இமிழ் ; கதை மலர்

இமிழ் ; கதை மலர்

 — அகரன் —

இமிழ் என்றால் ‘இனிதான முழக்கம்’ என்ற பொருள்‌. ‘முழக்கம்’ எப்படி இனிதாகும்? என்ற கேள்வி எழும். ஒருசொல்லை உருவாக்குவது அப்படி ஒன்றும் இலகுவானதல்ல. பழந்தமிழரின் பாடல்களில் எங்கெங்கு‘இழிழ்’ பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்து இனிய முழக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

கடற்கரையை பலரும் விரும்புவர். நாம் எவ்வளவு சிறியவர் என்று அறிவித்தபடி கடல் இருக்கும். கடலை பார்க்க முதலே அதன் ஓசை காதுக்கு வந்துவிடும். அந்த அலைகளின் இசையை ‘இழிழ்’ என்கிறது ‘பாடு தமிழ் பனி கடல் பருகி…’என்ற பழந்தமிழ்ப் பாடல்.

உலகமெல்லாம் சூரியனை பூமி தொலைக்கும் நேரத்தில் சில பறவை இனங்கள் கூட்டமாக இருந்து அன்றைய பகல் பற்றிப் பேசுவதை கேட்டிருப்பீர்கள். இரவு அருகே வந்ததும் அந்தச் சத்தங்கள் படிப்படியாக குறைந்து அமைதியடையும். அந்தப் பறவைகளின் கூட்டு ஒலி.. ‘யாணர் புள் இமிழ்ந்து அன்னமரம்..’ என்கிறது பழம் பாடல்.

ஆறு, நதி முறிந்து விழும்போது கத்தும். அந்த செயலுக்கு ‘அருவி’ என்று பெயர். அது நதியின் அபய ஒலியா? குதித்து விளையாடும் உற்சாக ஒலியா? என்பது வீழும் நதிக்கு மட்டுமே தெரியும். அப்படி அருவியின் குரலுக்கும் ‘இமிழ்’என்று பெயர். ‘ஏழிலி நோயும் தமிழ் இசை அருவி…’

முரசு தன்னை அறிவிக்கும்போது ‘டம்’ என்று ஆரம்பிக்கும். அது தொடர்ந்து பேசும்போது பண்டைய வள்ளுவர் குடியின் வான் கேட்கும் இசை எல்லோரையும் நின்று கேட்கவைக்கும். ‘ பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை..’ என்ற புறநானூற்று வரிகள் இமிழின் பொருளை அறிவிக்கிறது.

இதை படிக்கும்போது இமிழ் என்றால் ‘இனிய‌ தொடர்முழக்கம் ‘ என்று பொருள் கொள்ளலாம்.

இப்படி ஒர் இனிய அரிய சொல்லை இச்சிறுகதைகளின் தொகுப்பிற்கு பெயர் வைத்தவர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். ஆனால் ராகுகாலம் பார்த்து வைத்தார்களா தெரியவில்லை அது பிறந்த அன்றில் இருந்து அது கேள்விகளால் தாக்கப்படுகிறது. பதில்களால் காக்கப்படுகிறது.

நமக்கு வேலை ‘இனிய முழக்கம்’ பறவைகளின் பாடலா? கடலின் இசையா? அருவியின் சங்கீதமா? முரசின் உறுமலா என்று பாதுகாப்பு கவசங்களோடு சென்று பார்வையிடுவதே !

நான்கு கண்டங்களைச் சேர்ந்த பத்து நாடுகளில் வாழும் இருபத்தைந்து எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் முழங்குகின்றன.

மீதி மூன்று கண்டங்களிலும் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் எதற்காக எழுதவில்லை என்பது ஆராய்ச்சிக்கு உட்படுத்தவேண்டியது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று கணியன் சபித்ததின் விளைவு தமிழ் மொழிக்கு நாடு இல்லை. பிரபஞ்சமே நாடாகும் கொடுப்பினை தமிழ் மொழிக்கு. கணியனின் கணிப்பை இட்டுந்தான் ஆச்சரியம் கொள்ளவேண்டும்.

