கருணாவின் தேர்தல் தோல்வி சொல்லும் செய்தி.!                                  கிழக்கு அரசியல்:4 (மௌன உடைவுகள் 74)

கருணாவின் தேர்தல் தோல்வி சொல்லும் செய்தி.! கிழக்கு அரசியல்:4 (மௌன உடைவுகள் 74)

— அழகு குணசீலன் —

கிழக்கு மாகாணத்தில் 2020  நாடாளுமன்ற தேர்தலில் நடக்கக்கூடாத இரு  அரசியல் விபத்துக்கள் நடந்தன. ஒன்று திருகோணமலையில் இரா.சம்பந்தர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. இரண்டாவது அம்பாறையில் கருணா தெரிவு செய்யப்படாமல் போனது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க முடிந்தது, ஆனால் கருணாவை தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்ப முடியவில்லை. இந்த இரு நிகழ்வுகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் கிழக்கு தமிழர் அரசியலில் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கங்கள் குறித்து மௌன உடைவுகள் மௌனத்தை கலைக்கின்றது.

திருகோணமலை மாவட்ட தமிழர்கள் செயற்பாட்டு அரசியலின் முக்கியத்துவத்தை புறக்கணித்து, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு பெறுமதியான “முதியோரைக் கனம் பண்ணும்” மரபுக்கு வாக்களித்ததன் மூலம் உடல்,உள செயற்றிறன் குறைந்த, அனுபவம் இருந்தும் ஆளுமை அற்ற சம்பந்தரை தேர்வு செய்தனர். அம்பாறை மாவட்ட தமிழர்கள் செயற்பாட்டு அரசியலுக்கு தேவையான இளமையும் உடல்,உள பலமும், அரசியல் தைரியமும் உள்ள, கொழும்பு அரசியலில் செல்வாக்கும் செலுத்தக்கூடிய ஆளுமையையும் கொண்ட கருணாவை நாடாளுமன்றம் அனுப்ப முடியவில்லை. 

கிழக்கு மாகாண தமிழர்களின் தனித்துவ அரசியல் பயணத்தில் இந்த இரு நிகழ்வுகளும் சமகால அரசியலில் குறிப்பிட்டு பேசப்படவேண்டியவை. ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தைவிடவும் இந்த இரு மாவட்டங்களும் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார,சமகால அரசியலில் அதிக முக்கியத்துவத்தை கொண்டவை. கிழக்கின் எதிர்கால தனித்துவ அரசியலை நிர்ணயிக்கக்கூடியவை அல்லது நிர்ணயிப்பதற்கான பலத்தை-உந்து சக்தியை மாகாணத்தின் வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் மட்டக்களப்பின் மைய அரசியலுக்கு வழங்கவேண்டியவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த மூன்று ஆண்டுகளில்  இது நடைபெறவில்லை. இதற்கு இரு மாவட்டத்திலும் பொருத்தமான தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் கொழும்பு அரசியலில் இல்லாமை முக்கியமான ஒரு காரணம். சம்பந்தரும், கலையரசனும் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன ? என்ற நிலையில் அந்த மாவட்டங்களின் தமிழ்மக்கள் கைவிடப்பட்டு இருக்கிறார்கள். 

கிழக்கு மாகாணத்தின்  வடக்கு -கிழக்காக ,மேற்கு எல்லையாக நீண்ட நிலப்பரப்பை கொண்ட இந்த மாவட்டங்களின் தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் பலமான தலைமைத்துவம், ஆளுமை, அரசியல் விழிப்பு, செயற்றிறன் பண்புகளைக் கொண்டதாகவும், மக்கள் மத்தியில் பிரசன்னமானதாகவும் இருக்கவேண்டும். இன்னொரு வகையில் முட்டாள்தனம் அற்ற ஒரு துணிச்சல்மிக்க வியூக அரசியலை அது கொண்டிருக்கவும் வேண்டும். இன்றைய சிங்கள கடும் போக்காளர்களுக்கு எதிரான அரசியலில் ஒரு வரையறுக்கப்பட்ட வகையில் அந்த  துணிச்சலை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த துணிச்சல் வெறும் கோசமாக அன்றி ஜதார்த்தத்துடன் கூடிய நடைமுறைச்சாத்தியம் சார்ந்த கொள்கை அரசியல் செயற்றிறனுக்கு  பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி அவற்றிற்கு எதிர்மாறானதாக வெறும் கோசமாக அல்ல. ஆனால் அவ்வாறான அரசியல் தலைமையின்றி இந்த இரு மாவட்டங்களும் வெறித்துக்கிடக்கின்றன . வாக்களித்த மக்கள் வானத்தைப் பார்க்கிறார்கள்.

கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் கருணா,பிள்ளையான் (ரி.எம்.வி.பி) கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ( அகில இலங்கை தமிழர் மகாசபை)  வியாழேந்திரன் இவற்றிற்கும் / இவர்களுக்கும் இடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டிருக்குமாயின் கிழக்கின் தனித்துவ அரசியலின் இன்றைய பலம் எவ்வாறானதாக அமைந்திருக்கும்?. ஒரே தேர்தல் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டு இருந்தால் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருக்கும்? இவை காலம் கடந்தாயினும் கிழக்கின் அரசியல் எதிர்காலம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய அரசியல் வியூகம். மூன்று மாவட்டங்களிலும் ஒரே அணியாக ஒரு வரலாற்று சாதனையை ஏற்படுத்தியிருக்க முடியுமா இல்லையா ?இன்று இருப்பதை விடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு கிழக்கின் செயற்பாட்டு அரசியலுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கும் அல்லவா?.

ரி.எம்.வி.பி  – படகு : 67,692 , வியாழேந்திரன் அணி  – மொட்டு :33,420, அகில இலங்கை தமிழர் மகாசபை -கருணா -கப்பல் 29,379 இவை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டும் பெற்ற மொத்த வாக்குகள் 1,30,491. ஒன்று பட்டு ஒரே சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் மட்டக்களப்பு சுயேட்சைக்குழு இல:10, மற்றும் திருகோணமலையில் அகில இலங்கை தமிழர் மகாசபை என்பன பெற்ற சுமார் இரண்டாயிரம் வாக்குகளை மேலும் அதிகரகரித்திருக்கமுடியும், வாக்குகள் வீண்விரயமாவதைத்தவித்ததிருக்க முடியும்.

 உண்மையில் கருணாபெற்ற வாக்குகளையும் சேர்த்துக் கணிப்பிட்டால் ஒற்றுமை இன்மையால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் முப்பத்தி- யோராயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் ஒரே கிழக்கு அரசியலை பேசியவர்களால் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் இவற்றையும் செல்லுபடியற்ற வாக்குகளாகவே கணிக்கவேண்டி உள்ளது. ஒரு இலட்சத்து முப்பாயிரம் வாக்குகள்  மூலம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதித்துவங்களை கிழக்கில் அதிகரித்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆகக்குறைந்தது தேசியப்பட்டியல் ஊடாக கருணாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தேவையான – பொருத்தமான தலைமையையும், அதே வேளை தமிழ்த்தேசிய அரசியலுக்கு மட்டக்களப்பை போன்று ஒரு பாடத்தையும் புகட்டி இருக்க முடியும்.

 அது நடக்கவில்லை……! அது  நடந்திருந்தால்………..!!

கிழக்கின் தனித்துவ அரசியலுக்கான ஒட்டு மொத்த அரசியல் பலம் தமிழ்மக்களுக்கு அதிகரித்திருக்கும். கருணா மீதான  அரசியல் பொதுவாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை என்பனவற்றின் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை கோத்தபாய அரசிலும், ரணில் அரசிலும் பெறக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். இது சாத்தியமாகி இருந்தால் கிழக்கில் இன்று எரியும் பிரச்சினைகளாக உள்ள கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், மட்டக்களப்பு நூலகம், மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கு இலகுவாக ஒரு தீர்வைக்காணக்கைடிய வழியை அது திறந்து விட்டிருக்க வாய்ப்புண்டு.

எப்படியும் அம்பாறை மாவட்டத்தில் கலையரசனின் பல்வேறு பலவீனங்கள், இயலாமையுடன்  ஒப்பிடுகையில் கருணாவின் அரசியல் செயற்பாடு பிரதேச செயலக விடயத்தில் பெரும் அக்கறையை பெற்றிருக்கும். கோத்தபாய, கருணா, வியாழேந்திரன் ஆகியோர் அந்த மக்களுக்கு  தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை ஹரிஷ் போன்றவர்களின் எதிர்ப்புக்கும் மேலாக செயற்படுத்தக்கூடியதாக இருந்திருக்கலாம். கருணாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்திருந்தால் கோத்தாபாயாவால் முஸ்லீம்கள் எவரும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படாத நிலையில் இந்த விவக்காரத்தை அமைச்சரவையில் அணுகுவது இலகுவாகவும் இருந்திருக்கும். இது முஸ்லீம்கள் கோத்தபாய அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படாததை நியாயப்படுத்துவதாக அமையாது.

