(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
கதிர்காமம் முஸ்லீம் பள்ளிவாசல் வளாகத்தினுள் கோகுலனும் கதிரவேலும் நுழையும்போது அங்கே வட்டவடிவமாகத் தமிழர்கள் – சிங்களவர்கள் – முஸ்லீம்கள் என அனைத்து இன மக்களும் இந்துக்கள் – பௌத்தர்கள் – இஸ்லாமியர்கள் – கிறிஸ்தவர்கள் என அனைத்து மத மக்களும் நின்றபடி, கும்பலாகக் கூடியிருக்க அந்த வட்டவடிவச் சனக்கூட்டத்தின் நடுவில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
கோகுலன், மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்திரப் போரிலே அபிமன்யு சக்கரவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததுபோல சனக்கூட்டத்திற்குள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். கதிரவேலும் அச்சொட்டாகக் கோகுலனைப் பின்தொடர்ந்தான்.
சனக்கூட்டத்தின் நடுவே அவர்கள் கண்டகாட்சி அவர்களை மெய்சிலிர்க்கவைத்தது. கழுத்திலிருந்து கால்வரை உடலை மறைத்துச் சாறன் அல்லது தொளதொளன்ற நீளக்காற்சட்டையும் முழங்காலுக்கும் கீழே தொங்கும் நீளக்கை வைத்த மேலங்கியும் பச்சைநிறச் சால்வையும் தலைப்பாகையும் அணிந்த நான்கைந்து பேர் கையில் வைத்திருந்த தோலினால் செய்யப்பட்ட வட்டவடிவமான ‘றபான்’ என அழைக்கப்படும் இசைக்கருவியை தோளுக்குச் சற்றுமேலே பக்கவாட்டில உயர்த்திப்பிடித்தபடி கையால் தட்டி ஒலியெழுப்பிய படியும் அரபுச் சொற்களை உச்சரித்தபடியும் உடலை அசைத்து ஆவேசமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய கழுத்திலும் மணிமாலைகள் தொங்கின. ஆடியவேகத்தில் மணிமாலைகளும் ஒன்றோறொண்டு உரசியபடி ஒலியெழுப்பின. மணிமாலைகளின் ஒலி ‘றபான்’ ஒலிக்குள் அடங்கிப்போயிற்று.
இவ்வாறு அசைந்து கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் தங்கள் கைகளில் வைத்திருந்த கூரான கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் தங்கள் தலை, நெற்றி, கை போன்ற இடங்களில் குத்தியும் வெட்டியும் காயப்படுத்தினர். காயங்களிலிருந்து வெளிப்பட்ட இரத்தத் துளிகள் வெளிச்சம்பட்டு சிவப்புக் கற்களாக மின்னின. தலையிலிருந்தும் நெற்றியிலிருந்தும் வழிந்த இரத்தம் கன்னங்களில் சிவப்புக் கோடுகளை வரைந்தன. இக்காட்சியைக் காணக்காணக் கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் ஆச்சரியமாகயிருந்தது. வைத்தகண் வாங்காமல் இக்காட்சியை வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில் கதிரவேலின் தோளில் ஒருவர் பின்பக்கமாகத் தட்டி “எப்படிக்கதிரவேல்? எப்ப கதிர்காமம் வந்த நீங்க?” என்றார்.
யார் தன்னைத் பின்னால் தோளில்தட்டி அதுவும் கதிர்காமத்தலத்தில் வைத்து இவ்வாறு கேட்பது என்றெண்ணித் திரும்பிப் பார்த்த கதிரவேலின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன. மனம் மகிழ்ச்சியில் ஆடிப்போயிற்று.
“நீங்க என்ன பிறதர் இங்க? எப்ப வந்த நீங்க” என்றான் கதிரவேல்.
ஆம்! அங்கே நின்று கொண்டிருந்தவர் கதிரவேலுக்குச் ‘சீனியர்’ ஆகவும் கோகுலனுக்குச் சமாந்தர வகுப்பிலும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆண்கள் விடுதியில் தங்களுடன் தங்கிக் கல்விபயிலும் சாய்ந்தமருது ஊரைச்சேர்ந்த மொகமட் வெள்ளை வெளேரென்ற உடையில் தலையில் வெள்ளைத் தொப்பியும் அணிந்தபடி நின்றுகொண்டிருந்தான்.