இப்படி ஒரு தொகுப்பை வரும் காலத்தில் யாராவது தைரியமாக தொகுக்க முடிந்தால் மீதி மூன்று கண்டங்களிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களை தேடி‘பிரபஞ்ச இமிழ்’ என்று எழுத வாய்ப்பு உருவாகும்.

1, சைபர் தாக்குதல். -அ. முத்துலிங்கம் 

இத்தொகுப்பில் உள்ள மூத்தவரும் அவராகத்தான் இருப்பார். ஆனால் கதை இளமை பற்றியது. கனடாவில் கள்ளக்காதலனுடன் ஓடிப்போன 18வயது மகளின் இளம் கதை. 

எப்போதும்போல மென்மையான சொற்களுக்குள் புன்னகையை வைத்து கதை சொல்லும் வல்லமையும் அவரிடம் ஊறிவிட்டது.

ஆசிரியர் ‘உட்காராதே எழும்பி நின்று பதில் சொல்! என்று எச்சரித்தார். இவர் ‘நான் எழும்பித்தான் நிற்கிறேன் சேர்’ என்றார். அவரது தோற்றதத்தை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும் ?.

..கிரேக்கத்தின் ஹைரோகிளிஃபிக்ஸ் மொழி அழிந்து 1500 வருடத்தின் பின் உயிரூட்டப்பட்டு இன்றும் வாழ்கிறதே !

‘நான் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்தேனா ? உனக்குத்தெரியுமா கனடா தான் சட்டவிரோதமாக உருவானநாடு..’

ஒரு ‌விஞ்ஞானியும்‌ உலகின்‌ கடைசி சிங்கமும் இருக்கிறபோது யாரை‌ காப்பாற்றும் ‌முடிவை எடுப்பீர்கள்?..

’முத்தத்தை முடித்துவிட்டு பதில் எழுத்கிறேன்’ என்ற வரிகள் சர்வதேச தமிழின் புதிய கொடை.

Truffle உலகில் அதிக விலையான காளான். அதன் எண்ணையில் வறுத்து கோழி உணவு எத்தனை ருசியோடு இருக்கும் ?

‘நாரை பறப்பது போல கழுத்தை முன்னே நீட்டிவரவேற்றாள்..’

இறுதியில் ‘அற்ப விசயம் ‌ஒன்று கொடுக்கும் அற்ப சந்தோஷத்திற்காக அற்ப காரியம் ஒன்றை செய்யலாம்’ என்று முடியும் கதை. சகா‌ ஏன் அப்படிச் சொன்னார்‌ என்று மீண்டும்‌ மீண்டும்‌ சிந்திப்பதில் கதையை நம்மீது படர விடுகிறது.

2,, (எனது கதை. ஆதலால் நானே எழுதுதல் நெஞ்சுவலியை ஏற்படுத்தும்.)

3, அன்னிய மரம் – உமா வரதராஜன்.

சிறுவயதில் இருந்தபோது அந்த மனதை நிறைத்த பெண்மருத்துவர் மிஸிஸ் சமரசிங்க வின் நினைவுகளை காலம் ஓடிநிற்கும் நாளில் நினைவு வாய்க்காலில் ஓடவிடப்படும் கதை. இறுதியில் அவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சியில் முடிகிறது. 

‘என் அப்பாவைப்போல இந்த டொக்டரும் ஒரு ‘வந்தேறி’. இந்த உலகத்தில் எவ்வளவோ நாடுகள் இருந்தும் கல்கத்தாவில் இருந்து டொக்டரும், மதுரையில் இருந்து எனது அப்பாவும் ஏன் இவ்வளவு குழப்பமும், இனக்குரோதமும் மிகுந்த இந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்?’

