— வீரகத்தி தனபாலசிங்கம் —
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இலங்கை இதுவரையில் எட்டு ஜனாதிபதி தேர்தல்களைக் கண்டிருக்கிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதில் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற தடுமாற்றத்தைப் போன்று முன்னைய எந்தவொரு தேர்தலிலும் நாம் காணவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னமும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. அதேவேளை அவர் தனது ஐக்கிய தேசிய கட்சியை மாத்திரம் நம்பி தேர்தல் களத்தில் ஒருபோதும் இறங்கப் போவதுமில்லை.
மூன்று தசாப்த காலமாக அவர் தலைமையில் இருந்துவரும் ஐக்கிய தேசிய கட்சி அதன் வரலாற்றில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை அடுத்து மாற்றமடைந்த அரசியல் கோலங்களுக்கு மத்தியில் அவர் ஜனாதிபதியாக வந்த பின்னர் தோன்றியிருக்கும் புதிய சூழ்நிலையில் கட்சி மீட்சிபெறுவதற்கு அவரை மாத்திரமே நம்பியிருக்கிறது என்பது இன்றைய இலங்கை அரசியலில் ஒரு விசித்திரம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னோடியாக பல கட்சிகளை உள்ளடக்கிய பரந்தளவிலான கூட்டணியை உருவாக்குவதற்கு விக்கிரமசிங்க இதுவரையில் முன்னெடுத்துவந்த முயற்சிகள் பெரிதாக வெற்றியளிக்கவில்லை. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு ராஜபக்சாக்களை விட்டு வெளியேறிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை பாராளுமன்ற உறுப்பினர்களையே அந்த கூட்டணி முயற்சிக்கு அவர் முழுமையாக நம்பியிருந்தார்.
அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்ததைப் போன்று பொதுஜன பெரமுனவில் இருந்து பல உறுப்பினர்கள் அவர்களுடன் வந்து இணையவில்லை. அதேவேளை ராஜபக்ச சகோதரர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இவர்களில் எந்த தரப்பினரை அவர் எப்போது கைவிடுவார் என்று எவருக்கும் தெரியவில்லை.
கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மகிந்த ராஜபக்சவுடனும் பசில் ராஜபக்சவுடனும் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி அமைப்பது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. அத்துடன் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் தலைமைத்துவத்தை தவிர்த்து ஜனாதிபதி தனியாக அணுகுவதையும் ராஜபக்ச சகோதரர்கள் கடுமையாக ஆட்சேபித்ததாகக் கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ளாதவர்களாக ராஜபக்சாக்கள் பழைய நினைப்பில் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தங்களது கட்சியே தீர்மானிக்கும் என்ற தோரணையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது ஆதரவைப் பெறுபவரே அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலும் ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவர்களின் ஆதரவைப் பெறுவது ஜனாதிபதிக்கு பாதகமாகவும் அமையலாம். அதை அவர் சிந்தித்துப் பார்க்காமல் இருக்கமாட்டார். அதேவேளை, தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை இல்லை என்றால் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் தெரிவு எப்போதும் அவர் கைவசம் இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடு்க்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு அதிகரித்துவருவதாக விக்கிரமசிங்க நம்பிக் கொண்டிருக்கிறார். பொருளாதாரம் முழுமையாக மீட்சிபெறவேண்டுமானால் அவர் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவியில் இருக்கவேண்டும் என்று நம்புகின்ற ஒரு கணிசமான பிரிவினர் இருக்கிறார்கள்.