மேய்ச்சல் தரை பிரச்சினை அம்பாறை – மட்டக்களப்பு நிர்வாக மாவட்ட எல்லைப் பிரச்சினை. இந்தப் பிரதேசம் கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு போராளிவாழ்க்கையில் நன்கு பரீட்சயமான பிரதேசம். இது குறித்து கருணாவால் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கேள்வி எழுப்பவும் நிர்வாகத்திற்கும், அரசியலுக்கும் அழுத்தம் கொடுக்கவும் முடிந்திருக்கும். கோத்தபாயாவின் விசிறியாக  ஆளுநர் அதிகாரம் செலுத்திய அம்மையாருக்கு எதிராக செயற்பட்டிருக்கவும் முடியும். மேய்ச்சல் தரை விவகாரம் ஒரு எல்லைப்பிரச்சினையும் கூட அப்படி இருந்தும் இது வரை கலையரசன் எம்.பி. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எத்தனை தடவைகள் பேசியிருக்கிறார்? நாடாளுமன்றத்தில் கூட அவருக்கு உதவ சார்ள்ஸ் நிர்மலநாதனே ஓடிவர வேண்டியுள்ளது.

மறு பக்கத்தில் கருணாவின் அமைச்சரவை வாய்ப்பு வியாழேந்திரன், சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஒரு ஆதரவாகவும் அமைந்திருக்கும். கல்முனை தமிழ் பிரதேசசெயலக விவகாரத்தை முஸ்லீம் காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிராக கருணா முழுமையாக கையில் எடுத்திருப்பார். தமிழ்த்தேசிய அரசியல் அம்பாறையில் பிரித்த வாக்குகள் முஸ்லீம் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாகவே கொள்ளவேண்டும். இதையும் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தாக கொள்ள வேண்டியதில்லை. தமிழ்த்தேசிய அரசியல் தவறை இவ்வாறு வெளிப்படையாக பேசுவதன் மூலமே கிழக்கு தமிழர் அரசியலுக்கு புரிய வைக்கமுடியும்.

மட்டக்களப்பு நூலக விவகாரம் முற்று முழுதாக கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் மறைந்த க.தியாகராசா அவர்கள் பொதுவாக கிழக்கின் கல்வி அபிவிருத்தியிலும் சிறப்பாக மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்தியிலும் அதீத அக்கறை கொண்ட ஒருவர். சிவானந்தா வித்தியாலய அதிபர் முதல் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் நிர்வாக உயர் அதிகாரியாக நிறைய கல்விப்பணிகளை செய்தவர். சுவாமி விபுலானந்தரின் கல்விக்கொள்கைக்கு செயல்வடிவம் கொடுத்தவர். அவரின் வாரிசாக மேயர் தி. சரவணபவான் கல்விக்கு அத்திவாரமாக அமைகின்ற மட்டக்களப்பின் நூலகத்திற்கு தடையாக இருப்பது  கல்வியாளர்  அமரர் தியாகராஜாவை மட்டும் அல்ல சுவாமி விபுலாநந்தரையும் அவமதிக்கும் அற்ப அரசியல் கீழ்த்தனம். 

இவருக்கு உதவியாக ரொலோ துணை மேயர் க.சத்தியசீலன் முட்டுக்கொடுத்தது ஒரு முன்னாள் விடுதலைப்போராட்ட அமைப்பின்  சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை குறித்த தறுதலைப்பார்வை. இந்த விடயத்தில் மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்தியை கவனத்தில் எடுக்காது பதவிக்காகவே ஒட்டிக்கொண்டிருந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா மட்டக்களப்பு மக்களின் நலனை விடவும் சொந்த அரசியல் நலனை முதன்மைப்படுத்தியதாகவே கொள்ள வேண்டி உள்ளது.

ரொலோவுக்கு ஒட்டுக்குழு, துரோகிகள், முகமூடிகள், இந்திய படையுடன் சேர்ந்து தர்பார் நடாத்தியவர்கள் என ஆயுதவன்முறைகளை பட்டியலிட்டு துண்டுப்பிரசுரம் வெளியிட்டு விடுவார்கள் என்பதற்காக நீங்கள் தமிழரசுக்கட்சிக்கு காட்டிய விசுவாசம் குருட்டுத்தனமானது. மட்டக்களப்பின் எதிர்கால சந்ததியை கல்விக்குருடர்கள்  ஆக்குவதற்கு ரெலோ வழங்கிய ஆதரவு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னரும் நூலகத்திற்கு நிதி ஒதுக்குவதில் இருந்த நியாயமற்ற கட்சி அரசியலை தோலுரிக்க ரெலோ தயாராக இல்லை. ஆக, இந்த பெரும் பணியை தடைசெய்ததில் பங்குதாரர்களாக இருந்து விட்டுப் போங்கள். முழு மட்டக்களப்பும் இதை அறியும். வாகன தரிப்பிடத்திற்கு அனுமதி கேட்டு நீங்கள் நடாத்திய “சவப்பெட்டி ” அரசியல் வேடிக்கையானது.

இந்த நூலகம் அனைத்து தடைகளையும் தாண்டி எழுந்து நிற்பதற்கான முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்ச்சியாக மேற்கொள்வது மட்டக்களப்பு மக்கள் அறிந்த ஒன்று. அதற்கான போதுமான ஆதரவை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் வழங்கினால் செயற்பாடுகளை அது இலகுவாக்க வழிவகுக்கும். இது விடயம் குறித்து  பல்கலைக்கழக சமூகம், கல்வியாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர் மௌனம் சாதிப்பதற்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. முதுகு எலும்புள்ள யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் மக்களின் நலனுக்கு முரணான தமிழ்த்தேசிய அரசியலை ஈவிரக்கமின்றி விமர்சிக்கிறார், என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இது தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் தலைமைகள் மட்டக்களப்பு மாவட்டத்தை விடவும் அம்பாறை, திருகோணமலையில் அதிக அக்கறைகாட்ட வேண்டும். அரசியல் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இல்லையேல் கிழக்கை மட்டக்களப்பிற்குள் குறுக்குவதாக அமைந்துவிடும். இந்த விமர்சனக்குரல் இப்போதே கேட்கத்தொடங்கிவிட்டது. அதேவேளை கிழக்கு அரசியலில் ஐக்கியம் ஒரு கட்டாய நிபந்தனை -கட்டாயத்தேவை. இதை அடைவதற்கான வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அல்லது அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்கின் தனித்துவ அரசியலை அங்கீகரிக்காத வடக்கு அரசியல் கட்சிகளை ஒரு ஐக்கியத்திற்குள் கட்டாயப்படுத்தி இழுத்து வருவதை நிறுத்தவேண்டும். இது கொள்கை சார் அரசியலுக்கு அப்பால் வெறும் தேர்தல் கால கூட்டாகவே அமையும்.  கிழக்கின் தனித்துவத்தையும், தலைமைகளையும் அங்கீகரிக்கின்ற கிழக்காரின் ஐக்கியமே இன்றைய தேவை.

மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தையும், கிழக்கின் தனித்துவ அரசியலையும் அகில இலங்கை தமிழர் மகாசபை  ஒன்றாகப்போட்டு குழப்பக்கூடாது.  டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகக்கொண்ட ஈ.பி.டி.பி. கிழக்குமாகாண மக்களின் தனித்துவத்தையும், தனியான கிழக்குமாகாண சபையையும் அங்கீகரிக்கிறது. இது தனித்து கையாளப்படவேண்டிய ஒன்று. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி , வரதராஜப் பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப். போன்றவற்றுடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்துவது கிழக்கு மக்களின் வாக்குகளை பறித்து கொடுக்கும் செயல். கிழக்கு தனித்துவ அரசியலின் கொள்கைப்பிறழ்வு.

கிழக்கின் தனித்துவ அரசியலை வெறுமனே பதவிகளையும், கதிரைகளையும் கொண்டு மதிப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிப்படை ஜனநாயக உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லை. இவற்றிற்கு அப்பால் கிழக்கு தனித்துவம் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, பண்பாட்டு அம்சங்களையும், பாரம்பரியங்களையும் பேசுவதாகவும், பாதுகாப்பாகவும் அமைய வேண்டும்.

தொடரும்………..!