மொகமட்டைக் கண்ட மாத்திரத்தில் தனக்குப் பக்கத்தில் கூட்டத்தின் நடுவே நடக்கும் காட்சிகளில் கண்பதித்து மனதையும் பறிகொடுத்து நின்றிருந்த கோகுலனைத் தட்டி “பிறதர்! இங்க பாத்தீங்களா? ஆரெண்டு” என்றான். திரும்பிப் பார்த்த கோகுலனுக்கும் ஆச்சரியத்தால் கண்கள் அகல விரிந்தன.
“என்ன மொகமட் இங்க எப்ப வந்த நீங்க” என்று கேட்டான் கோகுலன்.
“இண்டைக்குப் பின்னேரம்தான் நாங்க வந்த. என்னோட வந்த கூட்டாளிப் பொடியனொருவன் ஆத்துக்கு அங்கால வாகனத்தில தூங்கிட்டு இரிக்கார். நான் பள்ளிவாசலுக்கு வந்த இடத்திலதான் கதிரவேலக்கண்ட” என்றான் மொகமட். பிறகு என்ன?
மொகமட்டைப் பெரியார் சாமித்தம்பியை அழைத்து அறிமுகம் செய்யும் படலம் முடிந்ததும் நான்கு பேரும் ஒன்றாயினர்.
“கதிர்காமம் பள்ளிவாசல் கொடியேறி இண்டைக்கு ஆறாம் நாள். நானும் என்ர கூட்டாளிப் பொடியனொருவனும் காரில கதிர்காமம் வந்த. நானும் கூட்டாளியும் றைவரும்தான். வேற ஆக்கள் இல்ல.” என்று தனது வரவைப் பதிவு செய்தான் மொகமட்.
கதிர்காமம் நடந்து வரும்போது ‘அவுலியா’க்களைப் பற்றிச் சொல்லும்போது முஸ்லீம் ஆள் ஒருத்தரிடம்தான் அதைப்பற்றி முழுமையாகக் கேட்டறியவேணும் என்று பெரியார் சாமித்தம்பி கூறியது கோகுலனின் நினைவில் எழுந்தது. இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று உணர்ந்த கோகுலன் விடயத்தைக் கூறி ‘மொகமட்’ இடம் விளக்கம் கேட்டான்.
“வாங்க ஆத்துக்கு அங்கால போய்க் கடயில தேத்தண்ணி குடிச்சிக்குடிச்சிக் கதைப்பம்” என்று மொகமட் அழைக்கப் பள்ளிவாசல் வளாகத்தைவிட்டு வெளியேறிய கோகுலன் – கதிரவேல் – பெரியவர் சாமித்தம்பி – மொகமட் நால்வரும் வள்ளியம்மன் கோயில் முன்றலையடைந்து பின் பாலத்தின் மேலால் ஏறி மாணிக்ககங்கை ஆற்றைக் கடந்து பஸ்நிலையத்தில் அமைந்திருந்த தேனீர்க்கடையொன்றினுள் நுழைந்தனர். நேரம் இப்போது நடுநிசியாகிவிட்டிந்தது. ஆனாலும் கோயிலும் சுற்றுப்புறமும் பகல்போல வெளிச்சம் காட்டின.
கதிர்காமம் சகல மதத்தினருக்குமான புனித பூமி இங்குள்ள பள்ளிவாசலுக்குச் சுற்றிவர எல்லைகள் உண்டு. உள்ளே தென்னந்தோப்பும் உண்டும். தினமும் ஐந்துவேளை தொழுகை நடைபெறுகிறது. இப்பள்ளிவாசலை ஒரு முஸ்லீம் குழுவினர் பரிபாலனம் செய்து வருகின்றனர்.
இங்கு ‘பால்குடி அப்பா’ என்ற இறைநேசரின் (அவுலியாலின்) ‘சியாரம்’ (கபுறடி – அடக்கஸ்தலம்) உள்ளது.
