தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்மொழி வாழ்த்தும்!தமிழர்களே சிந்தியுங்கள்!

தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்மொழி வாழ்த்தும்!தமிழர்களே சிந்தியுங்கள்!

(சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

நாம் யாரையாவது வாழ்த்தும்போது, ” உன் பக்கத்துவீட்டில் இருந்த மனிதன், தக்கபடி வாழ முடியாமல் அகால மரணம் அடைந்ததைப்போல் சாகாமல், நீ இப்போதும் இளமையுடன் இருப்பதை வியந்து பாராட்டுகிறேன்”  என்று வாழ்த்துவோமா? அப்படி வாழ்த்துவது சரியா? தகுமா? நல்ல பண்பாடா? இல்லையல்லவா?

ஆனால் நமது இலங்கைத் திருநாட்டில் அப்படித்தானே நடக்கிறது! பாடசாலைகளிலும், மற்றும் இடங்களிலும் நடைபெறும் விழாக்களில் தமிழ் மொழி வாழ்த்து பாடப்படுவது வழக்கம். காலங்காலமாக,

” வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே” என்று தொடங்கும், பாரதியாரின் அழகான பாடல்தான் பாடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது, மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை என்ற தமிழறிஞர் எழுதிய “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்று தொடங்கும் பாடலும்தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில்,  சிலரால் சில இடங்களில்பாடப்படுகிறது. 

மட்டக்களப்பின் பிரபலமான பாடசாலை ஒன்றின் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அதனைக் கேட்டபொழுது எனது நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இது எப்போது நுழைந்தது? ஏன் இதனைப்பாடுகிறார்கள்? யார் இந்த வழக்கத்தைப் புகுத்தினார்கள்? ஏன் இதுவரை எவருமே இதுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? என்ற கேள்விகள் எல்லாம் என்மனதில் எழுந்தன. 

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய ‘மனோன்மணியம்’ சிறப்பான ஒரு நாடக நூல். 1891இல் அந்த நூல் வெளியிடப்பட்டது. அதில் “நீராருங்கடலுடுத்த” எனத்தொடங்கும் பாடல் “தமிழ்த்தெய்வ வணக்கம்” என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவதற்காக அது எழுதப்பட்டதல்ல.

ஆனால்,  கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சரான தனது முதலாவது பதவிக்காலத்தில், மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை அவர்களது இந்தப் பாடலை(சிலவரிகளைத் தவிர்த்து) தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக சட்டரீதியாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் பாடசாலைகளிலும், வைபவங்களிலும் பாடப்படுவதை அதிகாரபூர்வமாகினார். 1970 ஆம் ஆண்டு, அவ்வாறு செய்யப்பட்டபோது அந்த மூலப்பாடலில் இருந்த சிலவரிகள் நீக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவதற்குப் பொருத்தமானவையெனெச் சில வரிகள் தெரிவு செய்யப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அதுதான் இப்போதுவரை தமிழகத்தில் பாடப்பட்டு வருகிறது. 

அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இதுதான்:

தமிழ் தாய் வாழ்த்து:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…

சீராரும் வதனமெனத் திகழ் பாரதக் கண்டமிதில்…

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திரு நாடும்…

தக்கசிறு பிறை நுதலும் தரித்தநறும் திலகமுமே…

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற…

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!!!

தமிழணங்கே!!!

உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!!

ஆனால், எல்லாவற்றுக்கும் குருட்டுத்தனமாகத் தமிழகத்தைப் பின்பற்றுவதைப் போல இப்போது இந்தப்பாடலைப் பாடுவதும் இலங்கையில் பின்பற்றப்பட்டு விட்டது. சரி பரவாயில்லை. நல்லதுதானே என்று எடுக்கமுடியாதுள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளாமல்,இலங்கையில் சில வேளைகளில் மனோன்மணியனாரின் முழுப்பாடலும் பாடப்படுகிறது.

அந்தப்பாடல் இதுதான்:

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் 

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் 

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் 

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் 

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் 

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் 

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

அறிவுபூர்வமாகச் சிந்திக்கக்கூடிய, பண்பாடுள்ள எவராவது, இந்த முழுப் பாடலையும் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடுவதற்கு அனுமதியளித்தியிருப்பார்களா? என்று கேட்கத்தோன்றுகிறது. 

பாடுபவர்கள் சிறுவர்களாக இருந்தால் அவர்கள் கருத்துத் தெரியாமல் பாடுகிறார்கள் என்று கடந்து போகலாம். ஆனால், பாடவைப்பவர்களும், அதைக் கேட்பவர்களும் கூட ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. கவலையைத் தருகிறது.

“கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் உன்னிடம் இருந்து பிறந்திருந்தும்கூட நீ சிதைந்து போகாமலும், உலகத்தில் வாழமுடியாமல் வடமொழி அழிந்ததுபோல நீ அழிந்துவிடாமலும் இளமையோடு இருக்கின்ற உனது திறமையை வியந்து வாழ்த்துகின்றோம்” என்ற கருத்துள்ள வரிகளை, நமது மொழியை வாழ்த்தும்போது பாடுவது தவறல்லவா. மற்றொருமொழி, அதுவும் தமிழுக்கு நிகராகக் கோலோச்சிய மூத்த மொழி அழிந்ததைச் சொல்லியா நமது மொழியை நாம் போற்றவேண்டும். இதனைக்கருத்தில் கொண்டுதான் கலைஞர்அவர்கள், 

“…பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் 

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் 

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் 

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் 

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்…” 

என்ற வரிகளை நீக்கியிருக்கிறார். தமிழகத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தில் இந்தவரிகள் இல்லை.  

