தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?

தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?

— கருணாகரன் —

“தமிழரசுக் கட்சியைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் தமிழ் மக்களுடைய பேராதரவைப் பெற்றதாகவும் 75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சிதானே உள்ளது! அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் உட்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் தமிழ்க்கட்சியும் அதுதான். அண்மையில் நடந்த தலைமைக்கான தேர்தலே இதற்கொரு உதாரணம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி நீங்கள் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியும்?” என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். 

     கூடவே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறிதரனையும் அவருடைய தலைமைத்துவத்தையும்  நான் உட்படப் பலரும் அவசரப்பட்டு விமர்சித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார். இத்தகைய அபிப்பிராயத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு’ பத்திரிகையும் தெரிவித்திருந்தது.  

நண்பருடைய கேள்வியில் சில நியாயமுண்டு. அல்லது அதற்கான தருக்க உண்மையுண்டு. இதை நாம் சற்று ஆழமாகவும் விரிவாகவும் நோக்க வேண்டும்.

முதலில் தமிழரசுக் கட்சியைப் பற்றிப் பார்க்கலாம்.

தமிழரசுக் கட்சிக்கு வடக்குக் கிழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உண்டு. (ஏனைய கட்சிகளுக்கு முழு மாவட்டங்களிலும் உறுப்பினர்களில்லை). கூடுதலான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கட்சியும் அதுதான். 75 ஆண்டுகால வரலாற்றையும் அதற்கான கட்டமைப்பையும் கொண்ட கட்சியும் அதுதான். ஜனநாயக அடிப்படையிலான போட்டி முறையில் கட்சிக்கான தலைவர், செயலாளர் போன்ற பதவி நிலைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய யாப்பையும் நடைமுறையையும் தமிழரசுக் கட்சி கொண்டிருப்பதும் உண்மையே. 

இப்படியான சிறப்புகளைக் கொண்ட கட்சிதான் ஜனநாய மறுப்பில் ஈடுபட்டு, இப்பொழுது சீரழிவை நோக்கி, உள்ளும் புறமுமாகக் குத்துப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அது கடைப்பிடிப்பதாகக் கூறும் ஜனநாயக மீறலையும் யாப்பு விரோதச் செயற்பாட்டையும் அது தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. என்றபடியால்தான் மாவை சேனாதிராஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப்பதவியில் இருந்தார். இன்னும் அவருடைய பிடி முற்றாகத் தளரவில்லை.  மட்டுமல்ல, பொதுச் சபையில் தெரிவு செய்யப்பட்ட குகதாசனை ஏற்க முடியாது என்று இந்த ஜனநாயகவாதிகள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். யாப்பு மீறலையும் ஜனநாயக மீறலையும் செய்தபடியால்தான் நீதி, நியாயம் கேட்டு அதனுடைய உறுப்பினர்களில் ஒருசாரார் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள். 

கட்சிகளுக்குள், இயக்கங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதும் பிளவுகள் உண்டாகி உடைவுகள் நிகழ்வதும் அரசியலில் சகஜம். சிலவேளை கட்சிப்பிரச்சினைக்காக நீதிமன்றம்வரையில் செல்வதும் வழமை. இதொன்றும் புதுமையில்லை. அண்மையில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் கூட இப்படி நீதிமன்றப்படியேறியது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப்போல, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ஈரோஸ் போன்றனவும் நீதிமன்றத்தை நாடியவைதான். 

ஆகவே தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்ளகப் போட்டிகளையோ முரண்களையோ நாம் குற்றமாகவோ குறையாகவோ பார்க்கவில்லை. ஆனால், அந்தக் கட்சி சமகால – எதிர்கால அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வைகளை – அதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பழைய – தோற்றுப்போன அரசியலில் நின்று கொண்டு அதிகாரப் போட்டிக்காகத் தன்னை அழித்துக் கொண்டிருப்பதுவே அதன் மீதான விமர்சனமாகும்.

