“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் (அங்கம் – 22)

“கனகர் கிராமம்” ‘அரங்கம்’ தொடர் நாவல் (அங்கம் – 22)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

           — செங்கதிரோன் — 

வியாழையிலிருந்து புறப்பட்ட யாத்திரைஅணி வள்ளியம்மை ஆற்றை அடைந்ததும் அவசரம் அவசரமாகச் சமையல் வேலைகளைத் தொடங்கினர். பகலுக்கும் இரவுக்கும் சேர்த்து ஒரு சமையலே செய்தார்கள். 

அன்றிரவு வள்ளியம்மை ஆற்றில் தங்கி மறுநாள் காலை கட்டகாமம் நோக்கிப் புறப்பட்டார்கள். கட்டகாமம் வள்ளியம்மை ஆற்றிலிருந்து எட்டுக்கட்டைத் தூரத்தில் அமைந்திருந்தது. 

வள்ளியம்மை ஆற்றிற்கும் கட்டகாமத்திற்குமிடையில் ‘மலைகண்ட இடம்’ என அழைக்கப்படும் இடத்தில் வைத்து தமது காலைச்சாப்பாட்டை முடித்துக் கொண்டார்கள். இந்த இடத்திலிருந்து நோக்கினால் கதிர்காமம் ‘கதிரமலை’யின் உச்சி தெரியும். அதனால்தான் இவ்விடம் ‘மலைகண்ட இடம்’ என அழைக்கப்பட்டு வருகிறது. 

கட்டகாமத்துடன் காடுகள் முடிந்து வயல்வெளிகள் ஆரம்பமாகின்றன. யாத்திரைஅணி கட்டகாமத்தையடைந்ததும் மதியம் சமையல் வேலைகள் ஆரம்பமாகின. யாத்திரை அணி தங்கிய இடம் ஒரு குளத்தின் மேட்டுப்பகுதியாகும். கட்டகாமம் குளத்தில் வெண்தாமரை நிறையப்படர்ந்து பூத்தும் காய்த்தும் கிடந்தன. குளத்தின் ஒரு ஓரத்தில் எருமை மாடுகள் சேற்றுக்குளிப்பில் சுகித்துக்கிடந்தன. கட்டகாமத்திற்கு நிறைய யாத்திரீகர்கள் வந்து சேர்ந்தார்கள். 

குளத்தின் நீர்ப்பரப்பில் பச்சைக்கம்பளம் விரித்தால்போல தாமரை இலைகள் மிதந்தன. அவற்றில் வெண்முத்துகளை அள்ளி வீசியதுபோல இலையோடு பட்டும்படாமலும் நீர்த்துளிகள் உருண்டு விளையாடின. நீர்மட்டத்திற்கு மேலே வெண்தாமரைமலர்கள் வெள்ளைக் கொக்குகளாகத் தலைநீட்டியிருந்தன. அவற்றினிடையே கூம்பு வடிவத்தில் அதன் வட்டவடிவப்பகுதி வானத்தைப் பார்த்தபடியும் கூரான உச்சிப் பகுதி தண்டோடு இணைந்தபடியும் தாமரைக்காய்களும் பச்சையாக வெளித்தெரிந்தன. சில காய்கள் பழுத்துப் பழுப்பு நிறத்திலும் இருந்தன. 

குளத்தின் மேட்டுப்பகுதியில் சமையல் வேலை நடந்து கொண்டிருக்கப் பெரியவர் சாமித்தம்பி குளத்தில் இடுப்பளவு நீரில் இறங்கித் தாமரைக் காய்கள் பறிந்து வந்தார். காய்களைப் பிய்த்து அவற்றினுள்ளே நீளுருண்டை வடிவத்தில் இருந்த பச்சை விதைகளை வேறுபடுத்தி எடுத்தார். அந்த விதைகளின் தோலை உரித்து உள்ளே இருந்த சதைப்பகுதியை நீளப்பாட்டில் இரண்டாகப் பிளந்து உள்ளே இருந்த கரும்பச்சை நிறத்திலிருந்த பகுதியைக் கிள்ளி எறிந்து விட்டு மீதியைப் சாப்பிட்டுக் காட்டினார். 

கோகுலனும் கதிரவேலும் ஆளையாள் பார்த்துச் சிரித்துக்கொள்ள கதிரவேல் “சாமி! தாமரக்கொட்ட நாங்களும் சாப்பிட்டிருக்கம் தாமரக்காய் முற்றி அது பழுப்பு நிறமானதும் ஆய்ஞ்செடுத்தா அதற்குள்ள பருப்புகள் கறுப்பு நிறமாயிருக்கும். அதக் காயவைச்சா இன்னும் கறுப்பாகும். அதத்தட்டி உடச்சிச் சாப்பிட்டா ருசி வேற. பச்சப் பருப்பவிட காய்ஞ்ச பருப்புத்தான் ருசி கூட” என்றான் கதிரவேல். 

“தம்பிமாருக்கு நானொண்டும் சொல்லத்தேவல்ல போல” என்றார் சாமித்தம்பி. 

“இல்லச்சாமி!… எங்களப் பார்க்க வயதிலயும் அனுபவத்திலயும் கூட உங்களுக்குத்தான் எங்களக் காட்டியும் கூடிய விசயங்கள் தெரியும்” என்றான் கோகுலன். 

கோகுலன் கூறியதைக் கேட்ட பெரியவர் சாமித்தம்பி கொடுப்புக்குள் பெருமையோடு சிரித்துக் கொண்டார். 

“தாமரக்கிழங்கு சாப்பிட்டிருங்கீங்களா தம்பிமாரே?” என்று பெரியவர் சாமித்தம்பி கேட்க கோகுலன் கதிரவேல் இருவரும் ஏக காலத்தில் “ஓம்” என்றார்கள். 

“தாமரக்கிழங்கும் மூலவியாதிக்காரருக்கு நல்லம் தம்பி. கிழங்க மெல்லிய துண்டுகளாகக் குறுக்காக அரியோணும். சோடாமூடி அளவுக்கு வட்டவட்டத் துண்டுகளில் பப்பாசிக்கொட்ட அளவுக்குச் சின்னச்சின்ன ஓட்ட இரிக்கிம். நல்லாக் கழுவிப் பருப்பும் போட்டுச் சமைக்க வேணும் தம்பி” என்றார் சாமித்தம்பி. 

“ஓம்! சாமி” என்று ஒத்தூதிய கதிரவேல் “சும்மா அவிச்சும் தாமரக்கிழங்கச் சாப்பிடலாம்” என்றான். 

“வாங்க சாப்பிட” என்று கோகுலனின் தாயார் அழைக்க மூவரும் அடுப்படி நோக்கி விரைந்தார்கள். மதியச் சாப்பாடு எல்லோரும் தரையில் அமர்ந்திருக்கத் தாமரை இலைகளில்தான் பரிமாறப்பட்டது. 

மாலையானதும் பெரியவர் சாமித்தம்பிட, கோகுலன், கதிரவேல் மூவரும் குளத்தின் ஓரத்தில் தாமரை படர்ந்திராத பக்கம்போய் குளித்து விட்டும் வந்தார்கள். 

இராச்சாப்பாட்டையும் முடித்து வழமைபோல் எரியும் “தீனா”வைச் சுற்றி மூவரும் அமர்ந்தார்கள். 

பெரியவர் சாமித்தம்பிதான் உரையாடலைத் தொடங்கினார். 

“கட்டகாமத்துக் கிழவிர கத தெரியுமா? தம்பிமாரே” என்றார். 

“சொல்லுங்க சாமி. கேட்பம்” என்றான் கோகுலன். 

பெரியவர் சாமித்தம்பி கூறிய கட்டகாமத்துக் கிழவியின் கதை இதுதான். 

முன்னொரு காலத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கட்டகாமத்திலிருந்த வயது முதிர்ந்த பெண்மணியொருவர் கதிர்காம யாத்திரைக் காலத்தில் கட்டகாமத்தில் தங்கிச் செல்கின்ற யாத்திரீகர்களுக்கு அப்பம் சுட்டு விற்றும் சம்பாதித்து வந்துள்ளார். இவ்வாறு பன்னிரண்டு வருடங்கள் அவர் அப்ப வியாபாரம் செய்துள்ளார். 

ஒவ்வொரு வருடமும் கதிர்காமம் சென்று தரிசனம் செய்ய அப்பெண்மணி எண்ணியிருந்தபோதும்- விருப்பம் கொண்டிருந்தபோதும், அப்ப வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காரணத்தாலும், கதிர்காமம் தூரத்திலில்லை. கட்டகாமத்திலிருந்து ஆக ஒன்பது கட்டை (மைல்) தான் என்பதால் அதாவது அருகிலிருப்பதால் அடுத்த வருடமும் போய்க்கொள்ளலாம் என்ற எண்ணத்தினாலும், இவ்வாறு கதிர்காமம் செல்லும் அவரது எண்ணம் ஒவ்வொரு வருடமும் ஒத்திப்போடப்பட்டு வந்து இறுதியில் அவ்வயோதிபமாது கதிர்காமம் செல்லாமலே இறந்து போய் விட்டார். 

ஒரு காரியத்தைப் பிறகு செய்யலாம் என்று அடிக்கடி ஒத்திவைத்து இறுதியில் அக்காரியம் நிறைவேறாமலே போய்விடுவதை ஊரில் ‘கட்டகாமத்துக்கிழவி கதிர்காமம் போகாமற் செத்த மாதிரி’ எனும் உவமைச் சொற்றொடரால் அழைக்கும்படியாகக் கட்டகாமத்துக் கிழவியின் கதை பிரபல்யம் ஆகிவிட்டது. 

பெரியவர் சாமித்தம்பி கூறிய கட்டகாமத்துக் கிழவியின் கதை கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் புதியதாகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருந்தது. 

கட்டகாமத்துக்கிழவியின் கதையோடு அன்றைய இராப்பொழுது கழிந்தது. 

மறுநாள் காலை வழமைபோல் யாத்திரைஅணி பயணத்திற்குத் தயாரானது. அடுத்த தலம் கதிர்காமம்தான் என்ற எண்ணம் எல்லோரினதும் முகத்தில் மேலதிகமான மகிழ்ச்சியை ஏற்றிவிட்டிருந்தது. முதல் இரவு சமைத்த சோற்றைச் சற்றுக் கூடுதலாகச் சமைத்து இரவுச் சாப்பாடு முடிந்த பின் பானையில் மீதமிருந்த சோற்றுக்குள் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். கோகுலனின் தாயார். காலையில் அது ‘தண்ணீர்ச்சோறு’ (தண்ணிச்சோறு) ஆயிற்று. 

கள்ளவியாழையாற்றில் ஆய்ந்த கிண்ணம்பழங்களில் ஐந்தாறு பழங்கள் பெரியவர் சாமித்தம்பியின் பைக்குள் மீதமாயிருந்தன. தேங்காய் துருவிப் பாலும் பிழிந்தெடுத்து தண்ணீர்ச் சோற்றுக்குள் இட்டுக் கிண்ணப்பழத்தையும் அதற்குள் போட்டுச் சீனியுமிட்டுப் பிசைந்து தண்ணீர்ச்சோற்றுக் கரையல் தயாரிக்கப்பட்டது. 

தண்ணீர்ச்சோற்றுக்கரையலை எல்லோரும் நன்கு சுவைத்துப் பருகினர். கோகுலனின் தாயார் எல்லோரையும்பார்த்து “இனிக் கதிர்காமம்தான் தங்கல். பகல் சாப்பாடு இல்ல. தண்ணீர்ச்சோத்த நல்லாப் போட்டுப்புடியுங்க. அப்பதான் பசியில்லாம நடந்து கதிர்காமம் போய்ச் சேரலாம். கதிர்காமத்துக்குப் போய்த்தான் இனிச் சாப்பாடு” என்றார். 

பெரியவர் சாமித்தம்பி “இப்படியொரு தண்ணிச்சோத்துக் கரையல் கிடைக்குமா?” என்று கூறி மகிழ்ந்தார். 

கட்டகாமத்திலிருந்து நீங்கிய யாத்திரைஅணி கதிர்காமத்தை நோக்கி வயல்வெளிகளுக்கூடாகப் பயணித்தது. 

வழியில் தண்ணீர்ச்சோற்றின் மகாத்மியம் பற்றிச் சொல்லத்தொடங்கினார் பெரியவர் சாமித்தம்பி. 

மனிதனுடைய உடலில் குடலுக்கும் நோயெதிர்ப்புச் சக்திக்கும் தொடர்புண்டு. மனிதக் குடலில் ‘பாக்டீரியா’ என அழைக்கப்படும் நுண்ணுயிர்களில் ஆரோக்கியம் தரும் ‘பாக்டீரியா’க்களும் உள்ளன. தீங்கு விளைவிக்கும் ‘பாக்டீரியா’ க்களும் உள்ளன. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதனாலும் மாசடைந்த நீரைப் பருகுவதினாலும் மாசடைந்த உணவுகளை உட்கொள்வதாலும் தீங்கான ‘பாக்டீரியா’க்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் நோய்கள் எளிதாகப் பீடிக்கின்றன.

முதல்நாள் இரவு சோற்றைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ‘தண்ணீர்ச் சோறு’ ஆகும்போது அதில் ஆரோக்கியம் தரும் ‘பாக்டீரியா’க்கள் விளைந்திருக்கும். அதனை உணவாக உட்கொள்ளும்போது நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கும்.

மேலும், தண்ணீர்ச் சோறு குளுமையானது. உடல் வெப்பத்தைச் சமநிலைப்படுத்தி உடலில் குளிர்ச்சியைக் கூட்டும். உடல் எப்போதும் நீர் மயமாக இருத்தல் அவசியம். நீர் வரட்சி ஏற்படக்கூடாது. தண்ணீர்ச்சோறு உடலில் நீர் வரட்சியைக் கட்டுப்படுத்தும். பொருளாதார ரீதியாகத் தண்ணீர்ச் சோறு மலிவானதும்கூட. நீண்ட நேரம் நின்று பிடித்துப் பசியைத் தாங்கக்கூடியது. நமது மூதாதையர்கள் உடல் வலிமை உள்ளவர்களாகத் திகழ்ந்ததற்கும் அவர்களை அரிதாகவே நோய்கள் தீண்டியமைக்கும் அவர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கமே காரணம்.

இந்த விபரங்களையெல்லாம் பெரியவர் சாமித்தம்பியிடமிருந்து அறிய நேரிட்டபோது அவர் பலதரப்பட்ட விடயங்களையும் அறிந்து வைத்திருப்பதாகக் கோகுலன் உணர்ந்ததால் அவர் மீதான அபிமானம் மேலும் அதிகரித்தது.

யாத்திரைஅணி கட்டகாமத்திலிருந்து ஐந்து கட்டைத் தூரத்திலுள்ள வீரச்சோலை என்கின்ற கிராமத்தையும் கடந்து பின்னேரம் இரண்டு மணிபோல் கூடார வண்டில் சகிதம் கதிர்காமத்தை அடைந்தது. மாணிக்ககங்கையின் இக்கரையில் கதிர்காமம் பஸ்நிலையம் அமைந்திருந்தது. 

கதிர்காமம் பஸ் நிலையத்தில் பலவகையான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பலவகையான வாகனங்கள் பஸ் நிலையத்தில் வந்து தரிப்பதாகவும் மேலும் பலவகையான வாகனங்கள் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்வதாகவும் அல்லோல கல்லோலமாயிருந்தது. வெளியூர்களிலிருந்து பலவகையான வாகனங்களில் பக்தர்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தார்கள். பஸ்நிலையத்தைச் சுற்றி ஓரங்களிலும் வீதிகளின் அருகாமையிலும் தேனீர்க்கடைகள், உணவு விடுதிகள், மிட்டாய்க்கடைகள், பூசைத்தட்டுக்கடைகள், பழக்கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கடைகள், அழகுப்பொருட் கடைகள், துணிக்கடைகள், மண் மற்றும் உலோகப்பாத்திரக் கடைகள் என விதம்விதமான கடைகள் முளைத்திருந்தன. வாகனங்களின் ஓசையும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அழைப்பு ஓசையும் பக்தர்களின் சம்பாஷணை ஓசையும் இடையிடையே ‘அரோகரா’ ஒலிகளும் என ஓசை மயமாகவே ‘பஸ்’ நிலையம் காணப்பட்டது. பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆங்காங்கே காணப்பட்டனர். 

வயதுவந்த ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமியர்களுமாக கைகளில் கற்பூரப் பெட்டிகளைக் காவியவண்ணம் பக்தர்களை அணுகி ‘கற்பூரம் வேணுமா?” எனத் தமிழிலும் சிங்களத்திலும் கேட்டுக்கேட்டு விற்பனை செய்தபடி எங்கும் உலாவந்தார்கள். பூசைத்தட்டுக்கடைகளிலே வைக்கப்பட்டிருந்த வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்களின் வாசனையும் மூக்கைத் துளைத்தது. மயிலிறகு சொருகிய காவடிக்கடைகளும் கண்ணைக் கவர்ந்தன. வீதியினதும் பஸ் நிலையத்தினதும் ஒதுக்குப் புறங்களில் வரிசையாக அமர்ந்தபடி பெண்கள் பலர் அடுப்புகளிலே பிட்டவித்துக் கொண்டும் அப்பம் சுட்டுக்கொண்டும் இருந்தார்கள். சாப்பிட வந்தவர்கள் அவர்களைச் சுற்றிக் கூட்டமாக நின்றிருந்தார்கள். சில இடங்களில் விறகுக்கட்டைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தலைமுடி இறக்கும் நடமாடும் ‘சலூன்’ களும் ஒன்றிரண்டு தென்பட்டன. தலைவழித்துத் தரிசனம் செய்யவென்று நேர்த்திக்கடன் வைத்து வரும் பக்தர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். 

சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்களையும் பலூன்களையும் கம்புகளில் காவியவண்ணம் சிலர் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர். 

கதிர்காம உற்சவகாலம் ஏழை உழைப்பாளர்களுக்கு ஒரளவு பணம் சம்பாதிக்கவும் உதவுகிறது என்று கோகுலன் எண்ணிக்கொண்டான். 

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகக் கடற்கரைகளிலே காணப்பட்ட ‘நாளங்காடி’ ‘காலங்காடி’களிலே எழுப்பப்பட்ட கொடுப்பார் ஒசையும் கொள்ளுவார் ஓசையும் எழுப்பிய சிலப்பதிகாரக் காப்பியத்தின் காட்சி கதிர்காம பஸ்நிலையத்தின் சுற்றுச்சூழலைப் பார்த்த போது கோகுலனின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. 

இத்துணை அமளிக்களுக்கிடையில் கதிர்காமம் வந்தடைந்த கோகுலனின் தாயாரின் யாத்திரை அணி பஸ்நிலையத்தைத் தாண்டிவந்து வசதியான ஓரிடத்தில் மருதமர நிழலொன்றின் கீழ் தரித்தது. கூடார வண்டிலும் அங்கு நிறுத்தப்பெற்றது. 

