உச்சி முகர்ந்து

உச்சி முகர்ந்து

 — கருணாகரன் —

கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் சிலருக்கு  ஒரு பருவத்தில் ஏற்படுவதுண்டு. அப்பொழுது அவர்கள் பொதுவெளியில் தாங்கள் கேட்ட, அறிந்த, படித்த கவிதைகளின் சாயலில் தங்களுடைய முதற் கவிதைகளை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் கவிதைகள் பொதுவெளியில் ஏற்கனவே உலாவிக் கொண்டிருக்கும் அல்லது நிலவிக் கொண்டிருக்கும் கவிதைகளோடு இணைந்தவையாக அல்லது சமாந்தரம் கொண்டவையாக இருக்கும் என்பதால் அவை கவிதையாக எழுதியவராலும் அவருக்கு நெருக்கமாக இருப்போரினாலும் உணரப்படும் அல்லது அப்படி நம்பப்படும். இந்த நம்பிக்கையோடு எழுதப்பட்ட கவிதைகளை பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு அனுப்புவார்கள். அவை பிரசுரமாகும். பத்திரிகைகள் எப்போதும் தங்களுடைய விற்பனையை எல்லாவகையான வியாபார உத்திகளோடும் இணைத்துச் செயற்படுகின்றவை என்பதால் அவற்றுக்கு எதுவும் லாபத்துக்கான துருப்புகளே. அந்த வகையில் இவ்வாறான கவிதைகளையும் அவை ஏற்றுப் பிரசுரிக்கும். அதன் மூலம் தங்களுடைய வாசகர் எல்லையையும் அதில் பங்கேற்போரின் அளவையும் கூட்டிக் கொள்ளும். 2000 ஆண்டு காலச் செழுமையான இலக்கியப் பாரம்பரியமுள்ள கவிதையில் இவை எந்த வகையானவை என்று அவை யோசிப்பதில்லை. அதற்கு அவற்றுக்கு அவசியமுமில்லை. 

அனுப்பப்பட்ட தங்களுடைய கவிதை பிரசுரமாகியிருக்கிறது என்றால் தங்களுடைய கவிதை அங்கீகரிக்கப்பட்டது, ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நம்பிக்கை எழுதியவருக்கு ஏற்பட்டு விடுகிறது. அவர் தொடர்ந்தும் அந்தத் தளத்தில் நின்றே தன்னுடைய கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் அவற்றை நூலாகத் தொகுத்து வெளியிட்டால் என்ன என்ற எண்ணம் ஏற்படும். அதற்கு குடும்பத்திலோ நட்புச் சூழலிலோ ஆதரவு கிடைக்குமானால் உடனடியாகவே புத்தகமும் வந்து விடும். வெளியீட்டரங்கிற் கூட அந்தக் கவிதைகளைக் குறித்துப் பேசுவோர் சம்பிரதாயமாக நாலு பாராட்டு வார்த்தைகளைச் சொல்வதற்கு முற்படுவார்களே அன்றி, அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுக முற்படுவது இல்லை. அல்லது குறைவு. இதனால் மிக நீண்ட காலமாக அதனுடைய இலக்கியத் தன்மையைப் பற்றியோ இலக்கியத்தில் அதற்கான இடம் என்ன என்றோ அவரால் அறிய முடியாது. அதற்கான வாசிப்பையும் உரையாடலையும் அவர் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கும் வரையில் இந்த நிலையே நீடிக்கும். இப்படியான ஒரு சூழலே இங்கே பொதுவாக உள்ளது.

