— வீரகத்தி தனபாலசிங்கம் —
கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில் அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார்.
உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை நூல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறமுடியாது.
இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக அதிகாரத்தைத் துறக்க நிர்ம்பந்திக்கப்பட்ட முதல் ஆளான கோட்டாபய நூலுக்கு வேறு தலைப்பைக் கொடுத்திருந்தால் சிலவேளை கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்க முடியும்.
சதி முயற்சி என்பது ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகின்ற ஒன்று என்பதால் நூல் ஒரு பழைய கதை என்று பலரும் கருதவும் இடமிருக்கிறது. சதிக் கோட்பாடுகளைப் புனைவது ராஜபக்ச சகோதரர்களுக்கு கைவந்த கலை. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தன்னை தோற்கடித்தது இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தான் என்று பகிரங்கமாகவே கூறினார்.
இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையில் இரு வருடங்களுக்கு முன்னர் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சதி என்று ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகிறார்கள். படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஊழல் தலைவிரித்தாடிய தங்களது தவறான ஆட்சிமுறைக்கு எதிராகவே மக்கள் தன்னியல்பாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள் என்பதை ராஜபக்சாக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
கோட்டாபயவுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளில் ஒருவராக இருந்து, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவர்களை விட்டு வெளியேறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ‘ஒன்பது ; மறைக்கப்பட்ட கதைகள்’ (Nine ; The Hidden Story ) என்ற நூலை கடந்த வருடம் வெளியிட்டு மக்கள் கிளர்ச்சிக்கு பின்னணியில் வெளிநாட்டுச்சதி இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு கோட்டாபய அரசியலில் இறங்குவதற்கான ஒரு அச்சாரமாக 2012 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் சி.ஏ. சந்திரப்பிரேமா ‘ கோட்டாவின் போர் ; இலங்கையில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிப்பு ‘ ( Gota’s war ; The crushing of Tamil Tiger terrorism in Sri Lanka) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயவுக்கே போர் வெற்றிக்கான முழுப் பெருமையையம் உரித்தாக்கும் நோக்கில் எழுதப்பட்டது.
நீண்டகால மௌனத்தைக் கலைத்து கோட்டாபய தற்போது தனது நூலை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான களத்தை அமைப்பதில் முதல் அடியெடுத்துவைப்பாக இருக்கலாம் என்ற ஊகங்களும் ஒருபுறம் கிளம்புகின்றன.
சர்வதேச சக்திகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாகவே அதிகாரத்தில் இருந்து தான் இறங்கவேண்டி வந்தது என்று கோட்டாபய நூலில் விபரிக்கிறார். ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய தனிப்பட்டதும் நேரடியானதும் அனுபவத்தின் விளக்கம் என்று நூலை அவர் வர்ணிக்கிறார். எந்த நாட்டினதும் பெயரைக் குறிப்பிடுதை அவர் தவிர்த்திருக்கிறார்.
சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியே தனது வீழ்ச்சிக்கு பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு.2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்கள் இலங்கையில் புவிசார் அரசியல் போட்டிப் போக்கு ஒன்றைக் கொண்டு வந்ததன் விளைவே தனது அரசியல் வீழ்ச்சி என்பது அவரது தர்க்க நியாயம்.
வெளிநாட்டுச் சதி இருக்கவில்லை என்று எவராவது கூறுவார்களேயானால் அவர்கள் உண்மையில் பத்தாம்பசலிகளாகவே இருக்கமுடியும் என்று வேறு அவர் கூறுகிறார்.
நூலின் நோக்கம் குறித்து அதை வாசிக்காமேயே சுருக்கமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக கோட்டாபய கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை அமைந்திருந்தது.
” விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டுத் தலையீடு தொடங்கிவிட்டது. 2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவான நேரம் தொடக்கம் என்னை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்குடன் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்படத் தொடங்கிவிட்டன.
” நான் பதவியேற்ற உடனடியாகவே இலங்கையிலும் உலகம் முழுவதும் கொவிட் — 19 பரவத்தொடங்கிவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எனது இரண்டரை வருட பதவிக்காலத்தையும் செலவிடவேண்டியேற்பட்டது. தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக அந்த பெருந்தொற்று நோயை 2022 மார்ச் மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து பொருளாதாரம் மீட்சிபெறத் தொடங்கியதும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சதிகாரச்சக்திகள் தொடங்கிவிட்டன.
“இன்று இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்நாட்டு அரசியல் வெளிச்சக்திகளினால் சூழ்ச்சித்தனமாக கையாளப்படும் போக்கும் கசப்பான உண்மையாகிவிட்டது. இலங்கை தந்திரமடைந்ததற்கு பின்னர் முதல் அறுபது வருடங்களில் இத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை. என்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் முயற்சிகள், சுதந்திரம் பெற்றபிறகு தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் மாத்திரம் ஆட்சி மாற்றங்களைக் கண்டுவந்த இலங்கையின் அரசியலில் புதிய போக்கைக் கொண்டு வந்துவிட்டன.
