தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

— கருணாகரன் —

நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது.  அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு.

முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை.

“தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட  – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

அதாவது சட்டபூர்வமான யாப்பு ஒன்றாகவும் கட்சியின் நடைமுறைகளின்போது பின்பற்றப்படும் யாப்பு இன்னொன்றாகவும் இருந்துள்ளது என்று இது பொருள்படும்.

ஏறக்குறைய எழுதப்படாத இரண்டாவது யாப்பின்படியே (நழுவல் யாப்பு) காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்கு அண்மைய உதாரணம், மத்திய செயற்குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக் கிளையிலும்  தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினரும் பொதுச்சபை உறுப்பினராவர்.  இதற்கமைய ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். இதன்படி 25 தொகுதியிலும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41. எனவே மொத்தம் 166 உறுப்பினர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகும். (விதி 07  (ஆ))

ஆனால் தலைவர் தெரிவின்போது  321பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள்.

இது எப்படி நடந்தது?

இதுதான் தமிழரசுக் கட்சியினுடைய யாப்பின் விசித்திரம். தலைமையின் சிறப்பு.

மேலும் சொல்வதென்றால்,  யாப்பு விதியின்படி தலைவர் தெரிவின் பின்னரான அனைத்துத் தெரிவுகளையும் புதிய தலைவரின் தலைமையில் பொதுச்சபையே தீர்மானித்திருக்க  வேண்டும். எந்தச் சூழலிலும் மத்தியசெயற்குழு கூட்டப்பட்டு பதவிநிலைகள் தீர்மானிக்கப்படும் என்றோ அதற்கு பொதுச்சபையிடத்தில் அனுமதி பெறும் முறைமையொன்று யாப்பில் கூறப்படவில்லை.

ஆனால், இதையெல்லாம் மீறியே செயலாளர் தெரிவு உட்பட ஏனைய விடயங்கள் நடந்தன. ஏறக்குறைய புதிய தலைமை உட்பட நிருவாகத்தெரிவு விடயத்தில் யாப்பைக் கடந்து 15 க்கும் மேற்பட்ட விடயங்களை சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எல்லாத்துக்கும் நாங்கள் யாப்பை வைத்துத்தான் செயற்பட வேண்டுமென்றில்லை” என்று அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இந்த நெருக்கடிகளின்போது சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம்.

தமிழ் மக்களின் மிகப் பெரிய கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலைமையையும் நடத்தைச் சிறப்பையும் பார்த்தீர்களா?

இப்படிச் சொன்ன மாவைக்கு நீதிமன்றம் தக்க பாடம் படிப்பித்துள்ளது.

ஆம், இது போன்ற தவறுகளால் யாப்பு, இப்பொழுது கட்சிக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது யாப்பின் பலவீனங்களும் யாப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட தலைமை உறுப்பினர்களின் செயல்களும் கட்சியை முடக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளன. கட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளன.

யாப்புத் தவறுகளை முன்னிறுத்தியே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கட்சிக்கு எதிரான வழக்குகள் யாப்பு விதிகளை வலியுறுத்தும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சிக்குள் ஏராளம் சட்டவாளர்கள் உள்ளனர். கட்சியின் உருவாக்குநர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம், நாகநாதன் தொடக்கம் சம்மந்தன், சுமந்திரன், தவராஜா வரையில் பல சட்டவாளர்கள். இருந்தும் யாப்புக் குழப்பமும் குறைபாடுகளும் நீடிக்கிறது என்றால் பதவியில் குறியாக இருப்பதைப்பற்றியே ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனரே தவிர, கட்சியின் எதிர்காலத்தையோ மக்கள் நலனையோ அல்ல என்பது தெளிவாகிறது.

இந்தத் தவறுகளிலிருந்தும் இந்தப் போக்கிலிருந்தும் தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது எளிய விசயமல்ல. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் கட்சியின் தலைமைப் பதவியிலிருப்போரும் மூத்த தலைவர்களும் தங்களைச் சுய விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். கூடவே பல நிலைகளில் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதாவது தகிடு தத்தங்களைக் கைவிட்டு, கட்சியை நேர்மையாக வழிநடத்த வேண்டும். யாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதுடன், அதிலுள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும்.

இதற்கு யார் தயார்?

அடுத்தது, வாய்ப்பேச்சு அரசியலிலிருந்து விடுபட்டுச் செயற்பாட்டு அரசியலில்தமிழரசுக்கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை “சூனிய அரசியல்” என்று சொல்கிறார், விடுதலை இயக்கமொன்றில் செயற்பட்ட சார்ள்ஸ் என்ற மூத்த போராளி. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளை – அதனுடைய வளர்ச்சியின்மையைப் பார்க்க  வேண்டும் என்றால் 1960, 1970 களின் சுதந்திரன் பத்திரிகையையும் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுகளையும் கவனித்தால் இது தெரியும்.

