“கனகர் கிராமம்”.                   (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் -26)

“கனகர் கிராமம்”. (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் -26)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

                — செங்கதிரோன் —

கோகுலன் – கதிரவேல் – பெரியவர் சாமித்தம்பி – மொகமட் நால்வரும் இரண்டாம் தடவையும் தேனீர் குடித்துவிட்டு வந்து வண்டிலடியில் மீண்டும் பாயில் அமர்ந்து கதைக்கத் தொடங்கினர். 

சித்தானைக்குட்டிச் சாமிகள்பற்றி விட்ட இடத்திலிருந்து பெரியவர் சாமித்தம்பி தொடர்ந்தார். 

சித்தானைக்குட்டி சாமிகள் காரைதீவில் வசித்த காலத்தில் புரிந்த அற்புதங்களைப் பெரியவர் சாமித்தம்பி ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினார். 

அற்புதம் – 01

கல்முனையில் கடை வைத்திருந்த வீரப்பசெட்டியார் என்பவருக்குக் கண்ணில் ஒரு வருத்தம் வந்து எல்லாஇடமும் சென்று எல்லாவகை மருந்துகளும் செய்தும் நோய் கூடியதே தவிர குறைந்தபாடில்லை. வீரப்பசெட்டியார் தனது நண்பரொருவருடன் சித்தானைக்குட்டிச் சாமியைச் சந்திக்கக் காரைதீவு சென்றார். 

இருவரையும் கண்ட சுவாமி அவர்கள் ‘வாடா! மகனே! எங்கெல்லாமோ திரிந்துவிட்டு இப்போதுதான் என்னிடம் வருவதற்கு உனக்கு நேரம் கிடைத்ததா?’ என்று கேட்டுத் தனக்கு அருகில் வரும்படி செட்டியாரை அழைத்துள்ளார். தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டு தன்னுடைய வாயைச் செட்டியாரின் கண்ணருகே கொண்டுசென்று உமிழ்நீரைக் கொப்பளித்தார். 

கண்ணிலிருந்த எல்லா வருத்தமும் அக்கணமே நீங்கிவிட்டன. சுவாமிகளுடைய உமிழ்நீர் கண்களில் பன்னீர்விட்டுக் கழுவியதுபோலக் குளிர்மையாக இருந்ததென்று தனது நண்பரும் மெதடிஸ்தமிசனைச் சேர்ந்தவருமாகிய எதிர்மன்னசிங்க உபாத்தியாயரிடம் செட்டியார் பின்னர் கூறியுள்ளார். 

அற்புதம் – 02

எதிர்மன்னசிங்கம் உபாத்தியாயருக்குச் சுவாமிகளுடன் இருந்து சமைத்துச் சாப்பிட வேண்டுமென்று ஆசை. ஒருநாள் சமையலுக்கு வேண்டிய அரிசி முதலான பொருட்களுடனும் ஒரு கோழியுடனும் சுவாமியின் இருப்பிடம் வந்தனர். அன்று முக்கியகறி கோழிக்கறியாகும். 

அங்கு ‘ரிஜிஸ்தரர்’ சந்திரசேகரம் என்பவரும் – கிளாக்கர் மதியாபரணம் என்பவரும் – வேறு ஒருவரும் விருந்தாளிகளாக வந்து சேர்ந்தார்கள். மூவரும் புலால் உணவு உண்ணாதவர்கள். அவர்களுக்குக் கோழிக்கறி பரிமாறப்பட்டது. உண்ணும்போது அது குப்பைக்கீரைக் கறியாக மாறிவிட்டிருந்தது. 

அற்புதம் – 03

சுவாமிகள் இலங்கை முழுவதும் ஒரு ஊரும் விடாது கால்நடையாகவே சுற்றிவந்துள்ளார். யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த சுவாமிகள் ஒரு இரவு அனுராதபுரத்திலே தங்கினார். அதிகாலை எழுந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றபோது கோயில் ஐயர் பூஜைக்குரிய ஒழுங்குகளைச் செய்யாது ஆட்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதுபற்றிக் கேட்டபோது, ஐயருக்குக் கோபம் வந்து ‘நீ யார் என்னைக் கேட்க’ என்று சுவாமியைக் கோபித்துள்ளார். சுவாமிகள் அன்றிரவு கோயிலுக்குச் சென்று பிள்ளையார் சிலையை எடுத்துக்கொண்டுபோய் இன்னொரு அன்பரிடம் கொடுத்துவிட்டு யாழ்;ப்பாணம் புறப்பட்டு விட்டார். 

மறுநாள் காலை பிள்ளையார் சிலையைக் காணத கோயில் ஐயர் தன்னோடு தர்க்கம்புரிந்த சுவாமிகளின் வேலையாகத்தான் இது இருக்குமெனச் சந்தேகித்துப் பொலிசில் புகார் செய்து வழக்கும் பதிவாகி சுவாமி அவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து ‘விறாந்தில்’ பிடிக்கப்பட்டு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஒரு வாரம் அனுராதபுரம் சிறையில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டார். நீதிபதி ஒரு வெள்ளைக்காரர். பல நியாயதுரந்திரர்கள் பணம் வாங்காமலேயே சுவாமிகளுக்காக ஆஜனார்கள். 

‘கதவு உடைக்கப்படவில்லை. கூரை சேதப்படுத்தப்படவில்லை. நில அறை தோண்டப்படவுமில்லை. கதவுகள் வழக்கம்போல் பூட்டப்பட்டிருந்தன. ஐயரும் வழமைபோல் திறப்பினாலேயே கதவைத் திறந்துள்ளார். அப்படியிருக்கக் களவுக் குற்றம் சாட்ட முடியாது’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

சுவாமி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் வீதிகளிலே – சாராயத் தவறணையிலே – பலரது வீடுகளிலே – நீதிபதியின் இல்லத்துப் பூந்தோட்டத்திலே – நியாயதுரந்திரர்களுடைய இல்லங்களிலே பாட்டுக்கள் பாடிக் குதூகலமாகத் திரிந்ததைக் கோயில் ஐயர் உட்படப் பலரும் கண்டுள்ளனர். அது நகரில் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். 

அற்புதம் – 04

கும்புறுப்பிட்டியெனும் ஊரில் கனகன் என்றொரு சாது இருந்தார். இவர் அடிக்கடி சுவாமிகளைக் காணவருவார். ஒருநாள் சாது கனகர் சிறிய பிழையொன்றைப் புரிந்து விட்டார். சுவாமிகள் வேப்பமரக்கட்டையொன்றால் கனகரின் மண்டையில் அடிக்கச் சாது கனகரின் மண்டை உடைந்து இரத்தம் பெருக்கெடுத்தது. சுவாமிகள் கனகரைக் கட்டிலில் படுக்க வைத்து தனது வாயிலிருந்த வெற்றிலைத் தாம்பூலத்தைக் காயத்தின்மேல் வைத்தார். அடுத்தநாளே காயம்பட்ட இடம் தெரியாமல் காயம் ஆறிவிட்டது. 

அற்புதம் – 05 

அக்கரைப்பற்று, கோளாலில் ஊரில் நந்தனார் வம்சத்தைச் சேர்ந்த கந்தப்பன் பரியாரியார் என்பவர் இருந்தார். சுவாமிகள் கோளாவில் சென்றால் கந்தப்பன் வீட்டில்தான் தங்குவார். 

சுவாமிகள் கோளாவிலுக்குப் போயிருந்த ஒரு சமயம் மழையில்லாமல் நெல்வயல்களெல்லாம் வாடிப்போய்க்கிடந்தன. ஒருநாள் மாலை கமக்காரர்களெல்லோரும் ஒன்றுகூடிச் சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர். மறுநாள் மத்தியானம்வரை சுவாமி வீட்டுக்குள்ளிருந்து வெளியேவரவில்லை. மத்தியானத்திற்குப் பின் வெளியேவந்து ‘வூறிவூறி’ எனச் சத்தமிட்டுக்கொண்டே உலா வந்தார். சிறிது நேரத்தில் மழை சோனாவாரியாகப் பொழியத் தொடங்கிற்று. 

அற்புதம் – 06

அக்கரைப்பற்று, பனங்காடு எனும் கிராமத்தில் பெரியதம்பி என்பவர் சுவாமி பனங்காட்டுக்கு வருவதாகக் கேள்விப்பட்டு சுவாமிகளுக்கும் அவருடன் வருபவர்களுக்குமென விருந்து தயாரித்து சுவாமிக்காகக் காத்திருந்தார்கள். மூன்று நாட்களாகியும் சுவாமி வரவில்லை. வீட்டிலுள்ளவர்களும் மூன்று நாட்களும் உண்ணாமலே இருந்துள்ளனர். மூன்று நாட்கள் கழிந்து வந்த சுவாமிகள் ‘பசிக்கிறது சாப்பாட்டை எடுங்கள்’ என்றாராம். மூன்று நாட்களாக மூடி வைத்திருந்த சாப்பாட்டைத் திறந்தபோது அது கெடாமல் அப்போதுதான் சமைத்த உணவுபோல் ஆவி பறக்கச் சூடாக இருந்ததாம். 

அற்புதம் – 07

பனங்காட்டிலுள்ள முருகன் மார்க்கண்டு என்பவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. சுவாமிகளுடைய பக்தர்கள் சிலர் பைத்தியம் பிடித்தவரைச் சுவாமிகளிடம் கொண்டு சென்றனர். சுவாமிகள் பைத்தியம் பிடித்தவருக்கு ‘கிளாஸ்’சில் சாராயத்தை ஊற்றிக் குடிக்கக் கொடுத்தார். குடித்து முடிந்ததும் பைத்தியம் தெளிந்துவிட்டது. 

அற்புதம் – 08

பனங்காட்டில் வாழ்ந்த ஆறுமுகம் என்பவரின் குடும்பம் சித்தானைக்குட்டி சாமிகள்மீது மிகுந்த பற்றுடையது. ஒருமுறை ஆறுமுகத்திற்குக் கடுமையான காய்ச்சல். காய்ச்சலின் அகோரத்தில் அறிவிழந்தார். அவரைக் காரைதீவுக்குச் சுவாமியிடம் கொண்டு சென்றவேளை சுவாமி களுவாஞ்சிக்குடிக்குப் போயிருந்தார். களுவாஞ்சிக்குடிக்கு ஆறுமுகத்தைக் கொண்டு போனார்கள். சுவாமி ஆறுமுகத்தைத் தனது மடியில் தலைவைத்துப் படுக்கவைத்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவர் ஆறுமுகத்தைப் பரிசோதித்துவிட்டு உடன் மருத்துவம் செய்யாவிட்டால் இறந்து விடுவார் என்றார். அப்போது திடீரென்று கண்விழித்த ஆறுமுகம் சுவாமிகளை நோக்கினார். சுவாமி ‘மருந்து வேண்டாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தார். சுவாமிமீது கொண்ட நம்பிக்கையில் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மருத்துவத்தை நாடவில்லை. சுவாமிகள் சிறிதுநேரம் மௌனமாயிருந்தார். பின்னர் ஆறுமுகம் காய்ச்சல் விட்டு சுவாமிகளின் மடியிலிருந்து தானாகவே எழும்பிச் சுவாமிகளை வணங்கினார். 

அற்புதம் – 09

கோளாலில் கிராமத்தில் குழந்தைவேல் வண்ணக்கர் என்பவர் சுவாமிகள்மீது ஈடுபாடுள்ளவர். இருவரும் ஒருநாள் தெருவிலே சென்று கொண்டிருக்கும்போது ஒருவன் கூடையில் மீன்கொண்டு சென்றான். சுவாமி அவனை நிற்பாட்டி ஒரு மீன்கோர்வையை எடுத்துச் சென்று பக்கத்திலுள்ள கோயிலுக்குச்சென்று மீனைச் சமைக்கத் தொடங்கினார். கோயில் முகாமையாளர் இதனைக் கேள்விப்பட்டு ஓடோடிவந்து அடுப்பிலிருந்த மீன்சட்டியைத் திறந்து பார்த்தபோது சட்டியில் பலாச்சுளைகள் இருந்தன. கோயில் முகாமையாளர் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டார். 

அற்புதம் – 10

ஒருநாள் சித்தானைக்குட்டிச் சாமியார் கல்முனைச் சந்தியில் தெரு ஓரத்தில் அமர்ந்திருந்தார். சில அடியார்கள் சுவாமியைச் சூழ இருந்தார்கள். சுவாமி திடீரென்று உடுத்திருந்த வேட்டியை உரிந்து கசக்கத் தொடங்கினார். சூழ இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டாரகள். என்னடா! பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள். கதிர்காமக் கோயில் திரை தீப்பற்றி எரிகிறது. கசக்கி அணையுங்கடா என்று சத்தமிட்டுள்ளார். கூடி நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

மறுநாள் கதிர்காமக் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட அன்பரொருவர் வந்து நேற்று இத்தனை மணிக்கு திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. ஒருவரும் அதனை அணைக்க முன்வரவில்லை. சித்தானைக்குட்டி சுவாமிகள்தான் எங்கிருந்தோ ஓடிவந்து அதனைக் கசக்கி அணைத்தார்கள் என்ற செய்தியைச் சொன்னார்;. 

இவ்வாறு சித்தானைக்குட்டிச் சுவாமிகள் நிகழ்;த்திய அற்புதங்களைப் பெரியவர் சாமித்தம்பி ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போகக் கோகுலன் – கதிரவேல் – மொகமட் மூவரும் ஆச்சரியத்துடன் வாய்பிளந்து கண்கள் விரிய அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். 

பெரியவர் சாமித்தம்பி நேரத்தைப் பார்த்தார். அதிகாலை ஐந்துமணியாகி விட்டிருந்தது. 

“தம்பிமாரே! சித்தானக்குட்டிச் சாமியாரின் அற்புதங்களைச் சொல்லிறண்டா இன்னும் கனக்க இரிக்கி. எல்லாத்தயும் சொல்லிரண்டா ஒருநாள் காணாது. எனக்கு உடன ஞாபகத்தில வந்ததுகளத்தான் இப்ப சொன்ன நான்” என்றார். 

“சித்தானக்குட்டிச் சாமியார் காரைதீவில சுவாமி விபுலானந்தரோடயும் மட்டக்களப்பு பயில்வான் சாண்டோ சங்கரதாஸோடயும் நல்ல சிநேகமா இரிந்திரிக்கார்” என்றும் தகவல் சொன்னார். 

தொடர்ந்தும் கதைத்த அவர், 

“சித்தானக்குட்டிச் சாமிகள் வருத்தக்காரர்கள் கனபேருக்கு விபூதியச் சாத்தி இல்லாட்டி விபூதிய வாய்க்குள்ள கிள்ளிப்போட்டுச் சுகமாக்கியிரிக்கார். அதுகளச் சொல்லப்போனா கதிர்காமத் தீர்த்தம் முடியமட்டும் கதைக்கலாம்” என்றார். 

பெரியவர் சாமித்தம்பி ஆளைப்பார்க்கச் சாதாரண ஆள்போலத்தெரிந்தாலும் இவ்வளவு விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாரே என்பது கோகுலனுக்குச் சித்தானைக்குட்டிச் சாமியாரின் அற்புதங்களையும் விட அற்புதமாகவிருந்தது. 

சுவாமிகள் சித்தே உருவானவர்கள். சித்து என்பது அவரது இயல்பு. அவரது வாழ்க்கை முழுவதும் சித்துக்கள் நிறைந்தவையே. அவற்றை எல்லோருக்கும் வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒரு துட்டன் போலவும் மிக வறியவன் போலவும் கையாலாகாதவன் போலக் காட்டுவதே ஒரு சித்துத்தான். சித்தே உருவான ஒரு பொருளைச் சித்தில்லாததுபோல் காட்டுவதே ஒரு சித்;துத்தான். 

மனிதர்களுடைய பாவங்களுக்காகப் பாடுறவும் அப்பாடுகளால் பாவங்கள் பொடிபடவும் வகைசெய்யத் தெரியாதவர்கள் உண்மையான சுவாமிகள் ஆகமாட்டார்கள். சாதாரண மனிதர்களுக்குச் சுவாமி எனும் பட்டம் சூட்டக்கூடாது. அது பாவம் என்றும் சித்தானைக்குட்டிச் சாமியார் ‘சுவாமி’ என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். 

தம்மிடம் யார் அதிக பக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத்தான் சுவாமிகள் அதிக சோதனைகளுக்குள்ளாக்குவார். அச்சோதனைகளில் தேறியவர்களுக்குத் தனது சக்தியையும் ஈந்தருள்வார். 

குரு ஒருவர் ஒருவரைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்போது அல்லது தனக்குப் பக்தனாக ஏற்றுக்கொள்ளும் போது அச்சீடனது அல்லது அப் பக்தனது வினையையும் ஏற்று அனுபவிப்பவராகிறார். 

விபுலானந்த அடிகளார் அவர்கள் கொழும்பில் வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு வேதனையுற்றிருந்த காலத்தில் சித்தானைக்குட்டிச்சாமியார் விபுலானந்த அடிகளாரின் நோயின் வலியைத் தாமே ஏற்று அனுபவித்திருக்கிறாராம். அக்காலத்தில் தம்மைப் பார்க்கச் சென்றோரிடம் யாரோ ஒருவன் தன்னை வாளால் அறுத்துக் கொண்டிருக்கிறான் என்று சித்தானைக்குட்டி கூறியுள்ளார். விபுலானந்த அடிகளார் மரணித்ததும் சித்தானைக்குட்டிச் சாமியார் அனுபவித்த வேதனைகளும் நீங்கிவிட்டனவாம். 

பெரியவர் சாமித்தம்பி கூறிய இந்த விபரங்களையும் விளக்கங்களையும் கேட்கக்கேட்கக் அவை கோகுலனுக்குப் புதிய விடயங்களாகவும் வியப்பாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் தேடல் ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் இருந்தன. பெரியவர் சாமித்தம்பியிடம் தொடர்ந்து கதை கேட்க வேண்டும் போலத்தான் இருந்தது. கதை கேட்கும் ஆர்வத்தில் உறங்காது இரவு முழுவதும் கண்விழித்திருந்த களைப்போ அலுப்போ கடுகளவும் தெரியவில்லை. 

கோகுலன் தனது சிந்தனையோட்டத்தில் யேசுகிறிஸ்து நாதரும் – முகம்மது நபி அவர்களும் – புத்தர் பெருமானும் கூடச் சித்தர்களாக இருப்பார்களோ என்ற எண்ணமும் தோன்றிற்று. அதுபற்றி விடயமறிந்தவர்களுடன் விவாதித்துத் தெளிவடைய வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். அப்படியானால் சித்தர்கள் எனப்படுவோர் எம்மதத்தை அறிமுகம் செய்திருந்தாலும் எம்மதத்தைத் தழுவியிருந்தாலும் அவர்கள் அனைவருமே மானுட நோக்கில் மதம் கடந்தவர்களென்றும் அவனுக்கு எண்ணத் தோன்றிற்று. இயேசு கிறிஸ்து பாவிகளுக்காகவே மரித்தார் என்றுதானே கூறப்படுகிறது. 

நேரம் அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டிருந்தமையால், 

பெரியவர் சாமித்தம்பி “தம்பிமாரே! ஆறுமணிப் பூசைக்குப் போகணும்” என்றவர், கோகுலனின் பக்கம் திரும்பி “தம்பி! ஆறுமணிப் பூசயப் பாத்திட்டு ஊருக்கு வெளிக்கிடோனும் எண்டு அம்மா நேத்துச் சொன்னவ. எழும்புங்க! காலக்கடனுகல முடிச்சித்து ஆத்துக்குக் குளிக்கப் போவம்” என்று சொல்லிப் பாயிலிருந்து எழுந்தார். அவரைத் தொடர்ந்து கோகுலன் – கதிரவேல் – மொகமட் மூவரும் எழுந்தார்கள். 

மொகமட்டும் அன்று பின்னேரமாகத் தாங்களும் ஊருக்குப் புறப்படவிருப்பதாகக் கூறி எல்லோரிடமும் விடைபெற்றுத் தாங்கள் வந்த கார் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி விரைந்தான். மொகமட் விடைபெற்றுச் சென்றதும், 

கோகுலன் பெரியவர் சாமித்தம்பியைப் பார்த்து “நீங்களுமா சாமி எங்களோட ஊருக்கு வாறீங்க?” என்று கேட்டான். 

“இல்லதம்பி! இண்டைக்குக் கதிர்காமம் கொடியேறி ஏழாவது நாள். ஆடி அமாவாசைக்குக் கொடியேறினா பூரணைக்குத்தான் தீத்தம். பதினைந்து நாள்கள் திருவிழா நடந்து அடுத்த நாள்தான் தீத்தம். வழமயா நான் தீத்தத்துக்கு நிண்டுதான் போற. தீத்தத்துக்கு இன்னும் பத்துநாள் கிடக்கு. உங்கள அனுப்பிப் போட்டு நான் செல்லக்கதிர்காமமும் போகணும். செல்லக்கதிர்காமம் போய்வந்து கதிரமல ஏறயும் வேணும். அதுக்கென்ன. நீங்க உங்கட ஊருக்குப் போங்க. நாம வந்தாறுமூலையில சந்திக்கலாம்தானே” என்றார் சாமித்தம்பி. 

“எங்களுக்கும் செல்லக்கதிர்காமம் போகயும் கதிரமலயில ஏறயும் விருப்பம்தான். நாள் காணாது. நாங்க வந்தாறுமூலை பள்ளிக்கும் போகணும். அக்காட குழந்தையயும் கனநாளைக்கு வைச்சிட்டு நிக்கேலாது. அதுதான் நாங்க வெளிக்கிட்ட” என்றான் கோகுலன். கதிரவேலும் அதனைத் தலையை ஆட்டி ஆமோதித்தான். 

தங்களுடன் சாமித்தம்பி சேர்ந்து கொண்டது நல்ல பயனுள்ளதாக இருந்தது என்று கோகுலனும் கதிரவேலும் வெளிப்படையாகச் சொல்லிச் சாமித்தம்பியைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். சாமித்தம்பியும் அதனை ஆமோதிப்பதுபோல எதுவும் பேசாது அமைதியாக முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டார். தரையில் கிடந்த பாயைத்தட்டிச் சுருட்டிக் கதிரவேல் வண்டிலில் வைத்ததும் பின் மூவரும் காலைக்கடன்களை முடிப்பதற்கான இடங்களை நாடிக் கலைந்தார்கள். 

(தொடரும் …… அங்கம் – 27)