ஈஸ்டர் படுகொலை….!இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்: ஒரு பார்வை….! (மௌன உடைவுகள்-82)

ஈஸ்டர் படுகொலை….!இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்: ஒரு பார்வை….! (மௌன உடைவுகள்-82)

” THERE IS ONLY ONE THING THAT IS MORE EXPENSIVE IN THE LONG RUN THAN EDUCATION; NO EDUCATION”    – JOHN F. KENNEDY.

சிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் என்ற நூலின் முன் அட்டையின் உட்பக்கத்தையும், பின் அட்டையின் வெளிப்பக்கத்தையும் எடுத்த எடுப்பில் புரட்டியபோது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கென்னடியின் மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

“இஸ்லாம், அல்லாஹ், பள்ளி வாசல், நோன்பு என்னும் வார்த்தைகளைத்தவிர முஸ்லீம்கள் பற்றிய மேலதிக வாசிப்புக்களுக்கான வாய்ப்புக்களோ சந்தர்ப்பங்களோ என் வாழ்வில் இதுவரை கிடைத்திருக்கவில்லை ………” 

இது நூலாசிரியர் சிவ.சந்திரகாந்தனின் தேடலுக்கான தொடக்கப்புள்ளி.

“ஒரு குழந்தைப்போராளி, வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய அரசியல் இயக்கம் ஒன்றின் தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர், ஐந்தாண்டுகால அரசியல் தடுப்புக்காவல் கைதி, பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் என்று அனுபவப் பெருங்கடலில் நீந்தி வந்த இவர் அண்மைக்காலமாக ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகின்றார்…”.

 சந்திரோதயம் வெளியீட்டகத்தின் பதிப்புரை வாசகம் இது.

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தில் கொண்ட வேட்கையினால் கல்வியை தியாகம் செய்து, போராட்டத்தில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்ட -இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளில் பிள்ளையானும் ஒருவர். இவர் பள்ளிப்படிப்பை விடுதலைக்கு  விலையாகக்கொடுத்த சிறுவர்களுள் ஒருவர். “படிக்காதவன்” என்று மேலாதிக்க அரசியல் எதிரிகளால் நையாண்டி செய்யப்பட்டவன். அன்று “வேட்கை” இன்று”ஈஸ்டர் படுகொலை இன நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்” என்று இரு நூல்களை வரிசையாக எழுத முடிந்தது எப்படி?

விடுதலைப்போராட்டத்திற்கு பள்ளிப்படிப்பை விலையாக கொடுத்த போதும், போராட்ட களக்கல்வி தந்த அனுபவ  பாடங்களால் கற்றுக்கொண்டவன் பிள்ளையான் என்பதே இதற்கான பதில். “அவர் சிறையில் இருந்த காலத்தினை நிறைந்த வாசிப்புக்கும் தேடல்களுக்குமாக பயன்படுத்திக்கொண்டதன் ஊடாக தன்னைத்தானே புடம் போட்டுக்கொண்டவர்” என்று  கூறுகிறது சந்திரோதயம் வெளியீட்டகம்.

இதைத்தான் MARK TWIN  “வாசிக்கத்தெரிந்தும் வாசிக்காமல் இருப்பவனுக்கும், வாசிக்கத் தெரியாதவனுக்கும் வித்தியாசம் இல்லை” என்கிறார். இன்னொரு வளத்தில் சொன்னால் “வாசிப்பு மனிதனாக்குகின்றது”.

இந்நூலானது, பிள்ளையான் சிறையிலிருந்த காலத்தில் இடம்பெற்ற “ஈஸ்டர் படுகொலை” பற்றியதான தகவல்களில் தொடங்கி இலங்கை முஸ்லிம்களிடத்தே மதத்தீவிரவாதமும் அரேபிய மயமாக்கலும் உருவாகி, அது  வஹாபிஸ  வன்முறையாக வளர்ந்து வந்த வரலாறு பற்றிய அடிமுடி தேடும் ஒரு ஆய்வாக விரிகிறது. மேலும் இஸ்லாம்/வஹாபிஸம் பற்றிய தெளிவான வரலாற்று புரிதல்களை இலகு தமிழிலான மொழிநடையில் அதற்கே உரித்தான அரபு மொழி சொற்களுடன் கூடிய மொழி வளத்துடன், பேசு பொருளை சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் பாணி சிறப்பானது.

இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வாசகன் சமூகம் சார்ந்த வரலாறு, பண்பாடு, மதம், கலாச்சாரம், அரசியல் போன்ற வற்றுடன், சில பக்கங்களில் சுவாரசியமான கவிதை, சிறுகதைகளுக்கூடாகவும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சில பக்கங்களில் தர்க்கரீதியான விவாதம் காட்சியாகிறது. தேசியம், பிராந்தியம், சர்வதேசியம்  ஊடாக வாசகர்களை இழுத்துச் செல்லுகின்ற ஒரு ஈர்ப்புவிசை இந்த எழுத்துக்கு இருக்கிறது. ஆக ஒன்றரைபக்க ‘புளியந்தீவு’ பற்றிய சிறிய குறிப்புக்குள் முழுப்புளியந்தீவும் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது.

பொதுவாக நூல்களில் அணிந்துரை, வாழ்த்துரை,அறிமுகவுரை, ஆசியுரை என்று “சால்வை போடுபவர்கள்” பல பக்கங்களை விழுங்கிவிடுவார்கள். அப்படியன்றி வழக்கமான சம்பிரதாய “தடவல்களை” தவிர்த்து எடுத்த எடுப்பிலேயே சீரியஷாக விடயத்திற்கு வருகிறார்  நூலாசிரியர். இது  பிள்ளையான்  என்ற புதிய படைப்பாளிக்கேயுரிய ஒரு புதிய போக்கு. தான் சார்ந்த  சமூக, பொருளாதார அரசியலில்  மட்டும் அல்ல இலக்கியத்திலும் ஒரு புதிர், ஒரு புதுமை, ஒரு புதுயுகம்.

“மணியோசையும்,அணிவகுப்பும் பொதுவாக பலரது வாழ்வில் ஒரு முறைதான் அனுபவமாக அமையும்,  எனக்கோ மும்முறை. பாடசாலையில், போராட்ட களத்தில், சிறைச்சாலையில் என்று ஆசிரியர் குறிப்பிடுவதன் பின்னணியில் வெவ்வேறு தளங்களில் இருந்து பெற்றுக்கொண்ட மும்மடங்கு அனுபவம் வெளிப்படுகிறது. படிப்பறிவை போராட்டத்திற்கு தியாகம் செய்தாலும், மும்மடங்கு பட்டறிவு தனக்கு இருக்கிறது என்பதை பிள்ளையான் இந்த வார்த்தைகளின் மூலம் சொல்லாமல் சொல்லிவிட்டு நிற்கவில்லை செயலில் நிரூபிக்கின்றார்.

“புனிதர்களை கட்டமைப்பதே அடிப்படை வாதத்தின் முதல்வேலையாகும்.

புனிதர்கள் உருவாக்கப்படும் போது மறு புறத்தில் அது “துரோகங்கள்” அல்லது துரோகிகளின் அரசியலையும் கட்டமைக்கின்றது. காலப்போக்கில் அந்த “துரோகங்களும் துரோகிகளும்” அழிக்கப்படவேண்டியவை என்ற வன்முறைக்கு தூபமிடப்படுகின்றது. இவ்வாறு வன்முறையைக் கையில் எடுக்கும் அடிப்படைவாத சக்திகள் முதலில் தமது சொந்த மக்களில் குறித்த ஒரு பகுதியினரையே பலி கொள்வார்கள்” என்ற மேதகு அரசியலை – சுவர்க்கத்தை அடைவதற்கு வன்முறையே வழியென்ற மார்க்க அடிப்படைவாதத்தை வாசகர்களுக்கு ஈஸ்டர் படுகொலை இன மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் தோலுரித்து காட்டுகிறது. இது ஈழப்போராட்டத்தில் சகோதரப்படுகொலைக்கு முதன்முதல் துப்பாக்கியை தூக்கியவர்களையும், அதன் விளைவுகளையும் நினைவூட்டுகிறது.

329 பக்கங்களும்  வெளியீட்டுரை,  தேடலுக்கான தொடக்கப்புள்ளி, புளியந்தீவு, ஈஸ்டர் படுகொலை, உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய அரசு, இஸ்லாம், இலங்கை இந்திய ‘தவ்ஹீத்’எழிச்சி, காத்தான்குடி , அரேபிய மயமாக்கலும் பண்பாட்டு மாற்றமும், ஐ.எஸ் ஆதரவு அமைப்பின் உருவாக்கம், நல்லாட்சி அரசும் பொறுப்புக் கூறலும், மட்டக்களப்பில் இடம்பெற்ற சிலையுடைப்புக்கள், ஈஸ்டர் தாக்குதல் ஐனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, ஒலுவில் பிரகடனம் ……என பலவற்றை  சுமந்துநிற்கின்றன. 