முஸ்லீம்கள் சாதாரண காலங்களிலும் உற்சவகாலங்களிலும் இப்பள்ளிவாசலைத் தரிசிப்பர். உற்சவகாலத்தில் இரவுவேளைகளில் ‘ராத்தீப்’ இடம்பெறும். கோகுலனையும் கதிரவேலையும் வியப்படையவைத்த நிகழ்வைத்தான் ‘ராத்தீப்’ என்பது.
இந்த நிகழ்வில் ‘றபான்’ அடித்து உடலை அசைத்து தம்மைக் கூரான ஆயுதங்களால் காயப்படுத்தியவர்கள்தான் ‘பக்கீர்மார்கள்’. பக்கீர்மார்கள் என அழைக்கப்படும் இப் ‘பாவா’க்களுக்கும் கதிர்காமத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இவர்கள் நாடுமுழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
பாவாக்கள் அனேகமாகத் தங்கள் வழமையான உடைகளுடன் பச்சைநிறச் சால்வையும் அணிந்திருப்பர். எப்போதும் தலைப்பாகை அணிந்தவர்களாகக் காட்சியளிப்பர். கழுத்தில் மணிமாலைகள் தொங்கும். முஸ்லீம்கள் அதனைத் ‘தஸ்பீகு’ மணிமாலை என அழைப்பர்.
‘அல்லாஹ்’ மீதான புகழை அரபுச் சொற்களால் உச்சரிக்கும்போது உச்சரிப்புக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க இம்மணிமாலையைப் பயன்படுத்துவர்.
பாவாக்களிடம் ஒருபக்கம் மூடப்பட்ட தோலினால் செய்யபட்ட இசைக்கருவி இருக்கும். இது ‘றபான்’ என அழைக்கப்படும். இது ஒரு தோற்கருவியாகும்.
மொகமட் இந்த விபரங்களையெல்லாம் பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பதுபோலக் கூறிக்கொண்டிருக்கையில் கோகுலன் இடைமறித்துக் கேட்டான்,
“பாவமன்னிப்பு” ப் படத்தில சிவாஜிகணேசன், ‘எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாஹ்வின் பேரைச்சொல்லி …’ எண்ட பாட்டப் படிச்சி நடிக்கக் கொள்ள இந்த றபானத்தத்தானே அடிச்ச அடிச்சிப் பாடினவர்” என்று,
மொகமட் “ஓம்! அதுதான்” என்றான்.
கதை தொடர்ந்தது.
றபானத்தைச் சாதாரண மக்கள் ‘எறவானக்கட்ட’ என்று அழைப்பர். இந்த மண்வாசனைச் சொல்லை அம்பாறை மாவட்டத்தின் கரையோர முஸ்லீம் கிராமங்களில் கேட்டு மகிழலாம்.
நோன்பு காலங்களில் ஒரு மாதம் முழுவதும் அதிகாலைப்பொழுதுகளில் முஸ்லீம்களை நித்திரையிலிருந்து எழுப்பி நோன்பு பிடிக்க இந்த பாவாக்களே ‘றபான்’ இசை ஒலி எழுப்பி உதவுவர்.
மொகமட்டும் அவரது உறவினர்கள் நண்பர்களில் தமது வயதையொத்தவர்களும் சிறுவர்களாக இருந்த காலங்களில் கையில் ஒரு ‘அரிக்கன்லாம்பு’டன் றபான் இசை ஒலி எழுப்பி வீதிவீதியாக உலாவரும் பாவாக்களைப் பார்த்து மகிழ்ந்ததுண்டாம்.
மொகமட் தனது சிறுவயதுக்காலத்தை நினைவுகூர்ந்தபோது, மார்கழித் திருவெம்பாவைக் காலத்திற்கு முன்பு தானும் நண்பர்களும் ஊரில் அதிகாலைப்பொழுதில் எழுந்து ஊரில் அந்த வைகறைக் குளிரிலும் இருட்டிலும் வீதிவீதியாகத் ‘திருப்பள்ளியெழுச்சி’ பாடித்திரிந்த நிகழ்வு நினைவுப் பெட்டகத்திலிருந்து எட்டிப்பார்த்தது. அதவும் ஆட்களைத் துயிலெழுப்;பத்தானே பாடுவது.
