‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தது நிறைவே’-திருமதி றூபவதி கேதீஸ்வரன்(மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி)

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தது நிறைவே’-திருமதி றூபவதி கேதீஸ்வரன்(மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி)

— கருணாகரன் —

கிளிநொச்சி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றும் திருமதி றூபவதி கேதீஸ்வரன், இலங்கையின் மூத்த நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவர். மிக நீண்ட காலமாக மாவட்டச் செயலர் பதவியை வகிக்கும் அனுபவத்தைக் கொண்டவர். 1991 இலிருந்து 2024 வரையான 33 ஆண்டுகள் நிர்வாக சேவையிலிருக்கும் றூபவதி கேதீஸ்வரன், யுத்த காலத்தில் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் பல்வேறு பதவி நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கிழக்கிலும் யுத்த முடிவுக்குப் பின்னர் வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்றச் சவால்களை ஏற்று இந்த மாவட்டங்களை மீள் நிலைப்படுத்தியதில் திருமதி றூபவதி கேதீஸ்வரனுக்கு முக்கிய பங்குண்டு. 

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகச் சாதாரண குடும்பமொன்றில் பிறந்து, வளர்ந்து, படித்து கிளிநொச்சியிலேயே நிர்வாக சேவை உத்தியோகத்தராகப் பணியை ஆரம்பித்த றூபவதி அவர்கள், 2009 இல் கிளிநொச்சியின் முதல் பெண் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

இந்த நேர்காணல் அவருடைய சேவைப் பரப்பு, தூர நோக்கு, சமூக அக்கறை, பால்நிலை நிலைப்பாடு, யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி, மக்கள் வாழ்க்கை, மீள்குடியேற்றகால நிர்வாக நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியது. 

–    கருணாகரன்

1.         யுத்தத்திற்குப் பின்னரான மீள் குடியேற்ற காலம் இது.  யுத்தம் நடந்த பிரதேசங்களில் மீள் நிலைப்படுதலுக்கான அபிவிருத்தி, பிரதேசங்களின் மீளமைப்பு, பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்க்கையைக் கட்டமைத்தல் என்ற வகையில் ஒரு மாவட்டச் செயலராக உங்களுடைய பாத்திரத்தை எப்படி வகுத்துக் கொண்டீர்கள்?

கிளிநொச்சி மாவட்டத்தில் என்னுடைய சேவைக்காலம் இரண்டு தடவைகள் நிகழ்ந்துள்ளது. முதலாவது, 2009 நம்பர் 06 தொடக்கம் 2015 வரை. இரண்டாவது  25 மார்ச் 2019 தொடக்கம் 2024 பெப்ரவரி வரையானது. 2009 இல் பொறுப்பெடுத்தபோது இங்கே – கிளிநொச்சி மாவட்டத்தில்  யாருமே இல்லை. சகல மக்களும் இடம்பெயர்ந்திருந்தனர். ஒரு மாதம் வவுனியாவில் தற்காலிகமான இடத்தில் கடமையாற்றினோம். பின்னர் கிளிநொச்சிக்கு வந்தோம். அப்பொழுது எந்த வசதிகளும் இருக்கவில்லை. பணிமனை இல்லை. மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் என எந்த உட்கட்டுமான வசதிகளும் இல்லை. உத்தியோகத்தர்கள் தங்குவதற்கான இடங்களே இல்லை. பகலில் அலுவலகமாகப் பயன்படுத்திய இடத்தை இரவில் தூங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. இந்தச் சூழலில்தான் மீள் குடியேற்றத்தை ஆரம்பித்தோம். மிகுந்த அர்ப்பணிப்புடன் அனைத்து உத்தியோகத்தர்களும் தொண்டர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கூட்டுறவாளர்களும் சிறப்பாகப் பணியாற்றினார்கள். 

இடைத்தங்கல் முகாம்களில் (நலன்புரி நிலையங்களில்) இருந்த மக்களை கிளிநொச்சிக்கு அழைத்து வந்து முதற்கட்டமாக பாடசாலைகளில் தங்க வைத்து பதிவுகளை மேற்கொண்டோம். மக்களுக்கான தேவைகள் பலவாக இருந்தன. ஆனால், அவர்களுடைய கையில் பணமில்லை. ஆனாலும் தங்களுடைய ஊர்களுக்குச் சென்று தங்கள் வீடுகளில் குடியேற வேண்டும் என்ற ஆர்வத்தோடிருந்தனர். இதற்காக அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை முதற்கட்டமாக நிறைவேற்ற வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் 06 தொடக்கம் 09 வரையான மாதங்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் உதவியோடு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் அனுசரணையோடு ஏனைய பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான உதவிகள் (சீமெந்து, தகரம், பலகைப் பொருட்கள்)  செய்யப்பட்டன. அரசசார்பற்ற நிறுவனங்கள் குறிப்பாக யுஎன் நிறுவனங்களின் உதவித்திட்டங்கள், வெளிநாட்டு அரசுகளின் அனுசரணை எனப் பல உதவிகள் கிடைத்தன. இவற்றுக்கு   ஜனாதிபதி செயலணியின்  அங்கீகாரமும் அனுமதியும் கிடைத்தன. 

