— அழகு குணசீலன் —
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பளவு 2,854 சதுர கிலோமீட்டர்கள். இந்த நிலப்பரப்பு 14 பிரதேச செயலகங்களுக்கு இடையே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்குள் 346 கிராமசேவகர் பிரிவுகள் அடங்குகின்றன. 14 பிரதேச செயலகங்களில் 4 முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசசெயலகங்கள், 10 தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்பவை. 2012 சனத்தொகை கணிப்பீட்டின்படி , மட்டக்களப்பு மாவட்டத்தின் அல்லது 14 பிரதேச செயலக பிரிவுகளின் மொத்த சனத்தொகை 5,25,142.
நிர்வாகப் பிரிவுகளை வகுக்கும் போது உலக நாடுகளால், ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறை உள்ளது. மக்கள் தொகையையும், நிலப்பரப்பையும் கொண்டு அவற்றை பிரிப்பது. மக்கள் தொகை செறிவாக உள்ள பிரிவில் நிலப்பரப்பளவு குறைவாக இருக்கும். மக்கள் செறிவு குறைவாக உள்ள பிரிவில் நிலப் பரப்பளவு அதிகமாக இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுக்கு/ வாக்காளர்களுக்கு அரச சேவையை இலகுவாக வழங்குவதற்கான ஏற்பாடு. இலங்கையில் கிராம சேவகர் பிரிவு முதல் மாவட்டம், மாகாணங்கள் வரையும், உள்ளூராட்சி வட்டாரங்கள் முதல் தேர்தல் தொகுதிகள் – தேர்தல் மாவட்டங்கள் வரையும் அவ்வாறே பிரிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் சனத்தொகையிலும், நிலப்பரப்பிலும் இவற்றிற்கிடையே வேறுபாடு காணப்படுகிறது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டமும் அதன் நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயமும் விதிவிலக்கல்ல. சமுக, பொருளாதார, அரசியல் தேவைகளைப் பொறுத்து இவற்றில் காலத்திற்கு காலம் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகப்பிரிவுகளை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இன அடிப்படையில் நிர்வகிக்க வழி செய்துள்ளது. அதுவும் இலங்கையில் அரசநிர்வாகம் இன அடிப்படையிலான நிர்வாகப்பிரிவுகளை கொண்டதாக உள்ள ஒரே மாகாணமாக கிழக்குமாகாணம் இருக்கிறது. இந்த வாய்ப்பு மலையகமக்களுக்கும், தென்னிலங்கையில் குறிப்பிட்ட பிரதேசங்களில் செறிந்து வாழும் தமிழ், முஸ்லீம் மக்களுக்கும் இல்லை.
மாவட்ட மக்கள் தொகை 5,25,142 : கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி), 22,144 ,கோறளைப்பற்று மத்தி (பாசிக்குடா)25,643, காத்தான்குடி 40,237, ஏறாவூர் நகரம் 24,632 சனத்தொகையை கொண்டுள்ளன. மறுபக்கத்தில் தமிழர்கள் பெரும்பான்மையக வாழும் ஏறாவூர் பற்று (செங்கலடி) 75,136, கோறளைப்பற்று வாழைச்சேனை 23,317, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) 21,512, கோறளைப்பற்று தெற்கு (கிரான்)26,061, மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) 86,028, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) 30,583, மண்முனை தென் எருவில் (களுவாஞ்சிக்குடி) 60, 694, மண்முனைதென் மேற்கு (கொக்கட்டிச்சோலை) 24,673, மண்முனை மேற்கு (வவுணதீவு) 28,392, போரதீவுபற்று (வெல்லாவெளி) 36,090 என பங்கிடப்பட்டுள்ளது.
உண்மையில் முஸ்லீம் பிரதேச செயலகபிரிவுகளோடு ஒப்பிடுகையில் தமிழ் பிரதேச செயலகப் பிரிவுகளில் பொதுவாக அதிக சனத்தொகை காணப்படுகிறது. எனினும் காணி நெருக்கடியானது முஸ்லீம் பிரிவுகளில் முக்கிய பிரச்சினையாக இருப்பதற்கு குறைந்தளவான நிலப்பரப்புக்குள் ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்பே முக்கிய காரணம். இது சதுர கிலோ மீட்டர் ஒன்றுக்கான சனச்செறிவை பெரிதும் அதிகரித்துள்ளது. இது காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் திட்டமிடப்படாத நகரங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்வியல் கலாச்சாரம், தொழில்வாய்ப்பு, வர்த்தக மையம் சார் வளர்ச்சி , பாதுகாப்பு – குடும்ப உதவி என்பன முக்கிய காரணம். மறுபக்கத்தில் இதனால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்படும் ஆரோக்கியபாதிப்பு , சமூகநலன் பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
கடந்த காலங்களில் இந்த திட்டமிடப்படாத நகரவளர்ச்சி குறித்து முஸ்லீம் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. 1970 களின் நடுப்பகுதியில் காத்தான்குடியின் சனத்தொகை அடர்த்தி உலகின் -சீனாவின் சனத்தொகை அடர்த்தியுடன் ஒப்பிடப்பட்டபோது பெருமையடித்துக் கொண்டவர்கள், இந்த ஒப்பீடு அரை நூற்றாண்டுக்கு முன்னர் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நகரமயமாக்கம், அதன் எதிர்மறையான சுற்றாடல் பாதிப்பு விளைவுகள் குறித்தும் மக்களும் பெரிதும் அறிந்திருக்கவில்லை, அரசியல் கொள்கை வகுப்பிலும் இது முக்கியத்துவம் பெறவில்லை.
