— அகரன் —
அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள்.
இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன்.
அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள்.
பின்பு ஓர் ஆண்டுக்குள் அவள் இறந்து போனாள். அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல் தன் கல்வியை பிற்போட்டுவிட்டு, தான் நேசித்தவளுக்காக வாழ்ந்த அந்தப்பிரெஞ்சு நண்பனை எனக்கு தெரியும்.
அவனது அன்பும், அறனும் உலகுடன் பெறினும் கொள்ளமுடியாது.
நீலக்கண்களையும் சிவந்த புன்னகையையும், மாசறு அன்பும்கொண்ட அந்த இருபத்திமூன்று வயதான மார்க்கோ என்றதோழி வன்சோன் என்ற என் நண்பனின் நினைவில் மட்டுமல்ல என் நினைவில் இருந்தும் அழிக்க முடியாத உயிர்.
குணா கவியழகனின் ‘கடைசிக்கட்டில்’ என்ற அவரது ஆறாவது நாவலை ஐந்து ஆண்டுகளின் பின்னர் எழுதியிருக்கிறார். “எதிர்” வெளியீடாக இந்த ஆண்டு சனவரியில் வந்திருந்தது.
தூக்கம் முறிந்துபோன ஓர் அதிகாலை நான்கு மணிக்கு நாவலை படிக்க ஆரம்பித்தேன்.
புத்தக முக அட்டையின் உருவம் என்னை யுத்தம் பற்றிய ஓர் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் முன்முடிவைத் தந்திருந்தது. என் மன ஏற்பாடும் அப்படித்தான் இருந்தது.
2009 க்கு பின்னர் யுத்தச்சிறையில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து எழுத்தின் மூலம் காலத்தை பதிவு செய்பவர்கள் அரிதிலும் அரிது.
அவர் எழுதிய முதல் இரண்டு நாவல்களும் போரியல் நாவல்வகைக்குள் அடக்கலாம். மீதி மூன்று நாவல்களும் போர்க்கால நாவல்கள்.
கடைசிக்கட்டில், முழுமையாக மின்சக்தியில் இயங்கும் “ரெஸ்லா” வண்டியைப்போல் சத்தம் இல்லாமல் ஆரம்பித்து வேகமாக நகர்ந்தது.
யாழ்ப்பாண வைத்திய சாலையின் பத்தாம் இலக்க விடுதியே கதைக்களம்.
அவ்விடுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விடுதி. அங்கு மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மார்க் அன்ரனி என்பவரது காதல் கதைதான் கடைசிக்கட்டில்.
ஐந்தாம் கட்டில் மாணிக்கவாசகம் ; அவரைப் பார்க்க வரும் மகள் வஞ்சி, அவள் அம்மா. ஆறாம் கட்டில் பரமசோதியார், கடைசிக் கட்டில் ஒற்றக்கை நாகையா, தாதி மேனகா, முதலாம் கட்டில் மூக்கன் என்ற முகிலன், வைத்தியர் வண்ணன், அதிகாரத்தை விரும்பும் கனகாம்பிகை தாதி, உடல் நோயோடு கரவுநோயும் கொண்ட இராமதாசன். இவர்களை, இந்த மனிதச்சித்திரங்களால் அரசியல்முகபாடங்களற்ற எளிய மக்களின் கதையை குணா எழுதி இருக்கிறார்.
வஞ்சியின் குடும்பம் யுத்தத்தில் இருந்து மீண்டு வன்னியில் வாழ்கிறது. வஞ்சியின் அண்ணா யுத்தச்சிறையில் இருக்கிறார். வஞ்சியின் வருமானத்தில் நகரும் குடும்பம்.
மார்க் யாழ்ப்பாணதத்தில் உள்ள சிற்றூரில் இருந்து அரசாங்க வேலைக்குச் செல்லும் முதல் மகன்.
வஞ்சியின் தந்தை புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்க வரும் வஞ்சிக்காக அவள் தந்தையில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வது எவ்வளவு உண்மையோ அதேயளவு எல்லோருக்கும் உதவுவதுமாக, பணிபுரியும் இனிய இதயத்தை மார்க் வைத்திருக்கிறான்.
இங்கு வருபவர்கள் படிப்படியாக இறக்கும் விதி அவர்கள் கட்டிலில் இருக்கிறது. அங்கு இருப்பவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கதை இருக்கிறது.
பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்தும் யாரும்வந்து பார்க்காத ஏக்கத்திலேயே பரமசோதி இறந்தபோது அவர் தலைமாட்டில் ஒர் கடிதம் கண்டெடுக்கப்பட்டுகிறது. அக்கடிதம் புலம்பெயர்ந்து வாழும் எல்லோரும் படிக்கவேண்டியது.
மனிதர்கள் எவ்வளவு இயந்திரமாகவும் பகட்டோடும் இருக்கிறார்கள் என்பதை பரமசோதியின் கதைகூறும்.
நாகையா இறந்தபோது மூக்கனும், மார்க்கும் அழும்காட்சிகள் இந்த மனிதர்கள் எத்தனை அன்பு தோய்ந்தவர்கள் என்று ஏங்க வைக்கும்.
வஞ்சியின் அப்பாவை வீட்டில் வைத்து பார்க்குமாறு கண்ணன் வைத்தியர் அனுப்புவதற்கும் நஞ்சு கலந்தகாரணம் உண்டு.
காதலின் அத்தனை வண்ணங்களையும் காட்டிய வஞ்சி, வீடு தேடிப்போனவனை வீட்டுக்குள் இருந்தபடி அவனைப் பார்க்காது…
அவள் தாயார் மொழியில் ‘தம்பி என்னதான் இருந்தாலும் ….நீங்கள் பிழையா நினைச்சிட்டீங்கபோல.. உங்களுக்கு எல்லாந் தெரியும்..’ என்ற வார்த்தைகளுக்குள் நாவலின் சொல்லப்படாத நாவல் உள்ளது. அது அத்தனை கொடியவிஷத்தை வீசக்கூடிய மரம். அதை மனங்களிடம் வீசுவதை முறையாக குணா கவியழகன் செய்துள்ளார்.
நாகையா மூலம் அன்பு பற்றிய தத்துவ விசாரனை, மூக்கன் என்ற முகிலன் என்ற இனிய இளைஞனின் பாத்திரங்கள் நாவலின் உயிரை கொண்டோடுகின்றன.
அழகியலான சொல்லாடல்களை பல இடங்களில் எழுதியுள்ளார்.
• ‘ஒவ்வொரு நாளும் குளிக்கும் மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்’
• ஈவதால் மேலுலகம் இல்லை எனினும் ஈபவன் வள்ளல்.
• அவளின் சப்பாத்து ஒலி ஒவ்வொருவர்இதயத்துடிப்புப்போல ஆகிவிட்டிருந்தது.
• வண்ணங்கள் பூத்த வாழ்வெனும் கனாக்காடு.
• பணத்துக்காகவும் புகழுக்காகவும் உழைத்தவர்கள் கடைசிக் கட்டிலுக்கு வரும்போது அதை இன்னும் அனுபவிக்காமல் போக விரும்பாத மனதோடு அவஸ்தையுற்றார்கள் ; உறவைச் சம்பாதித்தவர்கள் வாழ்வை அனுபவித்து முடித்த பாங்கில் பதட்டமின்றி மரணத்தை எதிர் கொண்டார்கள்.
• இருட்டு எங்களை பார்த்தபடி இருந்தது.
தன் வாழ்நாளில் அதிகம் யுத்தகாலங்களில் வாழ்ந்தாலும் அதற்கு மாற்றாக ஒரு கதையை எழுதியதில் குணா கவியழகன் தன் எழுத்தை வலுவாக்குகிறார்.
தமிழில் மிகச்சிறந்த போரியல் நாவல் இன்னும் எழுதப்படவில்லை. அதற்கான காலம் கரைந்துகொண்டு இருக்கிறது.
அழகி மார்க்கோவிற்கு மரணம் புற்று நோய் என்ற பெயரில் இருபத்தி நான்கு வயதில் வந்தது. அவள் உருகி.. உருகி உருமாறி மறைந்ததை இரண்டு கண்களிலும் வைத்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட மனிதர்களின் கடைசிக்கட்டிலை வேகமாக உள்வாங்கிக்கொண்டேன்.
மதியம் உணவருந்தும் முன்னர் நாவலின் 232 பக்கங்களையும் படித்து முடித்தேன்.
என் மனதில் மார்க்கோ, வன்சோனின் கன்னங்களை வருடிமுத்தமிடும் காட்சி அப்படியே இருக்கிறது. அது காலத்தால் கரைக்க முடியாத காட்சி.