மக்கள் செல்வாக்கில் முன்னணியில் இருந்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மிகவும் உற்சாகமாக அதன் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்க முன்னரங்க ஜனாதிபதி வேட்பாளராக நோக்கப்படுகிறார். இந்தியா,சீனா உட்பட பல வெளிநாட்டு அரசாங்கங்களும் அவர் மீது கவனத்தைச் செலுத்துகின்றன. ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தங்களது எதிர்கால அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பேசுகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் குழப்பநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதவராக பிரேமதாச இருக்கிறார். முன்னாள் படை அதிகாரிகளை கட்சியில் இணைத்துக்கொள்வது,பெண்களின் ஆதரவைத் திரட்டுவது உட்பட பல தந்திரோபாயங்களில் எதிர்க்கட்சி தலைவர் தேசிய மக்கள் சக்தியை பின்பற்றுவது போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்னமும் அறிவிக்கவில்லை என்றபோதிலும், அவருக்கும் அநுரா குமாரவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான மும்முனைப் போட்டியாகவே ஜனாதிபதி தேர்தல் அமையும் என்றே பொதுவில் எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு பல கட்சிகளின் வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தனது கொள்கைத் திட்டத்துடன் ஜனாதிபதி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துவந்தார். பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு தன்னை அணுகினால் அது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாகக் கூட அவர் கூறுகிறார். இந்த தடவை எதிரணியின் பொது வேட்பாளராக எவரும் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பு இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னர் அறிவித்தார். ஆனால் இப்போது அவர் அதைப் பற்றி பேசுவதாக இல்லை. எதிர்வரும் நாட்களில் பல்வேறு கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.
இதனிடையே, முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி பலம்வாய்ந்த அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் சிறப்பான ஆட்சியை அமைக்கமுடியும் என்று பசில் ராஜபக்ச கூறுகிறார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் விரும்புவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.
பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஆனால், அதை தற்போதைய தருணத்தில் அவர் விரும்புவாரோ தெரியவில்லை. பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதியைக் கோரும் பிரேரணை ஒன்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்ற முடியும்.
ஆனால், ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் அத்தகைய பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பது வெளிப்படையானது.
தற்போதைய அரசியல் நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைப்பது சாத்தியமில்லை என்பதே அண்மைக்கால கருத்துக்கணிப்புக்களின் பொதுவான முடிவாக இருக்கின்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்தினால் பலம்வாய்ந்த அரசாங்கம் ஒன்றை அமைக்கமுடியும் என்று எந்த அடிப்படையில் பசில் ராஜபக்ச கூறுகிறார் என்று தெரியவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலை நடத்தினால் மக்கள் அறிவுபூர்வமான முறையில் வாக்களிப்பதில்லை என்று அவர் புதுவிதமான வாதத்தை முன்வைக்கிறார்.
” ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளராவது ஒரு வாக்கினால் வெற்றிபெற்றால் கூட அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினால் பாராளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருக்கும். இது ஒரு நல்ல விடயமாக எனக்கு தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்தினால் கூடுதலான அளவுக்கு சமநிலையான பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கு சிறப்பான வாய்ப்பு இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பிறகு அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை வென்றது. ஆனால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியதாக நான் இப்போது நம்புகிறேன் ” என்று ராஜபக்ச கடந்த வாரம் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறினார்.
தமிழ்ப்பொது வேட்பாளர் யோசனை :
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற யோசனை குறித்து அண்மைய மாதங்களாக சிலரால் வடக்கில் பேசப்படுகிறது.
ஐந்து தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் சாதகபாதகங்கள் குறித்து அரசியல் அவதானிகளும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னர் 15 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், போரின் விளைவான பெருவாரியான மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படாமல் இருக்கும் நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் உலகிற்கும் கூறுவதற்கு ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தவேண்டும் என்பதே தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனையை நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கப்படும் வாதமாகும்.
இந்த யோசனையை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் முயற்சியை ‘மக்கள் மனு'( people’s Petition) என்ற சிவில் சமூக அமைப்பு முன்னெடுத்திருக்கிறது.
கடந்த வாரம் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் ‘ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விடயம் தொடர்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்த அரசியல் அவதானிகள் மூவருக்கு புறம்பாக தமிழ்க்கட்சிகள் சிலவற்றின் தலைவர்களும் சபையோரில் சிலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல்களில் பெரும்பாலும் தென்னிலங்கை வேட்பாளர்களில் தங்களுக்கு விருப்பம் இல்லாதவரை தோல்வியடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.