ஆனால், அவரால் தெரிவுசெய்யப்பட்டு இப்பொழுது தமிழ்நாட்டில் பாடப்பட்டுவரும் பாடலில் உள்ள  மேலும் இரண்டு வரிகள் தமிழ்மொழியை இழிவுபடுத்துவதை அவரும்கண்டுகொள்ளவில்லையே என்பதுதான் மிகவும் கவலைக்குரியது. 

“சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! “

இந்த வரிகள் சொல்வதென்ன?

“பாரதநாட்டை ஒருவரின் முகமாகவும், பாரதநாட்டின் தென்பகுதியை அந்த முகத்தில் உள்ள நெற்றியாகவும், திராவிடநாட்டை அந்த நெற்றியில் வைக்கப்பட்டிருக்கும் “பொட்டு” ஆகவும் கூறி, அந்தப் பொட்டின் வாசனையைப்போல “அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ் மணக்க “இருந்த”  பெரும் தமிழணங்கே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

திராவிடநாடு என்பதைத் தமிழ் நாடு என்று எடுத்துக்கொண்டாலும், நெற்றியிலே வைக்கப்பட்டிருக்கும் பொட்டு நிரந்தரமானதா? எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? அது அழியக்கூடியது அல்லவா? நெற்றியிலே வைத்திருக்கும் பொட்டிலே எவ்வளவு காலத்திற்கு நறுமணம் வீசும்? சிலவேளை, பொட்டு அழிவதற்கு முன்னரே மணம் போய்விடலாம். ஆகக்கூடியது அந்தப் பொட்டு இருக்கும் வரை மணம் வீசலாம்.

அத்தகைய பொட்டிலே இருக்கும் வாசனையைப்போல எத்திசையும் புகழ்மணக்க “இருந்த” பெரும் தமிழ் அணங்கே என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் முன்பு ஒருகாலத்தில் தமிழ் புகழ் மணக்க இருந்தது, இப்போது மணக்கவில்லை, அது மங்கிப் போய்விட்டது என்றுதானே பொருள். 

எனவே, ” பாரதநாட்டின் தென்பகுதியில், திராவிடநாட்டில், உலகமெல்லாம் புகழ் என்ற மணம் வீசிக்கொண்டு ஒருகாலத்தில் இருந்த தமிழ்ப் பெண்ணே” என்பதுதானே கருத்தாக உள்ளது. இப்போதும் வாழ்கின்ற அல்லது எப்போதும் வாழப்போகின்ற தமிழ்த்தாயே என்று இல்லையே!

எப்போதாவது இந்த உலகத்தில் தமிழ்மொழி எந்த ஒரு நாட்டிலும் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டால் அப்போதுதானே யாராவது இப்படிப் பாடமுடியும்? 

மாபெரும் தமிழறிஞரான கருணாநிதி அவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளாமல் விட்டது கவலைக்குரிய விடயம்.

ஆனால்,  “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்” என்பது தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஒன்று. அதனைத் தமிழக அரசுதான் முடிவு செய்யவேண்டும், செய்திருக்கிறது. அதில் தலையிடுவது நமது எண்ணமல்ல, நோக்கமும் அல்ல.

தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் வாழ்கின்ற தமிழகமக்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வரிகளுடனான தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் பாடுவார்கள். ஏனெனில் சிறுவயதில் இருந்து அவர்கள் கற்றிருக்கும் பாடல் அது. ஆனால், தமிழகத்தவரல்லாத, வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் மக்களும், குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களும், ஏதாவது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும் என்ற தேவைப்பாடு எழும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாடலைத் தேடி எடுக்கும்போது, தமிழக அரசால் தவிர்க்கப்பட்டிருக்கும் வரிகளையும் சேர்த்து – “மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை” அவர்களுடைய முழுப்பாடலையும் – பாடிவிடக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்படும். ஏற்பட்டிருக்கிறது. 

எனவே“எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே” என்று பாடுவது அறிவுக்குகந்ததல்ல! “எத்திசையும் புகழ்மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே” என்றல்லவா பாடவேண்டும்.

இது எதுவுமே தேவையில்லையே! ஒரு புலவரின் பாடலைத் திருத்தவும் தேவையில்லை, சிதைக்கவும் தேவையில்லை, மற்ற மொழிகளைப் பழிக்கவும் தேவையில்லை, இடையிலே வந்த இந்த வழக்கத்தைத் தொடரவும் தேவையில்லை. 

தமிழ்மொழியும், தமிழ்த்தாயும் வேறு வேறல்ல. தமிழ் மொழியைத்தான் தமிழ்த்தாய் என்கிறோம். அப்படியிருக்கும்போது தனித்தனியாகத் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்மொழி வாழ்த்து என்று இரண்டு எதற்கு?

மகாகவி பாரதியாரின் அழகான பாடலைப் பாடியே தமிழ்மொழியை வாழ்த்துவோம். பண்பாடுள்ள தமிழராய் வாழ்வோம்.  சம்பந்தப்பட்டவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதுதான், நமது ஆசை, ஆதங்கம், விருப்பம், வேண்டுகோள் எல்லாமே!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்! வணக்கம்!