மாணிக்கங்கையின் இக்கரைக்காட்சி இப்படியிருக்க அக்கரையில் தெரிந்த கதிர்காமம் முருகன் கோயிலின் பரந்த வெளி வளாகம் நிறைய பக்தர்கள் கூட்டம் தனியாகவும் கூட்டமாகவும் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இக்கரையில் இருந்து பார்த்தபோதே அக்கரையிலிருந்த வள்ளியம்மன் ஆலயத்தினதும் அதனருகிலிருந்த பள்ளிவாசலினதும் பிற்பகுதிகள் தெரிந்தன. 

மாணிக்ககங்கையைக் கடப்பதற்குக் குறுகலான ‘கொங்கிரீட்’ பாலமொன்று ஆற்றிற்கு மேலால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அப்பாலத்தினூடாக வாகனங்களைக் கொண்டுசெல்ல முடியாது. அதன் அகலம் குறுகலானது. ஆட்கள் மட்டுமே போய்வரலாம். அப்பாலம் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்ததாய் நெருக்கமாகவே காணப்பட்டது. பாலத்தில்மேல் நின்றிருந்த சிலர் பாலத்திலிருந்து கீழே ஆற்றுநீரில் மீன்களுக்கு உணவுத் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாகப்போட அவற்றை உண்பதற்காய் ஓடிவரும் மீன்கள் கூட்டம் ஒன்றின்மேல் ஒன்று ஏறிச் சிலவேளைகளில் நீர்மட்டத்திற்கு மேலும் குவிந்து வெள்ளி ஆபரணங்களை அள்ளிக் கொட்டியது போலக் கோலம் காட்டி மினுங்கின.  

இக்காட்சிகளையெல்லாம் கண்டுகளித்தபடியே கோகுலனின் தாயார், கதிரவேலின் தாயார், கதிரவேலின் அக்கா, கோகுலனின் இளையக்கா, குழந்தை, கோகுலன், கதிரவேல், பெரியவர் சாமித்தம்பி ஆகியோர் பாலத்தைக் கடந்து அக்கரையிலிருந்த வள்ளியம்மன் மடத்தை அடைந்தார்கள். போகும்போது தேவையான முக்கியமான சாமான்களைக் கைத்தூக்கில் கொண்டு சென்றார்கள். வண்டில் இக்கரையில் நின்றுகொண்டது. வண்டிலோட்டியும் உதவியாளனும் மாடுகளை நுகத்திலிருந்து அவிழ்த்து அவற்றிற்குரிய அலுவல்களை ஆரம்பித்தனர். 

கோகுலனின் தாயார் மற்றும் அவரோடிணைந்த கதிரவேலின் தாயார், கதிரவேலின் அக்கா, கோகுலனின் இளையக்காவும் குழந்தையும் தங்குவதற்கு வள்ளியம்மன் மடத்தில் ஓர் அறை கிடைத்தது. பெரியவர் சாமித்தம்பியும் கோகுலனும் கதிரவேலும் வண்டில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வண்டிலோட்டி மற்றும் உதவியாளனுடன் இரவில் தங்குவதாகத் தீர்மானித்தனர். 

கட்டகாமத்திலிருந்து தண்ணீர்ச் சோற்றுக் கரையலுடன் புறப்பட்ட யாத்திரை அணி இடையில் எதுவுமே சாப்பிடாமல் பயணித்ததால் எல்லோருக்கும் பசியெடுக்கத் தொடங்கியது. வள்ளியம்மன் மடத்திற்கு வெளியே ஓர் ஓரத்தில் அடுப்பை மூட்டிச் சமையல் வேலைகள் ஆரம்பமாகின. 

(தொடரும் …… அங்கம் – 23)