இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தீவிரமடையும் பிரசாரங்கள்

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தீவிரமடையும் பிரசாரங்கள்

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரங்கள் தென்னிலங்கையில் தீவிரமடைந்திருக்கின்றன. பிரதான கட்சிகளின்  அரசியல்வாதிகளும்  அவதானிகளும் ஊடகங்களும் இந்த பிரசாரத்தின் முன்னரங்கத்தில் நிற்கிறார்கள்.

  இந்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் தலைவரை  உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியதை சகித்துக்கொள்ள முடியாதவராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தங்களையும் புதுடில்லிக்கு அழைத்துப் பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்ற போதிலும், அத்தகைய அழைப்பு எதையும் இந்திய அரசாங்கம் அனுப்பியதாக  இதுவரையில் தெரிய வரவில்லை.

   ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அநுரா குமாரவின் இந்திய விஜயத்தை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை, வேறு சில  அரசியல்வாதிகள் அந்த விஜயத்தை வரவேற்பது போன்று கருத்துக்களைக் கூறினாலும், அநுரா குமாரவும் தோழர்களும்  கோட்சூட்  அணிந்து கொண்டு இந்திய அதிகாரிகளுடன் பேசியதை கிண்டல் செய்யவும் தவறவில்லை. கோட்  அணிவதற்கு பிரத்தியேகமான தகுதி ஏதாவது இருக்கிறதா என்பதை அந்த அரசியல்வாதிகள் தான் கூறவேண்டும்.

  ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) இந்திய விரோத அரசியல் வரலாறு ஒன்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கட்சியின் தலைவர்களை இந்தியா அழைத்துப் பேசியதை அவர்கள் இந்தியாவுக்கு விலை போய்விட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்திய விரோத நிலைப்பாடுகளைக்  கொண்ட விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் இந்த விமர்சனங்களில் முன்னணியில் நிற்கிறார்கள்.

  அநுரா குமார குழுவினர் தேசிய சொத்துக்களை இந்திய முதலீட்டாளர்களுக்கு தாரை வார்க்க இணக்கம் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்களின் விமர்சனங்களில் முக்கியமானது. இந்திய விரோத நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி மாற்றிக்கொண்டு விட்டது என்று இவர்கள் சிங்கள மக்களுக்கு கூறுகிறார்கள்.

    கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் இருப்பே சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் விரோதமான கொள்கைகளிலேயே தங்கியிருக்கிறது. அந்த கொள்கைகளை பிரசாரப்படுத்துவதற்கு  கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும்   பயன்படுத்த அவர்கள் தவறமாட்டார்கள். அநுரா குமாரவின் இந்திய விஜயத்தையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

   ஜே.வி.பி.யின் இந்திய விரோதக் கடந்த காலத்தைப் பற்றி மோடி அரசாங்கத்துக்கே கவலை இல்லாதபோது இலங்கையில் சில அரசியல்வாதிகளுக்கும் அவதானிகளுக்கும் அது ஏன் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

 இந்தியாவைப் போன்றே தாங்களும் மாறிவிட்டதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறுகிறார்கள் என்ற போதிலும், சிங்கள தேசியவாத வாக்காளர்கள் தொகுதியிடமிருந்து  தங்களை தனிமைப்படுத்துவதற்கு செய்யப்படக்கூடிய பிரசாரங்கள் குறித்து அவர்கள் மிகுந்த எசசரிக்கையுடன் இருக்கிறார்கள். இதை இந்திய விஜயத்தின் பின்னரான அவர்களின் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.

 இந்திய முதலீடுகளுடனான    திட்டங்களை  கடுமையாக எதிர்த்துவந்த தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கேட்கப்பட்டபோது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சீனா, இந்தியா உட்பட பல  நாடுகளிடம் இருந்து முதலீடுகளை தாஙகள் வரவேற்பதாக கூறினார்.  இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் தங்களது அக்கறைக்குரியது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறினாலும், இந்தியாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் சக்தியாக தாங்கள் மாறிவிட்டது போன்ற ஒரு  தோற்றப்பாடு  ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக  இருக்கிறார்கள்.