கூடவே இந்தளவுக்கு அவசரப்பட்டு நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியதில்லை என்றும் கூறலாம். கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு கண்டிருக்கலாம். கண்டிருக்க வேண்டும். அதாவது யாப்பின் (ஜனநாயக) அடிப்படையில் பேசி உடன்பட்டுத் தீர்வைக் கண்டிருக்க முடியும்.

என்றாலும் யாப்பு, அரசியல் பார்வைகள் – நோக்கு நிலைகள், கொள்கை மற்றும் அபிலாசை போன்ற காரணங்களால் முரண்பாடுகள் எழுவது இயல்பு. அதைச் சரியாகக் கையாளத் தவறும் தலைமைகள் இருக்கும்போது நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்க முடியாதது. அப்படியான ஒரு சூழலே இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கும் நேர்ந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

பொதுச்சபையைக் கூட்டுவதற்குத் தடையுத்தரவு கோரி, யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் இதுவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனும் மூத்த தலைவர்களும் இணைந்து நின்று சமாதானப்படுத்தியிருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் கட்சியின் மீது கொஞ்சமாவது மதிப்பு ஏற்பட்டிருக்கும். அத்துடன், புதிய அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியும் புதிய தலைமை ஆய்வு ரீதியாகச் சிந்தித்திருக்க வேண்டும். 

அடுத்தது, “தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்களின் பேராதரவுண்டு. ஆகவே அதை நாம் விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது”  என்று கருதுவது தவறு. 

ஏனென்றால், தமிழரசுக் கட்சிக்குள்ளதையும் விட பேராதரவோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன. இன்றும் பெரும்பான்மையான மக்களிடம் ராஜபக்ஸவினருக்குச் செல்வாக்குண்டு. என்பதால், பெரமுனவையும் ராஜபக்ஸவினரையும் நாம் விமர்சிக்க முடியாது, கேள்வி கேட்க முடியாது, அவர்களுடைய அரசியல் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. அவர்களை எதிர்க்க முடியாது என்று கூறமுடியுமா?

இவ்வாறு  நோக்கினால், இந்தியாவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியையும் (BJP), அதனுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் மதவாதத்தையும் நாம் கேள்விக்கிடமின்றி ஏற்க வேண்டுமே. 

இப்படிப் பல உதாரணங்கள் உலகமெங்கும் உண்டு. 

மக்கள் எப்போதும் சரியானவர்களைத்தான் தெரிவு செய்வார்கள். சரியான தரப்புகளுக்கே ஆதரவளிப்பார்கள் என்றில்லை. அவர்களைத் திசைதிருப்பும் காரணிகள் (இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் மற்றும் கையூட்டு, மோசமான பரப்புரைகள், திருப்தியடையக் கூடிய பிற அரசியற் சக்திகள் தென்படாமை போன்றவை) தவறான தரப்புகளை வெற்றியடையச் செய்து விடுகின்றன. 

சமகால உதாரணம் இஸ்ரேல். காசாவின் மீது இஸ்ரேல் இனரீதியான தாக்குதலைச் செய்கிறது. இதை இஸ்ரேலியர்கள் அனைவரும் ஆதரிக்காது விட்டாலும் பெரும்பான்மையானோர் ஆதரிக்கின்றனர். அதற்காக தன்னுடைய மக்களின் ஆதரவுடன்தான் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துகிறது என்று யாரும் நியாயப்படுத்திவிட முடியாது.

கடந்த கால உதாரணம், ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான யுத்தம். அன்றைய நாஸிகள் (ஜேர்மனியர்கள்) ஹிட்லரை ஆதரித்தனர் என்பதற்காக மக்கள் ஆதரவுடன்தான் ஹிட்லர் யுத்தத்தை நடத்தினார் என்று சொல்ல முடியுமா? 

ஆகவே மக்கள் ஆதரவு உண்டு என்பதற்காக அந்தத் தரப்புச் சரியாகச் செயற்படுகிறது என்று நாம் சொல்ல முடியாது. மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தவறாகச் செயற்படுகின்ற தரப்புகளை மக்களின் முன்பு விமர்சனம் செய்ய வேண்டும். அவற்றைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதுவே அறிவுசார் புலத்தினருடைய கடப்பாடாகும். அதையே நாம் செய்கிறோம். 

1.      தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளும் அரசியல் வரட்சியையும்.

2.      அதனுடைய கட்டமைப்பின் பலவீனங்களை.

3.      அதன் தலைமையின் பலவீனங்கள், தவறுகளையும் மூத்த  தலைமைத்துவ நிலையில் உள்ளோரின் பொறுப்பின்மைகளையும் தொடரும் தவறுகளையும்.

இதைச் செய்வது தவறல்ல. அவசியமே. ஏனென்றால் அது மக்களுக்கான பணி. வரலாற்றுக் கடமை. 

தான் ஒரு மூத்த, பொறுப்புள்ள, மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள கட்சி என்றால் அதற்குத் தக்கதாக, தகுதியானதாக பொறுப்புடன் அந்தக் கட்சியும் அதன் தலைமையும் நடந்து கொள்ள வேண்டும். உள்ளகப் பிரச்சினையை உரிய முறையில் அணுகித் தீர்க்க வேண்டும். சந்தி சிரிக்க வைக்க முடியாது. மட்டுமல்ல, எதிர்த்தரப்புகளுக்கு வாய்ப்பை இது வழங்குவதாகவும் அமைந்து விடும். புதிய – இளையோருக்கு இது சலிப்பையும் அவநம்பிக்கையையும் அளிக்கும். 

தமிழரசுக் கட்சியை ஆதரிப்போரும் அதனை மதிப்போரும் செய்ய வேண்டிய கடமை இது. புரிந்து கொள்ள வேண்டிய நியாயம் இது. 

அடுத்தது, சிறிதரனுடைய தலைமைப்பொறுப்பைப் பற்றியது. 

சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுச் சிறிய காலமாக இருக்கலாம். ஆனால், அவர் கடந்த மூன்று தடவை தொடர்ச்சியாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இன்னொரு கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து கட்சி தமிழரசுக் கட்சிகுள் வந்தவராக இருக்கலாம். ஆனால், இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படும் அளவுக்கு அதற்குள் செல்வாக்கைப் பெற்றவர். தமிழரசுக் கட்சியின் தலைவராகப் போட்டியிடும்போதே கட்சியின் நிலை, அதற்குள்ளிருக்கும் பிரச்சினைகள், அவற்றைத் தீர்க்க வேண்டிய கடப்பாடுகள், அதற்கான வழிமுறை பற்றிய புரிதலோடும் திட்டத்தோடும்தான் அவர் களமிறங்கியிருக்க  வேண்டும். 

மட்டுமல்ல, போட்டிச் சூழலில் தொடர்ந்து ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள், பிரச்சினைகள், அணிப் பிளவுகள் போன்றவற்றைக் கையாளக் கூடிய ஆற்றலையும் தனக்குள் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் தலைமைக்கான தகுதி நிலையாகும். இல்லையென்றால் அந்தப் பதவிக்கு வந்திருக்கவே கூடாது. வேறு வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். 

இப்பொழுது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலைக்குக் கட்சி வந்திருக்கிறது. அதாவது சிறிதரனும் வந்திருக்கிறார். கட்சியை அரசியல் உள்ளடக்கத்தின் அடிப்படையில் புதிதாக்கும் சிந்தனை எந்தத் தரப்புக்கும் வரவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் அனைத்துத் தரப்பின் கவனமும் உள்ளது. என்பதால்தான் தமிழரசுக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு சமாதானங்களை யாரும் சொல்லக் கூடாது.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னொரு அணியான சுமந்திரன் தரப்புப் பலமடைகிறதா? பலவீனப்படுகிறதா? என்ற கேள்வியைச் சிலர் எழுப்பலாம். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

00