மட்டக்களப்பு காணிப் பிரச்சினை  நிர்வாக பயங்கரவாதமா…..?(மௌன உடைவுகள்-77)

மட்டக்களப்பு காணிப் பிரச்சினை  நிர்வாக பயங்கரவாதமா…..?(மௌன உடைவுகள்-77)

 — அழகு குணசீலன் —

பல்வேறு இன,மத,மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகளை கொண்ட ஒரு நாட்டில் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவை. இவை தனிநபர்கள் முதல் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள்-அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படுபவையாகவே அதிகம் காணப்படுகின்றன. புள்ளி விவரங்களை சமூக , பொருளாதார, அரசியல் ஆய்வொன்றில்  வெறும் எண்கணித நோக்கின் அடிப்படையில் பயன்படுத்த முடியுமே அன்றி ,ஆய்வின் முடிவை உறுதிப்படுத்த-தீர்மானிக்க அவை மட்டும் போதுமானவை அல்ல.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அல்ல இலங்கையில், உலகில் எங்கு இந்தப்பிரச்சினை இருந்தாலும் அது சமூக, பொருளாதார, அரசியல்,  கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் பண்புகளைக்கொண்டே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம்,சிங்கள சமூகங்களுக்கு இடையில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியமான வழிமுறைகளை தவிர்த்து “பயங்கரவாதம்” பற்றி பேசுவது பிர்ச்சினைக்கான தீர்வாகாது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில்  சிங்கள, தமிழ், முஸ்லீம் பயங்கரவாதம் பற்றி பேசப்பட்ட அளவுக்கு,  தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவில்லை.இதன் விளைவை சகல மக்களும் இன்று அனுபவிக்கிறார்கள். இதற்கு அரசபயங்கரவாதமும், தமிழ், முஸ்லீம் ஆயுத அமைப்புக்களினதும், குழுக்களினதும், அவற்றை தமது அரசியல் இலக்குக்கு பயன்படுத்திக் கொண்ட/ தொடர்ந்தும் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் அரசியல் கட்சிகளும் காரணம். 

அதுவும் போர்க் காலம், போருக்கு பிந்திய காலம் என்ற வகையில் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள/ஏற்படுத்தப்பட்டுள்ள இன,மத முரண்பாடுகளுக்கு மத்தியில் போருக்கு முந்திய கால சுமூக சமூகச்சூழலை  உடனடியாக ஏற்படுத்துவதும் கஷ்டம், எதிர்பார்ப்பதும்  ஜதார்த்தமாக அமையாது. பிரச்சினையை இனம்கண்டால் மட்டும் போதாது சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வு முன்மொழிவுகளை அரசியலில்,சமூக மட்டத்தில் முன்வைத்து செயற்பட்ட வேண்டும். இந்த இயலாமையை, அரசியல் பலவீனத்தை அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் தலையில் கட்டி விட்டு இனவாத அடிப்படையில் அவர்களின் செயற்பாட்டை”நிர்வாக பயங்கரவாதம்” என்று பெயர்சூட்டுவது பயங்கரவாதம் குறித்த குறை விளக்கத்தை கொண்டது.

சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வெடிப்பு ,வெறுப்பு, நம்பிக்கையின்மை, முரண்பாடுகள், போர் ஏற்படுத்திய காயங்கள் இவற்றிற்கு முதலில் பரிகாரம் காண வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட சகல சமூகங்களுக்கும் உரியது. அதை செய்யாது, இவை இல்லாமல் இருந்த அல்லது மிக குறைவாக இருந்த காலத்தில் நிலவிய சமூகச்சூழலை உள்நாட்டு போர் நடந்து முடிந்த ஒருநாட்டில் இரவோடிரவாக ஏற்படுத்தி விடமுடியாது. கடந்த முப்பது ஆண்டுகால யுத்த கால முரண்பாட்டு வேக வளர்ச்சியை விடவும் அதிக காலம்  இச் சமூகச்சூழலை,  முரண்பாடுகள் அற்று மறுநிர்மாணம் செய்ய  தேவைப்படுகிறது. இது ஆமை வேக,  சாண் ஏற முழம் சறுக்குகின்ற ஒரு கரடுமுரடான பயணம்.