அன்றும் இன்றும் அது வெறும் பிரகடனங்களை (பீத்தல்களை) வாய்ச்சவடால்களாக அடிப்பதையே தன்னுடைய அரசியல் முறைமையாகக் கொண்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு 50 ஆண்டுகளாக விடுத்த எந்த எச்சரிக்கையும் கண்டனமும் பதிலடியும் விளைவுகளை உண்டாக்கியதில்லை. பதிலாக அவற்றைக் குறித்து மக்கள் சிரிக்கும் நிலையே உருவாகியது. அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சிரிப்பதற்கான பகடியாக இருந்தது – இருக்கிறது. என்பதால்தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சிங்கள உறுப்பினர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அங்கே இருப்பதுமில்லை.  இவர்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி வர  வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள் என்பார் நண்பர் ஒருவர். இதுதுான்  இறுதியில் தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று தலைவர் சம்மந்தன் சொன்னதை வைத்துச் சம்மந்தனையே பகடி செய்யத் தொடங்கினர் சனங்கள். ஆழ்ந்து நோக்கினால் தமிழரசுக் கட்சியின் கையாலாகத்தனத்தை இதில் தெளிவாக உணரலாம். அது வந்து கோமாளித்தனமான தலைவர் தெரிவு வரையில் வந்து சீரழிவில் நிற்கிறது. 

ஆகவே 75 ஆண்டுகால அரசியற் பயணத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது? தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் நிலப் பாதுகாப்புக்கும் என்ன வகையிலான பங்களிப்புகளைச் செய்தது? அவற்றின் விளைவுகள் எவ்வாறான நற்பலன்களை விளைத்துள்ளன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் அது மீள்நிலைப்படுத்தியுள்ளதா? அப்படியென்றால் அதை அது எப்படிச் செய்யது? எங்கே செய்தது? குறைந்த பட்சம் போருக்குப் பிந்திய அரசியலையும் சமூகத்தையும் எப்படிக் கட்டமைத்தது? முன்னெடுத்தது? என்றும் கணக்கிட வேண்டும். கட்சியும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியை ஆதரிப்போரும் இருக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கடப்பாடு இன்று தவிர்க்க முடியாமல் உருவாகியுள்ளது.

குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வுப் பணிகளிலும் யுத்த அழிவுப் பிரதேசங்களை மீளுயிர்ப்புச் செய்வதிலும் அது ஆற்றிய பணிகள் என்ன? அதனுடைய பெறுமானங்கள் – அடையாளங்கள் என்ன என்றபது அவசியமாக அது தெளிவுபடுத்த வேண்டும்.

மூத்தகட்சி, பெரிய கட்சி என்ற அடிப்படைத் தகுதியை அது கொள்வதாக இருந்தால் இன்று உலகமெங்கும் பரவிப் பலமடைந்திருக்கும் புலம்பெயர் மக்களை அது ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்.

அதைப்போல அது, தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அதற்கு எதிராக, ஏற்கனவே ஒருங்கிணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சிதைத்தது. தமிழரசுக் கட்சியின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்குமே ஏனைய பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லக் காரணமாகின.

இதையெல்லாம் யார் மறுக்க முடியும்?

இப்படிச் செயற்பாடு எதுவுமே இல்லாமல், எதிர்மறையாக மக்களுக்கும் சமூகத்துக்கும் விளைவுகளை – பாதிப்புகளை உண்டாக்கும் கட்சியை எளிதில் சீராக்க விட முடியாது. அதற்கு மிகப்  பெரிய அளவில் மாற்றத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும்.

இதற்கு அது தன்னுடைய வெற்றுப் பிரகடனங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களையும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றும் அரசியலைக் கைவிட வேண்டும். தன்னை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். உழுத்துப் போன வீட்டை அல்லது கட்டிடத்தை நாம் இடித்துப் புனரமைப்பதில்லையா? அப்படி முழுமையாக மாற்றி அமைக்க  வேண்டும். 

சொந்த வாழ்க்கையில் நாம் தேவையற்றதையெல்லாம் கழித்து ஒதுக்கி விட்டு, புதியவைகளை வாங்கிக் கொள்கிறோம். அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அது வீடாக இருக்கலாம். பொருட்களாக இருக்கலாம். துணிமணிகளாக இருக்கலாம். ஏன், மிகப் பெறுமதியான நகைகளாகக் கூட இருக்கலாம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது அவசியமானது. 

