பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதில் உண்மையான அக்கறையுடன் அரசாங்கம் செயற்படுகிறதா?

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதில் உண்மையான அக்கறையுடன் அரசாங்கம் செயற்படுகிறதா?

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

  இலங்கையில் இரு சட்டமூலங்கள் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரியவையாக இருந்துவருகின்றன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill ) ஆகியவையே அவை.

   இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது.

  அந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானதாக அமைவதற்கு அவசியமானவை என்று உயர்நீதிமன்றம் விதந்துரைத்த சகல திருத்தங்களையும் சேர்க்காமல் அரசாங்கம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை சபாநாயகர் சான்றுப்படுத்தி  பெப்ரவரி முதலாம் திகதி முதல் சட்டமாக்கியதை அரசியலமைப்பபை மீறியசெயல் என்று கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ. சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

   ” இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவான முறையில் ஒருபோதும் சட்டமாக்கப்படவில்லை. 2024 ஆம் ஆண்டின்  9 ஆம் இலக்க இணையவெளி பாதுகாப்பு சட்டம் என்று வெளியிடப்பட்ட ஆவணத்தில் உயர்நீதிமன்றத்தின்  பல  விதப்புரைகள் இல்லை. அதனால் சபாநாயகர் பொதுமக்களின் நம்பிக்கையை மீறிச் செயற்பட்டிருக்கிறார்.

 ” அந்த சட்டத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவொன்றை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்.  அந்த சட்டத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தியது  சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் சபாநாயகர் அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றும் பிரகடனம் செய்யவேண்டும். எந்த ஆலோசனையின் அடிப்படையில் சபாநாயகர் அவ்வாறு செயற்பட்டார் என்பதை தீர்மானிக்க அவரிடமிருந்து பதிவுகளைக் கோரவேண்டும்” என்று சுமந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

  அதேவேளை, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும்  இணையவெளி பாதுகாப்பு சட்டத்துக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கும் திருத்தங்களின் பட்டியல் ஒன்றை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலஸ் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். நான்கு பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினால் வரையப்பட்ட அந்த சகல திருத்தங்களுக்கும்  அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது..

  அந்த புதிய திருத்தங்கள் சட்ட வரைஞரினதும் சட்டமா அதிபரினதும் பரிசீலனைக்கு அனுப்பப்படவேண்டியவையாக இருக்கின்ற அதேவேளை, பாராளுமன்றத்துக்கு போகுமுன்னர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதின்றத்தின் பரிசீலனைக்கும் உட்படவேண்டும்.

  இணையவெளி பாதகாப்பு சட்டமூலம் மீதான விவாதம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் இரு நாட்கள் இடம்பெற்றபோது உயர்நீதிமன்றம் விதந்துரைத்த சகல  திருத்தங்களும் சேர்க்கப்படவில்லை என்று எதிரணி கட்சிகள் சுட்டிக்காட்டிய போதிலும்,  அரசாங்கம் அதற்கு செவிசாய்க்காமல் சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. 

   அவ்வாறு நிறைவேற்றியபோது அமைச்சர் ரிறான் அலஸ் பின்னர் ஒரு கட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்று கூறியது சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறையில் இருந்த பெரும் குறைபாட்டை அம்பலப்படுத்தியது.

 அவ்வாறு குறைபாட்டுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை சான்றுப்படுத்தி கையெழுத்திடுவதற்கு முன்னதாக சந்தித்துப் பேசுவதற்கு எதிரணி கட்சிகள் கால அவகாசத்தை கேட்டபோதிலும் சபாநாயகர் அதைப் பொருட்படுத்தவில்லை.

  சுமந்திரன் தாக்கல் செய்த மனு விடயத்தில் உயர்நீதிமன்றம் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பது முக்கியமான கேள்வி. சட்டவாக்கத்துறைக்கும் ( பாராளுமன்றம்) நீதித்துறைக்கும் இடையில் அரசியலமைப்பு அடிப்படையிலான தகராறு  ஒன்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கவும் கூடும்.