இந்த சூழலில் இலங்கையின் முக்கிய நான்கு மலையக, முஸ்லீம்,தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையில் காணிப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது/ உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு இலங்கையின் பண்டைய ஈழ வரலாறு முதல் சுதந்திரம் பெற்ற பின்னரான நவீன இலங்கையின் அரச குடியேற்ற திட்டங்கள்- காணிக்கொள்கைகள் வரையும், இலங்கையின் பௌதிக, புவியியல் நிலவமைப்பு, காலனித்துவ நிலப்பயன்பாடு, சமூகங்களின் வாழ்வியல் தனித்துவ பண்புகள்….. போன்ற பலவற்றை ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது.

இந்த பின்னணிகளை கணக்கில் எடுக்காது காணிப்பிரச்சினையை சகல சமூகங்களும் ஒரு சமூகம் மறுசமூகம் மீது மேற்கொள்கின்ற “நில ஆக்கிரப்பு” என்று இது அதிகம் காட்டப்படுகிறது. இந்த எண்ணம் எந்த இனமாக இருப்பினும் அதன் எதிர்கால அச்சத்தின் வெளிப்பாடு.  அதுவும் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் மத்தியில் இந்த “அச்சம்” அதிகமானது. இதனால் அருகருகே வாழ்கின்ற இவர்கள் கூட  காணித்தேவையை நியாயமாக பங்கிட்டுக்கொள்ளதயாராக இல்லை.

 இது சாதாரண மக்கள் மத்தியில் மட்டும் அன்றி அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புக்கள்- செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் நடுநிலையான செயற்பாட்டை தவிர்த்து “பக்கசார்பு” நிலைப்பாட்டுக்குள் தள்ளிவிடுகிறது. அரச நிறுவனங்களில் நிலவும் இலஞ்சம்,ஊழல், நேர்மையின்மை, சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் இந்த பிரச்சினை மேலும் மோசமடையச்செய்கின்றன.

இதற்கு சமாந்தரமாக போர்க்காலத்தில்   சட்டங்களை மீறவும், சட்ட மறுப்புக்களை செய்யவும், வன்முறைகளை  செய்யவும் சமூகம் பழக்கப்பட்டுள்ளது . இதை சரி என்று நியாயப்படுத்தும் மனிதாபிமானமற்ற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்பாணி மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் கட்சி அரசியல் இலாபத்திற்கான முதலீடாக அமைகிறது. இது ஒரு வகையில் அரச பயங்கரவாதம், அதற்கு எதிரான ஆயுதப்போராட்ட  தமிழர் தரப்பு பயங்கரவாதம், அதற்கும் எதிரான முஸ்லீம் ஊர்காவல்படை, மற்றும் ஜிகாத் பயங்கரவாதங்களின் வெளிப்பாடும், எச்சமுமாகும். ஆனால் இதை மட்டக்களப்பு கச்சேரி நிர்வாகத்தின் – அதிகாரிகளின் “நிர்வாகப் பயங்கரவாதம்” என்று குறிப்பிட முடியுமா…..?  

“நிர்வாகப் பயங்கரவாதம்” என்ற வார்த்தையை பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரச்சினை பற்றி பேசியபோது, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முதன்முதலில் உபயோகித்தவர் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்க ஆதரவு எம்.பி. நஸீர் அகமட். அப்போது மட்டக்களப்பு மாவட்ட மொத்தநிலப்பரப்பையும், இனவிகிதாசார சனத்தொகைப்பரம்மலையும் குறிப்பிட்டு முஸ்லீம்களுக்கு காணிப்பங்கீட்டில் வஞ்சகம் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. “மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மலைகள், காடுகள், தனியார் வயல்நிலங்கள்,  குளங்கள், மேய்ச்சல் தரை போன்றவற்றிற்கும், மற்றும் அரச பயன்பாட்டிற்கும்,மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை ஒட்டு மொத்தமாக கொண்டு இந்த விகிதாசாரத்தை கணிப்பிடமுடியாது” என்று நஸீர் அகமட்டுக்கு பதிலளித்தார் சந்திரகாந்தன். இது மட்டக்களப்பு மாவட்ட “குடியிருப்பு நிலங்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பரப்பளவைக்கொண்டே கணிப்பிடப்படவேண்டும். 