சித்திரமாக காட்சிகளையும் மனிதர்களையும் கொண்டுவந்து டொக்டரின் உடலைக்காவும் சிறுவனை மனதில் கீறிவிட்டதில் அந்நியமில்லாத நெருக்கத்தை எழுத்தின் உயிர் தந்தது.

4, மஹர் – ஓட்டமாவடி அறபாத்.

ராவியாவின் கணவர் வண்டில்காரன் காதர் கோவிட் காலத்தில் யானை அடித்து மூளை சிதறி மரணமடைந்தார். 

மையத்தை தூகக்கும்போது ‘நான் மஹரை ஹலாலாக்குறன் நீங்கள் எனக்கு கடனாளி இல்லை’ என்று அவள் சொல்ல வேண்டும். அவள் திருமணத்தின்போது 101 ரூபாவிற்கு மஹர் கொடுக்கப்பட்ட நினைவுக் குறிப்பு மஹர்.

5, வெண்சுடர் -கருணாகரன்.

கடற்கரை நிலத்தில் தாயுடன் வாழும் போராளிப்பெண் பற்றிய கதை.

மனநல பயிற்சியாளர்கள் வெண்சுடரை தேடிப் போவதும், அவளைப்பற்றி அறிய முயல்வதும் கதை. மனநிலையில் தீவிரம் கொண்டிருக்கிற வெண்சுடர் 1990 இல் போராளியாகி 1998 இல் காலில் காயமேற்பட்டு 2011 இல் தடுப்பில் இருந்தவந்து தாயுடன் வாழ்கிறாள். 

அவள் மனநிலையின் தீவிரம், சங்கேத வார்த்தைகளால் கடிதம் எழுதி கடலில் யாருக்கு விடுகிறாள்? தனது தோழி மலையருவியைப் பற்றி இத்தனை ஆண்டுகளாக ஏங்கி இருக்கும் அவள் இதயம் எங்கே உலாவுகிறது? என்று கதைபேசுகிறது. புதிய உலகைக் காண வாழ்வை கொடுத்துவிட்டு தனி உலகில் வாழும் பெண்போராளியின் சித்திரம் வாசிக்கும் கண்களை குத்தும். கடலைப் பற்றி இத்தனை தெளிவாக பேசும் மனம் அவளிடம் இருக்குமா? என்பது கவிதை.

‘வெண்சுடர்’ என்ற பெயர் உண்டு. அப்படி ஒரு சுடர் உண்டா ?  

6, கன்னி ரத்தம்- சப்னாஸ் ஹாசிம் 

மந்திர, தந்திர பூசை, வெட்டப்பட தயாராகும் மாடு, பலிக்காக தேடப்படும் பெண், ‘பரிகாரமற்று சாப நிவர்த்தி, கன்னி ரத்தத்தால் பூரணமாகியது’ -அமானுச உலகில் நுழைந்து வியர்வையோடு வெளிவரும் கதையில் குருதி உறைகிறது.

7,கரித்தெமலோ -சாதனா சகாதேவன்.

‘நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்’ என்ற வரியுடன்ஆரம்பிக்கும் வில்வரத்தினத்தின் கதை.

தென் இலங்கையில் வில்வரத்தினம் எதிர்கொண்ட அவமானம், இழப்பு அவரைத் தனித்தமிழீழத்தின் பக்தன்ஆக்குகிறது. அதை தினமும் கனவு காண்கிறார். எப்படியாவது அந்த தேசம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இறுதியில் புலம்பெயர்ந்து பிரான்சில் தஞ்ச வாழ்வில் தமிழீழத்திற்கு பதிலாக லா சப்பல் இன்னொரு தமிழீழமே என்று திருப்தி கொள்கிறார்.