அகில இலங்கை பாவாக்கள் அமைப்பு என்றொண்டு. அதன் தலைவர், பாவாக்கள் சிலரை உற்சவகாலத்தில் கதிர்காமம் செல்லுமாறு அனுப்பி வைப்பார். இவர்களே இங்கு வந்து இரவு வேளைகளில் ‘ராத்தீப்’ நிகழ்ச்சியை நடத்துவது. ‘ராத்தீப்’ என்பது எல்லா பாவாக்களும் ஒன்று சேர்ந்து உரத்தகுரலில் தியான ஒலிகளை எழுப்பும் ஒரு செயற்பாடாகும். பொதுமக்கள் இதனை வியந்து பார்வையிடுவர்.
தீராத நோயுள்ளவர்கள் நேர்த்தி செய்து தங்களது பிணிகளைச் சொல்லி வேண்டுதல் செய்யும் ஒரு இடமும் இங்கு உள்ளது.
கதிர்காமம் சென்று நேர்த்தி செய்து தீராத தங்களின் நோய் தீர்ந்ததாகப் பலரும் சொல்லத் தான் கேள்விப்பட்டதுண்டாம்.
இவ்வளவு விபரங்களையும் எந்தக் குறுக்கீடுமில்லாமல் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் சாமித்தம்பி,
“தம்பி உங்கட ஊர் சாய்ந்தமருதுதானே. பக்கத்தில கல்முனக்குடியில கடக்கரப்பள்ளி (கடற்கரைப்பள்ளி) என்றிர இடமிரிக்கெல்லா. அங்கயும் இப்படிக் கதிர்காமத்தில நடக்கிறமாதிரி பாவாக்கள்ர நிகழ்ச்சி நடக்கிறதெண்டு கேள்விப்பட்டிருக்கன். அதயும் பத்திக்கதையோட கதயாச் சொல்லுங்களன்” என்றார்.
கோகுலன் “நானும்தான் அதக்கேள்விப்பட்டிருக்கன். ஒரு நாளும் அத நான் பாக்கக் கிடைக்கல்ல. சொல்லுங்க மொகமட். அதயும் கேட்பம்” என்றான்.
மொகமட்டும் உற்சாகமாகத் தொடர்ந்து கதைசொல்லத் தொடங்கினான்.
கல்முனையில் கல்முனை – பொத்துவில் பிரதான வீதியில் வீதியின் வலதுபுறம் வயலோரமாய் வீதியையொட்டியபடி ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ இருக்கிறது. அதற்கு எதிரே கடற்கரைப் பக்கமாக வீதியின் இடதுபுறத்தில் நேரே செல்லும் வீதியொன்றுண்டு. அவ்வீதி நேரே கடற்கரையில்தான் போய் விழுகிறது. அதன் அந்தத்தில் இடதுபுறத்தில் உள்ளது கல்முனை கடற்கரைப்பள்ளி வாசல். கடற்கரை கொடியேற்றப்பள்ளி என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
இங்கு சுமார் இருநூறு வருடங்களுக்கு மேலாகக் கொடியேற்றம் இடம்பெற்று வருகிறதாம்.
வயதுமுதிர்ந்த தொழுநோயாளி ஒருவரை அவரது குடும்பத்தினர் புதர் மண்டிக்கிடந்த கடற்கரை ஓரமாகச் சிறுகுடில் ஒன்றை அமைத்து அங்கே குடியமர்த்தி உணவு வழங்கி வந்தனர்.
சில நாட்களின் பின் குறிப்பிட்ட நோயாளியின் கனவில் சாகுல்ஹமீது நாயகம் என்ற இறைநேசர் (அவுலியா) தோன்றி இன்றிலிருந்து உமது நோய் குணமாகிவிடும். அத்துடன் இவ்விடத்தில் சிறுப்பள்ளிவாசல் ஒன்றை அமைத்துக்கொள் என்று கூறி கனவிலிருந்து மறைந்துவிட்டார்.
மறுநாள் நோயாளி பூரண சுகமடைந்ததுடன் அவ்விடத்தில் சிறுகுடிலொன்றை அமைத்துத் தொழுதுவந்தார். அந்த இடமே இன்றைய கொடியேற்றப்பள்ளி அமைந்துள்ள இடமாகும்.