முதலாவதாக மக்கள் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் வேலைகள் செய்யப்பட்டன. கிணறுகளை இறைத்துக் கொடுத்தோம். சில இடங்களில் கிணறுகள் கூட அமைக்கப்பட்டன. தொடர்ந்து வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. யுத்தத்தின்போதும் இடப்பெயர்வின்போதும் ஆவணங்கள் தொலைந்ததை மீளப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் துரித கதியில் செய்தோம். முக்கியமாகக் காணி ஆவணம்;, பிறப்புப் பத்திரங்கள் போன்றவை. அடுத்ததாக காணி முரண்பாடுகள் அதிகரித்துக் காணப்பட்டன. இதற்கு நடமாடும் சேவைகளை நடத்தி ஓரளவுக்குத் தீர்வு கண்டோம். இதன் மூலம் ஓரளவுக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனாலும் இ;ன்னும் காணிப் பிரச்சினை தீராத பிரச்சினையாகவே உள்ளது. 

இதைத் தொடர்ந்து சமூக உட்கட்டுமானங்களை விருத்தி செய்ய வேண்டியிருந்தது. அதைச் செய்தோம். மருத்துவமனைகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச சேவைகளுக்கான கட்டுமானங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டன. கூடவே சந்தைகள், வீதிகள், குளங்கள், வாய்க்கால்கள் எனப் புனரமைக்கப்பட்டன.  முக்கியமாக ஏ தர வீதிகள் காபெற் செய்யப்பட்டது. கிளிநொச்சி நகர் வீதிப் புனரமைப்பானது, இலங்கையிலேயே சைக்கிள் ஓட்டுவதற்கான தனியான ஓடுபாதையுடன் அமைக்கப்பட்டது. உள்ளுர் வீதிகள் ஓரளவுக்குப் புனரமைப்புச் செய்யப்பட்டன. ஆயினும் இன்னும் பல வீதிகள் புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதற்கும் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் உச்சமாகப் புனரமைத்து விவசாய நடவடிக்கைக்காக மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. 

இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பதில் மாவட்டச் செயலர் என்ற வகையில் என்னுடைய பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறேன். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள் கட்டுமானம் செய்வதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்நிலைப்படுவதற்கு உதவியதிலும் என்னுடைய பங்களிப்புகள் நிறைவான முறையில் இருந்ததையிட்டு நிறைவடைகிறேன். அதுவொரு காலப்பணியாகுமல்லவா!

இதைப்போல நான் 2020 இல் மீளவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற இரண்டாவது காலகட்டத்தில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய அபிவிருத்திப் பணிகளை விட, அது கொவிட் பெருந்தொற்றுக் காலம் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக் காலம் என்பதால் அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். இதேவேளை இந்தக் காலப்பகுதியில் எமது மாவட்டச் செயலகம் உற்பத்தித் திறன் செயற்பாட்டைத் திறம்படச் செயற்படுத்தி, தேசிய ரீதியாக இரண்டாவது தடவையாகவும் முதலாவது இடத்தைப் பெற்றோம். இவையெல்லாம் இன்னொரு இக்கட்டான காலகட்டச் செயற்பாடுகளாகும்.  

2.         மீள்குடியேற்றத்தின்போது அரசாங்கம், மக்கள், அரசியற் கட்சிகள், நிர்வாகம்  ஆகியவற்றுக்கிடையில் நீங்கள் பெற்ற வாய்ப்புகள், எதிர்கொண்ட நெருக்கடிகள், சவால்கள் என்ன?

பொதுவாக மக்களுக்கான தேவைகள் அதிகமாக இருந்தது. மக்கள் பல்வேறு போராட்டங்களின் மத்தியில்தான் குடியேறினார்கள். உதாரணமாகச் சாந்தபுரம், கிளாலி, இரணைதீவு, இத்தாவில் போன்ற பகுதிகளில் மக்கள் குடியேறுவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தவிர, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் உடனடிச் சவால்கள் இருந்தன. அதே நேரத்தில் இது ஓர் நிலைமாறு காலகட்டமாக இருந்ததால் பலவிதமான நெருக்கடிகளும் சவால்களும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு மிக அவதானமாகச் செயற்பட்டோம். அரசாங்கம், அரசியல்வாதிகள், மக்கள் என வெவ்வேறு தரப்பின் இடையே வேலை செய்வதில் சிலவேளை முடியுமாக இருந்தது. சில வேளை முடியாதிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து வேலை செய்தோம்.

3.         கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. இயக்கச்சி உள்ளிட்ட சில பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளனர். எதுவானாலும் 2024 இல் மீள்குடியேற்றத்தை முழுமையாக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சொல்லியுள்ளார். இந்த நிலையில்  மீள்குடியேற்றப் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்க முடியுமா?

கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றம் நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். மக்கள் முற்றாகவே இடம்பெயர்ந்த மாவட்டத்தில் அனைத்து மக்களையும் மீள் குடியேற்றம் செய்துள்ளோம். அதாவது, மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் குடியேற்றப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு இடைத்தங்கல் முகாம்களிலோ நலன்புரி நிலையங்களிலோ இல்லை. ஆனாலும் சில பகுதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியதாக உண்டு. அங்கே கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பகுதி மக்கள் வேறு இடங்களில் வாழ்கின்றனர். ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் திருப்திகரமாக நடந்ததாகவே கருதப்பட வேண்டும். அது ஒரு பிரச்சினையாக எமக்கு இல்லை. 

4.         முற்றாகவே அழிவடைந்திருந்த கிளிநொச்சியை மீளக் கட்டியெழுப்புவதில் பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக, நகர வடிவமைப்புக்கான (Town Plan) திட்டமிடலில் குறைபாடுகள் உண்டென்று கூறப்படுகிறது. கூடவே காணிப்பயன்பாட்டிலும். இதையெல்லாம் தீர்மானிப்பதில் மாவட்டச்  செயலருக்குரிய பொறுப்புகள் எப்படியாக இருந்தது?

கிளிநொச்சியைப் பொறுத்தவரை மீள்குடியேற்றத்தின் ஆரம்பகாலத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அதற்கு முன்பு யுத்தகாலமாகும். அதில் நாம் எதையும் செய்ய முடியாது. அதற்கு முன்பிருந்த கட்டுமானங்களில் பல சிதைந்து விட்டன. யுத்தம் முடிந்த பிறகு, மீள் கட்டுமாணத்துக்கான நிதி கிடைத்துக் கொண்டிருந்தது. அதற்கேற்ற வகையில் கட்டுமாணங்களைச் செய்வதற்குப் பொருத்தமான  காணிகளைப் பெறுவதில் பிரச்சினைகள் இருந்தன. உதாரணமாக சந்தையை அமைத்தோம். ஒரு சந்தை பொருளாதார மத்திய நிலையமாக உள்ளது. மற்றது சேவைச் சந்தையாக. 

கிடைக்கும் இடங்களில் திட்டமிடலைச் செய்தோம். வேறு வழியில்லை. அதுதான் அன்றைய சூழல். உதாரணமாக நகரத்துக்கான தண்ணீர்தாங்கியை (Water Tank)  எங்கே அமைப்பது என்ற பிரச்சினை இருந்தது. ஏனென்றால் பழைய தண்ணீர்தாங்கி சேதமடைந்து அகற்றப்படாதிருந்தது. இப்பொழுது அந்த இடம் நீர் சுத்திகரிப்பு நிலையமாக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் பேருந்து நிலையம் அமைப்பதிலும் பிரச்சினை இருந்தது. ஆகவே கிடைக்கின்ற நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கிடைக்கின்ற அல்லது கைவசமுள்ள காணிகளைப் பயன்படுத்திச் செயற்பட்டோம்.

5.         இதற்காக ஒரு கட்டமைப்பு அல்லது ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக பளை, பூநகரி போன்ற சிறுநகரங்கள் உருவாகக் கூடிய வாய்ப்புகள் கிளிநொச்சி மாவட்டத்தில் உண்டல்லவா?

திட்டமிடலைப் பொறுத்தவரை நகர அபிவிருத்திச் சபை (Urban Development Authority) கிளிநொச்சி நகருக்காக ஒரு திட்டமிடலை மேற்கொண்டுள்ளது. அது நடைமுறைக்கு வரும்போது பலவகையில் முன்னேற்றம் ஏற்படும் என எண்ணுகிறேன். பளைப் பிரதேசத்துக்கான நகரத் திட்டமிடல் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் சொல்வதைப்போல அதைக்குறித்து நாம் சிந்திக்கலாம். பூநகரிக்கு ஒரு நகர அபிவிருத்திக்கான வாய்ப்பு அரசாங்கத்தினால் (நகர அபிவிருத்திச் சபையினால்) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்போது கிளிநொச்சியில் இன்னொரு நகரம் உருவாகும். அதைச் சரியாக நடைமுறைப்படுத்தினால் பூநகரியின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் சிறப்பையும் கொண்ட புதிய நகரம் ஒன்றை நாம் காண முடியும். அந்தப் பிரதேசம் முற்றிலும் மாறுபட்ட பசுமைப் பிராந்தியமாக மாறும். 

6.         கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டம் என்ற அடிப்படையில் விவசாயப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட (Agro City) என நகரத்தையும் தொழிற்துறை விரிவாக்கத்தையும் குறித்துச் சிந்திக்காதிருப்பது ஏன்?

இதற்கு Industrial Zone (பொருளாதார மண்டலம்) ஒன்றை அமைப்பதற்குப் பொருத்தமான அமைவிடம் வேண்டும். அதற்கான விருப்போடு சிலர் வந்தனர். ஆனால், அதற்குக் காணி ஒரு பிரச்சினையாக உள்ளது. வனவளப் பிரிவு, சில இடங்களில் காணிச் சீர் திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதி தேவை. அல்லது அவற்றிடமிருந்து பொருத்தமான காணிகளைப் பெற வேண்டும். பெற்றால் அதைச் செய்யலாம். 

ஜனாதிபதியால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திச் செயற்பாட்டில் இது சாத்தியமாகலாம். 1985 க்கு முன்னர் இருந்ததைப்போல ஒரு சூழல் காணியைப் பெறுவதற்கு அமைந்தால் இதெல்லாம் ஓரளவுக்கு இலகுவாகலாம். இப்பொழுது நமக்குள்ள பெரிய சவால் பொருத்தமான காணிகளைப் பெறுவதேயாகும்.

7.            கிளிநொச்சி மாவட்டத்தில் சொல்லக் கூடிய அளவில் கால்நடைப் பண்ணைகள் (Livestock farms), விவசாயப் பொருட்களின் உற்பத்தி மையங்கள் உருவாகாமல் இருப்பதற்கான காரணம்?

ஆம். பண்ணைகளை (Livestock farms) உருவாக்க வேண்டும் என்றுதான் இதற்குரிய திணைக்களங்கள் சொல்கின்றன. இதற்கு உதவ அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், மக்கள்தான் அதைச் செய்வதற்கு முன்வர வேணும். இன்னமும் பெரிய அளவில் பண்ணைகளை வைத்திருக்கும் எண்ணம் மக்களிடம் இல்லை. அதற்கான மன நிலை உருவாகவில்லை. 

உள்ளுர் கால்நடைகளை வளர்ப்பது சுலபம் என்றே பலரும் எண்ணுகிறார்கள். அதில் பழகிவிட்டார்கள். 

சிலர் சிறிய அளவில் பண்ணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால், இது ஒரு ஆரம்ப நிலையே. பயிர்ச்செய்கை செய்யாத இடங்களில் புல் வளர்க்கலாம் என்று பயிர்ச்செய்கைக் கூட்டங்களில் தீர்மானித்துள்ளோம். ஆனால் அதைச் செய்வோர் குறைவு. ஆனால், பெரிய பண்ணைகள் (Livestock farms) கிளிநொச்சியில் உருவாக்கப்பட வேண்டும். அது பலருக்கான வருவாயை ஈட்டித் தரும். பலருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். பாற் பொருள் உற்பத்தியகங்கள் கிளிநொச்சியில் உருவாக்கப்படலாம். தற்போது இயக்கச்சியில் ஒன்று இருக்கிறது. 

8.         இதற்குப் புலம்பெயர் மக்களின் பங்களிப்பைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லையா? கிளிநொச்சி மாவட்டச் செயலர் என்ற வகையிலும் கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்ற அடிப்படையிலும் உங்களுக்கு இதில் அதிக வாய்ப்புகள் உண்டல்லவா?

அரசாங்க அதிபர் என்ற வகையில் கோரிக்கையை  வைக்கலாம். ஆனால் நிதியை நாம் தனியாகப் பெற முடியாது. ஆனாலும் கோரிக்கையை வைத்து வரவேற்கலாம். ஆதரவளிக்கலாம்.  கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் புலம்பெயர் மக்கள் பல விதமான உதவிகளைச் செய்துள்ளனர். இதற்காக மாவட்டச் செயலர் என்ற வகையில் என்னுடைய நன்றிகள். 

இப்படி மேலும் உதவிகளையும் முதலீடுகளையும்  செய்யலாம். 

அக்கராயனின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. நெதர்லாந்து மனித நேயக செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கம் இதைச் செய்கிறது.  இதை விட புலம்பெயர் உதவிகள் பண்ணைகளை உருவாக்குவதற்கு, வேளாண்மை விருத்திக்கு, சிறுகைத்தொழில் வளர்ச்சிக்கு என அமைவது நல்லது.  இதற்காக யாரும் முன் வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம். அதை மேற்கொள்வோம்.

9.         கிளிநொச்சியில் புலம்பெயர் முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கான – ஊக்குவிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் உண்டா?

அப்படியான சிறப்புத்திட்டங்கள் உண்டு என்று  சொல்ல முடியாது. ஆனால், பரந்தன் பொருளாதார வலயம் (Paranthan Industrial Zone) என்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது முன்பு பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் அமைந்திருந்த இடத்தில் அமையவுள்ளது. அது சாத்தியமாகும் என நம்புகிறேன். இன்னொன்று சூரிய மின் உற்பத்தி (Solar power)

காற்றாலை மின் உற்பத்தி (Wind power generation) போன்றவற்றைச் செய்வதற்கு  யாரும் முன்வரலாம். 

10.       போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற வகையிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்கள்  என்ற அடிப்படையிலும் உங்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அல்லது சிறப்புக் கவனங்கள்?

குறிப்பாக கிளிநொச்சி,  முல்லைத்தீவு இரண்டும் பெண்களைத்  தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்கள். இவர்களுக்கான தேவைகளும் அதிகம். பிரச்சினைகளும் அதிகம். அதனால் பலவற்றிலும் முன்னுரிமையை இவர்களுக்கு அளிக்கும் வகையில் திட்டங்களையும் பொறிமுறைகளையும் உருவாக்கினோம். இதன்மூலம் ஓரளவுக்கு இவர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைத்தன.

பல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இது ஒரு சிறப்பான முன்னேற்றமாகும். அதிகமானவர்கள் சிறுதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்கள். கிளிநொச்சியில் பல விதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தை உருவாக்கியுள்ளேன். கனகபுரத்தில் இந்த இல்லம் இயங்குகிறது. இதில் பல பெண்கள் பாதுகாக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர்.  

பொது நிகழ்வுகளிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் பெண்களுக்கான இடத்தை – சமநிலையை அளித்து வருகிறோம். 

11.       மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, வெவ்வேறு அரசியற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு போன்றவற்றுக்கிடையில் ஒரு மாவட்டச் செயலராகப் பணியாற்றும் அனுபவங்கள்? முக்கியமாகச் சுயாதீனத்துடன் செயற்படக்கூடிய சூழல் உள்ளதா?

இது எல்லா மாவட்டங்களிலும் உள்ள பொதுவான பிரச்சினைதான். நாம் கடமையாற்றும் போது அரசின் கொள்கை,  நிர்வாக நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறோம். அப்படித்தான் செயற்படவும் முடியும்.  முக்கியமாக  மக்கள் நலனில் கூடுதலான அக்கறையைக் காட்டுகிறோம். ஏனென்றால் நாம் எப்போதும் மக்களுக்காகவே பணி  செய்ய வேண்டியவர்கள்.  

12.       கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் அமைவிடமானது பளை, பரந்தன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அக்கராயன், வட்டக்கச்சி என முக்கியமான மையங்களில் உள்ளன. பெரும்பாலானவை பிரதான வீதிகள், பிரதான சந்திப்புகளில் இருந்தும் கூட்டுறவுத்துறை நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறதே!

கூட்டுறவுத்துறை நவீன மயப்படுத்தப்பட வேண்டும். தனியார் துறையுடன் போட்டியிட்டுச் செயற்படும் நிலை பொதுவாக  காணப்படவில்லை. மீள்குடியேற்றத்தின்போது கூட்டுறவுத்துறையே பெரும் பங்களிப்பைச் செய்தது. அப்பொழுது தனியார் துறை எழுச்சியடையவில்லை. சிறிய கடைகள் கூட மக்களிடத்தில் இருக்கவில்லை. அனைத்தையும் கூட்டுறவுத்துறையே நிவர்த்தி செய்தது.  

இப்பொழுது கூட்டுறவுத்துறை தடுமாறுகிறது. அரசினால் வழங்கப்பட்ட உதவியைப் பெற்றும் செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மட்டுமல்ல, பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பொருத்தமான மையங்கள் உண்டு என்பதால் தனியார் துறையுடன் போட்டியிடக் கூடியவாறும் உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தக் கூடியமாதிரி வெற்றிகரமாகவும் சுப்பர் மாக்கற் போன்றவற்றை உருவாக்க வேண்டும். சேவைகளை கவர்ச்சிகரமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கூட்டுறவுத்துறையை சிறப்பான முறையில் மேம்படுத்தலாம். 

13.       உங்களுடைய சேவைக் காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியில், விவசாய, தொழில் நுட்ப பீடங்கள் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டன. இதற்கான தொடக்கநிலைப் பணியில் நீங்கள் ஆற்றிய பங்களிப்புகள் பெரியது. எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகம் என உதயமாவதற்கு இது ஒரு ஆரம்பமாகக் கொள்ளக் கூடியது. இதைக் குறித்து?

ஆம், இது எனக்கு மகிழ்ச்சியளிப்பதே. பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக சமூகத்தினர் பல சிரமங்களை எதிர்கொண்டனர். முக்கியமாக இடவசதி இல்லாத நிலையில், பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பொழுது தேவையான அளவில் உட்கட்டுமாண விருத்தி நடைபெற்றிருக்கவில்லை. இதனால் பணியாளர்களும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்குவதற்கான இடவசதி இருக்கவில்லை. இதற்காக அரசாங்க அதிபர் வசித்து வந்த இடத்தைக் கூட வழங்கியிருந்தோம். அத்துடன், அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள கட்டிடங்களையும் நல்லெண்ண அடிப்படையில் இரவலாக வழங்கினோம். இப்போதும் எமக்குரிய சில கட்டிடங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆரம்ப கட்டத்தில் அன்றைய சூழலுக்கு அமைய பல்கலைக்கழகத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருங்கிணைப்புக் குழுவுடன், மாவட்டச் செயலகப் பணியாளர்கள்,  பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர் என அனைவருடன் இணைந்து நின்றோம். 

பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய (தேவையான அளவுக்கு) காணியை வழங்கினோம். அதைச் சுற்றி நல்லதொரு சூழலை உருவாக்கினோம். இன்னும் பல்கலைக்கழகத்தின் முன்பாக – கிழக்குத் திசையில் – பல்கலைக்கழகத்துக்கு ஏற்றவாறான வணிக வளாகத்தை உருவாக்குவதற்கான காணி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அது நிறைவடையும்போது அந்தப் பகுதி மிகச் சிறப்பான முறையில் பொலிவடையும் என எண்ணுகிறேன். இது ஒரு சிறந்த திட்டமிடலாகும்.

14.       அறிவியல் நகரில் ஆடைத்தொழிற்சாலை, Gargills   உணவு பதனிடும் மையம், கிளிநொச்சியில் சிவனருள் விவசாய உற்பத்திப் பொருள் உற்பத்தி நிலையம் போன்ற தொழிற்துறைகளைப் போல வேறு புதிய தொழில் மையங்கள் 2015 க்குப் பிறகு ஏன் உருவாகவில்லை?

அப்பொழுது முதலீடுகளை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி வாய்ப்புள்ள பிரதேசமாக இருந்தது. சூழலும் சரியாகக் காணப்பட்டது. மக்களும் தமக்கான தேவையாக அவற்றை எதிர்பார்த்தனர். மக்கள் அதிகளவுக்கு அரசியல் மயப்பட்டிருக்கவில்லை. இன்றைய சூழல் வேறு.

இப்போது எதையும் செய்வதற்கு பல நெருக்கடிகள் காணப்படுகின்றன. பல வகையான போக்குகள், சிந்தனைகள் அபிவிருத்தியைப் பற்றிய விடயத்தில் தலைதூக்கியுள்ளன. முக்கியமாகக் காணிகளைக் கண்டறிவது கூடப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. 

15.       படையினர் வசமுள்ள அரச காணிகளை மீட்பதற்கான வழிகள் உண்டா?

யுத்தம் முடிந்து மீள்குடியேற்றம் நிகழ்ந்த ஆரம்ப காலத்தில் இருந்து நீங்கள் அவதானித்தால் நிறைய விடயங்கள் மக்களுக்குச் சார்பாக நடந்துள்ளன. சில தாமதங்கள், சவால்கள் இருந்தாலும் முன்னேற்றம் நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் அந்த நம்பிக்கை எனக்குண்டு. 

உதாரணமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அமைந்துள்ள இந்தப் பகுதிகூட படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதனை நாம் மீட்டு, மாவட்டச் செயலகத்தை அமைத்து மக்களுக்கான சேவைகளை ஆற்றி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.  

16.       கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் பெரிதாக உள்ளதே. இங்கே ஒரு நீண்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது?

இதொரு மனிதாபிமானப் பிரச்சினையும் அரசியல் விவகாரமுமாகும். ஒரு நிர்வாக அதிகாரி என்ற வகையில் அந்த உறவுகள் எம்முடன் தொடர்பு கொள்வதையிட்டுச் சொல்கிறேன்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறு இந்தப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். அவர்களுடைய நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது அனைவருடைய பொறுப்புமாகும். 

17.       யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கிளிநொச்சியும் முல்லைத்தீவும். இவற்றில் நீங்கள் மீள் கட்டுமான காலத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள். இந்த அனுபவங்கள்….

முதலாவது,  அரசாங்க அதிபராக நான் வருவேன் என எதிர்பார்த்திருக்கவில்லை. நிர்வாக சேவையில் போட்டிகள் அதிகம். அதனால் நான் வேறு பணிகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக மாவட்டச் செயலராகப் பணியேற்றேன். அதுவும் நான் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகிய கிளிநொச்சிக்கே வந்தது அளவற்ற மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் போரினால் அழிவடைந்திருந்த எமது மாவட்டத்தைக் கட்டியெழுப்பி, அங்கே மக்களை மீள்நிலைப்படுத்தும் பெரும்பணியைச் செய்யக் கிடைத்தது எனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாகும். இது எளிதில் எவருக்கும் கிடைத்திருக்காதது. அது எனக்குக் கிடைத்தது. ஒரு மக்கள் கூட இல்லாத நிலையில் இருந்த மாவட்டத்தில் முழு மக்களையும் கொண்டு வந்து குடியமர்த்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

முல்லைத்தீவிலும் சில இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாதிருந்தது. அதை நிறைவேற்றினேன். அங்கே – முல்லைத்தீவைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தினோம். மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான வீடமைப்பு, ஆவணங்களைப் பெறுதல், தொழில் விருத்தி, காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் போன்றவற்றில் நிறைவை எட்டியதில் மகிழ்ச்சி. திருப்தி.

18.       கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான அளவில் இயற்கை வளச் சிதைப்பு  – சூழல் கேடாக்கல் நடக்கிறதே! இதைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஏதாவது உண்டா?

அதிகமாகச் சொல்லக் கூடியது மணல் அகழ்வும்; காடழிப்புமே. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையாக முயற்சிக்கிறோம். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் இது தொடர்பாக தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. ஆனால், இதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை, கனியவளத்துறை, பொது மக்கள் அமைப்புகள், பிரதேச செயலகங்கள், என  எல்லாத் தரப்பினதும் உதவி அவசியம். 

19.       யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இன்றைய நவீன யுகத்தின் பெண்கள், அவர்களுடைய திறன்கள், அவர்களுக்கான இடம், அவர்களுடைய உரிமைகள் என்ற விடயங்கள் தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள கரிசனை அல்லது நிலைப்பாடு என்ன?  

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அப்பால் பெண்கள் பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு அதிகமானோர் செல்கிறார்கள். அரச உத்தியோகத்திலும் தனியார் துறையிலும் கூடுதலான பெண்களின் பங்கேற்பு நிகழ்கிறது. சிறுதொழில் முயற்சியாளர்களில் 70 வீதமானவர்களில் பெண்களே உள்ளனர். ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இருபாலாரும் இணைந்து இந்த மாவட்டத்தை முன்னேற்றுவது சிறப்பு. பல வகையிலும் முன்னேற்றம் என்று இதைப் பார்க்கிறேன்.

20.       கல்வி அபிவிருத்திக்கு மாவட்டச் செயலகத்தின் பங்களிப்புகள் எப்படி உள்ளன?

மாவட்டச் செயலகத்தின் ஊடாக கல்வி அபிவிருத்திக்கான பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். மாவட்டச் செயலகத்துக்குரிய வாய்ப்புகள், பொறுப்பு என்ற அடிப்படையில் பாடசாலைகளின் உட்கட்டுமானங்களை அரச நிதியீட்டத்தின் மூலமும் ஏனைய பல நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளின் மூலமாக நிறைவேற்றியுள்ளோம். இதற்கப்பால் வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக கிராமங்களில் சிறுவர் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்றிட்டம் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. 

இதைத் தவிர, முன்னாள் அரசாங்க அதிபர் திருவாளர் பொன்னம்பலம் அவர்கள் உருவாக்கிய மாவட்டக் கல்வி நிதியத்தை தொடர்ந்தும் செயற்படுத்தி வருகிறோம். இது  பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது.

21.       கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து அந்த மாவட்டத்திலேயே தலைமை அதிகாரியாக நிர்வாக பரிபாலனம் செய்து வருகிறீர்கள். நீங்கள் படித்த சூழல்?

சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு பொருளாதார வசதியோ கல்விப் பாராம்பரியமோ இல்லாத குடும்பப் பின்னணி எங்களுடையது. வறுமையான குடும்பச் சூழல். இந்த நிலையில்தான் கிளிநொச்சி;. புனித தெரேசா பெண்கள் கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றில் படித்தேன். இடையில் க.பொ.த உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கற்பதற்காக யாழ் வேலணை வைத்திலிங்கம் துரைச்சாமி மத்திய மகாவித்தியாலயத்தில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். விஞ்ஞானத்துறையில் படிக்க வேண்டும் என்று எனக்கு இளவயதிலேயே விருப்பமிருந்தது. ஒரு வைத்தியராக வேண்டும். கல்வியின் மூலமாகவே எங்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்ற எண்ணம் எனக்கு இளவயதிலேயே இருந்தது. ஆனால், அதற்கேற்றமாதிரி அப்பொழுது கிளிநொச்சியில் விஞ்ஞானத்துறையில் படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. அதனால்தான் வேலணைக்குச் சென்று படிக்க வேண்டியிருந்தது. 

அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாக முன்பு, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் க.பொ.உயர்தரத்தில் கணித – விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே நான் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்து விஞ்ஞானப் பிரிவில் கற்று பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகினேன். 

அப்போது தனியார் வகுப்புகளுக்குச் செல்லக் கூடிய வசதி எனக்கிருக்கவில்லை. பாடசாலைக்குச் செல்வதே நடந்துதான். இரண்டு, மூன்று மைல்கள் தூரத்துக்கு நடந்து சென்றே படித்தேன். பிரத்தியேக வகுப்புகள் நடக்கும்போது அவற்றை முடித்துக் கொண்டு வீடு வருவதற்கு இருட்டி விடும். அவசர அவசரமாக நடந்து வருவோம். 

1989 இல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். பட்டதாரியாக வெளியேறி சில காலம் பின்தங்கிய சூழலில் உள்ள மாணவர்களுக்குக் கற்பித்தேன். 

அடுத்த சில மாதங்களிலேயே முகாமைத்துவப் பயிற்றியாளராக வேலை கிடைத்தது. கிளிநொச்சியில் கரைச்சி, முல்லைத்தீவு – துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் 1991 வரையில் வேலை செய்தேன். அப்பொழுது இலங்கை நிர்வாக சேவைக்கான பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன். இதனையடுத்து 1991 தொடக்கம் 1994 வரையில் வடக்குக் கிழக்கு மாகாணசபையில் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உதவிச் செயலராகப் பணியாற்றினேன். அதற்குப் பிறகு வடக்குக் கிழக்கு மாகாணசபையின் கூட்டுறவு உதவி ஆணையாளராகப் பணியாற்றச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான்கு ஆண்டுகள் அதில் பணியாற்றினேன். மட்டக்களப்பில்தான் என்னுடைய திருமண வாழ்வும் அமைந்தது. 

பின்னர், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் 2002 தொடக்கம் 2005 வரை சுனாமி மீட்புப் பணிக்கான மேலகதிகச் செயலாளராகப் பணிவகித்தேன். 2008 இல்  மேலதிக மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. 2008 – 2009 வரை பதில் அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் பணியாற்றினேன்.

2009 இல் கிளிநொச்சி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அது போர் முடிவுற்ற சூழல். மாவட்டத்தில் எந்த வசதிகளும் இல்லை. மக்களும் இல்லை. எல்லாவற்றையும் புதிதாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலை. அதை, அந்தச் சவாலை ஏற்றுக் கடமையாற்றினேன்.

இதெல்லாம் எனக்குப் பலவகையான அனுபவங்களைத் தந்தன. என்னுடைய ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். 

உண்மையில் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தபோது கூட நான் இப்படி மாவட்டச் செயலராக வருவேன். அதுவும் நான் வளர்ந்து, படித்து ஆளாகிய கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாவட்டச் செயலராக வந்து கடமையாற்றுவேன் என எதிர்பார்த்ததே இல்லை. இந்தத்துறை எப்போதும் போட்டிகள் நிறைந்தது. ஆகவே அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என இலகுவாக எதிர்பார்க்க முடியாது. இந்த வாய்ப்புகள் கிடைத்தது எனக்குக் கிடைத்த வரம் என்றுதான் நினைக்கிறேன். அதோடு இறைஆசியும் உண்டென்பது என்னுடைய நம்பிக்கையாகும்.  

22.       கிளிநொச்சியின் முதல் நிர்வாக சேவை அதிகாரியாகத் தேர்வாகியவர் என்ற வகையில்?

ஏற்கனவே சொன்னதைப்போல என்னுடைய குடும்பப் பின்னணியில் இருந்து கடின உழைப்பினால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலராக மட்டுமல்ல, எமது மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபராகவும் நான் பணியாற்றக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே. நெருக்கடிகள் நிறைந்த சூழலில் எமது மக்களின் மீள்குடியேற்றக் காலத்தில் என்னுடைய மாவட்டத்தில் நான் வந்து கடமையாற்றினேன் என்பதையிட்டு எனக்கு எப்போதும் நிறைவுண்டு. மட்டுமல்ல, ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு மேலாக (இரண்டு தடவைகள்) கிளிநொச்சியில் பணியாற்றியுள்ளேன். இப்போது அரசாங்க அதிபராக பணியாற்றுவோரில் மிக நீண்ட காலமாக (15 ஆண்டுகளாக) சேவையிலிருப்பவர்களில் நான் ஒரு சிரேஸ்ட அதிகாரியாக இருக்கிறேன். கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட என்னுடைய அரச சேவை, கிளிநொச்சியிலேயே நிறைவடைவது இன்னொரு சிறப்பம்சமாகும். 

இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு எங்கள் காலத்தையும் விட பல வாய்ப்புகளும் வசதிகளும் உண்டு. அவர்கள் எமது மாவட்டத்தை மிகச் சிறப்பாகக் கட்டியெழுப்ப முடியும். தங்களையும் சிறந்த ஆற்றலர்களாகவும் ஆளுமையாளர்களாகவும் உருவாக்கிக் கொள்ளலாம். அமைதியான காலமும் அடிப்படை வசதிகளும் தாராளமாகக் கிடைத்துள்ளது. இதைக் கொண்டு எதிர்காலக் கிளிநொச்சியையும் தங்களுடைய எதிர்கால வாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டும். 

23. கிளிநொச்சியின் வரலாற்றைச் சொல்லக் கூடியவாறு தொன்மையின் மூலங்களை உள்ளடக்கிய ஒரு மையத்தை உருவாக்குவதைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா?

நிச்சயமாக அந்தச் சிந்தனை எமக்குண்டு. என்பதால்தான் நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே “தொன்மையின் மூலங்கள்” என்றொரு நூலை வெளியிட்டோம். அது கிளிநொச்சியின் வரலாற்றைக் குறித்த அக்கறையின் வெளிப்பாடாகும். அது ஒரு ஆரம்ப முயற்சியே. அதை மேலும் விரிவாக்கி கிடைக்கின்ற சுவடிகள், ஆவணங்கள், படங்கள், தொல்லாதாரங்கள் போன்றவற்றைச் சேகரித்து ஒரு மையத்தில் வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தத் துறையில் செயற்படுவோரின் பங்களிப்புகள் இதற்கு அவசியமாகும். 

00