(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
ஈழத்திலுள்ள முருகவழிபாட்டுத் தலங்களுள் கதிர்காமம் மிகவும் தொன்மைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கதிர்காமத்தின் வரலாற்றைக் கந்தபுராணத்துடன் தொடர்புபடுத்தும் கதையாடல்கள் நிலவுகின்றன.
புராணகாலத்தில் கதிர்காமத்திற்குத் தென்கிழக்கே அமைந்திருந்த மகேந்திரபுரியை பத்மாசுரன் என்பவன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனை வதம் செய்வதற்காக முருகன் திருச்செந்தூரிலிருந்து வீரபாகு முதலிய வீரர்களுடன் கதிர்காமம் வந்தடைந்து மாணிக்க கங்கைக்கரையில் பாசறை அமைத்துத் தங்கினார். இப்போர்ப்பாசறை அமைந்த இடத்திலேயே கதிர்காமத்தில் முருகன் ஆலயம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கதிர்காமத்தில் போர்ப்பாசறை அமைத்துத் தங்கியிருந்த முருகன் பத்மசாசுரனுடன் போர்புரிந்து அவனை வதம் செய்த பின்பு தனது பரிவாரங்களுடன் உகந்தை – திருக்கோவில் ஊடாக மீண்டும் திருச்செந்தூரைச் சென்றடைந்தார்.
சூரவதைக்குப் பின்னர் முருகன் திருப்பரங்குன்றத்தில் தங்கியிருந்த காலத்தில் இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம்புரிந்தார். தெய்வயானையை மணம்புரிந்து திருப்பரங்குன்றத்தில் முருகன் மகிழ்ந்திருந்த காலத்தில் கதிர்காமத்தை அண்மித்த செல்லக்கதிர்காமப் பகுதியை ஆண்ட நம்பிராஜன் எனும் வேடுவக் குறுநில மன்னனின் மகளான வள்ளியின் பேரழகு பற்றி நாரதர் மூலம் அறிந்து செல்லக்கதிர்காமம் வந்து வள்ளியைக் கண்டு காதல் மணம் புரிந்தார். இவ்வாறு முருகன் சூரவதை புரிந்த இடமாகவும் வள்ளியைத் திருமணம் செய்த இடமாகவும் கதிர்காமம் கருதப்படுகிறது.
மேலும், கதிர்காமம் இராவணனுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. இராமாயண காலத்தில் கதிர்காமம் புகழ்பெற்ற முருகதலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சைவசமயத்தவனும் சிவபக்தனுமான இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் மதவாச்சிப்பகுதியை ஆண்ட ‘மதுவகரன்’ எனும் சிற்றரசன் கதிர்காம முருகன்மீது அளவற்ற பக்தியுள்ளவனாக இருந்துள்ளான். அதே காலத்தில் இராவணனால் கவர்ந்து வரப்பட்ட சீதையைத் தேடி இலங்கை வந்த அனுமான் கதிர்காம முருகனை வழிபட்டதாகவும் ‘சுப்பிரமணிய பராக்கிரமம்’ எனும் நூல் கூறுகிறது.
கந்தபுராணத்துடனும் இராமாயண இதிகாசத்துடனும் கதிர்காமத்தைத் தொடர்புபடுத்தும் கதையாடல்கள் இவ்வாறு இருக்க, கதிர்காமத்தின் வரலாறு குறித்துத் தொல்லியல் ரீதியாக நோக்கும்போது, ஈழத்தில் திராவிட இனத்திற்கேயுரிய பெருங்கற்காலப் பண்பாடு நிலவியிருந்த கி.மு 1000 – கி.மு 300 காலப்பகுதியில் அதற்கு முன்பிருந்தே கதிர்காமப் பிரதேசத்தில் வாழ்ந்த இயக்கர், நாகர் ஆகிய திராவிடக் குலங்களிடையே நிலவிய ‘வேல்’ வழிபாட்டின் தொடர்ச்சியே பின்பு முருகவழிபாடாக முகிழ்ந்தது. கதிரமலையில் இன்னும் ‘வேல்’ வழிபாடுண்டு.
வரலாற்று ரீதியாக விஜயன் கலிங்க தேசத்திலிருந்து இலங்கைக்கு வந்த காலத்தில் (கி.மு 500) அதற்கு முன்பு மண்ணாலும், மரத்தாலும் நாகர்களால் அமைக்கப்பட்டிருந்த சிறிய கதிர்காம முருகன் ஆலயத்தைப் புதுப்பித்தான் என முதலியார் இராசநாயகம் எழுதிய ‘யாழ்ப்பாண சரித்திரம்’ கூறுகிறது.