  இது இவ்வாறிருக்க, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (Anti –Terrorism Bill )  அரசியலமைப்புக்கு இசைவான முறையில் சட்டமாக்கப்படுவதற்கு அவசியமான சில திருத்தங்களை கடந்த வாரம்  விதந்துரைத்திருக்கும் உயர்நீதிமன்றம் அவை சேர்க்கப்படாவிட்டால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதுடன் தேசிய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களின் அங்கீகாரத்தையும்  பெறவேண்டும் என்று கூறியிருக்கிறது.

  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களை பரிசீலித்த பிறகு உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச வாசித்தார்.

 ” சட்டமூலத்தின் 8 பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையாக அமைந்திருப்பதாக கருதப்படுகின்றன. அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அவை நிறைவேற்றப்படவேண்டும். சில பிரிவுகள் சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டியது அவசியமாகும். உயர்நீதிமன்றத்தின் விதப்புரைகளின் பிரகாரம் சட்டமூலம் திருத்தப்படுமானால் அதை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றமுடியும் ” என்று ராஜபக்ச கூறினார்.

  உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் மிகவும் முக்கியமாக அவதானிக்கவேண்டியது சட்டமூலத்தில் ‘ பயங்கரவாதக் குற்றச்செயல்கள் ‘ என்று வர்ணிக்கப்பட்டிருப்பவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு இசைவான முறையில் அமையவேண்டும் என்ற வலியுறுத்தலாகும். அதாவது சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்படும் வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

  ” பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமையவேண்டும் என்கின்ற அதேவேளை, 2001 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல் (Terrorist Financing ) தொடர்பான 1373 தீர்மானத்துக்கு  ஏற்றதாகவும் இருக்கவேண்டும்.

  ” பயங்கரவாதச் செயல் ஒன்றுக்கான வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது  ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்கவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கையின் உத்தேச சட்டத்தை திருத்தும்போது மேற்கூறப்பட்ட நாடுகளின் சட்டங்கள் பயனுடையவையாக இருக்கமுடியும்” என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

  பயங்கரவாதத்துக்கு 

  வரைவிலக்கணம்

=============

  பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அதில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை.

  ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலைப் போராளியாக தென்படுவார் என்பது நாம் வழமையாக பேசுகின்ற ஒன்று. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானத்தைக் கொடுக்கின்றன.  இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல.

 கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து பயங்கரவாதத்துக்கு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் குறித்து விமர்சனங்கள் வெளிவந்த வண்ணமே இருந்தன.

   தெளிவற்றதாகவும் வரம்பு மீறியதாகவும் அமைந்திருக்கும் அந்த  வியாக்கியானம் அரசியல் எதிர்ப்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடியது என்பதே பரவலான அபிப்பிராயமாக இருந்தது.

  பயங்கரவாதத் தடைச்சட்டமும் (Prevention of Terrorism Act) வேறு குற்றவியல் சட்டங்களும் பரந்தளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த இலங்கையின் கடந்த பல தசாப்தகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பல ஏற்பாடுகள் குறித்து சட்டத்துறைச் சமூகமும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் அச்சம் வெளியிட்டன.

  தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவந்த படுமோசமான துஷ்பிரயோகங்கள் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிளம்பிய விமர்சனங்களைத் தொடர்ந்து மேம்பாடான சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம் குறைபாடுகளை இல்லாமல் செய்வதற்கு பதிலாக மக்கள் ஒன்றுகூடுவதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் சொத்துச்சேதம், களவு,கொள்ளை போன்ற குற்றச்செயல்களை உள்ளடக்கியதாகவும் பயங்கரவாதத்தின் வியாக்கியானத்தை விசாலப்படுத்தும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பு (Human Rights Watch ) அமைப்பு கடந்த வருடம் தெரிவித்தது.

  பயங்கரவாதத்துக்கு எதிரான அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த இலங்கையின் வரலாற்றினதும் அமைதிவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினதும் வெளிச்சத்திலேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நோக்கவேண்டியிருக்கிறது என்று அந்த அமைப்பு கூறியது.

  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானதாக புதிய சட்டமூலம் அமைந்திருக்கிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு எதிரான எந்தவிதமான போராட்டத்தையும் பயங்கரவாதச் செயல்  என்று வியாக்கியானம் செய்வதற்கு அது வகைசெய்கிறது.

  அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் கேள்விக்கு உள்ளாக்குவதையும் அரசாங்கத்தைப் பதவிவிலகுமாறு அல்லது ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரிக்கை விடுப்பதையும் பயங்கரவாதச் செயல்களாக வியாக்கியானம் செய்யமுடியும்.

   தொழிற்சங்கம் ஒன்று அதன் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு ‘ அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் ‘ நோக்குடன் முன்னெடுக்கும் வேலைநிறுத்தத்தையும் வீதிப்போராட்டத்தையும் ‘அத்தியாவசிய சேவைகளையும் விநியோகங்களையும்’ சீர்குலைக்கும் பயங்கரவாதச் செயல்கள் என்று வியாக்கியானம் செய்யமுடியும். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது மீண்டும் ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

  இத்தகைய விமர்சனங்கள் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் கிளம்பிய போதிலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அப்போதே நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச  கூறினார் என்பது கவனிக்கத்தக்கது. உயர்நீதிமன்றத்தின் கடந்த வாரத்தைய தீர்மானம் சட்டத்துறைச் சமூகம், சிவில் சமூக அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அந்த சட்டமூலம் குறித்து முன்வைத்த நியாயபூர்மான விமர்சனங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்து உரிய மாற்றங்களைச் செய்யவில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

  கடந்த 45 வருடகாலமாக நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யக் கூடியதாக சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவருமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்திருக்கிறது.

  முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன — பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 2016 ஏப்ரில் முதல் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் (Counter Terrorism Bill ) ஒனறைக் கொண்டுவரும் செயன்முறைகளில் இறங்கியது. விக்கிரமசிங்க நியமித்த குழுவொன்று மூன்று வருடங்களாக பொதுக் கலந்துரையாடல் எதுவுமின்றி சட்டமூலத்தை வரையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூட சம்பந்தப்படுத்தப்படவில்லை. எனினும் 2018 செப்டெம்பரில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது. 

  ஆனால், அதன் அரசியலமைப்புத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பல்வேறு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களின் அங்கீகாரத்துடனுமே அதை சட்டமாக்க முடியும் என்று கூறியது.

  இறுதியில் அந்த சட்டமூலத்தை 2020 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டது.

  பிறகு ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 2022 ஆகஸ்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. நீதியமைச்சர் விஜேதாச,  சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே தலைமையில் நியமித்த நிபுணர்கள் குழு சட்டமூலத்தை வரைந்தது.

 அந்த வரைவு 2023   ஜனவரியில் சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினத்தினால் அமைச்சர் விஜேதாசவிடம் கையளிக்கப்பட்டது.2023 மார்ச் 17 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

  இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்கு கால அவகாசம் தரவேண்டும் என்று சட்டத்துறைச் சமூகமும் சிவில் சமூகமும் கேட்டுக்கொண்ட போதிலும் அவற்றினால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை  உள்ளடக்கியதாக கடந்த வருடம் செப்டெம்பரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைந்திருக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.

  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் கடந்த  செப்டெம்பரில் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தாலும் பயங்கரவாத எதிர்ப்பு சடடமூலத்தை அரசாங்கம்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

  இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றிய கையோடு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் வந்திருக்கிறது.

  உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டு  அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவான முறையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கைவிடுமா? பதில் வேண்டி நிற்கும் முக்கிய கேள்விகள் இவை.

  பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கான ஒரு புதிய சட்டத்தை என்றென்றைக்குமே கொண்டுவரமுடியாமல் போகுமா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

  பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றக்கூடாது என்ற உள்நோக்கத்தில்தான் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றமுடியாத அளவுக்கு  அதைவிடவும் கொடூரமான ஏற்பாடுகளுடன் கூடிய சட்டமூலத்தைக் கொண்டுவருகிறது என்ற சந்தேகமும் எழுகிறது.

  ( ஈழநாடு)