இதேவேளை இவ்வாறான கவிதைகளை எழுதுவதை ஆதரித்து ஊக்கப்படுத்துவதை ஒரேயடியாக நாம் மறுதலித்து நிராகரித்து விடவும் முடியாது. மிகச் சாதாரணமான – பொருட்படுத்தவே முடியாத கவிதைகளையும் வரிகளையும் பத்திரிகைகளில் (பொதுப்பரப்பில்) எழுதிய பலர் பின்னாளில் சிறந்த கவிஞர்களாக மாற்றமடைந்திருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையளித்து தொடர்ந்து எழுத்தில் இயங்கக் கூடிய ஆர்வத்தை இந்தப் “பிரசுரிப்பும் அதன் மூலமான ஏற்பும்” அளிப்பதால் அவர்கள் அந்த உற்சாகத்தின் வழியே ஊக்கமடைந்து  செயற்பட்டு, மாற்றங்களைக் கண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு நிலையில் பத்திரிகைகளுக்கு ஒரு இடமுண்டு. ஆனால், இதை அவை அந்த நோக்கத்தில் செயற்படுத்துவதில்லை. அப்படியான உயர்ந்த எண்ணத்தோடு  செயற்படுமாக இருந்தால் குறைந்தது, இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் இலக்கியம் குறித்த ஆழமான பார்வைகளைக்  கொண்ட கட்டுரைகளையோ விமர்சனங்களையோ அறிமுகங்களையோ அவை வெளிப்படுத்தும். விலக்காக ஒன்றிரண்டு பத்திரிகைகள் அபூர்வமாகச் சில சந்தர்ப்பங்களில் அப்படிச் செயற்பட்டிருக்கின்றன. மற்றும்படி வெகுசனப் பத்திரிகைப் பண்பாட்டியல்பின்படி அவை மிக மேலோட்டமாகவே அனைத்தையும் பார்க்கின்றன – வெளிப்படுத்துகின்றன. ஆகவே ஆளுமையுள்ளவர்கள் மட்டுமே இதிலிருந்து தங்களை மேலே கொண்டு செல்கின்றனர். ஏனையோர் அப்படியே நின்று  கொள்கின்றனர். பலர் காணாமலே போய் விடுகிறார்கள்.

ஆரம்ப நிலை எழுத்தில் சிலர் அபூர்வமாக ஆழத்துக்கும் உச்சத்துக்கும் விரிவுக்கும் செல்வதுண்டு. சிலருக்கு நீண்டகாலம் எடுக்கும். சிலரால் ஆழத்துக்கும் விரிவுக்கும் செல்லவே முடியாது. இன்று தமிழின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரினின் ஆரம்பக் கவிதைகள் மிகச் சாதாரணமானவை. ஆனால் அவருடைய இரண்டாவது தொகுதி அவரை வேறொரு இடத்தில் அமர்த்தியது. அதற்குப் பிறகு அவருடைய பயணம் வேறு. இன்று அவர் அடைந்திருக்கும் இடம் உச்சம். என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகளும் மிக எளிய பத்திரிகைக் கவிதைகளே. ஆனால் பின்னாளில் நவீன இலக்கிய இதழ்களின் அறிமுகத்தினாலும் அவற்றில் இயங்கியோரின் தொடர்புகளினாலும் அவற்றை விட்டு விலகி, வேறிடத்துக்குச் செல்ல முடிந்தது. அப்படித்தான் இங்கே, திரு. ஜ. மதிவளனின் கவிதைகளையும் அவரையும் பார்க்கிறேன். இவற்றைப் படிக்கும்போது ஒரு குழந்தையின் ஆரம்ப நிலைச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது உண்டாகும் மெல்லிய புன்னகை அகத்தில் எழுகிறது. கூடவே வளரும் எதிர்கால இளைய மனமொன்றின்  நம்பிக்கைக் கீற்றும். மதிவளன் நாற்பதுகளில் இருக்கிறார். அவருடைய தொழில் முயற்சியும் எழுத்தில் தென்படும் ஊக்க மனதும் கவனித்துப் பாராட்ட வேண்டியது. தன்னுடைய உடல் ரீதியாக உள்ள இயற்கைச் சவாலை எதிர்கொண்டவாறே அவர் இவற்றைச் செய்கிறார்.