கி.மு 4ஆம், 3ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் உருகுணைப்பகுதியை பாண்டிய வம்சத்துத் தமிழ்ச் சிற்றரசர்கள் கதிர்காமம், சாகாமம், சந்தனகாமம் (தற்போதைய அம்பாறை) ஆகிய இடங்களில் அமர்ந்து கூட்டாட்சி செய்தனர். இக்காலத்தில் கதிர்காமச் சிற்றரசர்களால் கதிர்காமம் முருகன் ஆலயம் ஆதரிக்கப்பெற்றது.
இவர்களுடைய காலத்தில்தான் பௌத்தமதம் இலங்கையில் அறிமுகமாயிற்று. அனுராதபுரியில் நடந்த போதிமர நடுகை விழாவில் (கி.மு 247) கலந்து கொண்ட கதிர்காமத்துச் சிற்றரசர் அதன் கிளையொன்றைப் பெற்றுவந்து கதிர்காமத்தில் நட்டதாக ‘மகாவம்சம்’ கூறுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்களாவர். (பௌத்த தமிழர்கள்). இவர்கள் பௌத்தமதத்தைத் தழுவிய போதும் கதிர்காம முருகனையும் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.
கி.மு முதலாம் நூற்றாண்டில் தமிழ் மன்னனான எல்லாளன் அனுராதபுரத்திலிருந்து இலங்கையை ஆட்சிபுரிந்த காலத்தில் இவனது மேலாதிக்கத்தை ஏற்று இலங்கையின் உருகுணைப்பகுதியை ஆட்சிபுரிந்த கவந்தீசனின் மகனான துட்டகாமினி எல்லாளனைப் போரில் வெற்றிகொண்டபின்னர் கதிர்காம முருகன் ஆலயத் திருப்பணியை மேற்கொண்டதாக ‘கந்த உபாத’ என்ற சிங்களமொழி நூல் குறிப்பிடுகிறது.
கி.பி 11 ஆம் நூற்றாண்டு வரையிலும் சிங்கள மன்னர்களால் கதிர்காமம் ஆலயம் ஆதரிக்கப் பெற்றும் பேணப்பெற்றும் வந்துள்ளது.
இலங்கை சோழரது ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் (கி.பி 993 – கி.பி 1070) கதிர்காமத்திலிருந்து ஆட்சி செய்துவந்த சிற்றரசனான ‘லோகேஸ்வரன்’ என்பவனை ஐந்தாம் மகிந்தனின் பேரனாகிய முதலாம் விஜயபாகு கதிர்காம முருகனை வழிபட்டுப் போரில் வென்றதாகவும் ‘கந்த உபாத’ என்ற சிங்கள நூல் கூறுகிறது.
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ‘மாகோன்’ எனும் தமிழ் மன்னன் இலங்கையை ஆண்ட காலத்தில் அவனது உப ராஜனான ஜயபாகு என அழைக்கப்பெற்ற குளக்கோட்டன் கதிர்காம முருகன் ஆலயத் திருப்பணி செய்ததாக திருகோணமலைக் கோணேசர் ஆலய கல்வெட்டுப்பாடல் வரிகளால் அறியக்கிடக்கிறது.
கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் கதிர்காம முருகனைத் தரிசித்ததாக ‘நாவலர் சரிதை’யில் உள்ள பாடலொன்று உணர்த்துகிறது.
அக்காலத்திலேயே வடமாகாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காம யாத்திரீகர்கள் புறப்பட்டு கிழக்குமாகாணக் கரையோரப்பாதை வழியாக வெருகல், சித்தாண்டி, திருக்கோவில், உகந்தை ஊடாகக் கதிர்காமத்தை அடையும் வழக்கம் நிலவி வந்துள்ளது.
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தரிசித்து இத்தலத்தின் மீது இருப்பத்தைந்து திருப்புகழ் பாடல்கள் பாடியும் உள்ளார்.
