குள் பேசிக் கொண்டே சென்று மறைவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரது குரலின் ஓசை கேட்காவிட்டாலும் அதன் அதிர்வலைகள் என்னுள் கேட்டுக் கொண்டேயிருந்தன.

வன்முறை ..அத்துமீறல் .. துஷ்பிரயோகம்

சொற்களைவிட,   அவற்றினூடான அனுபவங்களினால் உண்டாகும் வலி தான் அவரை இவ்வாறு ஓயாது பேச வைத்திருக்கவேண்டும்.

உடலின் உபாதை என்னை மெதுவாக இயக்கினாலும்,

எனக்குள் பிரவகித்த நினைவுகளும், உரையாடல்களின் எச்சங்களும் துரிதமாக இயங்கிக்கொண்டிருந்தன.

ஒருநாள் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது மகள் தனது சகோதரனுடன் சத்தமாகச் சண்டை பிடிப்பது கேட்டது.

பாடசாலை முடிந்து வந்ததும் அன்று நடந்தவை எல்லாவற்றையும் சகோதரனிடம் கொட்டித் தீர்ப்பது அவளது வழக்கம்.

அன்று, அதே கோபத்துடன் நான் வேலை செய்துகொண்டிருந்த அறைக்குள் வந்து அண்ணா  சொல்வது எல்லாம் பொய் என்று சத்தம் போட்டாள்.

ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி, அவர்  தான் கற்பிக்கும்  ஒரு மாணவியுடன்  பாலியல் உறவில் இருந்தார் என்பதற்காகப் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தியை எனக்குக் கூறிவிட்டு, அந்த ஆசிரியர் எனக்கு கற்பிக்க வந்தால் நல்லது என்று  தனது சகோதரன் தனக்குச் சொல்லியிருந்ததாகக் கூறி,  அந்த ஆசிரியர் மேலுள்ள கோபம் எல்லாவற்றையும்  தனது சகோதரன் மீது  காட்டினாள்.

அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் முதலில் எனது மகனின் அறநெறி ஆசிரியராகவும் பின் தத்துவ ஆசிரியராகவும் இருந்தவர். முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டவர்.

ஜேர்மனியில் நடைமுறையிலிருக்கும் கல்விமுறையை கேள்வி கேட்பவர். பரீட்சைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்காதவர்.

எனது மகனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியராகவும் அவர் இருந்தார்.

நான் மகனிடம் இந்த விடயம் பற்றிக் கேட்க, “நான் என்ன செய்ய அம்மா? அவர் செய்தது மிகப்பெரிய  தவறு.

அவர் இத்தகைய வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.  ஆனால் அவர் இந்த நடைமுறையைத் தொடர்ந்திருக்கிறார்” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினான்.

இந்த ஆசிரியரின் சம்பவமும், பாலியல் சுரண்டல் பற்றிய உரையாடல்களும் அடிக்கடி எம்மைக் கடந்து போவதுண்டு.

நீண்ட நாட்களுக்குப்பின்  நான் மீண்டும் அந்த ஆசிரியரின் கதையை  இழுத்து எடுத்திருந்தேன்.

அந்த ஆசிரியருக்கும் மாணவிகளுக்கும் இடையில் காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு இருந்திருந்தால் அதை பிழையாக நினைக்கலாமா என எனது மகனிடம் கேட்டிருந்தேன்.

என்ன கேள்வி கேட்கிறாய் எனச் சினத்துடன் என்னைப் பார்த்தான். எதுவாகவிருந்தாலும் அவருக்கு அந்த மாணவி மீது Duty of Supervision இருக்கின்றது.

தனது ஆசிரியர் பதவிக்கான பொறுப்பு அவருக்கு இருத்தல் வேண்டும்.

நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியைக் கேட்டேன்.

இதே நிலமை பல்கலைக்கழகமாகவிருந்தாலும் பிழையாகுமோ என்பதே அது.

அவன் தனது தலையைத் தாறுமாறாக  ஆட்டிக்கொண்டு இன்னும் அங்கே Power Imbalance  இருக்கின்றது என அழுத்திக் கூறினான்.

என்னிலிருந்து நினைவுகள் விழுந்த வண்ணமிருந்தன.

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவை மிதிபட்டு  மிதிபட்டு சத்தங்கள்  எழுப்பின.

சாலையில் எழுந்த வாகன இரைச்சலைவிட  அவற்றின் ஓசை அதிகமாகவிருந்தது.

வீதியைச் கடப்பதற்கான  சமிக்ஞை விளக்கு சிகப்பைக் காட்டியது.

கைகளை இரு பக்கமும் நீட்டிக் கொண்டிருந்த அந்த மனித உருவத்திலிருந்து திடீரென ரெயிலில் பயணித்த அந்தக் கறுப்பினப்பெண் தொப்பெனக் குதித்தார்.

அவரது கறுப்பு நிற ஆடைகளுக்குள்ளிருந்து சிவப்புச் தீச்சுவாலைகள் எரிந்து கொண்டிருந்தன.

அவை அவலம் நிறைந்த முகங்களின்  தோற்றமாய் எரிந்து கொண்டிருந்தன.

சமிக்ஞை விளக்கு பச்சையாக மாறிய பின்பும், அவர்  எதிர்த்திசையில் என்னைப்பார்த்தபடி  நடந்து கொண்டிருந்தார்.

நான் எனது மகனிடம் கேட்ட கேள்விகளை அவரிடமும்  கேட்டேன்.

அசமத்துவ உலகின்  அதிகாரத்தின் கோரப்பற்கள் பதியப்பட்டக் கதைகளை  அவர் என்னிடம் சொல்லிக்கொண்டே நடந்தார்.

திருமண உறவில், காதல் உறவில் தொடர்சியாகப் பாதிக்கப்படும் பெண்கள் பற்றியும், அவர்கள் அந்த நச்சுவலயங்களிருந்து தப்பிக்க முடியாமல் இருப்பது பற்றியும்,

இருவரும் ஒருமித்து வாழும் உறவுகளில் பெண்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிரார்கள் என்றும், குற்றவாளிகள் நிரபராதிகளாவும், பாதிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பதுவதுமே நிகழ்கிறது என்றும்,

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்றலின் அவசியம் பற்றியும் சொல்லிக்கொண்டேயிருந்தார்.

அவரது ஒட்டிய முகத்தில் தெளிவிருந்தது.

அவர் தனது உடலை அசைத்து அசைத்து நடந்து கொண்டிருந்தார்.

அதன் விசையும் அவரின் சொற்களுக்குள் வியாபித்திருந்த அபார சக்தியும் என்னை முன்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தது.

நான் எனது வீட்டை அண்மித்திருந்தேன் .

இப்போதும் நான் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆனால் என்னை நோக்கி நடந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை.

நான் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டிடத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த அடர்ந்த பச்சை மரங்களுக்குள் அவர் மறைந்து  போயிருக்கலாம்.

வேனில் காலத்தின்  காற்றில் அவள் குரல் கலந்து  நலிவுற்றவரின் குமுறல்களாக ஒலித்துக் கொண்டிருக்கக் கூடும்.

நான் எனக்குள் எழுந்த வேகத்தை  அதிசயித்தபடி, முன்வாசலின் கதவைத் திறப்பதற்காகச் சாவியைத் தேடிக் கொண்டிருந்தேன்.