இந்த விவகாரம் குறித்து இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனும் நஸீர் அகமட்டின் கருத்தை மறுதலித்திருந்தார். வியாழேந்திரனைப் பொறுத்தமட்டில்   நஸீர் அகமட் போன்று மிகவிரைவாக இனவாத சகதிக்குள் விழுந்தது விடும்  அவசரம் காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இ. சாணக்கியனின் எம்.பி.க்கும், நஸீர் அகமட் டுக்கும் இடையே  தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பகிரங்க விவாதம் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற வாதத்தையே நஸீர் அகமட் முன் வைத்தார். அப்போது ஆதார பூர்வமாக நஸீர் அகமட்டுக்கு பதில் அளிக்க சாணக்கியனால் முடியவில்லை. சாணக்கியன் எம்.பி.அன்றைய நிலையில்  முஸ்லீம்களுக்கு பாதகமான கருத்துக்களை தான் கூறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால் நஸீர் அகமட் இந்த விவகாரத்தை தமிழ் அதிகாரிகளின் நிர்வாகப் பயங்கரவாத மாகவே வெளிப்படுத்தினார். வழமையான இருதரப்பு உணர்ச்சிப்பிரவாகத்தில் அன்றைய விவாதம் முடிந்தது.

நஸீர் அகமட் எம்.பி.யின் பாராளுமன்ற உரைக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலர் சுதர்சனி மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் இ.உதயகுமார் ஆகியோரும் இந்த “நிர்வாகப்பயங்கரவாத” குற்றச்சாட்டை மறுத்து அறிக்கைகளை விட்டிருந்தனர்.  முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். தேர்தலுக்காகவே முன்கூட்டி நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர். 

கிழக்கின் தமிழ், முஸ்லீம் சமூகங்களைப் பொறுத்தமட்டில் சில பொதுவான சமூகவாழ்வியல் பண்புகளை -குணாம்சங்களை அடையாளப்படுத்தமுடியும். அதில் காணி விவகாரத்தில் குறிப்பிடக்கூடிய ஒன்று இரு சமூகங்களும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் சுருங்கிக்கொள்வது. சிங்கள சமூகத்துடன் ஒப்பிடும் போது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு வெளியேறும் இயல்பு குறைவு.அப்படி நடந்தால் அது ஏதாவது நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலானதாக இருக்கும். இதனால் தான் மட்டக்களப்பு மாவட்டம் என்றால் எந்தக் குழந்தையும் காத்தான்குடி, ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய மூன்று இடங்களையுமே முஸ்லீம்களின் வாழ்விடமாக அடையாளப்படுத்தும் நிலை  இன்றும் உள்ளது. இதைத்தவிர சில சிறிய கிராமங்கள் இவற்றிற்கு அருகே அங்காங்கே காணப்படுகின்றன என்பதையும் மறந்து விடமுடியாது.

இந்த வாழ்வியல் பண்பில் போர்க்காலத்தில் தமிழர்கள் தமிழ்அமைப்புக்களின் பாதுகாப்பை உணர்ந்தனர். ஆனால் முஸ்லீம்கள் தமிழ்க்குழுக்களில் இருந்து பெற்றுக்கொண்ட  பயங்கரவாத அனுபவம் அவர்களுக்கு அந்த பாதுகாப்பை வழங்கவில்லை.  பெரிய  ஊர்களான காத்தான்குடி, ஏறாவூர்,ஓட்டமாவடியை சூழ வாழ்வதே தமக்கு பாதுகாப்பு என்று கருதியதால் எல்லைக்கிராமங்களில் இருந்தும், தமிழ்க்கிராமங்ளுக்கு மத்தியில் /அருகில் இருந்த முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் வெளியேறி/வெளியேற்றப்பட்டு  பெரிய ஊர்களை அண்டி குடியேறினர். இது அச்சம், வன்முறை காரணமாக இடம்பெற்ற இடப்பெயர்வு. இதில் சம்பந்தப்பட்ட தமிழ் இயக்கங்களின் செயற்பாட்டை பயங்கரவாதம் என்று அழைப்பதில் தவறில்லை.

