— அழகு குணசீலன் —
இலங்கை தேசிய அரசியலில் கலை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களாக சிங்கள,பௌத்த அடையாளங்கள் முன்னிறுத்தப்படுவது போன்று, தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ், இந்துத்துவ அடையாளங்கள் முதன்மைப்படுத்துகின்றன. இவை பாரம்பரிய கலை, கலாச்சார, பண்பாட்டு மரபுகளுக்கு அப்பால் அதிகளவு அரசியல் ரீதியான பெறுமானங்களாக பேசப்படுவதும், பேணப்படுவதும் தொடர்கிறது. அடையாள அரசியலின் பொதுப்பண்பு இது. இந்த பொதுவான பெரும்பாக நோக்குக்குள், வேறுபட்ட சமூகங்களின் தனித்துவ, சிறப்பம்சங்களை அரசியல் கொள்கை வகுப்பில் முழு நாட்டிலும், கிழக்குமாநிலத்திலும் ஏன்? மலையகம், வன்னியிலும் கூட தேடவேண்டியுள்ளது.
முழு இலங்கையும் பெரும்பான்மை மதம், மொழி, இனம் சார்ந்த பெரும்பாக நோக்கை கொண்டிருப்பது போல் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் தமிழ், இந்து, தமிழர் என்ற ஒட்டு மொத்த பெரும்பாக பார்வையை கொண்டிருக்கின்றனர். சிங்கள, தமிழ் தரப்புகளில் கடும்போக்கு தேசிய வாதிகள் இதற்கு முதன்மை அளிப்பது அதிகரித்து வருகிறது. அது மட்டும் அன்றி இந்த பெரும்பாக (MACRO VIEWS) நோக்குக்குள் பிரதேசம், சமூகக்கூறுகள், மதப்பிரிவுகள், கிராமிய வழக்குகள், சமூக, பொருளாதார செயற்பாட்டு தனித்துவங்களை அடையாளம் காண மறுக்கின்றன. பாரம்பரிய தாயகம், ஈழத்தமிழர்கள், தமிழ்மொழி, இந்துமதம் என்ற பொதுப்போர்வைக்குள் இந்த உட்சமூக தனித்துவங்களை மறைத்துக் கொள்கின்றனர்.
கிழக்குபிராந்திய நிலையில் இது ஒரு தரப்பால் யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது, மறு தரப்பால் கண்டி இராச்சியத்தின் அடையாளமாக காட்டப் படுகிறது. ஆனால் இரண்டும் கலந்த ஒரு தனித்துவ சிறப்பு அடையாளங்களின் கலவை கிழக்கில் இருக்கிறது என்பதே உண்மையாகும். இந்த நோக்கு முரண்பாட்டை மறு வளத்தில் குறிப்பிடுவதானால் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலருக்கும், சுவாமி விபுலாந்தருக்கும் இடையிலான சமூக, பொருளாதார, அரசியல் அணுகுமுறை முரண்பாடாகவும் இதனை அடையாளப்படுத்த முடியும். இன்னும் சொன்னால் தடித்த சைவ வேளாள சமூக அநீதி அடையாளங்களாகவும், மானிட நேயங்களைக்கொண்ட சமூக நீதி அடையாளங்களாகவும் கூட இந்த முரண்பாட்டை அடையாளம் காணலாம். உயர்நிலை பண்பாட்டு பாரம்பரியம், கீழ்நிலை பண்பாட்டு பாரம்பரியமாகவும் வெளிக்காட்டும் சமூக, பொருளாதார அரசியல் வர்க்க அணுகுமுறை இன்னும் இருக்கிறது.
இலங்கையில் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளிலும் உள்ள முக்கிய குறைபாடு துறைசார்ந்த நிபுணத்துவக்குழுக்களை அவை கொண்டிருக்காதது ஆகும். தமிழர் அரசியலைப்பொறுத்தமட்டில் இந்த துறைசார் நிபுணத்துவம் சட்டத்துறைக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடுவது வரலாறாக உள்ளது. பிராந்திய, சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளையும் இந்த “சட்டநோய்” விட்டு வைக்கவில்லை. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த பொதுவான பலவீனத்தை ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற பிராந்திய சிறிய கட்சிகளில் இலகுவாக இனங்காண முடியும். ஜனநாயக பாராளுமன்ற அரசியல் நீரோட்டத்திலும், அதன் சட்டவாக்க அதி உயர் அதிகாரத்திலும் நிபுணத்துவ குழுக்களின் செயற்பாடும், ஆலோசனையும், துறைசார் வழிகாட்டலும் மிகவும் முக்கியமாவை.
இவை இல்லாததினால் தான் எமது மக்கள் பிரதிநிதிகள் வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் இராமாயணம் பற்றியும், இலத்திரனியல் சட்ட விவாதத்தில் கருவாடு, கஞ்சா வியாபாரம் பற்றியும், அதிகாரப்பகிர்வின் போது அரிசி விலை குறித்தும் பேசுகின்றனர். கிழக்கு மாகாணத்தின் தனித்துவ அரசியலிலிருந்து அந்த மக்களின் தனித்துவ கலை, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்களை பிரித்துப் பார்க்க முடியாது. அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம் என்ற வகையில் சமூகத்தின் முக்கிய பண்பாட்டு வாழ்வியலை ஓரங்கட்டி எப்படி அரசியல் செய்யமுடியும் ? இதற்காகவே கலை, கலாச்சார, பண்பாட்டு குழுக்கள் உட்கட்சி கட்டமைப்பில், அதன் செயற்பாடுகளில் உருவாக்கப்படவேண்டும். கலாச்சாரம், பண்பாடு தொடர்பான கருத்துருவாக்கம், புதிய கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் குறித்து விவாதிக்கப்படவேண்டும். அதற்கான கொள்கை வகுக்கப்பட வேண்டும். கொள்கை வகுப்பு அரசியல், ஒரு கட்சியின் மக்கள் மயப்படுத்தப்படும் இயங்குநிலை அரசியலின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
கிழக்கு மாகாண கலை, கலாச்சார, பண்பாட்டு பரிணாமத்தில் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்பனவற்றின் வருகை ஒரு இடைச்செருகல். அது போன்று கிழக்கு தமிழர் தொழில்சார் கொண்டாட்டங்கள் மதங்களை தவிர்த்த வரலாற்றை கொண்டவை. அவ்வாறு அவை மதம் சார்ந்து இருப்பின் அவை வீரசைவ ஆரம்ப வணக்கமுறை சார்ந்தவை. இன்று இந்துத்துவ மயமாக்கப்படும் ஆகம வழிபாட்டு வழிவந்தவை அல்ல. கிழக்கு தமிழர்கள் தமது கொண்டாட்டங்களை மாமிச உணவைத்தவிர்த்து கொண்டாடியதில்லை. சமூகரீதியான புத்தாண்டு, திருமணம் போன்ற நிகழ்வுகள் கூட அசைவம் தவிர்ப்பு உணவுக்கொண்டாட்டமாக, இந்துத்துவ ஆகம மந்திர நிகழ்வாக பிற்காலத்தில் மாறியிருக்கிறது. கிழக்கின் சாதாரண பாரம்பரிய மக்களில் ஒருபகுதியினரிடம் இந்த பாரம்பரியம் இன்னும் வாழ்கிறது.
தீபாவளி கிழக்கு தமிழ் மக்களின் ஒரு பொதுவான பண்பாட்டு கொண்டாட்டமாக ஒரு போதும் இருந்ததில்லை. இது இடைக்கால இறக்குமதி. இந்துத்துவ ஆகமவழிபாட்டு வருகையின் தொடர்ச்சி.
கார்த்திகை விளக்கீடு கிழக்கின் பாரம்பரியம். அண்மையில் இடம்பெற்ற கிழக்குமாகாண அரச பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு உழவுத்தொழில் சார்ந்தது என்பதையும், அது தமிழர் புத்தாண்டு என்பதையும் குறைத்து அல்லது மறைத்துப்பேசியது. கிழக்கின் தனித்துவ பொங்கல், புத்தாண்டு அடையாளங்களை- அதற்கே உரித்தான கலை, கலாச்சார, பண்பாட்டு கோலங்களை அது பேசவில்லை. இது கோலம் போடுவது போன்று சுயத்துவ அடையாளங்களுக்கு மாற்று வர்ணங்களை தீட்டுவதாக அமைந்துவிடுகிறது. இதனால் தான் இந்த ஏற்பாடுகள் ஒரு தரப்பினரால் கட்சி அரசியலுக்கு அப்பால் அதிக விமர்சனங்களை சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
தமிழ்த்தேசிய, கிழக்கின் தனித்துவ தமிழ் அரசியல் வாதிகள் பலரும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றனர். ஜனாதிபதியின் கண் அசைப்பில், இந்திய ஆதரவில், கிழக்கு மாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு பாதுகாவலர்களாக தங்களை வீதிக்கு வீதி காட்டிக்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும் இதன் குறைபாடுகள் பற்றி முன்னும், பின்னும் பேசவில்லை. கிழக்கின் பொங்கல் விழா என்ற வகையில் கிழக்கு தனித்துவ அரசியல்வாதிகளும் கிழக்கின் தனித்துவத்தை இயலுமானவரை தவிர்த்து இடம்பெற்ற இந்த நிகழ்வு பற்றி பேசவில்லை. இவர்களுக்கு, இவர்களின் கட்சிகளுக்கு பொதுவாக தமிழர் கலை, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியம் பற்றிய தெளிவு இருந்திருந்தால் இந்த விழாவை நெறிப்படுத்தியிருக்கமுடியும்.
இவர்கள் அனைவருமே கிழக்கு மாகாண ஆளுனரை, கொழும்பு அரசாங்கத்தை, இந்திய தூதரகத்தை, இந்திய அரசாங்கத்தை பகைத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்கின்ற ஒரு நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இதற்கு முக்கியமான காரணம் இது விடயமாக ஆலோசனைகளை அரசியல் வாதிகளுக்கு வழங்குகின்ற கலாச்சார, பண்பாட்டு குழுக்கள் இக்கட்சிகள் எவற்றிலும் இல்லை. அரசியல் வாதிகளும், அவர்களின் கட்சிகளும் தான் இப்படி என்றால், சிவில் சமூக அமைப்புக்களும், கல்விச் சமூகமும் கூட இவற்றை கண்டு கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது. கிழக்கின் தனித்துவ அரசியல் பேசுபவர்களுக்கு தனித்துவ கலை, கலாச்சார, பண்பாடு பாரம்பரியங்களை பேணவேண்டிய பாரிய பொறுப்பு மற்றவர்களை விடவும் அதிகமாக இருக்கிறது.
திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில், சகோதர இன ஆசிரியையின் உடை தங்கள் பாரம்பரியத்தை பழுதாக்கி விடும் என்றவர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகச்சவரம்செய்யாத வைத்தியபீட மாணவனுக்கு எதிராக களத்தில் இறங்கியவர்களும், மௌலவியின் பரதநாட்டியம் குறித்த கருத்துக்காக கண்ணீர் விட்டவர்களும் , மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கிறித்தவ நிகழ்வை நடத்தக்கூடாது என்றவர்களும் ஊமையாகிவிட்டனர். அரசியல் கட்சிகளின் தவறான போக்கை, அரசியல் வாதிகளின் செயற்பாடுகளை நெறிப்படுத்த வேண்டிய தேவை சிவில் சமூக, கல்விச் சமூகங்களுக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை ஏதோ ஒரு “அரசியலுக்காக” தட்டிக்கழிப்பது தேர்தலில் வாக்களிப்பது மட்டும் தான் மக்களின் வேலை என்றாகிவிடும்.
கிழக்கின் கலை, கலாச்சார, பண்பாட்டு முறைகளையும், இலக்கியங்களையும் அரசியல் நெறிப்படுத்தலுக்கு நிறையவே கையாள முடியும். கலை வடிவங்கள் அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை இயங்குநிலையில் வைத்துக்கொள்ள சாலச்சிறந்த சாதனங்கள் ஊடக வடிவங்கள். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மண்ணுக்கு தேவையான கலை வடிவங்களுக்கு உயிரூட்டம் செய்யப்படுகிறது பேணப்படுகிறது, உங்களுக்கும் அரசியலை மக்கள் முன் கொண்டு செல்ல வழியாகிறது. அரசியல் விழிப்பணர்ச்சி ஒன்றே மாற்றத்திற்கான வழி…..! புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்திற்கான திறவுகோல்….!!
வடக்கில் புலிகளின் ஆட்சியில் வெள்ளையடிக்கப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு தகர்ந்து கொண்டிருக்கிறது. சாதிச்சண்டைகள் வாழ்வெட்டுக்கள், போதைவஸ்துபாவனை, பாலியல் வன்கொடுமை, மதவேறுபாடுகள், கலாச்சார சீரழிவு எல்லாம் வெளிச்சத்திற்கு வருகிறது. தலைமயிர் குட்டையாக வெட்டி யூனிபோம் போட்டால் பெண்விடுதலை என்ற தேசத்தில், பெண் ஆளுநருக்கு எதிர்ப்பு, பெண் அதிபருக்கு எதிர்ப்பு. இந்திய மூன்றாம் தர சினிமா காவடிகளுக்கு வரவேற்பு. இன்றைய உலகமயமாக்க பொருளாதார உலகில் கலை வர்த்தக பண்டமாகிவிட்டது. இந்த வரிசையில் தான் இந்த இறக்குமதி வியாபாரம் இடம்பெறுகிறது. அதற்கான நுகர்வோர் அல்லது சந்தை யாழில் போதுமானதாக உள்ளது. இதனால் தான் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போல் கலாச்சார நிகழ்வை காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் பற்றி பேசும் அரசியல் இவற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?
இந்த நிலையில் மாற்றம் இல்லை என்றால்……..!
இதற்கு பெயர் அரசியல் அல்ல .
இது தமிழ்த்தேசியமும் அல்ல …..,
தனித்துவமும் அல்ல….!