போரின் முடிவுக்கு பிறகு 2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவரின் ஆணையை ஏற்று போரை முழுவீச்சில் முன்னெடுத்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் அமோகமாக வழங்கிய ஆதரவு இந்த எதிர்மறை வாக்களிப்பு சிந்தனையின் ஆபத்தை மாத்திரமல்ல, அபத்தத்தையும் வெளிக்காட்டியது.
அதை அப்போது சில அரசியல் ஆய்வாளர்கள் போரில் சொல்லொணா உயிரிழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த தமிழ் மக்களை வரலாறு மீண்டும் வஞ்சித்த ஒரு சந்தர்ப்பம் என்று வர்ணித்தது நினைவுக்கு வருகிறது.
இறுதியாக 2019 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் போர்க்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் மக்கள் அமோகமாக வாக்களித்தனர்.
கடந்த வாரம் கோட்டாபய வெளியிட்ட ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றிய சதி ‘ என்ற நூலில் சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாதவர்களின் நலன்களுக்கும் இடையிலான போட்டியின் விளைவாகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக கூறியிருந்தார். தனக்கு எதிராக வாக்களித்த சிறுபான்மைச் சமூகங்கள் மீது எந்தளவுக்கு அவர் வஞ்சினம் கொண்டிருக்கிறார் என்பதை இது பிரகாசமாக வெளிக்காட்டுகிறது.
இவ்வாறாக எதிர்மறையாக வாக்களிக்கும் போக்கை தமிழ்மக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கைவிட்டு அதை வடக்கு, கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதி தங்களது நிலைப்பாட்டை உலகிற்கு கூறுவதற்கு வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும் என்பதே கருத்தரங்கில் ஆய்வாளர்கள் மூவரினதும் உரைகளின் சாராம்சமாக இருந்தது.
தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படக்கூடியவர் தனக்கென்று அரசியல் அபிலாசை எதுவும் இல்லாதவராகவும் அதேவேளை தமிழ் மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு முன்னணி பிரமுகராகவும் இருக்கவேண்டும் என்றும் தேர்தல் முடிவடைந்ததும் அவரின் தேவையும் முடிந்து விடவேண்டும் என்றும் கூட கூறப்பட்டது. அதாவது அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு கூறுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அடையாளச் சின்னம் மாத்திரமே என்பதே அதன் அர்த்தம். அப்படியான ஒருவரை வடக்கு,கிழக்கு தமிழ்ச்சமூகத்தில் இன்று கண்டுபிடிக்கமுடியுமா என்பது முக்கியமான கேள்வி.
தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பதையோ அல்லது புதிய சூழ்நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதையோ தமிழ் மக்களால் சுயமாகத் தீர்மானிக்கமுடியும் என்று எதிர்பார்த்தலாகாது. அதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு சிந்தனைத் தெளிவுகொண்டதும் கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றதுமான தொலைநோக்குடைய அரசியல் தலைமைத்துவம் தேவை. அத்தகைய தலைமைத்துவம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக்கூடியவர்களாக அன்றி மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பிறழ்வான சிந்தனைகளின் பின்னால் இழுபட்டுச் சென்று தேர்தல்களில் வெற்றிபெறுவதை மாத்திரம் நோக்கமாகக்கொண்டு செயற்படுபவர்களாகவே இருக்கிறார்கள். எதிர்காலத்துக்கான ஒரு புதிய நோக்கை மக்களுக்கு காண்பிப்பதை விடுத்து அவர்களை கடந்த காலத்துடன் உணர்ச்சிபூர்வமாகப் பிணைத்துவைத்திருப்பதிலேயே இந்த தலைவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
இன்று தமிழ் அரசியல் சமுதாயம் பெருவாரியான அரசியல் கட்சிகளாகவும் குழுக்களாகவும் சிதறுண்டு கிடக்கிறது. அதேவேளை இன்றைய தமிழ்ச்சமுதாயம் குறிப்பாக வடக்கு சமுதாயம் கற்பனை செய்துபார்த்திருக்க முடியாத தியாகங்கள் நிறைந்த மூன்று தசாப்த கால விடுதலைப் போராட்டத்தைக் கடந்து வந்த ஒரு சமுதாயம் என்பதற்கான எந்த குணாதிசயத்தையும் கொண்டதாக இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து சிந்திப்பதற்கு முதலில் தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காணும் வழிவகைகள் குறித்தும் தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்படவேண்டிய குறுகிய காலத் தீர்வு மற்றும் நீண்டகால அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு குறித்தும் தெளிவான ஒருமித்த நிலைப்பாடுகளுக்கு வரவேண்டும். இதைச் செய்வதற்கு வடக்கு, கிழக்கில் இன்று இயங்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எத்தனை பேர் தங்களது கட்சி அரசியல் நலன்களை கைவிட்டு அர்ப்பணிப்புச் சிந்தையுடன் முன்வரத் தயாராயிருக்கிறார்கள்? பாராளுமன்ற அரசியல் இயல்பாகவே கொண்டுவருகிற சகல சீரழிவுப் போக்குகளின் செல்வாக்கு இவர்களை மாத்திரம் என்ன விட்டுவைத்தா இருக்கிறது?
‘மக்கள் மனு’ சிவில் சமூக அமைப்பு கடந்த நவம்பரில் இதே தந்தை செல்வா கலையரங்கில் தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை வலியுறுத்தி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்து உரைகளைக் கேட்டார்கள். கரகோஷம் செய்துவிட்டு கருத்தரங்கு முடிந்து எழுந்து சென்ற அவர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தைப் பற்றி பிறகு தக்களுக்குள் பேசியதாக நாம் அறியவில்லை.
தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சில தமிழ் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்திருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தையும் உள்ளடக்கியதாக அந்த வாக்கெடுப்பு அமையவேண்டும் என்று கேட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசாங்கங்களோ அல்லது சர்வதேச சமூகமோ அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
இறுதியில் இலங்கை அரசாங்கம் நடத்தும் ஜனாதிபதி தேர்தலை வடக்கு, கிழக்கில் ஒரு சர்வஜனவாக்கெடுப்பாக பயன்படுத்துவது குறித்து தமிழர்கள் தாங்களாகவே தீர்மானிக்கவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உலகிற்கு ஒரு செய்தியை கூறக்கூடியதாக இருக்கும் என்பது உண்மையே. அதற்கும் கூட தமிழ்க்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கு முன்வரவேண்டும். தங்களது செயற்பாடுகளின் மூலமாக அந்த கட்சிகளின் தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க வேண்டும். தமிழ்க்கட்சிகள் மீதான தமிழ்மக்களின் நம்பிக்கை இன்று இருப்பதைப் போன்று ஒருபோதும் தாழ்ந்த நிலையில் இருந்ததில்லை.
1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆணையைக் கேட்டு 18 ஆசனங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்துக்கு சென்றது. காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். ஆனால், அந்த தேர்தலில் தனிநாட்டுக்கு தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கியதாக கூட்டணியின் தலைவர்கள் கூறிக்கொண்ட ஆணைக்கு என்ன நடந்தது? அந்த அனுபவத்தை இன்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நினைவு மீட்டிப்பார்க்க்கவேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி தேர்தலை சர்வஜனவாக்கெடுப்பாக கருதி தமிழ் மக்கள் தங்களது தற்போதைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடியதாக அவர்களை எந்தளவுக்கு தமிழ்க்கட்சிகளினால் வழிநடத்தமுடியும் என்பது அவற்றின் ஒருமித்த அணுகுமுறையிலேயே தங்கியிருக்கிறது. அத்துடன் அவ்வாறு தமிழ் மக்கள் வெளிப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதிலும் தமிழ்க்கட்சிகள் மத்தியில் முன்கூட்டிய தெளிவு இருக்கவேண்டும். அல்லாவிட்டால் இந்த முயற்சி ஒரு அரசியல் கேலிக்கூத்தாகவே முடியும். தமிழ் மக்களின் வாக்குகளும் பெறுமதியற்றவையாக போகும் என்பதுடன் அவர்களது நீண்டகால நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளும் கொச்சைப்படுத்தப்படுவதாகவே முடியும்.
(ஈழநாடு)