— சபீனா சோமசுந்தரம் —
அதற்கு மேல் அங்கு நின்று வாதாடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை பணத்தை விட கொள்கை தான் முக்கியம் என்று நினைப்பவன். அதனால் அங்கிருந்து வெளியேறி பைக்கில் ஏறி அமர்ந்து பைக்கை முறுக்கினான்.
அவனின் கோபம் கைகளின் வழியாக இறங்க முறுக்கிய வேகத்தில் அவனது பைக் அந்த பிரதான வீதியில் சீறிப்பாய்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பரபரப்பான வியாபார நகரம் அது. அதனாலேயே பல ஊர் பக்கங்களிலிருந்தும் அங்கு வந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதுண்டு.
பிரவீனும் அப்படித் தான் என்ன வாங்குவதென்றாலும் அங்கு தான் வருவான். அவன் ஒரு கிராமத்தானாக இருந்தாலும் கூட தொழில்நுட்பத்தை தன் கைவிரல்களில் வைத்திருந்தான். விவசாயம் செய்யும் தன் தந்தைக்கு உதவ வயலில் நின்றாலும் அவனுடைய துறை தொழில்நுட்பம் தான்.
கம்பியூட்டரோடு அப்படி ஒரு காதல் அவனுக்கு என் காதலியும் என் கடவுளும் என் வேலை தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்வான்.
அப்படிப்பட்ட தன்னை ஒருவன் ஒரு பென்டிரைவ் விடயத்தில் ஏமாற்றி விட்டான் என்பதை நினைக்கும் போது அவனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை.
கடந்த மாதம் அவன் வழமையாக பொருட்களை வாங்கும் அந்த கடையில் ஒரு பென்டிரைவ் வாங்கியிருந்தான். ஆனால் அது ஒரு வாரத்திலேயே பழுதாகிவிட மீண்டும் அந்தக் கடைக்கு கொண்டு சென்று அதை மாற்றி தரும்படி கேட்டான்.
அதற்கு அந்த கடைக்காரர் ‘தம்பி ஸ்டொக் இல்ல ரெண்டு கிழமையால வாங்கி மாத்தலாம்…’ என்று சொல்ல அவனும் சரியென்று வந்துவிட்டான்.
அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து இன்று மீண்டும் அந்த கடைக்கு சென்று பென்டிரைவ்வை மாற்றி தரும்படி கேட்டான்.
கடைக்காரர் பென்டிரைவ்வை வாங்கி பார்த்து விட்டு தம்பி இந்த பிராண்ட் பென்டிரைவ்ல ஒரு ஸ்டிக்கர் இருக்கும்.. அது இல்லாமல் மாத்த முடியாது’ என்று சொல்லவும்
‘அண்ணா அன்டைக்கு இதைத் தானே வாங்கி பாத்திட்டு ரெண்டு கிழமையால வாங்க என்டு சொன்னீங்க.. அதோட இதை நான் வாங்கும் போது இதில நீங்க சொல்லுற மாதிரி ஸ்டிக்கர் எதுவும் இருக்கல…’ என்றான் அவன்.
‘இல்ல தம்பி அப்படி ஒரு ஞாபகம் எனக்கு இல்ல.. இங்க பாருங்க இந்த பென்டிரைவ்ல ஒரு ஸ்டிக்கர் இருக்கும்.. ஆனா இதுல இல்ல..’ என்று கடைக்காரர் வாதிட்டார்.
இதற்கு அவன் ‘அண்ணா.. இந்த பிராண்ட்க்கு அப்பிடி ஸ்டிக்கர் எல்லாம் அடிச்சு வாற இல்லை… நீங்க தரும் போதே இப்பிடி தான் தந்தநீங்க…’ என்றான்.
ஆனால் கடைக்காரர் பிடிவாதமாக இருந்தார். அவர் ஒரு 4000ரூபாய் பொருளுக்காக தன்னை ஏமாற்ற நினைக்கிறார் என்று அவனுக்கு புரிந்தது.
போய் தொலையட்டும் என்று நிiனைத்து அங்கு நின்று வாதாட விருப்பம் இல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் அவன்.
பைக்கை வேகமாக முறுக்கிகொண்டு விரைந்த பிரவீனுக்கு மனம் சமாதானம் ஆகவேயில்லை.
போனால் போகட்டும் 4000 ரூபாய் தானே என்று விட்டு விடலாம் ஆனால் இது தொழில்நுட்பத்தை பற்றியும் அதன் பொருட்களை பற்றியும் நன்றாக தெரிந்த என்னையே இப்படி ஏமாற்றும் இவர் இதை பற்றி தெரியாதவர்களை எப்படி ஏமாற்றுவார் என்று ஆத்திரமாக இருந்தது.
பைக்கை வளைத்து திருப்பி பொலிஸ் நிலைய வளாகத்தினுள் பைக்கை கொண்டு போய் நிறுத்தினான்.
உள்ளே சென்று முறைப்பாடு எழுதுகிறவரிடத்தில் முறைப்பாடு செய்தான்.
அதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எழுதும் கான்ஸ்டபிள் ‘தம்பி இந்த சின்ன விசயத்துக்கு கம்ளைன்ட் எழுதோனுமோ..’ என்று கேட்டார்.
‘ஓம் சேர் எழுதுங்க.. அந்தக் கடை அடுத்த ரோட்டுல தான் இருக்கு.. அவர கூப்பிட்டு விசாரிங்க…’ என்று பிடிவாதமாக சொல்லி தான் அந்த பென்டிரைவ்வை அந்த கடையில் தான் வாங்கினேன் என்பதற்குரிய பில் ஆதாரங்களையும் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் அவன் பென்டிரைவ் வாங்கிய கடைக்காரர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்.
அவன் இப்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இருவரிடமும் அங்கு விசாரித்த போது கடைக்காரரில் தவறு இருப்பது உறுதியாகியது.
‘சேர் பிஸினஸ் செய்யிற இடம்…. ஆயிரம் கஸ்டமர்ஸ் வருவாங்க… அதில ஒன்டு ரெண்டு இப்பிடி நடக்கிறது சகஜம் தானே சேர்….’ என்றார் கடைக்காரர் பொலிஸ் அதிகாரியிடம்.
‘சரி பிழை உங்கட சைட் பிழை என்டபடியால தம்பியோட கதைச்சு ஒரு முடிவுக்கு வாங்க…’ என்றார் பொலிஸ் அதிகாரி.
உடனே அவனை பார்த்து ‘தம்பி கொண்டு வாங்க பென்டிரைவ்வை மாத்திட்டு உங்க காசை ரிட்டன் தாறன்…. பிஸினஸ் நடக்கிற இடம் தானே தம்பி …’ என்றார் கடைக்காரர் பக்குவமாக.
‘இல்ல அண்ணன் எனக்கு தேவையில்ல…. அந்த காசை நான் ஒரு மணித்தியாலத்தில உழைச்சிடுவன்… ஆனா நீங்க இனிமேல் இப்பிடி யாருக்கும் செய்யக் கூடாது… அது தான் எனக்கு வேணும்…’ என்றான்.
‘இதுக்கா தம்பி இந்த கம்ளைன்ட் எல்லாம்…’ என்று கேட்டு புன்னகைத்தார் கான்ஸ்டபிள்.
‘ஓம் சேர்…’ என்று சொல்லிவிட்டு
கடைக்காரரிடம் திரும்பி ‘இந்தாங்க இதையும் நீங்களே வச்சுக்கொள்ளுங்க…’ என்று சொல்லி அந்த பென்டிரைவ்வை அவர் கையில் திணித்துவிட்டு உதட்டில் புன்னகையோடு அங்கிருந்து வெளியேறினான் பிரவீன்.