கி.பி 15 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தென்பகுதியிலுள்ள திக்குவெல்லை எனும் இடத்தைச் சேர்ந்த ‘சாமனேர தேரர்’ வாதநோயினால் பீடிக்கப்பெற்று தன்னை அந்த நோயிலிருந்து மீட்கும்படி வேண்டி தூதனுப்பியதாக ‘கஹகுருலு சந்தேஸ்’ எனும் சிங்கள நூலில் வருகிறது. இச் சிங்கள இலக்கிய நூலில் கதிர்காமம் முருகன் ஆலயத்தின் அருகே அமைந்திருந்த மடம் பற்றியும், அம்மடத்தில் பக்தர்கள் தங்கியிருந்தமை பற்றியும், கதிர்காமத் தீர்த்தோற்சவத்தில் முருகன் வள்ளியம்மை சமேதரராய் உலா வந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன.
கி.பி 16 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஆட்சிபுரிந்த ‘சீதாவாக்கை’ மன்னனான முதலாம் இராசசிங்கன் (கி.பி 1581 – கி.பி 1583) சைவசமயத்தைத் தழுவிச் சிவபக்தனாக வாழ்ந்த காலத்தில் கதிர்காம முருகன் ஆலயத் திருப்பணியை ஆரம்பித்து வைத்தான் எனவும் வரலாற்றுக் குறிப்புண்டு.
கி.பி 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றியபோது நாட்டிலிருந்த பல சைவக் கோயில்களைக் கொள்ளையடித்து இடித்து அழித்தார்கள். ஆனால் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் அது சாத்தியப்படவில்லையென 1640 இல் இலங்கையில் வாழ்ந்த போர்த்துக்கேயரான ‘ரிபேயிரா’ என்பவர் தனது இலங்கைச் சரித்திரம் பற்றிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள கதிர்காம முருகன் ஆலயம் கண்டி மன்னனான இரண்டாம் இராசசிங்கன் (கி.பி 1635 – 1687) என்பவனால் புதுப்பிக்கப்பெற்றதாகும். இம்மன்னனது பட்டத்துராணி மதுரையைச் சேர்ந்த இளவரசியாவார்.
இத்துணை வரலாற்றுச் சிறப்புகளுடன் தென்னிலங்கையில் மாணிக்ககங்கையோரம் அமைந்துள்ள கதிர்காம முருகன்தலம் இன்று இனமத பேதமின்றி ஈழத்தவர்கள் அனைவரினதும் வழிபாட்டுத்தலமாக விளங்கும் தனித்துவமான சிறப்புடையது.
. . .
வள்ளியம்மன் மடத்தை வந்தடைந்த கோகுலனின் தயாரின் யாத்திரை அணி சமையல் வேலைகளை ஆரம்பிக்குமுன்னர் நடந்துவந்த களைப்பூத்தீரத் தேனீர் தயாரித்துப் பருகினார்கள். கோகுலனும் கதிரவேலும் தேனீரை வெப்பக்குடுவையொன்றில் கொண்டுபோய் மாணிக்ககங்கையின் அக்கரையில் தங்கியிருந்த வண்டிலோட்டிக்கும் உதவியாளனுக்கும் கொடுத்துவிட்டு வந்தார்கள். சமையல் வேலைகள் எல்லாம் முடிந்த பின் சாப்பாட்டை மூடிவைத்து விட்டு எல்லோரும் மாணிக்ககங்கையில் நீராடிவரப்புறப்பட்டார்கள்.
கோகுலனின் தாயாரும் கோகுலனும் கோகுலனின் இளையக்காவைக் குழந்தையுடன் மாணிக்ககங்கையின் அக்கரைக்குக் கூட்டிப் போய்க் குழந்தைக்குத் தலைமுடியை இறக்கிக் கொணர்ந்தார்கள்.
எல்லோரும் மாணிக்கங்கை ஆற்றுநீரில் இறங்கி நீராடத் தொடங்கினர். கோகுலன் இளையக்காவிடமிருந்து குழந்தையைப் பிறந்தமேனியுடன் கையில் வாங்கிக் கவனமாக நீரில் பலதடவைகள் அமிழ்த்தி நீராட்டிவிட்டுத் தன் இளையக்காவின் கையில் கொடுத்தான். எல்லோரும் நீராடிமுடிந்த பின் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த மருத மரங்களின் மறைவில் உடைகளை மாற்றிக்கொண்டு மடத்திற்கு வந்து சேர்ந்து ஈர உடுப்புக்களை உலரப்போட்டு விட்டு முருகன் கோயிலை நோக்கி விரைந்தார்கள்.
மாலை ஆறுமணிப் பூசையைக் காண்பது அவர்களது நோக்கமாயிருந்தது. கோகுலனின் தாயார் கையில் ஏந்தியிருந்த பூசைத்தட்டில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கற்பூரம், ஊதுபத்தி, தேங்காய் எண்ணெய் ஆகிய பூசைப்பொருட்கள் இருந்தன. தட்டின் மேல் வெள்ளைத்துணி போட்டு மூடப்பட்டிருந்தது.
கதிரவேலின் தாயார் கையில் பழத்தட்டை ஏந்தியிருந்தார். அதில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம், வத்தகப்பழம், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், அப்பிள்பழம், மாதுளம்பழம், விளாம்பழம், தோடம்பழம் என்று பலவகைப்பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. மற்றவர்கள் ஒவ்வொருத்தர் கையிலும் முடிசூடப்பட்ட தேங்காய்கள் இருந்தன.
பூசைத்தட்டையும் பழத்தட்டையும் நீட்ட அவற்றைக் கோயிலில் நின்றிருந்த வெள்ளைச்சாறனும் வெள்ளை மேலங்கியும் அணிந்து வாயைமூடி வெள்ளைச்சீலை கட்டியிருந்த ஒருவர் வாங்கி அவற்றை உள்ளே மூலஸ்தானத்திற்கு அனுப்பினார். அவரைச் சிங்களத்தில் ‘கப்புராள’ என அழைப்பார்கள். தமிழில் கப்புகனார் என்பது உள்ளே பூசை செய்தவரும் வாயை வெள்ளைச்சீலைகட்டி மூடித்தான் பூசை செய்வார். மந்திரங்கள் சொல்வதில்லை. கற்பூரதீபம் காட்டியே பூசை நடைபெறும்.
பூசை முடிந்து தரப்பட்ட பழங்கள் நிறைந்த தட்டை வாங்கிக் கொண்டு, காட்டுக் கொத்துகளால் கூரை அலங்கரிக்கப்பட்டிருந்த முருகன் கோயில் மண்டபத்தை விட்டு வெளியேறி அங்கு முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய கற்பூரச்சட்டியிலே கற்பூரம் கொளுத்தி அதற்கு முன்னே தரையிலிருந்த கல்லிலே தேங்காய்களையுடைத்துவிட்டு எல்லோரும் கோயிலைச்சுற்றி வந்தார்கள். அரசமரமொன்று கோயிலின் இடதுபுறப் பக்கவாட்டில் கிளைபரப்பி நின்றது. கோயிலின் உள்வீதியைச் சுற்றிவரும்போது கோயிலின் வலதுபுறப்பக்கவாட்டில் அமைந்திருந்த பிள்ளையார், சிவன், தெய்வானைஅம்மன் ஆகிய தெய்வங்களையும் தரிசித்தபின் கோயிலின் வெளியே வந்து வள்ளியம்மன் மடத்தை நோக்கி எல்லோரும் நடையைக் கட்டினார்கள்.
பூசைமுடிந்து சுவாமி வெளிவீதியில் உலாவருமுன்னர் இரவுச்சாப்பாட்டை முடித்துத் திருவிழாக்காணும் அவசரம் அனைவரினதும் நடையில் தெரிந்தது.
கோயிலின் உள்ளேயும் வெளியேயும் கற்பூரவாசனையும், தேங்காய் இளநீர்வாசனையும் மூக்கைத்துளைத்துப் பக்திப்பரவச உணர்வினை ஊட்டிற்று. திரும்புகிற பக்கமெல்லாம் பக்தர்களின் ‘அரோகரா’ ஒலி ஆனந்தமளித்தது. கோயிலுக்குப் போவோரும் கோயிலிருந்து வெளிவருவோரும் எனப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வள்ளியம்மன் மடத்தை வந்தடைந்த அனைவரும் இராச்சாப்பாட்டுக்குத் தயாரானார்கள். கோகுலனும் கதிரவேலும் மாணிக்ககங்கையின் அக்கரைக்குச் சென்று வண்டிலோட்டியையும் உதவியாளனையும் கூட்டிவந்தார்கள். எல்லோரும் வள்ளியம்மன் மடத்தின் விறாந்தையின் தரையில் அமர்ந்து பசியாறினர்.
சாப்பிட்டுக்கொண்டே பெரியவர் சாமித்தம்பி பல விடயங்களைக் கதையோடு கதையாகக் கூறிவைத்தார். அவை கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் புதிய தகவல்களாக இருந்தன.
கதிர்காம முருகனுக்குரிய பூசை முறைகள் ஆகம முறைமை சாராது பழைய தமிழ் முறையான மடாலய முறையிலேயே நடைபெறுகின்றன. முருகன் கோயில் வெளிமண்டபக் கூரை காட்டுக்கொத்துக்களால் சோடனை செய்யப்பட்டிருக்கும். இதனைக் ‘கொத்துப்பந்தர்’ என்பர். முருகனை முதலில் வழிபட்டவர்கள் வேடர் குலத்தவர்களே. வேடுவர் கொத்துப்பந்தர் அமைத்து அதன் கீழ்தான் ‘வேல்’ வைத்து வழிபட்டனர்.
கப்புகனார் (கப்புராள) வாயில் வெண்துணி (வாய்ச்சீலை) கட்டியவாறு ‘மௌனபூசை’யே நடைபெறும். கருவறையில் ‘வேல்’ உருவில் முருகன் அருள்புரிகிறார்.
இங்கு எப்போதும் கருவறை திறந்துகாட்டாது திரைச்சீலையால் மூடப்பட்டதாகவே இருக்கும். திருவிழாக்காலங்களில் வீதி உலாவரும்போது திருவுருவங்கள் மூடுவாகனங்களிலேயே கொண்டு செல்லப்படும். சுவாமி ஊர்வலம்வரும் வாகனத்தைக் ‘கேடயம்’ என்பர்.
மட்டக்களப்பு மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘சின்னக்கதிர்காமம்’ என அழைக்கப்படுகின்ற மண்டூர் முருகன் ஆலயத்தில் நடைபெறும் பூசைமுறைகள் மற்றும் நிர்வாக அமைப்பு எல்லாமே கதிர்காம முருகன் ஆலயத்தினை ஒத்தனவாகவே விளங்கப்பெறுகின்றன.
கதிர்காமம் மற்றும் மண்டூர் ஆலயப் பூசைமுறைகள் பற்றிப் பெரியவர் சாமித்தம்பி கூறிய விடயங்கள் ஒரு சமூக பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்குரியவனாகக் கோகுலனுக்குத் தோன்றின.
வள்ளியம்மன் மடத்திலே இராச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு திருவிழாக்கான எல்லோரும் ஆயத்தமானார்கள்.
இரவு எட்டு மணிபோல் முருகன் கோயிலிருந்து திருவிழா ஊர்வலம் ஆரம்பமாயிற்று. சுவாமி ஊர்வலம் வரும் ‘கேடயம்’ என அழைக்கப்பெறும் வாகனமும் அலங்கரிக்கப்பட்ட யானைகளும் காவடியாட்டங்களும் கண்டி நடனங்களும் தெய்வம் ஆட்டுக்களும் தமிழ் மற்றும் சிங்களப் பக்திப்பாடல்களும் ‘அரோகரா’ ஒலிகளும் கோலாட்டம், சிலம்படிகளும், நெருப்புவளைய விளையாட்டுக்களும், கற்பூரச்சட்டிகளும் எனத் திருவிழாவைக் காணக்காணக் களிப்பிலே மனங்கள் துள்ள பக்தியுணர்வில் தோய்ந்தது பக்தர்கள் கூட்டம்.
திருவிழா ஊர்வலம் வள்ளியம்மன் ஆலயம்வரை சென்று மீளவும் முருகன் ஆலயத்தை வந்தடைய இரவு பத்துமணியாகிவிட்டது. முருகன் ஆலயத்திற்கும் வள்ளியம்மன் ஆலயத்திற்கும் இடைப்பட்ட சுமார் முக்கால் மைல்தூரம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
திருவிழாவைக்கண்டுகளித்தபின் கோகுலனின் தாயார், கதிரவேலின் தாயார், கதிரவேலின் அக்கா, கோகுலனின் இளையக்கா மற்றும் குழந்தை எல்லோரும் வள்ளியம்மன் மடத்திலே உறக்கத்திற்குச் செல்லக் கோகுலனும் கதிரவேலும் பெரியவர் சாமித்தம்பியும் வள்ளியம்மன் ஆலயம்சென்று தரிசித்துவிட்டு அருகிலிருந்த முஸ்லீம் பள்ளிவாசல் வளாகத்துள் நுழைந்தார்கள். வண்டிலோட்டியும் உதவியாளனும் மாணிக்ககங்கையின் அக்கரையில் வண்டில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைநோக்கிச் சென்றார்கள்.
(தொடரும் …… அங்கம் – 24)