  இந்திய விரோத கடந்த காலத்தைப் பற்றி திரும்பத்திரும்ப  நினைவுபடுத்தும் அரசியல்வாதிகளும் அவதானிகளும்  ஜே.வி.பி.அதன் பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று விரும்புகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.

  தற்போதைய சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் தங்களின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொண்டுவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மாற்றிக்கொள்ளத் தயாரில்லாத கொள்கைகளும் இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் கூறமுடியும்.

  தங்களது நோக்கங்கள் குறித்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்துவதற்காக அரசியல் எதிரிகள் செய்யும் பிரசாரங்களை மறுதலிப்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடுமையானப் பாடுபடவேண்டியிருக்கிறது.

  ஜே.வி.பி அரசாங்கத்தை அமைத்தால் தனியாருக்கு சொந்தமான உடைமைகள் சுவீகரிக்கப்படும் என்றும்  தனியார்துறை நசுக்கப்பட்டுவிடும் என்றும் செய்யப்படுகின்ற பிரசாரங்களை அநுரா குமார பல தடவைகள் மறுத்திருக்கிறார். வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் வேளைகளில் அவர் ஜே.வி.பி. மாறிவிட்டது என்று நம்பவைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.

  ரோஹண விஜேவீர காலத்து கொள்கைப் பிரகடனங்களை மேற்கோள்காட்டி தனியார் சொத்துடைமை மற்றும் உற்பத்திக் கருவிகளின் கட்டுப்பாடு பற்றிய ஜே.வி.பி.யின்  தற்போதைய கொள்கைகள் அதற்கு முரணாக இருப்பதற்கு அநுரா குமார விளக்கம் தரவேண்டும் என்று சில கொழும்பு சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. 

  இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி குறித்து தீவிரப்படுத்தப்படும் விமர்சனங்களில்  கவனிக்கக் கூடியதாக இருக்கும் இன்னொரு முக்கிய அம்சம் அதன் கடந்த கால வன்முறை  பற்றியதாகும்.

  கடந்த அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதிக்குள் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளை செய்து தோல்விகண்ட ஜே.வி.பி. கடந்த நூற்றாண்டின் பிறபகுதியில் இருந்து ஜனநாயக அரசியலில் பிரவேசித்தது. தேர்தல்களில் போட்டியிட்டு பிரதிநிதித்துவ அரசியலிலும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஈடுபட்டுவருகிறது.

  அரசைத் தூக்கியெறிவதற்கு ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.  பேரழிவுகளுக்கும் பெருவாரியான  கொலைகளுக்கும் காரணமாக இருந்ததும் அந்த இயக்கத்தை அழிப்பதற்கு அரசாங்கங்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்ததும் வரலாறு. 

  ஆனால், அரசியல் இலட்சியத்துக்காக ஆயுதமேந்திய ஒரு இயக்கம் காலப்போக்கில் அதன் போக்கை மாற்றிக்கொண்டு ஜனநாயக அரசியலில் பிரவேசித்து மக்களின் ஆதரவையும் பெறும்போது அதன் கடந்தகால வன்முறைகளை மாத்திரமே நினைவுபடுத்திப் பிரசாரங்களைச் செய்வது ஏற்பட்ட மாற்றத்தை அலட்சியம் செய்வதற்கு ஒப்பானதாகும். 

   ஆயுதப் போராட்ட இயக்கம் ஒன்று ஜனநாயக வழிக்கு வந்தால் அதை ஊக்கவிக்கும் வகையில்தான் மற்றைய அரசியல் சக்திகள் செயற்படவேண்டும். ஆனால், தேர்தல் அரசியலுக்காக கடந்த காலத்தை மாத்திரமே நினைவுபடுத்தவது எதிர்மறையான விளைவகளையே கொண்டுவரும்.

 கடந்தகால குற்றச் செயல்களுக்கு பொறுப்பானவர்கள் இன்றும் கூட ஜே.வி.பி.யின் அரசியல்குழுவில் உறுப்பினர்களாக மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள். 