இங்கு ஒரு ‘சியாரம்’ (அடக்கஸ்தலம்) உள்ளது. இங்கு நேர்த்திகளும் இடம்பெறும்.
கொடியேற்றப் பள்ளியில் விசேஷங்களில் ஒன்று இங்கு நடைபெறும் ‘பாவா கூத்து’ ஆகும்.
தங்கள் உடலில் ஆயுதங்களைக் கொண்டு காயப்படுத்தி மக்களிடம் காண்பிப்பர்.
கூரான மெல்லிய இரும்புக் கம்பியைக் கன்னத்தின் ஒரு பக்கத்தால் குத்தி வாய் ஊடாகச் செலுத்தி மறு கன்னத்தின் ஊடாக வெளியெடுப்பர் கம்பி கொடுப்புக்குள்ளாலே ஊடறுத்திருக்கும்.
தலையில் பலமான கூரான ஆயுதத்தால் ஓங்கிக் குத்துவர். கூரான வாளொன்றைக் கையில் எடுத்து அண்ணாந்து பார்த்தபடி முகத்தை வைத்துக்கொண்டு வாளின் நுனியை வாய்க்குள் விட்டுப் பிடிமட்டும் வாய்க்குமேலே தெரியும் வண்ணம் முழுவதையும் மெதுவாக படிப்படியாக வயிற்றுக்குள் இறக்கிப் பின் மீண்டும் வெளியே இழுத்தெடுத்துக் காண்பிப்பர்.
மூன்று ‘மினாரா’க்கள் (கோபுரம்) இங்குள்ளன. மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு மினாரா ஆரம்பத்தில கட்டப்பட்டது. இப்பொழுதும் அது பாவனையில் உள்ளது.
அதற்குப்பக்கத்தில் ஏழுமாடிகள் கொண்ட ஒரு மினாரா உள்ளது. அதுவும் பாவனையில் உள்ளது. மூன்றாவது மினாரா ‘ஊசி மினாரா’ எனப்படும். ஏனைய இரு மினாராக்களையும் விடவும் குறைந்த சுற்றளவும் குறைந்த உயரமும் கொண்டது.
மினாராக்களின் உச்சிகளில்தான் கொடியேற்றப்படும்.
காற்றில் ஆடிஅசையும் இக்கொடி சுமார் 20 – 25 அடி நீளமும் 3 – 4 அடி அகலமும் கொண்டது. பச்சைநிறமான இந்தக்கொடி காற்றின் தாக்கத்திற்கு ஈடு கொடுத்து அசைவதற்காகத் துவாரங்கள் இடப்பட்டிருக்கும். அது காற்றிலே ஆடி அசைவதை தலை உயர்த்தி மக்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்வர்.
மூன்று மினாராக்களிலும் கொடிகள் ஏற்றப்பெற்றுப் பன்னிரண்டு நாட்கள் பறந்து கொண்டிருக்கும். பின்னர் கொடி இறக்கப்பட்டு ‘கந்தூரி’ (அன்னதானம்) இடம்பெறும்.
குறிப்பிட்ட பன்னிரண்டு நாட்களும் பெரும்பாலும் மாலைவேளைகளிலும் இரவிலும் மக்கள் கூட்டம் மொய்ந்திருக்கும். சாய்ந்தமருது, கல்முனைக்குடி மட்டுமல்ல அயலூர் -வெளியூர்களிலிருந்தும் ஆட்கள் வருவர். கணிசமான தமிழர்களும் சிறு அளவில் சிங்களவர்களும் வருவர். பரந்த நிலப்பரப்பில் பலவிதமான கடைகள் முளைத்திருக்கும். பன்னிரண்டு நாட்களும் ஜோரான வியாபாரம் நடைபெறும்.
பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.
தான் சிறுவனாயிருக்கும்போது ‘ம்பா’க் குழலும் கிளி ‘ரோதை’யும் வாங்கிவந்தது இன்னும் தனக்கு ஞாபகம் இருக்கிறதாம்.
