ஞானசாரவை மன்னித்து விடுதலை செய்தால் ஆபத்தான செய்தி சமூகத்தைச் சென்றடையும்

ஞானசாரவை மன்னித்து விடுதலை செய்தால் ஆபத்தான செய்தி சமூகத்தைச் சென்றடையும்

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பியபோது அவரை சாத்தியமானளவு விரைவாக வெளியில் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது ஒன்றும் எதிர்பார்க்கப்படாதது அல்ல. 

  அவர் சிறைக்குச் சென்று முழுமையாக இரு மாதங்கள் கூட கடந்துவிட முன்னதாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு இலங்கையின் மூன்று முக்கிய பௌத்த உயர்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டாக கடிதம் எழுதியிருக்கிறார்கள். 

  இந்த செய்தி வெளியானதற்கு மறுநாளே வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் சிறைக்கைதிகளின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் இல்லை என்ற செய்தியும்  வெளியானது. அதனால் தற்போதைக்கு அவர் வெளியில் வருவதற்கு சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. வேறு எவராவது ஜனாதிபதியாக இருந்திருந்தால் சிலவேளை ஞானசார கடந்தவாரம் சிறையில் இருந்து விடுதலை செய்ப்பட்டிருக்கக்கூடும். ஆனால் தற்போதைய ஜனாதிபதி இது விடயத்தில் அவசரம் காண்பிக்கக்கூடிய சாத்தியமில்லை என்றே தெரிகிறது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது அவர் எவ்வாறு நடந்துகொள்வார் எனபதையும் உறுதியாகக் கூறமுடியவில்லை.

  ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை எழுத்தில் போடமுடியாத வார்த்தைகளில் விமர்சனம் செய்ததை இப்போது ஞானசார சிறைக்குள் இருந்து நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. அவரை அவ்வாறு அவமதித்ததையும்  இன்று அவரிடமே மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டிருப்பதையும் ஞானசார சிறைக்குள் இருந்து சிந்தித்துப் பார்த்து தன்னைத்தானே நொந்துகொள்வார்   என்பது நிச்சயம்.

 ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை அவர் சிறைக்குச் சென்ற சில தினங்களுக்கு உள்ளாகவே இராஜாங்க அமைச்சர் ஒருவரினால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரின் வேண்டுகோள் பொதுவெளியில் பெரிதாக கவனத்தைப் பெறவில்லை. 

 ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஞானசாரவைப் பற்றி மகாநாயக்க தேரர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை அவரைப் பற்றி பொதுவில் மக்கள் மத்தியில் இருக்கும் அபிப்பிராயங்களின் பின்னணியில் நோக்குவதற்கு பலரும் தவறியிருக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

  ஞானசார சிங்கள பௌத்த இனத்துக்காக  குரலெழுப்பிய அதேவேளை தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு படைகளுக்கு முக்கியமான தகவல்களைக் கொடுத்தவர் என்று மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  “இலங்கையில் சகலருக்கும் பொதுவான சட்டமுறைமையை (ஒரு நாடு, ஒரு சட்டம்) நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட ஞானசார பெறுமதியான யோசனைகளை முன்வைத்தவர். அவர் தேசிய ஐக்கியம் தொடர்பில் நல்ல புரிந்துணர்வுடன் செயற்பட்டவர். குறிப்பிட்ட சில சிங்கள தேசியவாத அமைப்புக்களில் முக்கியமான பங்கை வகித்த அவர் சமூகத்தின் இதயங்களை வென்றெடுக்கவும்  சமூக ஒருங்கிணைப்புக்காவும் பாடுபட்டவர்” என்று  மகாநாயக்கர்கள் கடிதத்தில் மேலும் கூறியிருக்கிறார்கள்.

  ஞானசார சிறைக்குச் சென்றிருப்பது இது முதற்தடவை அல்ல. பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியதாக இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஹோமகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் ஞானசார புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டார். அதையடுத்து நீதித்துறையை அவமதித்ததற்காக 2018 ஆகஸ்டில் மேன்முறையிட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத்தண்டனை விதித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக அவர் செய்த மேன்முறையீட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து  அவர் சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

  ஆனால்,  ஒன்பது மாதங்களில் 2019 மே 21 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று சரியாக ஒரு மாதத்துக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை விடுதலை செய்ததற்கான காரணம் எதையும் ஜனாதிபதி கூறவில்லை.

  ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பு மனித உரிமைகள் குழுக்கள், சிவில் சமூக  மற்றும் சட்டத்துறை  அமைப்புக்களின்   கடுமையாக கண்டனத்துக்கு உள்ளானது. அந்த மன்னிப்பு பெரும்பான்மை இனவாதத்தை வேறு ஒரு மட்டத்துக்கு கொண்டுசென்றுவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறூப்பினர் எம். ஏ. சுமந்திரன் வர்ணித்திருந்தார். ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தவரை ஞானசாரவை மன்னிப்பது சிங்கள பௌத்த சமூகத்துக்கு செய்யும் ஒரு மகத்தான சேவையாக நினைத்தாரோ தெரியவில்லை.

அடுத்ததாக,2016 ஆண்டில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பிரபல்யம் வாய்ந்த ஒரு பௌத்த விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் ஞானசார இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் இழிவுபடுத்திப் பேசியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த மார்ச்  28 ஆம் திகதி அவருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனையையும் 100,000 ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது. சுகவீனத்தைக் காரணம் காட்டி அவரைப் பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்தார்.

முதன்முதலாக சிறைசென்றபோது ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்களுக்கு பின்னரே ஜனாதிபதி சிறிசேன மனனிப்பு அளித்து விடுதலை செய்தார். ஆனால் இப்போது இரண்டாவது தடவையாக அவர் சிறைக்கு சென்றபோது இரு மாதங்கள் கடந்துவிடுவதற்கு முன்னதாகவே அவரை விடுதலை செய்யவேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அந்த வேண்டுகோள் மூலமாக சமூகத்துக்கு கூறுகின்ற செய்தி என்ன? 

  சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிடுகின்ற வீராவேசமானதும் நச்சுத்தனமானதுமான  பிரசாரங்களைச் செய்கிறவர்களும் ஏனைய மதங்களை அவமதிக்கின்றவர்களும் காவி உடையை அணிகின்றவர்கள் என்பதற்காக  நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க அனுமதிப்பது உகந்ததல்ல என்பதா அந்தச் செய்தி. 

  இலங்கையில் ஞானசாரவை போன்று சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான படுமோசமான கருத்துக்களைக் கொண்ட பௌத்த பிக்குமார் காலங்காலமாக இருந்து  வந்திருக்கிறார்கள். பலமான அரசியல் பின்னணி இல்லாமல் அவர்களால் அந்தளவுக்கு அடாவடித்தனமாக நடந்திருக்க முடியாது. அவர்களின் நடத்தைகள் பொதுவில் மகாசங்கத்துக்கு அவமதிப்பையே கொண்டுவந்திருக்கிறது என்பதை மகாநாயக்கர்கள் அறியாதவர்கள் அல்ல. 

 ஆனால் பிக்குமாரில் கணிசமான பிரிவினர் பௌத்த கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக நடந்துகொள்வதையும் அரசியலில் ஈடுபடுவதையும் மகாநாயக்கர்களினால் தடுக்கமுடியவில்லை. இலங்கையில் இடம்பெற்ற அனைத்து இனவன்முறைகளின்போதும் பிக்குமார் முன்னணியில் இருந்திருக்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்பது இலங்கைக்கு ஒன்றும் புதியது அல்ல. அந்த போக்கு நவீன இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலின் வளர்ச்சியுடன் சமாந்தரமாக வளர்ந்து வந்திருக்கிறது. அதை தடுக்கவேண்டுமானால் சிங்கள அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் அங்கீகரித்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொனறைக் காண்பதற்கு முன்வந்திருக்க வேண்டும்.

  ஆனால், நாட்டுக்கு பெரும் அழிவைக் கொண்டுவந்த மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரும் கூட சிங்கள அரசியல் சமுதாயம் அத்தகைய தீர்வொன்றைக் காணவேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த அவசியத்தை சிங்கள மக்களுக்கு உணர்த்தக்கூடிய ஆரோக்கியமான அரசியல் செயற்பாடுகளை  முன்னெடுக்கக்கூடிய முற்போக்கு சக்திகளும் தென்னிலங்கையில் இல்லை.

  கடந்த வாரம் வடக்கில் இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளும் அவை தொடர்பில் தெற்கின் பிரதிபலிப்புகளும் இனப்பிளவு மேலும் ஆழமாக இருப்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

  உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பிறகு தெற்கின் இனவாத சக்திகள் தங்களது அரசியலைத் தொடருவதற்கு புதிய ஒரு இனத்துவ எதிரி தேவைப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் வடிவில் அந்த எதிரியைக் கண்டுபிடித்த இனவாதச் சக்திகள்  வெறித்தனமான பிரசார இயக்கங்களை முன்னெடுப்பதற்காக ஞானசாரவை முன்னங்கத்துக்கு கொண்டுவந்தார்கள்.

  பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பொதுபல சேனாவின் அங்குரார்ப்பண மகாநாட்டுடன் முடுக்கிவிடப்பட்ட மதவெறி ஏற்படுத்திய அனர்த்தங்களை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்திடம் இருந்து பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது என்று ஒரு தவறான எண்ணத்தை தோற்றுவித்து சிங்கள பௌத்த சமூகத்தை ஒரு முற்றுகை மனநிலைக்கு உள்ளாக்கி முன்னெடுக்கப்பட்ட  அரசியல் அதன் படுமோசமான தோல்வியை இரு வருடங்களுக்கு முன்னர் ‘அறகலய ‘ என்ற மக்கள் கிளர்ச்சியின் வடிவில் சந்தித்தது.

 சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாத ஏனைய சகல பிரிவினரதும் நலன்களுக்கும் இடையிலான போட்டியே தன்னை அதிகாரத்துக்கு கொண்டுவந்தது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மைய தனது நூலில் தெரிவித்த கருத்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக்சாக்கள் கடைப்பிடித்த இனவாத அணுகுமுறையை மணிச்சுருக்கமாக கூறுகிறது. அதற்கு பாரிய பங்களிப்பை ஞானசார செய்திருந்தார். அதனால் அவர் ராஜபக்ச ஆட்சியில் சட்டத்துக்கு பயப்படாமல் எதையும் பேசவும் எதையும் செய்யவும் கூடியதாக இருந்தது.  

  ஆட்சிமாற்றம் ஒன்று இடம்பெறாவிட்டால் ஞானசாரவுக்கு இன்றைய கதி ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை. 

  கோட்டாபயவின் ஆட்சியில் முழு நாட்டுக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டம் ஒன்றை வரையும் பணி ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக ஞானசார நியமிக்கப்படும் அளவுக்கு ராஜபக்சாக்களுக்கு தேவையானவராக அவர் விளங்கினார் என்பது மாத்திரமல்ல அவரைப் போன்ற நிதான புத்தியில்லாத ஒருவரின் வழிநடத்தலில் வரையப்படக்கூடிய சட்டம் ஒன்றை முழுநாட்டுக்கும் பொதுவானதாக்கவும் ராஜபக்ச தயாராக இருந்தார்கள்.

  பௌத்த மதத்தின் கோட்பாடுகளுக்கும் பொதுவில் மகாசங்கத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பிக்குமார் அரசியல் உயர்மட்டத்தின் முழுமையான அனுசரணையைக் கொண்டவர்களாகவே நெடுகவும் இருந்து வந்திருக்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மறுக்கும் அரசியலை முன்னெடுப்பதற்கு  முன்னரங்கப் படைகளாக பிக்குமார் விளங்கிவருகிறார்கள்.

 மட்டக்களப்பு ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் நெடுகவுமே அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடுபவர். இதை முழு நாடும் அறியும். கிழக்கில்  சில மாதங்களுக்கு முன்னர்  நடுவீதியில் நின்று  தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என்று ஆவேசமாக கதறினார். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப்  பற்றி எவரோ அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் மறுநாளே தனது செயலுக்கு மன்னிப்புக்கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டார். 

 ஆனால் அவரது ஆவேசப்பேச்சு வெறுமனே ஒரு மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதோ மன்னிக்கப்படக்கூடியதோ அல்ல. அவரைப் போன்று வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் காடைத்தனமாக நடந்திருந்தால்  அவரை பொலிசார் எவ்வாறு நடத்தியிருப்பார்கள்? சட்டம் அவர்களை என்ன செய்திருக்கும்? 

அரசியல் அனுசரணை இல்லாவிட்டால்  ஞானசார போன்ற பிக்குமார் முழு இலங்கைச் சமூகத்துக்குமே அவமதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அடாவடித்தனமாகச் செயற்பட்டிருக்கமுடியாது. இலங்கைச் சமுதாயம்  அரசியலில் இருந்து மதத்தை பிரிக்காவிட்டால்  நாட்டுக்கு எதிர்காலமே கிடையாது. ஆனால் அதற்கான எந்த நம்பிக்கையையும் வளர்க்கக்கூடியதாக இலங்கையில் நிலைவரங்கள் இல்லை என்பது பெரும் கவலைக்குரியது.

 இறுதியாக ஞானசாரவுக்கு மீண்டும் மன்னிப்பு அளித்து சிறையில் இருந்து விடுதலை செய்தால் ஆபத்தான செய்தியை சமூகத்துக்கு கூறுவதாக இருக்கும்.

(ஈழநாடு )

_____________________