  கடந்த கால வன்முறை அரசியல் குறித்த தற்போதைய பிரசாரங்களை  தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் செல்வாக்கின் பின்புலத்திலேயே நோக்கவேண்டும்.

  இன்னும் எட்டு மாதங்களில் நடத்தப்பட வேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார முன்னரங்கத்தில் நிற்கும் ஒரு வேட்பாளராக அநுரா குமார நோக்கப்படுகிறார். ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கும் அநுரா குமாரவுக்கும் இடையிலேயே பிரதான போட்டி இருக்கும் என்று அரசியல் அவதானிகள் எழுதுகிறார்கள்.

   கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும்போது விக்கிரமசிங்கவுக்கும் அநுரா குமாரவுக்கும் இடையிலான போட்டி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

  அடுத்த தேசியத் தேர்தல்களுக்கு தங்களை தயார் செய்வதில் பல மாதங்களுக்கு முன்னரே மிகுந்த முனைப்புடன் செயற்படத்தொடங்கிய தேசிய மக்கள் சக்தி ஒழுங்கமைவான முறையில் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறது.

  ஆனால், பிரதான அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்துக் குள்ளாகியிருக்கின்றன. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது. 

   கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்த ஐக்கிய தேசிய கட்சி அதன் செலவாக்கை அதிகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கமுடியாமல் பலவீனப்பட்டிருக்கிறது.

  சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தலில் களமிறங்குவதற்கு பரந்த கூட்டணியை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளை எதி்பார்த்த வண்ணம் இருக்கிறார். பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துசென்ற அரசியல்வாதிகளே விக்கிரமசிங்குக்கு ஆதரவாக தற்போது கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறது. அவர் அண்மைக்காலமாக தனது கட்சியில் இணைத்துவரும் முன்னாள் படையதிகாரிகளுக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்று நம்புகிற அளவுக்கு தடுமாற்றமான அரசியல் செயற்பாடுகளில் அவர் ஈடுபடுகிறார். இந்த நிலைவரங்கள் எல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமாக சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அவதானிகள் கூறுகிறார்கள்.

  எது எவ்வாறிருந்தாலும்,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெறுமனே மூன்று சதவீத வாக்குகளைப் பெற்ற அநுரா குமார அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு ஒரு பாரிய பாய்ச்சல் ஏற்படுமா என்பது முக்கியமான கேள்வி. இது குறித்து இந்த பத்தியில் முன்னரும் கூறப்பட்டது.

  தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத் தேர்தல் வாய்ப்புக்களை ஜே.வி.பி.யின் இதுரையான தேர்தல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இனிமேலும் மதிப்பிடமுடியாது. 

 ஐக்கிய மக்கள் சக்தியை இந்தியா மாத்திரமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளும் இலங்கையின் எதிர்கால அரசியலில் முக்கியமான சக்தியாக நோக்குகின்றன.

  இன்று இந்த பத்தியில் கூறப்படும்  கருத்துக்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டவையல்ல. கட்டுரையாளர் தனது நிலைப்பாடுகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எழுதியிருக்கிறார் என்பது வாசகர்களுக்கு தெரியும். 

   ஆனால், இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தீவிரப்படுத்தப்படும் பிரசாரங்கள் அவர்களுக்கு எதிராக ஏனைய அரசியல் சக்திகள் குறிப்பாக பிரதான அரசியல் கட்சிகள் வரும் நாட்களில் வகுக்கக்கூடிய அரசியல் தந்திரோபாயங்களுக்கு கட்டியம் கூறுவனவாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதே நோக்கமாகும்.

 அநுரா குமார ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அவரால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடியதாக இருக்குமானால், பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கமும் அதற்கு சேவை செயவதற்காகவே கட்டியெழுப்பப்பட்ட அரச இயந்திரமும் ‘வெளியாள்’ ஒருவர் அதிகாரத்துக்கு அமைதியாக அனுமதிக்குமா என்பது முக்கியமான கேள்வி.

 (  ஈழநாடு )