புதிதாக எழுதத் தொடங்குவோர் பெரும்பாலும் தமது சொந்த அனுபவங்களிலிருந்தே அதைச் செய்வதுண்டு. கவிதை என்றால் அம்மா, காதல், இயற்கைச் சூழல், சமூக அநீதி அல்லது சமூகப் பரப்பில் காண்கின்ற விடயங்கள் போன்றவற்றை எளிய மொழியிலும் எளிய விவரிப்பிலும் சொல்லி விட முயற்சிப்பதுண்டு. புதிய எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கான பயிலரங்களில் பங்கு கொண்ட அனுபவத்திலும் இதைக் கவனித்திருக்கிறேன். அதிலும் பதின்பருவங்கள் அல்லது வளரிளம் பருவத்தில் இதுதான் அவர்களுடைய அகராதியாக இருப்பதுண்டு. இங்கும் மதிவளன், அதையே செய்திருக்கிறார். முதற் கவிதையே ‘அம்மா’ தான். இன்னொரு கவிதை ‘காதல்’. ஏனையவை முன்சொன்னவையே. இதை அவர் தானறிந்த வடிவத்தில், தனக்கு வாய்த்த – பொருந்திய – மொழியில் எழுதியிருக்கிறார். பலதும் வாய் விட்டுச் சத்தமாகப் படித்து இன்புறக்கூடிய பாடலை ஒத்த வடிவத்திலானவை. கேட்போர் லயிக்கக் கூடியவை. உணர்ச்சி வெளிப்பாடு கூட அப்படித்தான் உள்ளது. உள்ளது உள்ளபடியே. ‘எச்சைப் பிறவி’ என்ற கவிதையில், “மார்கழி மாதத்து நாயா நீ – உளவளம் குன்றிய ஆளா / பாவம் தானடா பச்சை மண் – உன் இச்சை தாங்குமா பிஞ்சுடல்…” என்று சிறார் மீது பாலியல் சேட்டை விடுவோரை (துஸ்பிரயோகம் செய்வோரை) ஆக்ரோஷமாக, வெளிப்படையாக எழுதுகிறார். இந்தத் தன்மைதான் ஏனைய பல கவிதைகளிலும். ஓசையும் இசைவுமுள்ள மொழிதலை – வெளிப்பாட்டை தன்வயப்படுத்த முயன்றுள்ளார் மதிவளன். அவரைப்பொறுத்தவரையில் சமூகத்தில்  சிலர் செய்கிற வேலையோ மிகக் கீழ்த்தரமானது. மிகக் கொடூரமானது. இதற்கு எதற்கு அழகிய சொற்களும் வெளிப்பாடும்? என மதிவளனோ பிறரோ கேட்கக் கூடும். இந்த மாதிரிப் பிரச்சினைகளை மட்டுமல்ல, எந்தப் பிரச்சினைகளையும் இலக்கியத்தில் உள்ளடக்கலாம். இலக்கியத்தின் வழியே வெளிப்படுத்தலாம். அதற்குரிய அடிப்படைத் தன்மைகள் உண்டு. நாம் பார்க்கின்ற நிறங்கள் எல்லாம் ஓவியமாகுவதில்லை. அல்லது நாம் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நல்ல ஒளிப்படங்களாக அமைவதில்லை. அவற்றுக்கென்று ஒரு ஒழுங்கும் வரன்முறையும் சட்டகமும் கோணமும் ஒளியும் வண்ணக் கலவையும் நிறத்தேர்வும் வெளிப்பாட்டு முறையும் உண்டு. அவை எல்லாம் சரியாக அமைந்தால்தான் அவை ஓவியம் அல்லது ஒளிப்படம். அவற்றை ரசிப்பதற்கும் அதற்கான புரிதல் சற்றேனும் தேவை. அப்படித்தான் நாம் பேசுகின்ற, எழுதுகின்ற மொழி அப்படியே இலக்கியமாகி விடுவதில்லை. நெல் அரிசியாவதும் அரிசி சோறாவதும் சோறு, கறி உள்ளிட்ட ஏனைய பொருட்களோடு உணவு ஆகுவதும்போலத்தான் கவிதை – இலக்கியச் செயற்பாடும். 

மதிவளனின் உளத் துடிப்பையும் அது உணரும் பிரக்ஞைப் பரப்பையும் கொண்டு அவரை நாம் மதிக்க முடியும். இலக்கிய வெளிப்பாட்டில் தன்னை அவர் நெறிப்படுத்திக் கொள்வதன் மூலம் அந்த மதிப்பை அவர் மேலுயர்த்திக் கொள்ளலாம். அது அவசியமானது. இது அவருக்கு முதற்காலடிகள். அதற்கான எல்லைகளும் அழகும் உண்டு. தத்தித் தவழ்ந்து கை வண்டியைப் பிடித்து நடை பழகுவதைப்போல. அடுத்த கட்டமாக அவர் தனக்கான தனி அடையாளத்தோடு தனியாக நடக்கத் தொடங்க வேண்டும். அதற்கான சாத்தியங்கள் அவருக்குண்டு என்று எண்ணுகிறேன். அவரைச் சூழ்ந்திருக்கும் இலக்கிய நண்பர்களான எஸ்.ஏ. உதயன் போன்றோருக்கு அந்தப்  பொறுப்புண்டு. வாசிப்பும் தேடலும் தீவிரமான தொடர்ச்சியான உரையாடல்களும் மதிவளனை வளப்படுத்தட்டும். விரிவடையச் செய்யட்டும். ஆழத்தையும் உச்சத்தையும் அவர் உணர்ந்தெழ வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *