— அழகு குணசீலன் —
பத்தாண்டுகளாக தலைமைப்பதவிக்கு அரைத்தமாவை (யை )திருப்பி திருப்பி அரைத்தால் அது தமிழரசின் ஜனநாயகம்…….!
உள்வீட்டு பதவிச்சண்டையை பூட்டியகதவுக்குள் எது? எவருக்கு? என்று பங்கு போட்டுக்கொண்டால் அது எங்கள் வீட்டு பழம்பெருமை மிக்க பாரம்பரிய ஜனநாயகம்……..!
இது சாத்தியமற்று பதவி ஆசையில் போட்டி போட்டு தேர்வு நடந்தால் அதுவும் மற்றைய கட்சிகளுக்கு முன்னுதாரணமான எங்க வீட்டு ஜனநாயகம்……!
ஆளுக்காள் அணிகளாகப்பிரிந்து தங்களுக்கு ஆதரவானவர்களை ஏற்றி இறக்கி வாக்களிக்க வாய்ப்பு வழங்கினால் அதுவும் உட்கட்சி ஜனநாயகம்…..!
நிர்வாக செயலாளரை இரவோடிரவாக அநுராதபுரம் ஹோட்டல் ஒன்றில் குடும்பத்தோடு தங்கவைத்ததும் (?) (தடுத்து வைத்ததும்)தமிழரசின் ஜனநாயகம்…..!
கோர்ட்டுக்கு மட்டும் அல்ல ஹோட்டலுக்கு போவதும் எங்க வீட்டு ஜனநாயகம் தான் …இல்லையா?
கூட்டத்தில் மத்திய செயற்குழுவின் சிபாரிசுகளை அங்கீகரிப்பது மட்டும் தான் பொதுச்சபையின் வேலை, யாரையும் பொதுச்சபை சுயமாக அல்லது சிபார்சுகளுக்கு மாறாக தெரிவு செய்யமுடியாது, ஏனெனில் அதுதான் தமிழரசு ஜனநாயக தேர்வு……!
பொதுச்சபையை விடவும் மத்திய செயற்குழு அதிகாரம் மிக்கது .இது எங்கள் புதிய ஜனநாயகம்…..!
நாங்கள் தமிழ் ஈழத்தமிழர்கள், வடக்கும், கிழக்கும் எங்கள் பாரம்பரிய தாயகம். மட்டக்களப்பான் தமிழரசுக்கட்சி தலைமைக்கு போட்டியிட முன்வந்தால் அவரை “டம்மி” என்போம்…. !
கிழக்குக்குரிய செயலாளர் பதவியை தலைமைக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற பின்னரும் அதை எனக்கு – வடக்குக்கு தாருங்கள் என்று கேட்போம் , அதுசரிவராது விட்டால் , “எனக்கு இல்லையேல் இன்னாருக்குத்தான் கொடுக்கவேண்டும்” என்று பொதுச்சபைக்கு அழுத்தம் கொடுப்போம் ஏனென்றால் நாங்களே பெரும்பான்மை தமிழர்கள். அதுதானே ஜனநாயகம்…!
அது வழக்கமல்ல – யாப்புக்கு முரணானது என்றாலும் எங்கள் நிலைப்பாடுகள் எப்போதும் ஜனநாயகமானவை. இதுதான் எங்கள் 75 ஆண்டுகால தமிழரசின் ஜனநாயக பாரம்பரியம்…..!
குழம்பிய குட்டையில் ஒரு தொகையினர் வெளியேறிய பின்னர் அவசர அவசரமாக கூட்டத்தை நடாத்தி தங்கள் விருப்பப்படி கைகளை கணக்கெடுத்தால், அது ஜனநாயக கணக்கெடுப்பு…..!
இறுதியில் “வழக்குப்போடுவேன்” என்று எம்.ஏ. சுமந்திரன் வெளியேறியது அவரின் ஜனநாயக உரிமை…..! அதற்கு பதிலாக “முடியுமானால் போடுமென்” என்று சி. சிறிதரன் சொன்னதும் அவரின் ஜனநாயக உரிமை…..!
மொத்தத்தில் வழக்குப்போட்டதும் ஜனநாயகம்….! வழக்கை வாபஸ் பெறுவதற்கு படாதபாடு பட்டதும் ஜனநாயகம்….!
இவை அனைத்தும் தேவைதானா ?
ஆம்….! என்றால் இவை யாரின் நலன்களைப்பாதுகாக்க தேவையானவை?
இல்லை….! என்றால் மக்களின் நலனுக்காக தேவையானவையா…..? என்று கேட்டால் …..
இதைக்கேட்க நீங்கள் யார்…..? தமிழரசுக் கட்சியை விமர்சிக்க முடியுமா…? என்று கேட்பதும் எங்கள் ஜனநாயகம்….!
கேட்பது எங்களது ஜனநாயக உரிமை…..! ஆனால் விமர்சிப்பதற்கு உங்களுக்கு ஜனநாயக உரிமை இல்லை…..!
இது தந்தை செல்வாவும்,தலைவரும் காட்டியவழி……!
ஏனெனில் எங்கள் அரசியல் பிறந்ததும், வளர்ந்ததும், அழிந்ததும், எஞ்சி இருப்பதும் அழிந்து கொண்டிருப்பதும் அந்த ஜனநாயகத்தில் தான்.
