மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)

மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்.(மௌன உடைவுகள்- 79)

— அழகு குணசீலன் —

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல்.

இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை.

காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு.

கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன.

அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1.

இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே. 

இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம்.

ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது.

உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை.

பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன. 

இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது. 

மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது. 

1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை.

தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம். 

அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம்.

இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?  

இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது.

கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?