— வீரகத்தி தனபாலசிங்கம் —
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமா அல்லது பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்காக தேர்தல்கள் தாமதிக்கப்படுமா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன..
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அண்மையில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தபோதிலும், ராஜபக்சாக்கள் பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்ற வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்சவுடனும் பசில் ராஜபக்சவுடனும் முதலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி அமைப்பது தொடர்பிலோ அல்லது தேர்தல்கள் தொடர்பிலோ அவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் அக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பெருமளவானோர் முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்பட்டது. பசில் அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய பிறகு அந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது. ஆனால், அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதியை இணங்கவைக்க ராஜபக்சாக்களினால் முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
பசில் ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியைச் சந்தித்தபோது பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அவரிடம் முன்வைத்தார். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்னதாக பொதுஜன பெரமுனவினதும் அதன் நேசக்கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவது குறித்து உடனடியான தீர்மானம் ஒன்றை ஜனாதிபதியிடம் எதிர்பார்க்கவில்லை என்று ஊடகங்களுக்கு பசில் கூறினார். மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என்றே அவர் கூறுகிறார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2025 ஆகஸ்ட் — செப்டெம்பர் காலப்பகுதியில்தான் நடத்தப்படவேண்டும். ராஜபக்சாக்கள் விரும்புவது போன்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அந்த தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாராளுமன்றத்தை தற்போது கலைக்குமாறு ஜனாதிபதியைக் கோருவதற்கு சபையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரணையொன்றை நிறைவேற்ற முடியும். ஆனால், அதற்கு கட்டுப்பட்டு அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைப்பதற்கான அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலிலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இணங்கமாட்டார்.
அதேவேளை, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்கள். ஐந்து வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் அவர்கள் கலைப்பை விரும்பமாட்டார்கள்.
தங்களது ஆட்சிக் காலத்தில் எப்போதுமே ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்ற தேர்தலை நடத்திய ராஜபக்சாக்கள் தங்களது தற்போதைய நிலைப்பாட்டை நியாயப்படுத்த விசித்திரமான காரணத்தை முன்வைக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலை நடத்தினால், புதிய ஜனாதிபதியின் கட்சிக்கே மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்கள் என்பதால் அவர்கள் நிதானமாகச் சிந்தித்து அறிவுபூர்வமாக வாக்களிப்பதை உறுதிசெய்வதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலே நடத்தப்படவேண்டும் என்று அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பசில் கூறினார்.
தங்களது ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களுக்கு பிறகு நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் அறிவுபூர்வமாக வாக்களிக்கவில்லை என்பதை இதன் மூலமாக அவர் ஒத்துக்கொள்கிறார்.
அது மாத்திரமல்ல, 2010, 2020 பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு தங்களது குடும்பத்தின் அதிகார நலன்களை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு திருத்தங்களையும் ஜனநாயக விரோத சட்டங்களையும் கொண்டுவருவதற்காக சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கட்சித் தாவல்களை ஊக்குவிப்பதில் தனது முக்கிய பாத்திரத்தை மறந்தவராக அவர் தற்போது பேசுகிறார்.
அண்மைய எதிர்காலத்தில் தங்களால் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் அடுத்த பாராளுமன்றம் தாங்களும் செல்வாக்கு செலுத்தக்கூடிய முறையில் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் பசில் மக்கள் அறிவுபூர்வமாக வாக்களிப்பதை உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் முற்றுமுழுதான அதிகாரத்தின் பாதகங்கள் குறித்தும் பேசுகிறார் என்பது தெளிவானது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குரல் கொடுத்திருக்கிறார்.
” எமது யோசனை ஏற்றுக்கொள்ளப் படாவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெறும். அது நாட்டுக்கு நல்லதல்ல. தேர்தல்களுக்கு பிறகு நாட்டில் நியாயமான சூழ்நிலையொன்று இருக்கவேண்டியது முக்கியமானதாகும்” என்று அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இனிமேல் எந்த கட்சிக்கும் கிடைக்கக்கூடாது என்பதே ராஜபக்சாக்களின் விருப்பமாக இருக்கிறது என்பதை சகோதரர்களின் கருத்துக்களில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் தங்களது கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் முன்னர் பேசியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அவ்வாறு பேசுவதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். தங்களது கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனால், பலம்பொருந்திய அடுத்த அரசாங்கம் ஒன்றை ராஜபக்சாக்கள் விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் அடுத்த ஜனாதிபதியின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறக்கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்படுவதை விரும்பவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பின் விளைவாக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி நம்புகிறது.
அமைப்புரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் அந்தக் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் அவரின் கட்சியின் வாய்ப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற ராஜபக்ச சகோதரர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதி கருத்து எதையும் இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. தேர்தல்கள் தொடர்பில் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதை தவிர ராஜபக்சாக்களுக்கு வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
மீண்டும் விக்கிரமசிங்க (தங்களின் ஆதரவுடன்) ஜனாதிபதியாக வந்தாலும் கூட அவரது அரசாங்கம் உறுதியானதாக இருப்பதை ராஜபக்சாக்கள் விரும்பப்போவதில்லை. தேர்தல்களுக்கு பிறகு நாட்டில் நியாயமான சூழ்நிலை பேணப்படவேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று அவர்கள் கூறினாலும் சஞ்சலமான அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதே தங்களது நலன்களுக்கு உகந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
பொதுஜன பெரமுனவும் ஜே வி.பி.யுமே வலுவான அமைப்புரீதியான கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பொதுஜன பெரமுனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுமே போதுமான மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கின்றன என்று தொலைக்காட்சி நேர்காணலில் பசில் கூறினார். ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியான கட்டமைப்புக்களும் மக்கள் ஆதரவும் இல்லாவிட்டாலும் அதனிடமே சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கள் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து செயற்படுவதே இரு தரப்பினருக்கும் பயனுடையதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார் என்பதன் வெளிப்பாடாகும். ஆனால், அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரிய வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக முதலில் அந்த தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருக்கிறது. சூழ்நிலைகள் எல்லாமே எல்லாக் காலத்திலும் தங்களது நலன்களுக்கு வசதியானதாக இருக்கவேண்டும் என்று விரும்புவது ராஜபக்சாக்களின் சுபாவம்.
தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் எந்த அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைப்பது சாத்தியமில்லை என்றே பெரும்பாலான அண்மைய கருத்துக் கணிப்புக்கள் கூறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான யோசனை ஒன்றுக்கு அமைச்சரவை கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கியிருப்பது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் குறித்து வெளியான செய்திகளின் பிரகாரம் 160 பாராளுமன்ற உறுப்பினர்களை பழைய தொகுதி அடிப்படையிலும் மிகுதி 65 உறுப்பினர்களை விகிதாசாரப் பிரதிதித்துவ அடிப்படையிலும் தெரிவு செய்வதற்கு சட்டங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன.
இதே போன்ற யோசனையை கடந்த வருடம் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச அமைச்சரவைக்கு சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. தேர்தல் சீர்திருத்தங்களுடன் சேர்த்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் மக்களின் அஙகீகாரத்தைப் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தும் யோசனையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று வெளியான செய்திகளை விஜேதாச அப்போது மறுத்தார். ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனை மீண்டும் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் தற்போது பெறப்பட்டிருக்கிறது.
தேர்தல்களுடன் தொடர்புடைய சகல செயன்முறைகளையும் முற்றாக மீளாய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆணைக்குழு வொன்றை நியமித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளமன்ற தேர்தல்முறைச் சீர்திருத்த யோசனை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு சிவில் அமைப்புக்களும் எதிரணி கட்சிகளும் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தேர்தல் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, தொகுதிகளின் எல்லை நிர்ணயச் செயன்முறைகள் முக்கியமானவை. அந்த செயன்முறைகளுடன் இணைந்த பல்வேறு நடைமுறைகளைக் கையாளுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். வருடக் கணக்கில் கூட அவை நீடிக்கலாம். அந்த செயன்முறைகள் நிறைவு செய்யப்படும் வரை பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எல்லை நிர்ணயச் செயன்முறைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பல வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன.
அதனால், தேர்தல்களை ஒத்திவைக்கும் ஒரு தந்திரோபாயமாகவே பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்குகிறது என்ற சந்தேகம் நியாயமானது.
அதனால், எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நீண்டகாலம் நீடிக்கும் பட்சத்தில் தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பாராளுமன்ற தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நேரத்தில் நடத்துவதற்கு வகைசெய்யக்கூடியதாக விசேட ஏற்பாட்டை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டமூல வரைவில் உள்ளடக்கவேண்டும் என்று ‘ சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை (பவ்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி முன்வைத்திருக்கும் கோரிக்கை வரவேற்கத்தக்கதாகும்.
தேர்தல் சீர்திருத்தங்கள் விடயத்தில் மக்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தெளிவுபடுத்தவேண்டியது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும்.
மக்கள் மத்தியில் செல்வதற்கு பயந்து உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கம் தேசிய தேர்தல்களையும் ஒத்திவைப்பதற்கு எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவடைந்திருக்கிறது.
(ஈழநாடு )