நூலகர் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்”

நூலகர் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்”

 — சீவகன் பூபாலரட்ணம் — 

இலங்கையில் 1974 வது ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிகழ்வுகள் குறித்த ஆவண நூலாக இதனை நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்துள்ளார்.

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்த நான்காவது இலங்கை மாநாடு, 1974 ஜனவரி 3 ஆம் திகதி தொடங்கி ஆய்வுகளின் நிகழ்வுகளாக 9 ஆம் திகதி வரை நடந்து, பொதுமக்கள் நிகழ்வாக 10 வது நாளும் நீடிக்கப்பட்டது. அன்றைய தினம் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் பலனாக பலர் கொல்லப்பட்டு அந்த மாநாடு சோகமாக முடிவடைந்தது.

அகில உலக தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் மூன்று மாநாடுகளும் முறையே மலேசியா, தமிழகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடந்து முடிந்திருக்க, இந்த நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று பிரான்ஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இலங்கை அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையிலான போட்டி காரணமாக அதை யாழ்ப்பாணத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த இரு தரப்புக்கும் இடையிலான இழுபறிகள் இந்த மாநாட்டை பெரும் உயிர்ச்சேதத்துடன் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. இவை பற்றிய ஆவணப்பதிவாக செல்வராஜா அவர்கள் “நினைவுகளே எங்கள் கேடயம் என்னும் இந்த நூலை ஆக்கியுள்ளார்.

அந்த மாநாடு குறித்த பத்திரிகைக்குறிப்புகள், கட்டுரைகள், உரைகள் போன்றவற்றைக் கொண்டு இந்த ஆவணப்பதிவை அவர் செய்துள்ளார். மாநாட்டின் இறுதி நாளன்று பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கான காரணம் என்ன, யார் அதற்கு பொறுப்பு என்பன குறித்த தகவல்களை பதிவு செய்வதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு இந்த நூல் ஆக்கப்பட்டிருந்தாலும், அதில் மேலும் பலவிதமான விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

இந்த ஆவண நூலில் முன்பகுதியில் மாநாட்டு ஏற்பாடுகளுக்கான முன்முயற்சிகள், அதற்கு முன்னர் நடந்த மாநாடுகளின் பின்னணி, தமிழாராய்ச்சி மன்றம் உருவாக்கப்பட்ட சூழ்நிலை ஆகியவை குறித்த செய்திகளும்,கட்டுரைகளும், உரைகளும் இடம்பெறுகின்றன. இவை ஒரு தமிழாராய்வு மாநாட்டுக்கான அன்றைய தேவையை துலாம்பரமாக எடுத்து இயம்புகின்றன. அதுமாத்திரமன்றி இலங்கையில் பிறந்து, மலேசியாவில் அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்த தனிநாயகம் அடிகளார் இந்த மன்றத்தை உருவாக்குவதற்கும், இதுபோன்ற மாநாடுகளை மிகவும் தரம்மிக்க ஆய்வு மாநாடுகளாக நடத்தி முடிப்பதற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் விளக்குகின்றன. அவரின் இந்த முயற்சிகள் எந்த அளவுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைந்தன, அவை உள்ளூர் அரசியல் குழறுபடிகளால் எந்த அளவுக்கு சிதறடிக்கப்பட்டன என்பவை குறித்தும், இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் அலசுகின்றன.

இந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசாங்கத்தரப்புக்கும் தமிழ் தேசியவாதிகள் தரப்புக்கும் இடையே நடந்த இழுபறிகளையும் இதில் இடம்பெற்ற பதிவுகள் மூலம் விபரமாக அறிய முடிகிறது. 

அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டிகளும், அரசியல் ஓட்டங்களும் எவ்வாறு இருந்த போதிலும் யாழ்ப்பாண மக்கள் இந்த மாநாட்டை தமது வீட்டு நிகழ்வு ஒன்று போலவே பிரயாசையுடன்  கொண்டாடி இருக்கிறார்கள். யாழ் நகரமே விழாக்கோலம் கொண்டு ஒரு பொதுமக்கள் நிகழ்வு போலவே மாநாடு நடத்தப்பட்டிருக்கின்றது. மாநாட்டு ஏற்பாட்டாளர்களும் முடிந்த அளவு மாநாட்டை ஒரு தரமான ஆராய்ச்சி மாநாடாக நடத்தி முடிக்க பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளின் போட்டி ஓட்டங்கள் மாநாட்டை ஒரு கொலை நிகழ்வாக முடியச் செய்துள்ளன.

அதேவேளை, தமிழகத்தில் இருந்து மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்திருந்த இரா. ஜனார்த்தனம் என்னும் செயற்பாட்டாளிரின் பிரசன்னமும் ஒருமாதிரி நெருடலை  ஏற்படுத்தத்தயங்கவில்லை.

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான பத்திரிகைகளில் வந்த குறிப்புகளும் சில கட்டுரையாளர்களின் எழுத்துக்களும் வெறும் உணர்ச்சி ஊட்டுவனவாகவும், வன்முறைக்கு தூண்டுவனவாகவும் இருந்ததையும் நூலில் வெளியான குறிப்புகளின் மூலம் உணரமுடிகிறது. ஆனால், மறுபுறம் சில மாற்று சஞ்சிகைகளின் குறிப்புகள் நல்ல தகவலைத்தர முயலுகின்றன.

மொத்தத்தில் தனிநாயகம் அடிகளார் போன்ற பெருந்தகைகளின் முயற்சியால் ஏற்பாடான இப்படியான ஒரு உன்னதமான மாநாடு, உள்ளூர் அரசியல்வாதிகளின் மற்றும் வித்தகர்களின் சுயநல நடவடிக்கைகள் காரணமாக சீர்குலைக்கப்பட்டு அவலத்தில் முடிந்ததை உணரக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் நடந்த 4 வது உலகத் தமிழ்ராய்ச்சி மாநாடு நடந்து முடிந்த பின்னரான கடந்த 50 வருடங்களில் இந்த மாநாட்டு நிகழ்வுகளின் பதிவாக வந்த மிகவும் முக்கிய நூலாக இது அமைந்துள்ளது என்று கூறலாம். நூலின் ஆசிரியர் செல்வராஜா அவர்களும், ஒரு ஆவணப்பதிவுக்கான இந்த நூலை ஒரு நாவலைப்போல ஆர்வத்துடன் படிப்பதற்கு ஏற்றவகையில் தொகுத்திருக்கிறார்.