இதற்கு மாறாக அரசபயங்கரவாதம் – இராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிற்குள் நுழைந்தபோது, புலிகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருந்த மக்கள் , புலிகள் தங்களுக்கு முன்னர் ஓடத்தொடங்கியபோது பல உயிர் ,உடமை இழப்புக்களை சந்தித்து எழுவான்கரை/ நகரப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இங்கு தமிழ் அமைப்பாக புலிகளும் மக்களை பாதுகாக்க வில்லை, அரச படைகளும் தமிழ் மக்களைப்பாதுகாக்கவில்லை. முஸ்லீம் ஊர்காவல்படை படையினர், ஜிகாத் அமைப்பு என்பனவற்றின் பயங்கரவாத வன்முறையை எதிர்கொண்ட தமிழ்கிராம மக்கள் முஸ்லீம் கிராமங்களுக்கு அருகே இருந்து  வெளியேறி தங்களுக்கு பாதுகாப்பான இடங்களை நாடினர். இந்த இரு தரப்பு இடம்பெயர்வுகளும் அந்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்தம் காரணமாக இடம்பெற்றவை. முத்தரப்பு பயங்கரவாதத்தின் விளைவு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால்….. யுத்தம் முடிந்த பின்னர் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர் அல்லது எழுவான்கரையில் நிரந்தரவாசிகளாகிவிட்டனர். எனினும்  முஸ்லீம்களுக்கு இந்த மீளக் குடியேறும் வாய்ப்பு வழங்கப்படவில்லை/கிடைக்கவில்லை. அச்சத்தை தவிர்த்து மக்கள் படிப்படியாக மீளக்குடியேறுகின்ற வாய்ப்பு முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும். இது ஒப்பீட்டளவில் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. இந்த மீளக்குடியேற்றத்தில் மட்டக்களப்பு கச்சேரி நிர்வாகத்திற்கும், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருந்தது.அதை அவர்கள் செய்தார்களா…?   

நஸீர் அகமட் முதலமைச்சராக இருந்தவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு ஆட்சி செய்தவர், நல்லாட்சியின் பங்காளர்களாக இருந்தவர்கள் ,  ஹிஷ்புல்லா கிழக்குமாகாண ஆளுனராக இருந்தவர் இவர்கள்  தங்களிடம் அதிகாரம் இருந்தும் இதை செய்யாதுவிட்டு கச்சேரி நிர்வாகத்தை பயங்கரவாதம் என்று விமர்சிக்க முடியுமா…? ஹிஷ்புல்லா புனானையில் பல்கலைகழகத்தில்  முதலீடு செய்ததை விடவும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கல்லவா முயற்சி செய்திருக்க வேண்டும்? முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் ? இவற்றை தவிர்த்து தேர்தல் காலத்தில் இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசி “கோயில்” இடித்த கதைகளை சொல்லி வாக்கு சேகரிப்பதை விடவும் இது முக்கியமான அரசியல் செயற்பாடு இல்லையா? தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ்க்கும் இருக்கின்ற மிகப்பெரும் ஒற்றுமை மக்களின் பிரச்சனைகளை தீர்க்காது அவற்றை அப்படியே வளரவிட்டு அரசியல் செய்வதுதான்.

இவ்வளவும் இருக்கையில் இதை ” அரச அதிகாரிகளின் நிர்வாகப்பயங்கரவாதம் ” என்று குறிப்பிடுவது  எந்தளவு ஏற்புடையது? ஆத்திரமூட்டலையே முதலீடாகக்கொண்டுள்ள அரசியல்வாதிகள் பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நரம்பில்லாத நாக்கினால் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்றால் சமூக அக்கறையும், இன உறவுக்கு அத்திவாரமும் இடுகின்ற, பொறுப்பு மிக்க புதிய தலைமுறையும் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவது கவலைக்குரியது.

தொடரும்…..