ஒவ்வொரு அத்தியாயமும் , தலைப்பும் அள்ளித்தருகின்ற தகவல்கள், புள்ளி விவரங்கள், புகைப்படங்கள், ஆதாரங்கள், பட்டியல்கள், உசாத்துணைகள் அனைத்தும் இந்த நூல் ஒரு அரசியல், சமூக பண்பாட்டு வரலாற்று ஆவணம் என்று பறைசாற்றுகிறது. இதில் கூறப்படுகின்ற எந்த ஒரு கருத்துக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்க வேண்டிய வேலை வாசகர்களுக்கு இல்லை. அவர்கள் ஆதாரங்களை தேடவேண்டியதும் இல்லை. அடிக்குறிப்புக்கள், திரு- குர் ஆன் வாசகங்கள், 33 உசாத்துணை ஆவணங்கள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகை நறுக்குகள், போட்டோக்கள் என பலவும் மேலதிக தகவல்களை வாசகர்களுக்கு தருகின்றன. 

வெளிப்பார்வைக்கு காத்தான்குடி ஒரு  “அமைதியான இஸ்லாமிய கோட்டை”. ஒன்று திரண்ட ஒரு இஸ்லாமிய சமூக கட்டமைப்பு என்ற தோற்றத்தை இந்நூல் கேள்விக்குட்படுத்துகிறது. கோட்டைக்குள் புகுந்தால் இஸ்லாத்தின் பெயரால் அங்கு  முஸ்லிம் சமூகத்தில் நிலவுகின்ற பிரிவுகளை, மத அமைப்புகளுக்கு இடையிலான போட்டியை, மத தலைவர்களின் அதிகாரத்திற்கான போட்டியை, மதம் கடந்த செயற்பாடுகளை, வன்முறைக்கான அறைகூவல்களை, மாற்று பல்லின கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் மீதான வெறுப்பை ஒரு சில அடிப்படைவாத குழுக்கள் தங்கள் கைகளில் கொண்டிருந்து இருக்கிறார்கள். 

போட்டி குழுக்களுக்கிடையே நிறைய வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இவை கொலையில் முடிந்திருக்கின்றன.  ஈஸ்டர் படுகொலை சூத்திரதாரி ஷஹ்ரான் பல தடவைகள் அமைப்பு விட்டு அமைப்பு மாறியுள்ளார். பல தடவைகள் அமைப்புக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இது காத்தான்குடி முஸ்லிம் சமூகம் இவரது வஹாபிஷ கொள்கையை – வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நிர்வாகம், சட்டம் ஒழுங்கில் இக் குழுக்களே அதிகாரம் செலுத்தி உள்ளன. அதற்கு அரசியல் துணையாக இருந்திருக்கிறது. ஷஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவும், ரவூப் ஹக்கீமும் கைகுலுக்குகிறார்கள். இது வெறும் மரியாதைக்குரிய குலுக்கலா…..?

 காத்தான்குடியில் மட்டும் அல்ல  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டு மொத்த  பெரும்பாலான முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த வன்முறைகளுக்கும் தொடர்பில்லை. வன்முறை முஸ்லீம் சமூகத்தின் கரங்களை கட்டிப்போட்டிருக்கிறது. தாக்குதல்கள், கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள், துரோகிகள்…… என்ற வன்முறை அணுகுமுறையை சாதாரண மக்களால், அவர்கள் விரும்பினாலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இது மக்களுக்கான ஜனநாயக மறுப்பை, கருத்து சுதந்திரத்தை, மனித உரிமைகளை வன்முறை மூலம் நசுக்க முனைகின்ற அமைப்புக்களின் பொதுநிலை. இது இனம், மதம், மொழி கடந்த பொதுப்போக்கு. இந்த அனுபவம் ஈழப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் அறியாத ஒன்றல்ல.

ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்  வெளிவருவதற்கு முன்னரும்,வெளிவந்த பின்னரும் வாசிக்காமலேயே சிலர் வெளியிட்ட கருத்துக்கள் போன்று முஸ்லிம்களுக்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ  இந்நூல் எதிரானதல்ல. அரபுலகில் மையங்கொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயன்படுத்தி மாற்று மதங்கள், கலாச்சாரங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறை ஆயுதக்குழுக்களையும், இந்த சர்வதேச பயங்கரவாதநோய் எவ்வாறு இலங்கை போன்ற பல்லின கலாச்சாரப் பின்னணிகளைக்கொண்ட   ஒருங்கிணைந்த சமூகங்களின் வாழ்வை , இன நல்லிணக்கத்திற்கு முரணாக இன மத முரண்பாடுகளை விதைத்து  குண்டு வைத்து சிதைக்கிறது  என்பதை பேசுகிறது. 