எந்த ‘கரித்தெமலோ’ என்ற வார்த்தைக்காக அவமானத்தால் நொந்து தமிழீழ கனவில் தன்னை தீவிரமாக்கினாரோ அதே வார்த்தையை தன்னோடு பிரான்சில் வேலை செய்யும் தமிழனுக்கு சொல்லிட்டு வெளியேறுவதில் அதிர்ந்து அடங்குகிறது கதை. தெளிந்த நடை. இனிய கதை சொல்லல் முறை.

8, சஹரானின் பூனைகள் – சித்தாந்தன்.

தலைப்பிலையே கதை இருக்கிறது. குறியீடுகளால் நிறைந்து குறியீடுகளால் உறைந்து கிடக்கும் கதை.

9,கோதுமை முகங்கள் – செந்தூரன் ஈஸ்வரநாதன்.

கோதுமை நிறத்தில் அம்மா. (அப்படி ஒரு மனித நிறம் இருக்கிறதா தெரியவில்லை. வெள்ளை காகத்தைக் காணவில்லை என்பதற்காக இல்லையென்றும் இல்லை.) அம்மாவின் நிறத்தில் தான் இல்லை என்று ஏங்கும் சிறுவன். தாய் காதலனுடன் போனபின் வளர்க்கும் பெண்னின் மகளான ஷைனியுடன் வாழ்கிறான். கனவுகளில் வரும் சுவர் பூராக வரைகிறான். அனாதரவான மனதின் கனவுகளின் முகங்களை வரையும் கதை. கோதுமை முகங்கள் உடைந்துவிடும். சுவர்களில் அவன் கீறுகிறான்.

10, சிவப்பு நிற உதட்டுச்சாயம் -டானியல் ஜெயந்தன்

வன்னி யுத்தத்தில் யாருமற்ற இரு குழந்தைகள் ஓர்‌ ஆச்சியுடன் வவுனியாவில் வளர்கின்றனர். அவர்களில் பெரியவள் குமாரி. சிறியவளின் ஏக்கங்களில் கதைவருகிறது. பெரியவளின் சுதந்திரம் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று ஏங்கும் பெண்ணின் மனதை கதை பேசுகிறது. சருமம் நல்ல மாவு நிறம் ‌என்ற உவமைதான் இங்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

11, எட்டுக்கிழவர்கள் – தமயந்தி 

இலம்பங்குடா பற்றிய சித்திரம். அங்கு வாழும் ஏழு முதியோரும், கருடனும்  முக்கியமானவர்கள். வலம்புரிதீவில்1000 ஆண்டுகளாக வாழும் கருடன் வானில் ஏன் ‌சுற்றியது ? சொக்கட்டான் சாமியாரை கடத்தியது யார் ? எதிர்காலத்தை கடந்தகாலமாக எழுதிப் பார்க்கும் கதை முயற்சி. இலம்பங்குடா பற்றிய பதிவுகள் சிறப்பு.

12, செவ்வாத்தை -, தர்முபிரசாத்.

இயக்கத்துக்கு போன அக்கா பேரூந்தில் இருந்து இறங்கி தோட்டத்தை நோக்கி வருகிறாள். தோட்டத்தில் வேலையில் நின்ற தம்பி அவளை இனங்கண்டுவிட்டான். 

அக்கா இயக்கத்துக்கு போனது, அதன்பின் அப்பா , அம்மா அதை எதிர்கொண்ட விதம், யுத்த நிறுத்த காலத்தில் அவள் வீட்டுக்கு மீண்டு வந்திருந்தபோது தான் இயக்கத்துக்கு போய்விடவேண்டும் என்று ‌முடிவெடுப்பது, 1500 ஆண்டுகால சிவந்த இரத்தினக்கல்லை தன் அறையில் வைத்து அணிந்து இருப்பது, பெட்டியில் இருந்த ஆபரணங்களை அணிந்து பார்ப்பது அதை கதவின் இடைவெளியால்பார்க்கும் கண்களின் குறியீட்டில் அக்காவை செலவ்வாத்தையாக்கும் கதை.

