கிழக்கு அரசியல்:3  அபிவிருத்தியும் – உரிமையும்….!          (மௌன உடைவுகள்-73)

கிழக்கு அரசியல்:3 அபிவிருத்தியும் – உரிமையும்….! (மௌன உடைவுகள்-73)

 — அழகு குணசீலன் —

2020 இல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கிழக்கின் சமூக, பொருளாதார,அரசியல்  அடித்தளத்தின் பழமையை -பழையபல்லவியின் திசையை சுழற்றியடித்த சூறாவளியும், சுனாமியுமாக  அமைந்தது. மாற்றம் ஒன்றே மக்களின் இயங்குநிலை அரசியல் என்று மாற்றத்திற்கான புதியபாதையை கிழக்கு மக்கள் சுயநிர்ணயம் செய்த வரலாற்று பதிவு. பாரம்பரிய -பழம்பெருமை தமிழர் அரசியலை கிழக்குமாகாணத்தின், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்கள் தெட்டத் தெளிவாக தூரத்தூக்கி எறிந்த நாள். கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவ அரசியல், அதற்கான தலைமைத்துவம்  என்பனவற்றிற்கு அங்கீகாரம் வழங்கியநாள் 25.ஏப்ரல்.2020.

இந்த தேர்தல் அபிவிருத்திக்கும், உரிமைக்கும் இடையிலான பிரச்சாரப்போராகவே இடம்பெற்றது. தேசியக் கட்சிகள், பிராந்திய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழர்  மகாசபை, (கிழக்கு தமிழர் கூட்டமைப்பு), மற்றும் கிழக்கை முதன்மைப்படுத்திய சுயேட்சை குழுக்களும் அபிவிருத்தியின் தேவையை வலியுறுத்தி மக்கள் மத்தியில் சென்றன. தமிழரசுக்கட்சி -தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட மற்றும் தமிழ்த்தேசியம் என்ற வார்த்தையை தேர்தலுக்காக மட்டும் பிரச்சார யுக்தியாக கட்சி பெயரில் சேர்த்துக்கொண்ட   வடக்குதலைமைகளயும், கட்சிகளையும் பகுதியாகவும், முற்றாகவும் நிராகரித்த தேர்தல் இது.

இதன் மூலம் அபிவிருத்தியா? உரிமையா? என்று தேர்தல் மேடைகளில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் அபிவிருத்தியே என்று வாக்குகளால் உரத்து குரல் கொடுத்தனர். இன்று தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் இந்த அபிவிருத்தியும், உரிமையும் எந்தளவு அடைவை பெற்றுள்ளன? இருதரப்பினரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றி உள்ளனர்? அல்லது ஆகக்குறைந்தது இந்த மூன்று ஆண்டுகளில் இவர்களின் இலக்கு நோக்கிய அரசியல் பயணத்தில் எவ்வளவு தூரத்தை கடந்துள்ளனர்  ? இன்னும் கடக்கவுள்ள தூரம் எவ்வளவு? என்ற கேள்விகளுக்கு  மௌன உடைவுகள் விடை தேடுகிறது.

அபிவிருத்தியும், உரிமையும் பாராளுமன்ற அரசியலில் தனித்தனியான  இருவேறு பாதைகள் அல்ல. ஒன்றில் இருந்து ஒன்றை திட்டவட்டமாக பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த கலவை. இந்த குழப்பத்தை தமிழ் அரசியல்வாதிகளிடம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனால் தான் தமிழர்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூவும் தமிழ்த்தேசிய அரசியல் பாராளுமன்றத்திற்கு வெளியே வந்து வீதியில் உரிமைக்காக போராட்டம் நடாத்துகிறது. மறுபக்கத்தில் அபிவிருத்தி அரசியலை செய்கின்ற கிழக்கின் தனித்துவ தலைமைகள் உரிமைகள் தொடர்பான விடயங்களில் சற்று கண்டும் காணாதது போன்று அடக்கி வாசிக்கின்றனர். அபிவிருத்திக்கோரிக்கை தமிழ்மக்களின் உரிமைக்கோரிக்கை என்பதையும், உரிமைக்கோரிக்கை தமிழர்பிரதேசங்களின் அவிவிருத்திக்கானது என்பதையும் தமிழ்த்தேசிய அரசியலும், பிராந்திய அரசியலும்  சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த இரு நிலைப்பாடுகளையும் ஒரு தரப்பினர் இணக்க அரசியல் மூலமும், மறு தரப்பினர் எதிர்ப்பு அரசியல் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இணக்க அரசியலில் அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்பு தமிழ்மக்களின் உரிமைகள் குறித்த பலவீனமாக அமைகிறது. அதுபோன்று எதிர்ப்பு அரசியலில் எடுத்ததற்கெல்லாம் வீதியில் இறங்குவது அபிவிருத்திக்கான இணக்க அரசியல் கதவை மூடி வெறும் முரண்பாட்டு -எதிர்ப்பு   பலவீனமான அரசியலை வளர்த்து விடுகிறது. இதனால் இறுதியில் நாடாளுமன்ற ஜனநாயக கட்சி அரசியலில் பேச்சு வார்த்தை மூலமே தீர்வைக்காணவேண்டிய நிலைக்கு எதிர்ப்பு அரசியலும் தள்ளப்பட்டு விடுகிறது.  அப்போது அவர்களும் இணக்க அரசியலுக்குள் நுழைகிறார்கள். 

அப்படியானால் எடுத்ததற்கெல்லாம் வீதியில் இறங்குவது பிரச்சினைக்கான தீர்வைக்காண சரியான வழியா?  ஏனெனில் இறுதியில் பேசித்தான் தீர்வைக்காணவேண்டி உள்ளது அல்லது  காணமுடியாமலும் போகிறது. மொத்தத்தில் வீதி எதிர்ப்பு “போராட்டங்களால்” கடந்த மூன்று ஆண்டுகளில் தீர்வு காணப்பட்ட பிரச்சினைகள் எத்தனை? பேசித்தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் எத்தனை?

மறுபக்கத்தில் இணக்க அரசியலில் பிரச்சினைகளை பேசி முரண்பாடுகளை வளர்க்காது சம்பந்தப்பட்ட மறு தரப்புடன் பேசி தீர்வு காண முற்படும் அரசியல் வியூகம் மக்களை எட்டாத நிலையில் உள்ளது.

இதனால் ஆர்ப்பாட்ட அரசியல் விளம்பரப்படுத்தப்படும் அளவுக்கு இணக்க அரசியல் வியூகங்கள் மக்களை எட்டுவதில்லை. அதுவும் சமூக ஊடகங்களால் கட்டியாளப்படும் இன்றைய உலகில் இந்த போக்கு அதிகரித்துள்ளது.

அபிவிருத்தி, உரிமை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் வெளிப்படையாகவும், சத்தமாகவும் மோதிக்கொள்வது போன்று கொழும்பு அரசுக்கு எதிராக பேசுவதில் ஒரு சமநிலையைப்பேணுவதில்லை. இது கிழக்கில்  நீண்டகாலமாக உள்ள அபிவிருத்தி, உரிமை சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தடையாக அமைகிறது. கிழக்கில் இருசமூகங்களும் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளை அணுகுவதில் கூட ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும், தனித்து ஓடும் வெளிப்படைத்தன்மையற்ற நிலவரம் தொடர்கிறது.

தமிழ்த்தேசிய அரசியலின்  உரிமைக்கோரிக்கைகள் தேர்தல் மேடைகளில் பல்வேறு வடிவங்களில் ஒலித்தன. இவற்றிற்கு இடையே ஒருங்கிணைந்த பொதுவேலைத்திட்டம் அல்லது பொதுவான தீர்வு அணுகுமுறைகள் எதுவும் இன்றுவரை இல்லை.

* ஒருநாடு இருதேசம்.

* முழுமையான சமஷ்டி.

* பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை -சர்வஜனவாக்கெடுப்பு.

*இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு மேலான முழுமையான அதிகாரப்பகிர்வு.

*13 பிளஸ்.

*வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் இணப்பு.

*தமிழ்இனப்படுகொடுகொலை, சர்வதேச விசாரணை, மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தை அணுகுதல்.

* இவை மறுக்கப்பட்டால் ஆயுதப்போராட்டம் தொடரும், தனித்தமிழ் ஈழமே ஒரே தீர்வு.

*பயங்கரவாததடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலை,காணமல் ஆக்கப்பட்டோர்  பிரச்சினைக்கு தீர்வு….

*சிங்கள, பௌத்த பேரினவாத அரசை முடக்குவோம், வீழ்த்துவோம்.

இப்படி இன்னும் எத்தனையோ…!  மேடை இடி முழக்கங்கள்…!

இறுதியில் அரசியல் சுயத்துவத்தை இழந்து இந்தியாவே வா…வா…! அமெரிக்காவே வா….வா….!  

ஒரு கடிதம் எழுத ஒன்பது சண்டைகள் ! ஒரு சந்திப்புக்கு நானா? நீயா? வெட்டி ஓட்டம்.

இவை அரசியலில் இயலாமையின் வெளிப்பாடுகள்.

இவற்றின் பால் கவரப்பட்டு வாக்களித்த மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியல் எவற்றை பெற்றுக்கொடுத்து இருக்கிறது.?  எந்தளவுக்கு இலங்கையிலும், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் இந்த இலக்குகள் முன் நோக்கி நகர்ந்திருக்கிறது?

இவை முற்று முழுதாக அடையப்படாத இலக்குகள். இன்னும் சொல்லப்போனால் பலவீனமான தமிழ்த்தேசிய அரசியலில் இவற்றில் பெரும்பாலானவை அடையப்படமுடியாத வெறும் கோசங்கள். பூகோள அரசியல் ஜதார்த்தம் கொண்ட நடைமுறைச்சாத்நியமான கொள்கைகள் அல்ல. அதனால் தான் அவர்களால் 2020 முதல் இன்று வரை ஒரு சாணும் நகர முடியவில்லை. இது தமிழ்த்தேசிய அரசியலின் பாரிய பின்னடைவும் பலவீனமுமாக வெளிப்பட்டிருக்கிறது.

இந்த தமிழ்த்தேசிய பின்னடைவை கிழக்கை முதன்மைத்படுத்தும் தனித்துவ அரசியல் பயன்படுத்தி இருக்கிறதா? அபிவிருத்திக்கும், உரிமைக்கும் இடையே ஒரு சமநிலையைப்பேணி இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஒன்றை இழந்து ஒன்றை பெறுகின்ற அரசியலே தொடர்கிறது. பேரம்பேசும் அரசியலில் இழப்பும்,பெறுகையும் விட்டுக்கொடுப்பு என்ற “நாணயத்தின்” இருபக்கங்கள் எனினும் அபிவிருத்தி பெறுகையை விடவும் உரிமைசார்  விட்டுக்கொடுப்பும் – இழப்பும் தராசில் ஒருபக்கத்தட்டை தாழ்த்தி விடுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சர்வதேச  போர் சூழல், பூகோள அரசியல், கொரோனா தொற்று என்பனவற்றை  கருத்தில் எடுத்து நோக்குகையில் கிழக்கின் இரு தமிழ் இராஜாங்க அமைச்சர்களின் அபிவிருத்தி செயற்பாட்டு அரசியல் அவ்வளவு மோசமானதாக இல்லை என்றே கூறவேண்டும். ஒப்பீட்டளவில் மற்றைய தமிழ்ப் பிரதேசங்களை விடவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இது குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

பல கிராமிய சிறிய, நடுத்தர திட்டங்கள் எழுவான்கரை – நகர மக்களைப் பொறுத்தமட்டில் முக்கியமற்றதாக உள்ளபோதும், கடந்த 30 ஆண்டு கால போரில் பாரிய  சமூக, பொருளாதார இழப்புக்களைச்சந்தித்த படுவான்கரை -பின்தங்கிய கிராமங்களுக்கு இந்த முதலீடுகள் சிறு துளி பெரு வெள்ளம். கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளுக்குள் அதிகம் முடங்கியிருந்த இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது பட்டிருப்பு தொகுதியின் இரு நிலப்பரப்பிலும் பரவல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இலங்கையின் மற்றைய மாவட்டங்கள் எதிலும் இல்லாத அளவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ்த்தேசிய உரிமை அரசியல் பல தடைகளை போட்டிருக்கிறது. கிழக்கில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இந்த நிலை இல்லை கலையரசன், சம்பந்தர் எம்.பி.க்கள் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. சிங்கள அபிவிருத்தி குழு தலைவர்கள் அனுரகுமார,சஜீத் அணிகளில் இருந்து கூட இந்தளவு எதிர்ப்பையும், தடைகளையும்  மாவட்ட அபிவிருத்தி தலைமைகள் சந்திக்கவில்லை.  வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அங்கையன் இராமநாதனும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களை அமைதியாகவும், ஒழுங்காகவும் நடாத்த முடியாத சூழல் ஏற்படுத்தப்படவில்லை. 

அப்படியானால் மட்டக்களப்பில் நடந்தது/ நடப்பது தமிழரசுக்கட்சியின் கொள்கை சார்ந்ததா? இல்லை தனிநபர் அரசியல் இலாபம் சார்ந்ததா? தமிழரசுக்கட்சியின் தலைவர், செயலாளர் தெரிவுகள் இந்த கேள்விக்கு தமிழ்த்தேசிய சக  அரசியல்வாதிகளால் பதிலளிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது வரை ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காது பின்னால் நின்றவர்கள் இப்போது ” எல்லா இடங்களிலும்,எல்லா சந்தர்ப்பங்களிலும் சண்டை பிடிப்பது அரசியல் அல்ல” என்று பேச முன்வந்துள்ளனர். இதை இவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் அது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் குறைந்த பட்சம் ஒரு “நாகரிக அரசியலை” அடையாளப்படுத்தியிருக்கும். அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், வீண்பழி களையும், வன்முறைகளையும் குறைந்திருக்கும்.

2023 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1000 மில்லியன் ரூபா ,1162 திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. மறுபக்கத்தில் 2024 இல் முதற்கட்டமாக 287 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு இருக்கிறது . இவை முக்கியமாக சுற்றாடல் பாதுகாப்பு, சூரிய மின்சக்தி, புளுகுநாவ மீன் குஞ்சு வளர்ப்பு, கிராமிய வீதி அபிவிருத்தி, மட்டக்களப்பு வாவியில் உல்லாசப்பிரயாண ஊக்குவிப்பு என்று அறிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவதல்ல இன்றைய தேவை. மாறாக மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வழிவகுத்து கொடுப்பதாகும். எந்த ஒரு அபிவிருத்திக்கும் கிராமிய பொருளாதார, சமூக அபிவிருத்தியே அடிப்படையானது.அவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவற்றிற்கான உட்கட்டமைப்பு நிர்மாணத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

எது எப்படியோ அபிவிருத்தி சார் அரசியல் உரிமைகள் தொடர்பாக மௌனிப்பதும், உரிமைசார் அரசியல் அபிவிருத்தி தொடர்பாக ஒத்துழையாமை அரசியலை செய்வதும் மட்டக்களப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு -அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரானவை என்பதை இருதரப்பும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  இதை மக்கள் நன்கு அவதானிக்க கூடிய மூன்று களங்கள் கிழக்கில் இருக்கின்றன. ஒன்று மட்டக்களப்பு பொது நூலகம்,மற்றையது மேய்ச்சல்தரை, அடுத்தது கல்முனை பிரதேச செயலகம்.

(தொடரும்…..!)