வெள்ளிக்கிழமை (வியாழன் மாலை – இரவு வேளைகளில்) பாவாக்கள் (பக்கீர்மார்கள்) தங்களின் உடலின் கூரான ஆயுதங்கள் கொண்டு காயங்கள் ஏற்படுத்தி அற்புதம் நிகழ்த்துவர். இந்த பாவாக்களின் தலைவராக ஒருவர் இருப்பார். அவர் ‘கலீபா’ என அழைப்படுவார்.
உற்சவகாலத்தில் பன்னிரண்டு நாட்களும் தற்காலிகமாகத் தனியான பொலிஸ் நிலையமொன்றும் இங்கு இயங்கும்.
மொகமட் இந்த விடயங்களையெல்லாம் குறிப்பாகக் கடற்கரைப்பள்ளிவாசல் கடைகளைப் பற்றிக் கூறியபோது கோகுலன் சிறுவயதில் தன் தாயாரோடு மட்டக்களப்பு அமிர்தகழியிலுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயம் – பாண்டிருப்பு திரௌபதையம்மன் கோயில் ‘தீப்பள்ளயம்’ மற்றும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமிகள் ஆடி அமாவாசைத் தீர்த்தத்திருவிழா போன்ற வருடாந்த ஆலய உற்சவங்களுக்குச் சென்று விளையாட்டுப் பொருட்கள் வாங்கியும் சிறு தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டும் உற்சவகாலப் ‘புதினங்கள்’ பார்த்தும் மகிழ்ந்த அந்த வரவில்லாமல் செலவுகள்செய்த வாழ்க்கை அனுபவங்கள் கல்லெறிந்த குளத்தில் எழும் நீர்வளையங்களைப்போல ஒவ்வொன்றாய் நினைவில் எழுந்து மறைந்தன.
ஒருதரம் மொகமட்டைப் பிடித்து அவனுடன் கல்முனைக் கடற்கரைப்பள்ளிவாசலுக்கும் செல்ல வேண்டுமென்று மனதில் தீர்மானித்துக்கொண்டான்.
தொடர்ந்து கதைகூறிய மொகமட்,
‘அவுலியா’க்கள் இறைவனின் நேசத்தைப் பெற்றவர்கள். அதனால்தான் அவர்களை ‘இறைநேசர்’ என்பர். இவர்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை படைத்தவர்கள். ‘வலிமார்கள்’ என்றும் அழைக்கப்படுவர்.
அவுலியாக்களின் ‘சியாரம்’ (அடக்கஸ்தலங்கள்) முஸ்லீம்களின் கலாசார வரலாற்றையும் எடுத்துக்கூறுவன. இலங்கையில் ஆயிரம் வருடகாலப் பழமைவாய்ந்த ‘சியாரம்’களும் உள்ளன.
மொகமட், அவுலியாக்கள் பற்றிக் கூறிய விபரங்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட பெரியவர் சாமித்தம்பி மொகமட்டைப் பார்த்து “தம்பி உங்கட சமயத்தில் உள்ள அவுலியாக்களப் போலதான் கடவுளுக்கு நல்ல நெருக்கமான ‘சித்தர்கள்’ எனப்படுபவர்கள் எங்கட சைவசமயத்தில இருக்காங்க. அவங்களும் அற்புதங்களக் கனக்கச் செய்திருக்காங்க. காரதீவில இருந்த சித்தானக்குட்டிச் சாமியாரப் பற்றிக் கேள்விப்பட்டிரிப்பீங்க. அவர் ஒரு சித்தர். பல அற்புதங்கள் பண்ணியிரிக்கார்.” என்று பெருமைப்பட்டார்.
இடையில் மறித்த மொகமட் “கதிர்காமம் கொடியேறி இண்டைக்கு ஆறாம் நாள். கதிர்காமம் முருகன் ஆலயத்திற்குத் தனிய கொடியேற்றம் எண்ட ஒண்டு இல்லத்தானே.” என்று சந்தேகத் தொனியுடன் பெரியவர் சாமித்தம்பியிடம் வினவினான்.
“இல்லத்தம்பி. கதிர்காமம் பள்ளிவாசல் கொடியேத்தத்தான் கதிர்காமக் கொடியேத்தம் எண்டிர” என்று பெரியவர் சாமித்தம்பி கூறி மொகமட்டின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தார்.
(தொடரும் …… அங்கம் – 25)