இந்த நிலையில் இருந்து தமிழர் பிரதேசங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகால யுத்தம் தடுத்திருந்த அபிவிருத்தி இப்போது தமிழர் பகுதிகளில் ஆரம்பித்துள்ளது. இது விடயமாக அண்மைக்காலமாக வாகரை, செங்கலடி, கிரான் , கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, மண்டபத்தடி ,போன்ற பகுதிகளில் ஏற்பட்டுவரும் திட்டமிடப்படாத நகரமயமாக்கம் இன்றைய முஸ்லிம் புதிய நகரங்களில் ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதார நெருக்கடிகளையே ஏற்படுத்தும். உலகமயமாக்க பொருளாதார நெறிமுறை, சுற்றாடல், சமூக நலன் குறித்து கொள்கை வகுப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். படுவான்கரை பாரம்பரிய கிராமங்களில் சவக்காலைகளில், கிராமிய காடுகளில் , அருகில் இருந்த குளங்களை மண்மூடி நிரப்பி, வயல்வரவைகளில் குடியேறி முடிந்துவிட்டது. பொதுப் பயன்பாட்டிற்கு நிலத்தட்டுப்பாடு நிலவுகிறது. குடியிருப்பு நிலங்கள் இல்லை இதனால் மக்கள் படுவான்கரை மேற்கில் நெல்வயற்காணிகளில் குடியேறுகிறார்கள். யானைகளோடு வாழ்விடத்திற்காக மோதுகிறார்கள். முற்றிலும் வயல்வட்டைகளாக இருந்த சில்லிக்கொடியாறு, காலபோட்ட மடு, பனையறுப்பான், நாற்பதுவட்டை போன்றவை புதிய கிராமங்களாக உருவாகியுள்ளன.
பண்டைய ஈழ தென்புலப்பெயர்ச்சி, நோய்கள், வரட்சி காரணமாக மக்கள் ஈரவலயத்தை நோக்கி இடம்பெயர்ந்ததால் மற்றைய வரண்ட வலயமாவட்டங்கள் போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் சனத்தொகை குறைவாக அல்லது குறிப்பிட்ட நிலப்பரப்பில் கூடிய செறிவையும், மற்றைய வற்றில் ஐதானசெறிவையும் கொண்டுள்ளது. தென்னிலங்கை ஈரவலய மாவட்டங்களின் சனத்தொகை பரம்பல் இதற்கு எதிர்மாறானது. இதுவே அரச திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையாகும். இது இலங்கையின் பொதுவான நிலை. ஆனால் தமிழ், முஸ்லீம் மக்கள் அன்றைய சூழலில் தமது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேறி குடியேற்ற கிராமங்களில் வாழ விரும்பவில்லை. விளைவு: காணி நெருக்கடிக்கு உட்பட்டிருந்த சிங்கள மக்கள் கல்லோயா, கந்தளாய், மகாவலி குடியேற்றத் திட்டங்களில் முண்டியடித்து குடியேறினர்.
ஒப்பீட்டளவில் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசசெயலகங்களான காத்தான்குடி, ஏறாவூர் நகரம், ஓட்டமாவடி (கோறளைப்பற்று மேற்கு) மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையை உள்ளடக்கிய , தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் சனத்தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் சராசரி சனத்தொகை அடர்த்தியை விடவும் பலமடங்கு அதிகமானது. ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை -அடர்த்தி முறையே காத்தான்குடி 6,706, ஏறாவூர் நகரம் 8,211, ஓட்டமாவடி 1,303 , மட்டக்களப்பு 1,265.
மூன்று சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட ஏறாவூர் நகரம், ஆறு சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட காத்தான்குடி,17 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஓட்டமாவடி ஆகிய செயலகப் பிரிவுகளில்
அடர்த்தி அதிகமாக உள்ளது. அதுவும் ஓட்டமாவடி, மட்டக்களப்பு பிரிவுகளின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் ஏறாவூரில் எட்டு மடங்கு அதிகமாகவும், காத்தான்குடியில் ஆறு மடங்கு அதிகமாகவும் உள்ளது. இவை மூடி மறைக்க முடியாத, திரிபுபடுத்த முடியாத புள்ளி விபர கணிப்பீட்டு பெறுமானங்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இவற்றிற்கு மாறாக தமிழர்களை பெரும்பான்மையாகக்கொண்ட பிரதேச செயலக பிரிவுகளை முஸ்லீம் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் மொத்த சனத்தொகையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. சிலவற்றில் அதிக சனத்தொகை உள்ளது. ஆனால் இப்பிரதேசங்கள் அதிகளவு நிலப்பரப்பை கொண்டவை என்பதால் சதுர கிலோமீட்டருக்கான சனத்தொகை அடர்த்தி முஸ்லீம் பிரிவுகளை விடவும் மிகவும் குறைவாக உள்ளது. செங்கலடி 108, வாழைச்சேனை 666, வாகரை 37, கிரான் 45, மட்டக்களப்பு 1,265, ஆரையம்பதி 827, களுவாஞ்சிக்குடி 963, கொக்கட்டிச்சோலை 170, வவுணதீவு 81, வெல்லாவெளி 198.இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த பிரதேச செயலகப்பிரிவுகள் விவசாய பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் முக்கியமானவை. பெருமளவான நிலப்பரப்பு நெல், உப உணவுப்பயிர்கள், மந்தை வளர்ப்பு,சேனைச்செய்கை மற்றும் அரச பயன்பாடு, காட்டுவளம், வனவிலங்கு பாதுகாப்பு,தொல்பொருளாராட்சி, மகாவலி திட்டம் போன்ற வற்றிற்கு ஒதுக்கப்பட்டு மக்கள் குடியேறமுடியாதவையாக உள்ளன.
ஆனால் , இந்த கூடிய, குறைந்த அடர்த்தியை எண்கணிதம் தீர்மானித்தாலும். இந்த எண்கணிதம் தருகின்ற பெறுபேற்றுக்கான சமூக, பொருளாதார, அரசியல், வாழ்வியல் பழக்க வழக்க, பண்பாட்டுக்காரணங்களே இந்த கேள்விக்கான முழுமையான பதிலை தரமுடியும். அதுவே சமூக விஞ்ஞான ரீதியான ஆய்வியல் முறையாகவும் இருக்கமுடியும். இவ்வாறான ஆய்வொன்று தருகின்ற பெறுபேற்றின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கான காரணங்களை அடையாளம் காணவும், தீர்வுகளை முன்வைக்கவும் முடியுமேயன்றி இதை ஒரு “நிர்வாகபயங்கரவாத” பிரச்சினையாக அடையாளப்படுத்துவதால் அல்ல. யுத்த கால ஆயுத பயங்கரவாதம் இருசமூகங்களினதும் சுயமான இடப்பெயர்வை , தொழில் சார் அசைவை தடுத்தது என்பதையும், சட்டரீதியான நிர்வாக நடைமுறையை செயலிழக்கச்செய்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. நிர்வாகத்தில் இனம்,மதம் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டையும் இரு தரப்பிலும் ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல், இலஞ்சம், பாகுபாடு, நேர்மையற்ற நிர்வாகம், பக்கச்சார்பு இதன்விளைவுகள்.
மூன்று சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புக்குள் 8,000 அதிகமான மக்கள் ஏறாவூரில் முடங்கி வாழ்கிறார்கள் என்ற உண்மையை தமிழ்த் தரப்பில் யாரும் மறுத்ததாக தெரியவில்லை. ஆனால் இதற்கான காரணங்கள் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்தவை, அவை ஆய்வு செய்யப்பட்டு, தீர்வு காணப்படவேண்டும். புள்ளிவிபரங்களுக்கு பின்னால் உள்ள காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக “நிர்வாகப் பயங்கரவாதம்” என்பதால் மட்டும் தீர்வுகாண முடியாது.
கிழக்கு மாகாணத்திற்கு ஒரு சிங்கள ஆளுனரை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு சிங்கள மாவட்ட செயலாளரை நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அப்படியானால் முஸ்லிம் ஆளுநர் ஒருவராலும், முஸ்லீம் முதலமைச்சர் ஒருவராலும், நான்கு முஸ்லீம் பிரதேச செயலர்களாலும், சுதந்திரம் பெற்ற முதலான முஸ்லீம் அமைச்சர்களாலும், குறிப்பாக கிழக்குமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த முஸ்லீம் அமைச்சர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ? ஹிஸ்புல்லா, செந்தில் தொண்டமானைத் தவிர மற்றைய அனைவருமே சிங்கள ஆளுநர்களாக இருந்தபோதும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கூட இருந்து ஆட்சி செய்த நஸீர் அகமட்டும் அருகில் இருந்த ஆளுநருடன் இது பற்றிப் பேசவில்லை.