13, கொலைத் தருணம் – தாட்சாயணி

குறியீடுகளாக மனம் அலையும் எதிரி பற்றிய விசாரணை. புதுமுயற்சி. கதை தேடும் கதை.

14, கௌரவம் -திருக்கோவில் கவியுகன்.

அக்காச்சி நஞ்சு குடித்து இறந்து போனாள். தம்பியின் மீது அளவற்ற பாசம் கொண்டவளின் இறப்பில் உள்ள மர்மத்திலும், அவளுக்கு பிடித்த பேயின் தன்மையும் உணர்ந்த தம்பி அக்கா படுகொலை செய்யப்பட்டாள் என்பதை அறியும்‌ முடிவு. சிறந்த கதையமைப்பு.

15, காத்திருப்பின் புதிர் வட்டம் -தேவகாந்தன்.

தன் சகோதரங்கள் எல்லோரையும் ‘வெளியில் எடுத்துவிட்டு’ திருமணம் செய்யாது முதுமையில் வாழும் ஒருவரின் காத்திருப்பின் மர்மத்தை தேடும் கதை. மூன்று தலைமுறை இயல்புகளை கோடு கீறுகிறது.

16,வடக்கத்தியான்.-தொ.பத்திநாதன்.

தமிழில் ஒழிக்கப்பட வேண்டிய வார்த்தை. வரலாற்றை நன்குபுரிந்து கொள்பவர்களுக்குத் தெரியும் வேடுவ மக்களைத் தவிர இலங்கையில் உள்ள எல்லோருமே பாக்கு நீரிணை தாண்டி வந்த பரம்பரைகள் என்பது. இந்த சொல்லின்பிரசன்னத்தை சொல்லாமல் சொல்லும் கதை.

17, ஆகிதம் – நவமகன்

நோர்வே நிலத்தோற்றத்துடன் அகதிகளின் கதை. அவர்கள் கடந்தகாலத்தில் மன இயல்புகளும், மனிதப்பெயர்ப்புகளும் பேசுபொருள். சத்தியநாதனுக்கு ஏற்பட்ட மூளை மணக்கும் நோய் நம்மீது நாம் தெளித்த அழுக்கு. சுடப்பட்டு சிதறிய தலைகளுக்கு கீழ் இருந்து எழுவது கதையின் நரம்புகள் நடுங்கும் காட்சி. தன்னினப்பகை. மூன்று கதைகளின் முடிச்சுக்கள் ஆகிதம்.

18, அக்கி மரத்தின் மீது சத்தியமாக.-நஸிகா முகைதீன்.

அக்கி மரமும் : உம்மா, உம்மம்மா, வாப்பா, ஊர் , ராத்தாவுக்கு அதனுடனான தெடர்பும் பற்றிய குறிப்புகள்.

19,இராமர் வில் – நெற்கொழுதாசன் .

கறுப்பி குளத்தின் மதகில் இருந்து இராமர் வில் காட்டச்சென்ற மதுரா இந்திய ராணுவத்தால் தவறாக சுட்டுக் கொல்லப்படுகிறாள். அருகே இருந்த விடுதலை காட்டுக்குள் காடாகின்றான். யுத்தம் முடிந்ததும் கைது செய்யப்படுகிறான். காட்டுக்குள் பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கும் எலும்புக்கூட்டின் மர்மம் தேடபப்டுகிறது. அந்த எலும்புக்கூடு தமிழகம் கொண்டுசெல்லப்படுகிறது. குறியீடுகளால் இராமர் வில்லை அழகாக வளைக்கும் கதை. 

20,இமாலயக்கடன் – றோயல் நடேசன்.

அவுஸ்ரேலியாவில் விலங்கு வைத்தியராக இருந்தவர் ஓய்வுபெற்ற பின்பு நடந்த கொலையை அறிந்தும் அதை மறைக்க விரும்பியது பற்றிய சுய விசாரணை. தேர்ந்த சொற்கள். சிறந்த கட்டமைப்பு. எளிய சொற்களில் வலியகதை.