வேண்டப்படும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இன்னும் அது தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகப் பேராதரவோடு இருக்கிறது என்றால்….

தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை என்னவென்று சொல்வது? அவர்களுடைய அரசியல் அறிவை, புத்திஜீவித்தனத்தை எப்படிக் கூறுவது?

அடுத்தது, தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்துக்கான அரசியலைப் பற்றியது.

தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு வகையான அரசியற் போக்குண்டு.

1.      சம்மந்தன், சுமந்திரன், குகதாசன் போன்றோர் முன்னெடுக்கின்ற ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற வகையிலான அரசியல். இதற்காக அவர்கள் முஸ்லிம், மலையக, சிங்களத் தரப்பினரோடும் ஒரு மென்னிலை இணக்கப்பாட்டு உறவைப் பேணி வருகின்றனர். கூடவே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தீவிர நிலைப்பாட்டை தவிர்க்கின்றனர். இதைப்பற்றி தலைவர் தெரிவு நடைபெற்ற பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியூப் நேர்காணலில் திரு சுமந்திரன் தெளிவாகவே சொல்கிறார். தலைவர் தெரிவில் தான் தோற்றிருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விடப் போவதில்லை என. அது சரியானது என்றும் அவர் வாதிடுகிறார். இதனால்தான் அவர் தனியே உலக நாணய நிதியத்தின் நிதிப் பயன்பாடு பற்றிய அரசாங்கத்தின் உரையாடலில் துணிவாகச் சென்று  பங்கேற்றுள்ளமையும் நிகழ்ந்திருக்கிறது. 

2.      சிறிதரன், மாவை, அரியநேத்திரன், சிறிநேசன் போன்றோர் முன்னெடுக்கும் தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல். இதற்கான செயல்வடிவத்துக்கு அப்பால், இவர்கள் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி தாமே என்று கருதிக் கொண்டு மேற்கொண்டு வரும் தனியாவர்த்தனம்.

இதுவரையிலும் கூட இந்த இரண்டு போக்கும் கட்சிக்குள்ளிருந்தன. ஆனால் இப்போதுள்ளதைப்போல அதுவொரு பெரிய வெடிப்பாக வரவில்லை. இந்த இரண்டு போக்குகளையும் பயன்படுத்தி அரசியல் அறுவடையைத் தமிழரசுக் கட்சி செய்து வந்தது. சிறிதரன் புலிக்கொடியை ஏந்துவார். சம்மந்தன் சிங்கக் கொடியைத் தூக்குவார். புலிகளை ஆதரிப்போரின் வாக்குகளும் அதற்குக் கிடைத்தன. அவர்களை எதிர்ப்போரின் வாக்குகளும் கிடைத்தன.

இதற்கான முடிவு ஏறக்குறைய வந்துள்ளது எனலாம்.

அடுத்தது, இப்போதுள்ள நிலையில் சிறிதரன் அணி மீண்டும் (நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) தலைமையேற்றால் இன்னொரு பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குண்டு. சிறிதரன் மேற்கொள்கின்ற அதே தீவிர அரசியலையே கஜேந்திரகுமாரின் அணியும் மேற்கொள்கிறது. ஆகவே இரண்டு தரப்பும் களத்தில் நேருக்கு நேர் மறுபடியும் மோதக் கூடிய நிலை ஏற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

இது முன்னொரு காலம் அகில கஜேந்திரகுமாரின் பாட்டனாரான ஜீ.ஜீ. பொன்னம்பத்தின் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மோதியதைப்போன்றிருக்கும்.

ஆனால் அன்று  வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மோதல் நடந்தது. அதனால் ஜீ.ஜீ. தோற்றார். செல்வநாயகம் வென்றார். இங்கே இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டில் மோதப் போகிறது. 

ஆகவே இது மீளவும் தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நெருக்கடியாகவே இருக்கும். அதேவேளை அது இந்த நிலைப்பாட்டில் இருந்தால் தமிழ்ச்சமூகம் மேலும் நெருக்கடியைச் சந்திப்பதோடு, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூட்டும்.

சுமந்திரன் தரப்பு வெற்றியடைந்தால் அதுவும் நெருக்கடியைச் சந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது – அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் தமிழ்ச்சமூகத்தை பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இது எளிதான விசயமல்ல.

இதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆகவே தமிழரசுக் கட்சிக்கு தொடர் நெருக்கடிகளும் தவிர்க்கவே முடியாத கடப்பாடுகளும் (பொறுப்புகளும்) வரலாற்று ரீதியாக வந்து சேர்ந்துள்ளன. இனியும் அதனால் முன்னரைப்போல சுழித்தோட (தப்பியோட) முடியாது. பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும்.