” அதனால் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் ஆபத்து இருக்கிறது. சர்வதேச அனுசரணையுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றின் நேரடியான, தனிப்பட்ட அனுபவத்தை விளக்கும் இந்த நூல் இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் அக்கறைக்கு உரியதாக இருக்கும்.”
அறகலய பற்றிய வியாக்கியானம்
கோட்டாபயவின் நூலில் மிகவும் முக்கியமான பகுதிகள் என்று ஊடகங்கள் தெரிந்தெடுத்து கடந்த இரு தினங்களாக வெளியிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த கட்டுரை அமைகிறது. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து அவர் எழுதிய பகுதிகளை பல ஊடகங்கள் மேற்கோள் காட்டி கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன.
அறகலயவுடன் தொடர்புடைய சகல போராட்டங்களையும் குறிப்பாக கொழும்பில் நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்தும் தான் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார்.
அறகலய அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு விரோதமானதாக அமைந்திருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்..
மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று 2023 நவம்பர் 14 உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டாபய நூலில் ஒத்துக் கொள்ளவேயில்லை. செய்ததற்கு இரங்கி பச்சாதாபம் கொள்கிற பக்குவத்தை அவர் வெளிக்காட்டவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு ஆளாகத் தன்னைக் காட்சிப்படுத்தும் அவரின் முயற்சியாகவே நூல் அமைந்திருக்கிறது எனலாம்.
அறகலய பற்றி அவர் எழுதிய பகுதிகள் வருமாறு ;
” 2022 ஏப்ரில் 9 கொழும்பு காலிமுகத்திடலில் அறகலய தொடங்கி போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து ‘கோட்டா கோ கம’ என்று பிரகடனம் செய்ததை அடுத்து ஊடகங்களில் சில விமர்சகர்கள் பொதுவான குறிக்கோள் ஒன்றுக்காக சகல இனக்குழுக்களையும் மதங்களையும் அறகலய ஒன்றிணைத்திருக்கிறது என்று கூறினார்கள். எனது அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த இளைஞர்கள், யுவதிகள் இனவாதத்தைத் தோற்கடித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
” ஆனால், காலிமுகத்திடல் அறகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உண்மையில் ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் எந்த வகையிலும் எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்களே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
“அறகலயவில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் காணக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அங்கு வருவதற்கு சிறுபான்மைச் சமூகங்களைத் தூண்டிய காரணிகள் இருந்தன. விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து நான் தமிழர்களுக்கு எதிரானவனாகவே கருதப்பட்டேன்.
“ஒற்றையாட்சி அரசுக்கு (Unitary state ) பதிலாக ஐக்கிய இலங்கைக்கு (United SriLanka ) கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சிநிரலை அறகலயவில் தெளிவாகக்க காணமுடிந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டிநிற்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. அதனால் காலிமுகத்திடல் போராட்டங்களின்போது ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் அந்த சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
” 2012 ஆம் ஆண்டில் பொதுபல சேனாவின் தோற்றம் மற்றும் அந்த அமைப்பில் எனக்கு ஈடுபாடு இருந்ததாக கிளம்பிய சந்தேம் காரணமாக நான் முஸ்லிம்களுக்கு எதிரானவனாகவும் நோக்கப்பட்டேன். கொவிட் — 19 பெருந்தொற்றின் விளைவாக சடலங்களை எரிப்பது தொடர்பில் பிரச்சினை கிளம்பியபோது நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று ஏற்கெனவே இருந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது.
” தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கே பெருமளவில் கிடைத்த போதிலும்,
2019 ஜனாதிபதி தேர்தலில் நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். பதவியேற்பதற்கு சிங்கள பௌத்தர்களுக்கு முக்கியமான புனித தலமான ருவான்வெலிசேய வளாகத்தையே தெரிவுசெய்தேன். பதவியேற்ற பிறகு நான் நிகழ்த்திய உரையில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினாலேயே தெரிவுசெய்யப்பட்டதாக கூறியது பல்வேறு வியாக்கியானங்களுக்கு வழிவகுத்தது.
” தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு காரணங்களுக்காக என்னை எதிர்ப்பதற்கு அறகலயவுக்கு வந்தன. இதை சகல இடங்களிலும் குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயமும் அவர்களைத் தூண்டியிருக்கக்கூடும்.
” வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுகின்ற அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களின் தாராளபோக்குடைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறகலயவில் பங்கேற்றன. காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 கூடாரங்கள் இருந்ததாக அந்த கட்சியின் முக்கிய உறப்பினர் ஒருவரின் தகவல் மூலம் அறியமுடிந்தது. கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் மனைவிமார், நடிகர் நடிகைகள் என்று பல்வேறு தரப்பினரும் அங்கு நின்றார்கள்.
” நூலின் முன்னுரையில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று ஒரு புறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாத சகல பிரிவினரின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். கத்தோலிக்கத் திருச்சபையுடன் நான் அதுவரையில் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து அவர்களும் எனக்கு எதிராகத் திரும்பினர்.
” எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளையும் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடுகளையும் இல்லாமற்செய்து மக்களின் இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே.
“அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு வித்தியாசமான குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. அறகலய என்பது அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின் குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு பாதகமானதாகவே அமைந்திருந்தது. பெருமளவுக்கு அதே குறிக்கோள்களைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் அறகலயவுக்கு ஆதரவளித்தன.”
பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல்
கோட்டாபயவின இந்த விளக்கம் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலம் மாத்திரமே தங்களால் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்சாக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகும்.
தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாகவே வெளிநாட்டுச் சதி என்று கூறிவிடுவார்கள்.
அறகலய போராட்டம் தொடங்கிய நோக்கம் தெளிவானது. ஆனால், அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்டு முழு உலகத்தினதும் கவனத்தை இலங்கை நோக்கி திருப்பிய அந்த போராட்டத்தில் அரசியல் புரட்சியொன்றுக்கான பல பரிமாணங்கள் காணப்பட்டன.
பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக அறகலய மாறியதும் பல்வேறு அரசியல் சக்திகள் அதற்குள் ஊடுருவி வன்முறை வழியில் திசைதிருப்பியதே அதற்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை அரசியல் அதிகார வர்க்கம் நியாயப்படுத்துவதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தது.
அத்துடன் முறையான அரசியல் கோட்பாட்டின் வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லாத மக்கள் போராட்டங்களுக்கு நேரக்கூடிய கதிக்கு ஒரு அண்மைக்காலப் படிப்பினையாகவும் அறகலய அமைந்தது.
ஆனால், சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத ராஜபக்சாக்களினால் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள சமுதாயம் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையின் ஆட்சியதிகாரம் தங்களது ஏகபோக உரித்து என்றும் ஒரு எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களது செயற்பாடுகளை விமர்சனமின்றி சிங்களவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ராஜபக்சாக்கள் எதிர்பார்த்தார்கள்.
அதில் தங்களுக்கு கிடைத்த தோல்வியை நிவர்த்திசெய்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக்சாக்களுக்கு வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர வேறு மார்க்கம் இல்லை. மக்கள் கிளர்ச்சியை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாபயவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை அவமதிப்பதாகும்.
ஊழல் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான ஆட்சியையும் மூடிமறைப்பதற்கு இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலுக்கு இடமளித்தால் இலங்கைக்கு எதிர்காலமேயில்லை.
ராஜபக்சாக்கள் அந்த அணிதிரட்டலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்கும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல்வாரிசு நாமல் ராஜபக்ச கிராமங் கிராமமாக விகாரைகளுக்கு சென்று பிக்குமாரைச் சந்தித்து வருகிறார். சிங்கள பௌத்தர்களிடம் ராஜபக்சாக்களின் இந்த இனவாத அணிதிரட்டல் முயற்சி மீண்டும் எடுபடுமா என்பதை அடுத்த தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
தனது வீழ்ச்சிக்கு வெளிநாட்டுச்சதியே காரணம் என்று கூறும் கோட்டாபய, அவர் அதிகாரத்துக்கு வருவதற்காக சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சுலோகங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குரோதங்களை வளர்த்து சிங்கள மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெறுவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நச்சுத்தனமான பிரசாரங்களும் கூட ஒரு அரசியல் சதிதான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று அரசியல் அவதானியொருவர் தெரிவித்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது.
இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது நாடுகளின் உள்விவகாரங்களில் வல்லாதிக்க நாடுகள் அவற்றின் மூலோபாய நலன்களுக்காக தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவ்வாறான தலையீடுகளுக்கு வசதியான சூழ்நிலைகளை ஆட்சியாளர்களே தவிர மக்கள் ஏற்படுத்துவதில்லை.
இன்றைய இலங்கை நிலைவரத்தை நோக்கும்போது வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் யார் என்பதை நாட்டுமக்கள் மாத்திரம் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது. வல்லாதிக்க நாடுகள் அவற்றின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளை தங்கள் செல்லாக்கிற்கு உட்படுத்தும் வியூகங்களை வகுக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.
கோட்டாபயவின் நூல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இது இவ்வாறிருக்க, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தன்னந்தனி உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு எவ்வாறு ஜனாதிபதியாக வந்தார் என்ற கதையை நூலாக விரைவில் வெளியிடவிருப்பதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிவித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஜனாதிபதியைப் பற்றி பத்திரிகைகளில் வெளியான கேலிச்சித்திரங்களை தொகுத்து ஒரு நூலாக கடந்தவாரம் வெளியிட்டிருந்தார்.
அதிகாரத்தை விட்டு ஒடிப்போனவர் தனது கதையை வெளியிட்ட கையோடு அவரின் இடத்துக்கு அதிகாரத்துக்கு வந்தவரின் கதையும் வரவிருக்கிறது. வாசிப்போம்.
( ஈழநாடு )