இதுவே தமிழரசு ஜனநாயகம்…..!
நாங்கள் சிங்கள தேசியவாதத்தின் ஜனநாயக மறுப்புக்களுக்கு எதிராக வீதியில் இறங்கி ஜனநாயகத்திற்காக போராடுவோம்.
கொழும்பு பாராளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று சொல்லுவோம். ரணில் -ராஜபக்ச அரசாங்கம் அதை சாகடிக்கிறது என்போம்.
நாங்கள் எப்படி தெரிவு செய்யப்பட்டோம் என்பதை மறந்து, ரணிலின் தெரிவு சட்டத்திற்கு முரணானது, ஜனநாயகம் அற்றது என்று பேசுவோம்.
நீதியில்லாத நாட்டில் நீதி அமைச்சும், நீதி அமைச்சரும் எதற்கு என்று கேட்போம்.
நாட்டை விட்டு ஓடிய நீதிபதி சரவணராஜாவுக்காக இலங்கையின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கி ஹர்த்தால் செய்வோம்.
நீதித்துறை செயலிழந்து விட்டது என்று சொல்லிக்கொண்டும், அதில் நம்பிக்கை இல்லை என்று பேசிக்கொண்டும் வழக்குகளில் வாதப்,பிரதிவாதிகள் யாருக்காகவும் சம்பளத்திற்கு ஆஜராவோம்.
வழக்கில் வென்றாலும், தோற்றாலும் அதில் எங்களுக்கு என்ன நஷ்டம் இருக்கிறது? எங்கள் பைகள் எப்போதும் கனதியானவை.
எந்த நீதித்துறை செத்துவிட்டது என்று சொன்னோமோ, அந்த நீதித்துறையில் – நீதிமன்றத்தில் ஒன்றல்ல இரண்டு வழக்குகளை தாக்கல் செய்து சிறிலங்கா நீதியிடம் எங்கள் வீட்டு பிரச்சினைக்கு நீதிகோரி நிற்கின்றோம்.
சிறி லங்கா நீதித்தாயே எங்களை கருணையோடு ஆசீர்வதியும் அம்மா!.
விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக நாட்டை விட்டு ஓடி இருக்கிறார். அவரது பாணியும் சரவணராஜா பாணிதான். அவருக்காக கொழும்பு நாடாளுமன்றத்தில் இலங்கையின் சட்டம், நீதித்துறையை தமிழரசு இன்னும் விமர்சிக்குமா..?
என்ன முகத்தோடு விமர்சிப்பது……?
ஏனெனில் எங்கள் அரசியல் முன்னுக்குப்பின் முரணானது. கொள்கை அற்றது. வெறும் கோசங்களில் பிறந்தது……வளர்ந்தது.
இதனால்……..
சுமுகமான, விரைவான, நேர்மையான தீர்ப்பை யாழ்ப்பாணத்தில் கேட்கிறார் சட்டத்தரணி சிறி காந்தா!
கட்சியின் நலன், சமூக நலன் கருதி தமிழரசுக்கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தேர்வுகளை இரத்துச்செய்து மீள நடாத்த வழக்காளிகளுடன் உடன்படுகிறோம் என்று கூறுகிறார் சட்டத்தரணி தவராசா.
ஆக,
கனம் கோர்ட்டார் அவர்களே……!
நான் சொல்வதெல்லாம் உண்மை…! உண்மையைத் தவிர வேறில்லை..!
தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தேர்வில்…………
ஜனநாயகம் பேணப்படவில்லை.
யாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
தவறுகள் நடந்துள்ளன, பிழைகள் இடம்பெற்றுள்ளன .
குத்தும், வெட்டும், குழிபறிப்பும்,சதியும், சூழ்ச்சியும் குறைவில்லாமல் இருந்தன.
என்பதை இத்தால் சத்தியம் செய்து உறுதி செய்கிறோம் என்று கூறுகிறது தமிழரசுக்கட்சி.
அது சரி……
தெரியாமல் செய்தால் அது தவறு,பிழை.
தெரிந்து செய்தால் அதற்கு என்ன பெயர்?
இங்கு தோற்றது யார்? வெற்றி பெற்றது யார் என்பதல்ல கேள்வி.
சுமந்திரனா ? மாவையா? சிறிதரனா? யோகேஸ்வரனா ? என்பதும் அல்ல.
குகதாசனா? சிறிநேசனா? அரியநேந்திரனா? என்பதும் அல்ல.
தமிழ்த்தேசியம் வென்றதா? தமிழ்த்தேசிய எதிர்ப்பு வென்றதா என்பதும் அல்ல.
ஒட்டுமொத்த தமிழரசுக்கட்சியும் தோற்றுப்போயிருக்கிறது.
தமிழ்த்தேசிய அரசியல் தோற்றுப்போயிருக்கிறது.
என்ன நடந்தால் என்ன ? எங்களுக்குத் தேவை பதவி.
பதவிக்காக மானிட தர்மத்தையும், ஜனநாயகத்தையும், யாப்பையும் மீறவும், அதற்காக என்ன விலையையும் கொடுக்கவும் நாங்கள் தயார்.
நாங்கள் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள்…..!
எங்கள் தாகம்….. தமிழீழத் தாயகம்…!