ஈஸ்டர் படுகொலை பற்றிய இந்த நூலின் அட்டைப்படத்தில் ஷஹ்ரானின் படத்தைப் பார்த்து இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்பவர்களும், திருஞானசம்பந்தர் போன்று ஞானப்பால் குடித்தவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். அட்டைப்படம் சொல்லும் செய்தி நூலின் தலைப்போடு சாலப்பொருந்துகிறது. சிதறுண்ட இலங்கைத்தீவில் ஒரு புறம் ஐ.எஸ்.பாணியில் ஷஹ்ரானும், மறுபுறம் யேசுநாதரும் நிற்கிறார்கள். இது இரு எதிர்நிலை சித்தாந்தத்தை வன்முறை – அகிம்சை, காழ்ப்புணர்ச்சி -அன்பு, போர் -சமாதானம்….. என்பனவற்றின் அடையாளமாக உள்ளது. 

சிதறுண்ட – பிளவுபட்ட – குண்டு வைத்து தகர்க்கப்பட்ட  சமூக நல் உறவில் நான்கு கரங்கள் ஒன்றை ஒன்று கெட்டியாக பற்றிக்கொள்கின்றன. இது இன-மத நல்லிணக்கத்தின் அடையாளம். இது பொதுவாக இலங்கை வாழ் முக்கிய நான்கு இனமக்களினதும்/ நான்கு மதங்களினதும் ஐக்கியத்தை வலியுறுத்துகிறது. சிறப்பாக மட்டக்களப்பு இந்த நான்கு இன, மத சமூகங்களினதும் வாழ்விடம். 

குறிப்பாக மட்டக்களப்பு பறங்கியர்கள் கணிசமான அளவில் வாழும் நகர். நகரின் மையப் பகுதியில் தான் உயிர்த்தஞாயிறு படுகொலைக்கு இலக்கான சீயோன் தேவாலயம் இருக்கிறது. இது இஸ்ரவேல் – யூத ஆதரவு தேவாலயம் என்பதனால் தான் தாக்குதல் இலக்காகி இருக்கிறது என்று கருதப்படுகிறது. இதன் பாதிரியார்  விபரிக்கின்ற ஈஸ்டர் தின காட்சிகள் ஒரு திரைப்படம் போன்று வாசகர்களை இழுக்கின்றது.

எந்த ஒரு இடத்திலும் முஸ்லிம் மக்களை-இஸ்லாமியர்களை மரியாதைக்குறைவாகவோ, அவர்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளையோ தேடியும் காணமுடியாது.  எனினும் , உண்மையில் இது ஒரு உளவியல் சார்ந்த மதிப்பீடு அதை சம்பந்தப்பட்ட சமூகம் ஒன்றே தீர்மானிக்க முடியும் என்பதையும்  மௌன உடைவுகள் மறுக்கவில்லை. மிகவும் சிக்கலான, உணர்வு பூர்வமான இந்த விடயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தனிமைப்படுத்தி பேசுவது அவ்வளவு இலகுவான தல்ல.  கத்திமுனையில் நடப்பது போன்றது. அப்படியிருந்தும் இந்நூல் அதை சாதித்திருக்கிறது என்றே கொள்ளவேண்டும்.அதனால்தான் இதற்கு பெயர் ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்.  இந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி கண்டுள்ளாரா என்பதை இருதரப்பு பிரதிபலிப்புக்கள் மூலம்  எதிர்காலமே நிர்ணயிக்கும். இந்த நூல் பற்றி முக்கியமாக முஸ்லீம் ஆய்வாளர்கள்- விமர்சகர்கள் தங்கள் பார்வையை பேசவேண்டும்.

பல்வேறு இன,மத, கலாச்சார, பண்பாட்டு சமூகவாழ்வில் அருகருகே வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களும், அவற்றின் மதங்களும் அன்யோன்யம் பேணும் போது ஒன்றின் தாக்கம் இன்னொன்றில் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இவற்றிற்கு இடையே சீனப் பெருஞ்சுவரையோ,  ஜேர்மனியின் சுவரையோ கட்டி “தூய்மை” பேசமுடியாது. இந்த பரஸ்பர நெகிழ்ச்சிப்போக்கை வஹாபிஷம் நிராகரிக்கிறது. அதுவும் அந்த இலக்கை சமூகங்களை அச்சுறுத்தி வன்முறை மூலம் அடைய முனைகிறது. அல்லது சகோதர சமூகங்களை எதிரியாக அழிக்க முயற்சிக்கிறது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. 

