சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா?

சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா?

— கருணாகரன் —

தமிழரசுக் கட்சியின் அதிகாரப் போட்டிகள் சந்திக்கு வந்தது மட்டுமல்ல, அதை நீதிமன்றம் வரையில் கொண்டு வந்து விட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வழக்குக்கு எதிர்வரும் 2024 மார்ச் 05 இல் அடுத்த கட்ட விசாரணை என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது. இன்னொரு வழக்கு மார்ச் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சிக்கு இதெல்லாம் கசப்பான அனுபவம்தான். சோதனைதான். உள்ளே நெடுங்காலமாகச் சீழ்ப்பிடித்துக் குமைந்து கொண்டிருந்த விசயங்கள் இப்பொழுது வெளியே வந்துள்ளன. சீழ்ப்பிடித்திருந்தால் அது என்றாவது வெளியே வந்துதான் தீரும். 

குறுகிய நோக்கங்களும் பதவி ஆசையும் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. இது முடிவுக்கு வருவது கடினம். அப்படி இந்தத் துயர நிலை முடிவுக்கு வர வேண்டுமானால் கட்சியின் அரசியல் சிந்தனையும் செயற்பாடும் (உள்ளடக்கம்) மாற்றமடைய வேண்டும். அவ்வாறே அரசியற் பண்பாடும் உருவாக வேண்டும். இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை.

தற்போதைய சிக்கல்களுக்கு யாப்பு மீறல், ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். தலைவர், செயலாளர் தெரிவுக்குப் பிறகு எழுந்திருந்த சர்ச்சையின்போது இதைச் சுமந்திரன் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அது கூட மென்மையாகத்தான். ஏனென்றால் யாப்புக்கு முரணான முறையிலேயே தலைவர் தெரிவு நடந்தது. இருந்தும் அதில் சுமந்திரனும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற காரணத்தினால் யாப்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்தார் சுமந்திரன். அப்படி விமர்சித்தால் அதில் தன்னுடைய தவறுகளும் உட்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். பதிலாக நடந்த தெரிவுகளை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால், யாப்பை மீறி எவரும் எதையும் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். 

அந்த அழுத்தம் இப்பொழுது வேலை செய்கிறது.

முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின் போது தலைவர் தெரிவு உள்பட அனைத்துத் தெரிவுகளையும் மறுபடி நடத்துவதற்கு சிறிதரன் உள்பட முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வரை பொறுப்பானவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முக்கியமாக யாப்பு மீறல்களைப் பகிரங்கமாக  ஏற்றுள்ளனர். இனி யாப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அப்படியென்றால் நடந்தவை அனைத்தும் தவறு என்று பொருள். இந்தத்  தவறுகளைச் சிறிதரன் – மாவை தரப்பு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. கட்சிக்குள்ளே இதைச் சுட்டிக்காட்டியபோது அதற்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்ப்படுத்தியிருந்தால் இப்படியான தோல்வி நிலை ஏற்பட்டிருக்காது.

இப்பொழுது சிறிதரன் கொண்டாடிய வெற்றி வடியத் தொடங்கி விட்டது.

பதிலாக இதில் முதற்கட்டமாக சுமந்திரன்  வெற்றியடைந்துள்ளார். 

அதாவது நீதி மன்றத்தீர்ப்புக்கு முன்னரே சுமந்திரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களும் வலியுறுத்துவதற்கு விரும்பிய விடயங்களும் நிறைவேறியுள்ளன. 

எல்லாவற்றுக்கும் நாம் யாப்பைப் பின்பற்றத் தேவையில்லை என்ற முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மாவையின் ஆலோசனையைத் தொடர்ந்த சிறிதரன் தரப்பும் தலைகுனிந்துள்ளன. 

இப்பொழுது யாப்புப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் தமிழரசுக் கட்சியினருக்கும் அதன் அனுதாபிகளுக்கும் கொஞ்சமாவது நிகழ்ந்திருக்கும் என நம்பலாம். ஆகவே இனிமேல் அவர்கள் இதைக்குறித்து கொஞ்சமாவது எச்சரிக்கையோடு நடந்து கொள்வர். இல்லையென்றால் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். 

பொறுப்பற்ற தனமாக, எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டிருக்கும் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா நீதிமன்றப்படியேறியே இதைப் படிக்க வேண்டிய நிலை வந்தது வரலாற்றின் சோகம். 

தமிழரசுக் கட்சிக்குள் துலக்கமாக இரண்டு தரப்புகள் (இரு அணிகள்) அதற்குள் உண்டென்று வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. ஒன்று சிவஞானம் சிறிதரன் – மாவை தரப்பு. அடுத்தது ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு. 

இது கட்சியின் விசுவாசிகளுக்கு கவலையளிப்பதே. ஆனால், இந்தக் கவலையைப் பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. இந்தக் கவலை யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகங்களுக்கும் ஊடகப் பொறுப்பாளிகளுக்கும் உண்டு. அவர்களும் தங்களால் முடிந்தளவுக்குப் பாறைகளை உடைக்க முயற்சித்தனர். அதுவும் உரிய பயனைத் தரவில்லை. சம்மட்டிகள் உடைந்ததுதான் மிச்சம். 

இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த இரண்டு அணியும் ஒன்றிணையச் சாத்தியமுண்டா? அப்படியென்றால் அது எப்படியாக – எந்த அடிப்படையில் – அமையும்? அப்படி ஒன்றிணைய முடியவில்லையென்றால் அடுத்த கட்டம் என்ன? 

சுமந்திரன் தனியொரு தரப்பாகவும் சிறிதரன் தனியொரு தரப்பாகவும் இனியும் ஒரு கட்சிக்குள் நீடிக்க முடியாத நிலையில் சுமந்திரன் தனித்துச் செல்வாரா? அப்படியாயின் அவரை ஆதரித்தோரின் நிலை என்ன? அல்லது அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தலைவர் தெரிவில் யாருக்கு வெற்றி வாய்ப்புண்டு? அதில் சுமந்திரன் வெற்றியடைந்தால் சிறிதரன் தரப்பின் கதியென்ன? சிறிதரன் வெற்றியடைந்தால் சுமந்திரனின் நிலை என்ன? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்துள்ளன.  

வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் அதற்கு வெளியே இரு அணிகளையும் இணைத்துச் சமரசம் செய்வதற்கு சில மதத்தலைவர்களும்(?) ஊடகப் பொறுப்பாளிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். அது எந்தளவுக்குச் சாத்தியங்களை உண்டாக்கும் என்று தெரியவில்லை.

ஏனென்றால் இந்த முரண்பாடு தனியே யாப்பு மீறல், ஜனநாயக விரோதம், பதவிப் போட்டி என்பதற்கு அப்பால், அரசியல் நோக்கின் அடிப்படையிலானதுமாகும். 

சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறை வேறு. சிறிதரன் தரப்பின் அரசியல் நிலைப்பாடும் அணுகுமுறையும் வேறு. அதுவே இங்கே அடிப்படையான முரண்பாடாகும்.

ஆகவே இதைச் சமரசத்துக்குட்படுத்துவது எளிதானதல்ல. தற்போது சில விட்டுக் கொடுப்புகள், நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசத்தை எட்டினாலும் எதிர்காலத்தில், அது உடைந்தே தீரும். அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள், ஆட் தேர்வுகள் போன்றவற்றில் நிச்சயமாக மீண்டும் முரண்பாடுகள் எழுந்தே தீரும். 

அவற்றை எளிதாகத் தீர்த்து விட முடியாது. 

ஏனென்றால் இந்தப் பிரச்சினை (முரண்பாடு) எழுந்தபோது சிறிதரன் தன்னுடைய வழமையான பாணியில் (அவருடைய விசேட குணவியல்பின்படி) சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்லாமல் வழக்கை எதிர்கொள்ளவே தீர்மானித்தார். அதாவது சவாலை எதிர்கொள்ள முடிவெடுத்தார். என்பதால்தான் “தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்” எனத் தன்னுடைய முகப்புத்தகத்தில் சிறிதரன் பதிவிட வேண்டியிருந்ததும்.

மேலும் இதற்காகவே அவர் கொடிகாமத்தில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய மாநாடு என்ற வகையில் தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டித் தன்னுடைய பலத்தைக் காட்ட முயற்சித்தார். இதில் கடும்போக்காளர்கள் ஒன்று திரண்டனர். 

இவர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் முஸ்டியை உயர்த்திக் காட்டினார்கள். சுமந்திரன் தோற்றுப் பின்னடைவதாக ஒரு தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்பட்டது. 

இது கத்திக்குக் கத்தி. சவாலுக்குச் சவால் என்ற மாதிரியானது. ஆனால், அரசியலில் இத்தகைய அணுகுமுறை பயன்தராது. அதன் பயனையே இப்பொழுது அவர்கள் அறுவடை செய்கிறார்கள்.  

ஏற்கனவே சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பின் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. கிளிநொச்சி உட்பட பல இடங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இயங்க விடாமல் அவற்றுக்கு முட்டுக்கை இட்டார் சிறிதரன். இறுதியில் தமிழரசுக் கட்சியே அந்த நிலைக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் எதையும் பட்டறிந்து கொள்வதாக இல்லை. 

வழக்கு முடிவுகளுக்குப் பிறகு புதிய தெரிவின் மூலம் எல்லாவற்றையும் சீர் செய்து விடலாம் என்று சிறிதரனோ மாவையோ ஏன் அந்தத் தரப்பிலுள்ள ஏனையோரே கருதலாம். அதொன்றும் அப்படி எளிதானதாக இருக்கப்போவதில்லை. 

ஏனென்றால், இது கட்சிக்குள் நிலவுகின்ற வேறுபாடுகளின் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு, அணுகுமுறை, ஜனநாயக விழுமியத்தின் மீதான  கரிசனை எனப் பல அடிப்படைகளுடன் தொடர்புடையது. 

சுமந்திரனோ மென்போக்கைக் கடைப்பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பவர். அதற்கமைய சிங்கள, முஸ்லிம், மலையத் தரப்புகளோடு உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவர். சர்வதேச சமூகத்துடனும் அவர் கொண்டுள்ள உறவு இந்த அடிப்படையிலானதே. குறிப்பாக வெளியுலகத்தின்  உளநிலையை (அரசியலை) புரிந்து கொண்டு அவற்றோடு உறவை ஏற்படுத்தியிருப்பவர். இதனை தலைவர் தெரிவின் பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியுப் நேர்காணலில் சுமந்திரனே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

சிறிதரன் இதற்கு மாறாக தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருடைய அரசியல் யுத்தத்துக்கு முந்தியது. 1970 களில் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரகடனப்படுத்திய சொல்லரசியல். அதற்கு எந்தச் செயற்பாட்டு வடிவமும் கிடையாது. எந்த அணுமுறையும் இல்லை. சமூகத்தை உணர்ச்சிக்  கொந்தளிப்பில் வைத்திருக்கும் பேச்சே அதனுடைய அடிப்படை. இதற்கு ஏனைய சமூகங்களோடு ஊடாட வேண்டிய அவசியமில்லை. என்பதால்தான் அவர் தலைவர் தெரிவை அடுத்து கிளிநொச்சிக்குச் சென்று துயிலும் இல்லத்தில் தன்னை வெளிப்படுத்தியது. மட்டுமல்ல, யாப்பு, ஜனநாயக விழுமியம், அரசியற் பண்பாடு, புத்தாக்க உணர்வு என எதையும் பொருட்படுத்தாமல் அணிப் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது. 

இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதன் நிமித்தமாகப் பரிகாரம் (மாற்றங்களை) செய்தால்தான் தமிழரசுக் கட்சி மீளுயிர்ப்படையும். இல்லையெனில் அது தன்னுடைய வழியை ஒடுக்கிக் கொள்ளும். அந்த வழியை வரலாற்றுக் காடு மூடிவிடும். 

கடந்த வாரங்களில் இருந்ததைப்போன்று இப்போதைய நிலை இல்லை. கட்சியில் போட்டியற்ற விதமாகத் தெரிவுகளை மேற்கொள்ளும் முடிவொன்று ஏற்படுமானால் ஓரளவுக்குச் சுமுக நிலை ஏற்படும். அப்படியென்றால் மறுபடியும் யார் தலைவர் என்ற கேள்வி எழும். சுமந்திரன் மறுபடியும் தலைமைத்துவத்தைக் கோருவாரா என்று தெரியவில்லை. ஆனால், சிறிதரன் தலைமைக்கான குறியை விட்டுவிடப்போவதில்லை. 

அவ்வாறே செயலாளர் குறித்த தேர்வும். அவற்றில் எத்தகைய உடன்பாடுகள் எட்டப்படப்போகின்றன என்பது கேள்வியே. குகதாசனும் எளிதில் விட்டுக்  கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கட்சியின் நலனைக் குறித்து எல்லோரும் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்றால் சிறிதரன் – சுமந்திரன் அணிகளுக்கு அப்பாலான ஒரு தலைமையையே தேர்வு செய்ய வேண்டும். அது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. 

ஆகவே வழக்குத் தீர்ப்புக் கிடைத்தாலும் நடைமுறையில் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையே தொடர்கிறது. 

00