21, தடம் -பா.அ.ஜயகரன்

புலம்பெயர்ந்த வாழ்வில் கிடைக்கும் வரம் தடம் போன்ற கதைகள். கனடாவின் வடக்கில் வசந்தகால நடைப்பயணத்தின் அனுபவம், ஓநாயுடனான தொடர்பு, கனடாவின் பூர்வகுடிகள் பற்றிய சித்திரம். மூன்று நிலைகளில் புதிய உலகை தமிழ் வாசகனுக்கு காட்டும் தடம்.

22,தொய்யோ –

‘ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு பிரபஞ்சம்’ என்று ஆரம்பிக்கும் கதை பெற்றோர்‌ அற்று வளரும் பெண் சமூகவலைத்தளங்களில் பாலியல் உறவுகளில் ஈடுபடும் வீடியோக்கள் ஒருபுறம், அவள் யதார்த்தம் மறுபுறம் என்று தெய்வமாக்கும் முயற்சி தொய்யோ.

23,சாயா – றஸ்மி

சாயா என்ற பெண்ணின் வாழ்வு, எதிர்கொண்ட‌ எல்லாவகை அளறுகளும் அவள் மொழியில் பேசும் கதை.

24,,ஃபெர்ன் – ஷர்மிளா ஸெய்த்

ஓர் ஆண்டில் நடந்த ஆறாவது மரணம் வசந்தியுடையது. அதன் பட்டியல் வாப்பா மௌத்தாகிய நினைவுகளூடு பயணித்து மரணம் பற்றி உரையாடுகிறது.

25 மரச் சிற்பம் -ஷோபாசக்தி

பிரெஞ்சு சொல்வழக்கில் மரச்சிற்பம் என்றால் கில்லட்டின். அப்படியென்றால் கொலைத்தண்டனை வழங்கும் கழுத்துவெட்டி இயந்திரம் என்று சொல்லலாமா ?

ஒரு பத்திரிகை செய்தி மூலம் கதையை  எப்படி கட்டமைப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் இக்கதை‌. எது தேவையோ அதை அட்சரம் பிசகாமல் வாசகனை தாக்கிவிடும் கதை. பிரெஞ்சு புரட்சி பற்றி ஆழமாக அறிந்தவர்களுக்கு மனவெளியின் புரட்சி ரத்தங்களை தெளிக்கும் கதை.

1977 இல் இறுதியாக நிறைவேற்றபப்பட்ட தண்டனை யின்காட்சிகளும், காலில் தலை முளைத்திருபப்துபோல் இருக்கும் வெட்டப்பட்ட தலையும் வாசித்தால் அனபெல் அம்மையார் எஞ்சிய வாழ்வை என்ன செய்வாரோ தெரியவில்லை.

கதைகள் இலங்கையில் அம்பாறையில் ஆரம்பித்து கறுப்பி குளம், கட்டுக்கரைகக்குளம் , யாழ்ப்பாணம், தமிழகம், பிரான்ஸ், நோர்வே, கனடாவின்‌ வட துருவம் வரை பயணிக்கின்றன. துருவ ஓநாய்கள் வழிமறித்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. தொகுப்பின் சிறப்பே உலகின் நிலங்கள் பதிவாகும் அழகும், அம்மனிதர்களின் தமிழ் வரவும்தான்.

சில கதையின் போர்வையில் கட்டுரை வெளியேவந்து விடுகிறது. கதைக்கு அவசியமற்ற எல்லாம் வெட்டி அகற்றப்படாமல் வீணே தொங்கி வாசகனை சினம் கொள்ளவைப்பதில் வெற்றி அடைகிறது.

கதை மலரில் சில பூக்கள் பூக்கும்போது வாடிவிடுகின்றன. வாடாத பல பூக்கள் இருக்கும் தமிழ் கதை மலர் இமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *