மட்டுநகரின் ஜெயாலயா இசைக்குழுவும் கவிஞர் எருவில் மூர்த்தியும்

மட்டுநகரின் ஜெயாலயா இசைக்குழுவும் கவிஞர் எருவில் மூர்த்தியும்

— கோவிலூர் செல்வராஜன் —

எழுபதுகளின் ஆரம்பம் எனக்கு  இன்பமாக அமைந்தது. ஆம்! மட்டக்களப்பில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலமது. மட்டக்களப்பு சிங்களவாடி பகுதியில் வன்னியனார் வீதியில் அமைந்திருந்த எனது மாமா முறை உறவுக்காரரான விசுவாசம் மாஸ்டர்  அவர்களின்  வீட்டில் தங்கியிருந்து உயர்தரம் படித்த காலம். மாமா வீட்டிற்கு எதிரே திருக்கோவிலைச்  சேர்ந்த எனது மைத்துனர் முறை உறவுக்காரரான இரா. தெய்வராஜா அவர்களும் வன்னியார் வீதியில்  வாழ்ந்த தவேஸ்வரி அக்காவை திருமணம்  செய்து அங்கு  வாழ்ந்து வந்தார். அவரும் நானும் திருக்கோவிலில்  மிகவும் அன்பாக இருந்த மைத்துனர்கள். அப்போது அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். பன்முக திறமை கொண்டவர். கவிஞர், பாடகர். அன்றும் சரி இன்றும் சரி எனது முயற்சிகளுக்கும், உயற்ச்சிகளுக்கும் முன்னுக்கு நின்று ஒத்துழைத்து, எனக்கு கதிகாலாக  இருப்பவர்.  அப்பொழுது மட்டக்களப்பிலே   ஜீவன் ஜோசப் இசைக்குழு, ஆதவன் இசைக்குழு என்று இரு இசைக்குழுக்கள் பிரபலமாக இருந்தன. 

மைத்துனர் தெய்வராஜா மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் 

இருந்தபோதே அங்கு நடைபெறும் பல கலை நிகழ்சிகளில் பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். ஜீவன் ஜோசேப் அவர்களின் சகோதரர் ஞானம் அவர்களும் அங்கு இருந்தததால் அவரின் நட்பும் கிடைக்க, அவர்கள் இசைக்குழுவிலும் பாடியுள்ளார். ஆதவன் இசைக்குழுவும் பல மேடை நிகழ்சிகளை  கோவில் உற்சவ காலங்களில் ஊரூராக சென்று நடத்தியது.

இந்தக் காலத்தில் 1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தபாலகத்தில் பணிபுரிந்த ஜோசப் ஜெயராஜ்  என்பவரின் தலைமையில் “ஜெயாலயா”  என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். இந்த இசைக் குழுவில் பாடகராக தெய்வராஜாவும், பாடகராக, தொகுப்பாளராக நானும், பாடகியாக லதா மாணிக்கராஜாவும்  இணைந்து கொண்டோம். இசைக்கலைஞர்களாக  ஜெயா என்று அழைக்கப்படும் ஜெயராஜ்,(தபேலா) சூரி என்று அழைக்கப்படும் தங்கரெத்தினம்(ட்ரம்ஸ்), மற்றும்  மலையகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களான நாகலிங்கம்(எக்கோடியன்), ஆறுமுகம் (புளூட்), மாயா(டோல்கி) ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பில் பௌர்ணமி இரவுக்கலை நிகழ்ச்சிகளையும், சித்தாண்டி முருகன் கோவில் தொடக்கம் திருக்கோவில் முருகன் கோவில் வரை சென்று பல நிகழ்சிகளை செய்துகொண்டிருந்தோம். பக்திப்பாடல்கள், சினிமா பாடல்ளை பாடிக்கொண்டிருந்தபொழுது, ஈழத்து பொப்பிசைக் காலம் உருவாகிவிட்டது. அப்போது நாங்களும் சொந்தமாக பாடல்களை எழுதிப் பாடவேண்டும் என்று விரும்பினோம். 

அந்த நேரம் நான் பாடல்கள் எழுதத் தொடங்காத காலம். மைத்துனர் தெய்வராஜாவும் ஒருசில பாடல்கள் எழுதிய காலம்தான். ஆனால் இசைக்குழுவுக்கு எமது ஈழத்து பாடல்களை உருவாக்கியாக வேண்டும். இருவரும் யோசித்தபொழுது கவிஞர் எருவில் மூர்த்தி அவர்கள் எங்கள் வீடுகளுக்கு பக்கத்தில்தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, அவரைப் போய் சந்தித்துப் பேசினோம். அவரும் எங்களை அன்பாக வரவேற்று  உங்களுக்கு என்ன பாடல் வேண்டுமோ சொல்லுங்கள் எழுதித்  தருகின்றேன் என்றார்.   அவருக்கு நன்றி சொல்லி வந்து விட்டோம்.

 பின்னர் என்ன பாடல் அவரிடம் கேட்கலாம் என்று சிந்தித்தபோது,  எங்கள் பகுதிக்கு வெளிநாட்டு கலாசாரமான குட்ட பாவாடை அணிதல்  (மினி ஸ்கேட்) கலாசாரமும், ஹிப்பியிசம் என்ற பெயரில்(நீளமாகத் தலை வளர்த்தல், பெல்பொட்டம்- நீண்ட கால்சட்டை  அணிதல்) கலாசாரமும் தலைதூக்கி இருந்தன. இதை வைத்துகொண்டு, அவற்றை விமர்சித்து, சமூக சீர்திருத்தப் பாடல்களாக மூர்த்தி அண்ணாவிடம் கேட்டு வாங்குவோம் என்றார் என் மைத்துனர் தெய்வராஜா. 

சிங்கள தமிழ் கலவரத்தில் கண் பார்வையை இழந்த கவிஞர்:

===================

கவிஞர் எருவில் மூர்த்தி அவர்கள் எங்கள் மண்ணின் சிறந்த கவிஞர். ஆனால் 

1956 ஆம் ஆண்டு  இடம்பெற்ற  கலவரத்தின்போது  நடந்த துப்பாக்கி சூட்டில் அவர் கண்கள் பாதிக்கப்பட்டதால் பார்வையை  இழந்திருந்தார். அவரது  புறக்கண்கள்  பாதிக்கப்பட்டாலும்  அகக்கண், ஞானக்கண்ணாகவே இயங்கிக் கொண்டிருந்ததில் வியப்பில்லை.  அதற்கு அவரது பாடல்களே  சாட்சியாகும். நாங்கள் இருவரும் ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்று “அண்ணா வணக்கம்” என்றோம். “தம்பி தெய்வ ராஜன், செல்வராஜன் வாருங்கள்” என்றார். பேசும் குரலை வைத்தே  யார் வந்திருக்கிறார்கள்  என்று அறிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. நலன் விசாரிப்பின் பிறகு , “சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்” என்றார். “பாடல்  வேண்டும்” என்றோம். “என்ன மாதிரியான பாடல் வேண்டும்” என்றார். அப்பொழுது மைத்துனர் தெய்வராஜா சொன்னார். “இப்போது எமது பெண்பிள்ளைகள் மினிஸ்கேட் போட்டுக்கொண்டு சுத்துகிறார்கள். அதுபற்றி எழுதித் தாருங்கள்” என்றார்.  

“அது என்ன மாதிரி தம்பி, எப்படி இருக்கும்” என்றார். அவர் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது. அவரோ 1956இல் பார்வையை இழந்துவிட்டார். ஆனால், மினிஸ்கேட் இலங்கையில் அறிமுகமானது 70களில். ஆகவே, அந்த உடையை அவர் பார்த்திருக்க வாய்ப்பே கிடையாது. 

ஆகவே, அந்த உடையை, பாணியை அவருக்கு விளக்கியாகவேண்டும். அதைப் புரிந்து, அவர் பாடல் எழுத வேண்டும். எப்படி புரிய வைப்பது என்பது எங்கள் பிரச்சினை.

நான் சொன்னேன் .”அது குட்டைப்பாவாடை அண்ணா. முழங்காலுக்குமேல தொடை தெரிய இறுக்கமாகப்  போட்டுக்கொண்டு திரியிறாளுகள்” என்றேன் 

“ஓ அப்படியா” என்றவர்  “சரி நாளைக்கு வாருங்கள் தருகின்றேன்” என்றார். 

அடுத்தநாள் ஆவலோடு சென்றோம் . எங்களை வரவேற்றுக் கொண்டு “பிள்ளை கயல்விழி” என்று குரல் கொடுத்தார், அவரது ஒரே மகள் கயல்விழி வந்து “என்னப்பா என்றாள்“ காலையில்  நான் சொல்லச்சொல்ல ஒரு பாடல் எழுதினீர் அல்லவா அதை கொண்டுவந்து மாமாவிடம் கொடு“ என்றதும் கயல்விழி பாடலை கொண்டு வந்து கொடுத்தார்.(அவரின் ஒரே மகள் கயல்விழி இப்போது கனடாவில் வாழ்கிறார்). தெய்வராஜன் பாடலைப் 

படிக்கும்போதே அவரது முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. அவர் படித்துவிட்டு என்னிடமும் தந்தார். நானும் படித்தேன் மிக அருமையாக இருந்தது. ஒரு குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு அவர் தனது பாடல் மூலமாக எப்படி அறிவுரை சொல்கிறார் என்பதை பார்த்து  வியந்துபோனோம். பார்வை உள்ள ஒருவர் கூட இப்படி குட்டைப் பாவாடையணிவதால் என்ன கேடுகள் வரும் என்று அந்தக்காலத்தில் சிந்தித்து இருப்பார்களோ என்பது சந்தேகமே. அப்படி எழுதி இருந்தார். இதோ அந்தப் பாடல்:

“தங்கச்சி தங்கச்சி 

தடம்புரண்டு போகாதே 

எங்கள் சொந்தப்  பண்பாட்டை இழந்து போகாதே

எங்கே அந்தப் பாவாடை தாவணி

ஏன் வந்ததுன்னுடம்பிலே மினி

அங்கே பார்  அங்கே பாரு  உன்னுடலை எத்தனை

 ஆண்கள் கண்கள் கொத்தித்  தின்ன மொய்த்தனை

 கடிக்கும்  நாய்க்கு  தப்பியோட முடியல்ல

 காலைத்  தூக்கி  பஸ்ஸில் ஏற முடியல்ல

 அடக்கமாக  அமர கூட முடியல்ல 

 ஆனால் அது உனக்கு ஏனோ இன்னும் புரியல்ல

 மடியில் அழகுப்  பையை வைத்து மறைக்கிறாய்

 மாடிப்படியில்  ஏறி இறங்க தவிக்கிறாய்

 விழுந்தகாசை  குனிந்து பொறுக்க  முழிக்கிறாய்-உன்னை 

 வேகமாக  நடக்க சொன்னா  சபிக்கிறாய்.. “

இப்படி அந்தப் பாடல் இருந்தது. மகிழ்ச்சியோடு எடுத்து வந்து மச்சான் தெய்வராஜன் அதற்கு மெட்டமைக்க பாடல் அருமையாக அமைந்தது. இந்த பாடலை  எங்கள் ஜெயாலயா  இசை குழுவில்  பாடினோம்.  அது அமோக வரவேற்பை பெற்றது. தங்கச்சியை பற்றிப் பாடிவிட்டோம் இனி அண்ணாச்சிக்கு ஒரு பாட்டுப் பாடவேண்டும் என்று விரும்பி அவரிடம்  சென்று “பெடியனுகள் நீண்ட தலைமுடி வளர்த்துகொண்டு ஹிப்பிகள் போல “பெல்போட்டம்”   என்ற 

நீண்ட காற்சட்டை அணிந்துகொண்டு மேலுக்கு  பெண்கள் அணியும் சேலை போல மேற்சட்டை தைத்து போட்டுக்கொண்டு சுற்றுகிறானுகள்” என்று சொன்னோம். “சரி எழுதிடுவோம்” என்றர். 

அடுத்த கிழமை அவரிடம் சென்றபோது  ஹிப்பியிசத்துக்கு உரிய பாடலை எழுதித் தந்தார். அந்த பாடல் மிக மிக அருமையாக இருந்தது. அவர் கண் பார்வையை இழந்த பிறகுதான் ஹிப்பி பாணியும் இலங்கையில் நுழைந்திருந்தது.

 இது அந்த பாடல்:

 “அண்ணாச்சி அண்ணாச்சி ஐயோ இதென்ன கோலம்

 ஆணா பெண்ணா என்று கூட தெரியல்லே அடையாளம்

 மண்ணாச்சி எல்லாம் என்று மனது குழம்பிப்  போச்சோ 

 மறுமுறை போகும் வெள்ளை பஸ்ஸுக்கு

 நீங்க தான் முதல் கேசோ 

 அணிந்திருக்கும் சேட்டோ உங்க அக்கா புடவைச்சாங்கம்

 போட்டிருக்கும் பாண்டோ   ரோட்ட முழுசா கூட்டும்

 பனைவடலி  ஓலை போல  பாவம் உங்க கிராப்பு

 பரட்டைத்  தலையில்  குத்தியிருப்பது  யாரு சாறிக் கிளிப்பு?

 துந்தனாவில் தாளம் போடத்  தூக்கியதோ கிற்றார் 

 துடிப்புள்ள இளைஞனாக  மதிக்கல்லையே மற்றோர்

 ஐந்துயாருக்கப்பாலும்  துர்நாற்றம் அடிக்கலாச்சு 

 ஆறு மாதம் இருக்குமாக்கும்  ஊத்த தேச்சு குளிச்சு”

இப்படி அண்ணாச்சி பாடல் அருமையாக அமைந்திருந்தது. இந்தப் பாடலுக்கும் 

துள்ளிசையில் மெட்டமைத்து ஜெயாலயா  இசைக்குழுவில் பாடினோம். ஏகப்பட்ட 

வரவேற்ப்பு. 

அதற்கு அடுத்த கிழமை எருவில் மூர்த்தி அண்ணா வீட்டில் சென்று சொன்னோம். 

“சில பெண்பிள்ளைகள் பாடசாலைக்குச்  சென்றுவிட்டு பிந்தியே  வீட்டுக்கு வருகிறார்கள் 

டியூசன் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றுகிறார்கள். இதற்கும் ஒரு பாட்டு 

வேண்டும் அண்ணா” என்றோம். “சரி பின்னேரம் வாருங்கள் ” என்றார். பின்னேரம் சென்றோம்  பாடலை மகள் 

கயல்விழி மூலம் தந்தார். 

அது இப்படி இருந்தது. 

“சின்னச்சின்னப்  பெண்ணே நீ செல்வதெங்கேயோ 

முன்னும் பின்னும் பார்க்கும் கண்கள் மொய்ப்பதெங்கேயோ

பாடசாலை முடிந்தால் நீ பறப்பதெங்கேயோ

வீடு செல்லும் வழியை மறந்து விரைவதெங்கேயோ 

பார்க் பீச் தியேட்டர் எங்கும் பாடம் நடக்குதோ 

பரீட்சைதாளின் கேள்வி அந்தப் படிப்பில் இருக்குதோ 

சாக்குச் சொல்லி டியூசன் என்று சரிக்கட்டலாமோ 

சான்றை இலக்கியத்தில் காட்டி சாதிக்கலாமோ 

இலக்கியத்தை ஏட்டில் மட்டும் எழுதிவைக்கலாம் 

எடுத்துப் படித்து சுவைத்து அதன் இனிப்பில் சொக்கலாம் 

இலக்கியத்துக் காதல் என்றும் உண்மையாகுமோ 

இந்த வழியை மறந்து வீடு ஏகப்பாரம்மா ..”

என்று அறிவுரை சொல்லியிருந்தார் இந்த பாடலுக்கும் அருமையாக மெட்டமைத்துப் 

பாடினோம். அதுவும் அன்று மிக பிரபலமாக இருந்தது. 

தொடர்ந்தும் அவர் பல பாடல்களை எழுதித் தந்தார். எங்கள் ஜெயாலயா இசைக்குழுவில் எங்கள் சொந்தப் பாடல்களே பெரிதும் இடம்பெற்றன.

எங்களுக்கு முன்னர் இருந்த இசைக் குழுக்களான ஜீவன் இசைக்குழு,ஆதவன் இசைகுழு ஆகிய இரண்டும் இலங்கை வானொலியில் சென்று இசை நிகழ்ச்சி ஒன்றும் அதுவரை செய்திருக்கவில்லை. யாழ் கண்ணன் கோஷ்டி, ராஜன் கோஷ்டி போன்றவை பல நிகழ்சிகளை 

இலங்கை வானொலிக்கு அன்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஏனோ எமது குழுக்களுக்கு அந்தச்  சந்தர்ப்பம் அன்று கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஜெயாலயா 

இசைக்குழுவின் மூலம் ஒரு நிகழ்ச்சி செய்ய விரும்பி அங்கு பலரையும் தொடர்பு கொண்டோம்.

இரா.பத்மநாதன் அவர்கள் மூலம், அன்று அரங்கேற்றம் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கிய புவனலோஜினி அவர்களை தொடர்புகொண்டதன்பேரில் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

ஒலிப்பதிவுக்கான திகதி கிடைத்ததும் நாங்கள் இரண்டு நாட்கள் முந்தியே ஹற்றன் சென்றோம். அந்தநேரம் 

தெய்வராஜன்  மாஸ்டர்  ஹற்றன் ஹைலான்ட் காலேஜில் ஆசிரியராகப்  பணிபுரிந்தார். அங்கு சென்று 

அங்கிருந்த எங்கள் இசைக்கலைஞர்கள் நாகலிங்கம், ஆறுமுகம், மாயா ஆகியோருடன் ஒத்திகை பார்த்தோம் அடுத்த நாள் புறப்பட்டு கொழும்பு சென்று பின்னேர ஒலிப்பதிவுக்கு தயாரானோம்.

புவனலோசினி அவர்கள் எங்களை வரவேற்று வேண்டிய ஏற்பாடுகளை செய்து தந்தார். மூன்று பாடல்களை 

நாங்கள் அந்த நிகழ்ச்சியில் பாடலாம் என்று சொன்னதும் எருவில் மூர்த்தி அவர்களின் மூன்று 

பாடல்களைப் பாட முடிவு செய்தோம். இசையமைப்பாளராக கே.ஏ .ஜவாகிர் மாஸ்டர் இருந்தார்.

நாங்களே எங்கள் மெட்டுகளை அவருக்கு பாடிக்காட்டியதும் அவருக்கு அது பிடித்திருந்தபடியால் 

அதையே மெட்டாக வைத்து அதற்கு ஏற்றபடி ஆரம்ப இசை, இடையிசை எல்லாம் போட்டார். அன்று 

ஒலிப்பதிவில் மு. வரதராஜன் என்பவர் எங்களுக்கு உதவினார். மைத்துனர் தெய்வராஜன் தங்கச்சி, அண்ணாச்சி பாடல்களைப் பாட, நான் சின்னச்சின்னப் பெண்ணே பாடலைப் பாடினேன். 

மட்டக்களப்பில் இருந்து சென்று இலங்கை வானொலிக்கு முதன் முதலில்  நிகழ்ச்சி கொடுத்த இசைக்குழு ஜெயாலயா இசைகுழு என்ற பெருமை எங்கள் இசைக்குழுவுக்கு கிடைத்தது. 

அந்தப் பின்னணிதான் நான் இலங்கை வானொலியில் பின்னர் நிரந்தரப் பணியாளராக சேர்வதற்கு 

வழிவகுத்தது. கவிஞர் எருவில் மூர்த்தி அண்ணாவின் ஈர்ப்புத்தான் என்னை பிற்காலத்தில் ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இலங்கை வானொலிக்கு அதிக மெல்லிசைப் பாடல்கள் எழுதிய ஒரு பாடலாசிரியராகவும் ஆக்கியது. எழுபதுகளும், எண்பதுகளும் எமக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. அதை யாரும் மறுக்கவும் முடியாது. 1973ல்  தொடங்கிய எனது கலை இலக்கிய 

ஊடகப்பணி கடந்த 2023 ல் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா ஆண்டாக மலர்ந்தது. 

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் எனக்கு “இலக்கியத் தென்றல்” என்ற பொன்விழா மலரை வெளியிட்டு என்னை கௌரவித்தது. அதே பொன்விழா மலரை கொழும்புத் தமிழ் சங்கம் அறிமுகம் செய்தது.

பின்னர், இலண்டன், நோர்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் டென்மார்க், கனடா சுவிஸ் ஆகிய நாடுகளுக்கும் அந்தமலர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பதும் 

குறிப்பிடத்தக்கது.