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நூலாசிரியர் சந்திரகாந்தனின் சாட்சியம் உட்பட , மேலும் முக்கிய சாட்சியங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஈஸ்டர்படுகொலையின்போது  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் நிர்வாகம் குறித்து சில கேள்விகளை நல்லாட்சி அரசும் பொறுப்புக்கூறலும் என்ற பகுதியில் ஆசிரியர் எழுப்புகிறார். கோத்தபாய ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் – ஐ.எஸ்.அமைப்புக்கள் மீதான கடுமையான கண்காணிப்பை ஜனாதிபதி சிறிசேன தளர்த்தினார் என்று கூறப்படுகிறது. அதற்கு பொறுப்பாக இருந்த இராணுவ -புலனாய்வு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நல்லாட்சி காலத்தில் 2016 இல் ஐ.எஸ் .ஆதரவு காத்தான்குடியில் ஆரம்பமானது. அது முதல் 2019.04.21 வரை காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற செயற்பாடுகள் ஆசிரியரால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.

காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கில் நடாத்தப்பட்ட ஐ.எஸ்.ஆதரவு ஒன்று கூடல், நௌபர் மௌலவியின் வெள்ளிக்கிழமை ஐ.எஸ்.ஆதரவு சொற்பொழிவு, காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற ஒன்று கூடல், ஐ.எஸ்.அமைப்புக்கான ஆட்சேர்ப்பு, குண்டு தயாரிப்பில் ஏற்பட்ட விபத்து, ஆரையம்பதி கோயில் சிலையுடைப்பு, சைனிமௌலவியின் பெண்களுக்கான ஜிகாத் ஒன்று கூடல், தாழங்குடாவில் பைசிக்கிள் குண்டு வெடிப்பு என பல நிகழ்வுகளை ஆசிரியர் பட்டியல் இட்டுள்ளார்.

 இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டது என்கிறார் நூலாசிரியர். ஜனாதிபதி சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடு அரசாங்க நிர்வாக இயந்திரத்தை இரண்டாகப்பிளந்திருந்தது. இதனால் ஏற்பட்ட அதிகாரிகளுக்கிடையிலான பிளவு இலங்கையின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

ஈஸ்டர் படுகொலை குண்டு வெடிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் முதல் வத்திக்கான் வரை நிறைய தொடர்புகளை இன்னும் கொண்டிருப்பவர் பேராயர் மல்கம் ரஞ்ஜித். அவருடைய வாக்குமூலங்கள் குறித்தோ, அவரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தோ இந்த நூல் எதையும் பேசாதது ஆச்சரியமாக உள்ளது. அசாத் மௌலானாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பேராயரின் கருத்துக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆகக்குறைந்தது மட்டக்களப்பு ஆயரின் இது குறித்த கருத்துக்களும்,  காத்தான்குடி பெரிய பள்ளிவாசல்  இஸ்லாமிய மதத்தலைவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருந்தால்  இந் நூல் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

இந்த நூலில் கூறப்படுகின்ற இரு விடயங்களான மட்டக்களப்பு சிலையுடைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸின் ஒலுவில் பிரகடனம் குறித்து அடுத்து வரும் பதிவுகளில் மௌனம் உடைக்கப்படும். இவை மட்டக்களப்பின் சமூக, பொருளாதார,அரசியல் சார்ந்து ஈஸ்டர் படுகொலைக்கும் அப்பால் முக்கியமானவை. ஐ.எஸ். வன்முறையைக்கடந்து சிவில் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய சமூக நல்லிணக்கம் சார்ந்தவை.

இந்த நூலின் முடிவுரையும் வழக்கத்திற்குமாறாக அமைந்திருக்கிறது. ஆசியராக அதனை நிறைவு செய்யாது ஷஹ்ரான் தாக்குதல்தாரிகளுக்கு இறுதியாக ஆற்றிய 2.05 நிமிட சத்திய பிரமாண உரையுடன் நிறைவு பெறுகிறது.

இதற்கு பிறகு கேட்டது குண்டுச்சத்தம் தான்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *