சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

— கருணாகரன் —

நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திருக்கிறார் சிறிதரன். அவர்களும் புதிய தலைவருக்கான வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல தமிழக முதல்வருக்கும் புதிய தலைவர் என்ற அடிப்படையில் சிறிதரன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருந்து விடுதலையாகி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உதவும்படி கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இப்படி கட்சிக்கு வெளியே தலைவராகச் செயற்படும் சிறிதரனால், கட்சிக்குள்ளே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் (யாப்பின் பிரகாரமும் நடைமுறையிலும்) கொண்டுவர முடியவில்லை. 

இதற்குப் பிரதான காரணம், செயலாளர் குறித்த பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை (பிணக்கினை) கையாள்வதில் சிறிதரனுக்குள்ள தடுமாற்றமேயாகும். இதுவே செயலாளர் பிரச்சினை மேலும் நீடித்துச் செல்லக் காரணமாகியுள்ளது. 

தெரிவின் அடிப்படையில் செயலாளராகக் குகதாசனை ஏற்றுத் தன்னுடைய தலைமையில் தேசிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டிருந்தால் இந்தளவு சிக்கலுக்குள் சிறிதரன் சிக்கியிருக்க மாட்டார். தமிழரசுக் கட்சியும் சீரழிவு நிலைக்குள்ளாகியிருக்காது.

இதனால்தான் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படாமலும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறாமலும் தள்ளிப்போகின்றன. இவற்றைத் தீர்மானிப்பதில் இன்னும் பழைய தலைவரான மாவை சேனாதிராஜாவின் கரங்களே வலுவானதாக உள்ளன. அதாவது இப்படி இவை தள்ளிப் போவதால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் மாவை சேனாதிராஜாதான் உள்ளார் என்ற ஒரு தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது. அவ்வாறே சத்தியலிங்கமே இன்னும் பதில் செயலாளர் என்றமாதிரியும் தோன்றுகிறது. புதிய செயலாளர் விவகாரம் பற்றிய விடயத்தை சத்தியலிங்கத்தின் வீட்டில் வைத்துப் பேசியது இதற்கொரு உதாரணம். 

சட்டப்படி (யாப்பின்படி) பொதுச்சபையின் வாக்கெடுப்பில் திருகோணமலையைச் சேர்ந்த திரு. குகதாசன் (27.01.2024) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் ஒருபிரிவினர் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்தும் வருகின்றனர். செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனைச் சமாளிப்பதற்கு சிறிதரன் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வவுனியாவில் கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான சந்திப்பொன்று நடந்தது. அதில் முதலாண்டு குகதாசனும் அடுத்த ஆண்டு ஸ்ரீநேசனும் பதவி வகிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. 

 அதற்குப் பின்பும் தமிழரசுக் கட்சிக்கான செயலாளர் யார் என்பது இன்னும் மங்கலான – குழப்பமான நிலையிலேயே உள்ளது. இந்தப் பத்தி எழுதப்படும் 15.02.2024 மாலைவரையில் இந்த நிலைமையே நீடிக்கிறது. மட்டுமல்ல, இப்போது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை குகதாசனை ஏற்றுக் கொள்ள முடியாது. பதிலாக ஸ்ரீநேசனையே செயலாளராக அமர்த்துங்கள் என்று சிறிதரனுக்கு ஸ்ரீநேசனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக யாப்பை முன்னிறுத்திச் சிறிதரனால் பதிலளித்திருக்க முடியும். அதுதான் சரியானதும் கூட. அப்படிச் செய்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது.

இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம். ஏ. சுமந்திரன் தெளிவாகக் கூறியிருக்கிறார். 

யாப்பின்படியும் பொதுச்சபை உடன்பாட்டுடனும் பகிரங்க வெளியில் நடந்த விடயங்களை மறுத்துச் செயற்படுவதும் யாப்பை மீற முயற்சிப்பதும் பாரதூரமான விடயங்களை உருவாக்கும் என்று சுமந்திரன் எச்சரித்திருக்கிறார். 

ஆனாலும் சிறிதரனோ இதற்குத் தீர்வு காண முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மாவை சேனாதிராஜா, சம்மந்தன் என மூத்த தலைவர்களை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று முயற்சிக்கிறார் போலுள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. 

இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும். 

இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன். 

இப்பொழுதுதான் அவருக்குப் பொறுப்புக் கிடைத்துள்ளது. அதுவும் தலைமைப்பொறுப்பு. அதை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிதரன் தன்னைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். 

சிறிதரன் தலைமைப் பதவிக்குத் தெரிவாகும்போதே பிரச்சினை உருவாகி விட்டது. வழமைக்கு மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, இந்தத் தடவை போட்டியின் மத்தியில் நடைபெற்றது. மட்டுமல்ல, தொடர்ந்து செயலாளர் தெரிவும் போட்டியில்தான் நிகழ்ந்தது. அப்படி நிகழ்ந்த பிறகும் அது தீராப் பிரச்சினையாகத் தொடருகிறது என்றால் சிக்கலின் மத்தியில்தான் சிறிதரனின் தலைமைப் பொறுப்பு உள்ளது. இதற்கு சிறிதரன் கடுமையாக உழைக்க வேண்டும். மிக நிதானமாகச் செயற்பட வேண்டும். தன்னுடைய அணியை மட்டுமல்ல, எதிரணியினரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்வது அவசியம். அவை நீதியான, நேர்மையான முறையில் அமைய வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவது முக்கியமானது.

ஆனால், சிறிதரனின் குணவியல்பும் அணுகுமுறையும் (Character and attitude) எப்போதும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஏற்றதல்ல. அவர் எப்போதும் எதையும் தடாலடியாகப் பேசுகின்றவர். அப்படியே செயற்படுகின்றவர். முன் யோசனைகளின்றி வார்த்தைகளை விடுகின்றவர். பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்படித் தான் சொல்லவே இல்லை என்று மறுப்பவர். பொய்ச் சத்தியம் செய்கின்றாரே என்று சிலரைச் சொல்வார்களே, அப்படியான ஒருவராகவே சிறிதரன் இருந்திருக்கிறார். 

இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, படித்து, பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியபோதும் அவருடன் கூடப்படித்த, இணைந்து பணியாற்றியவர்களில் பாதிக்கு மேற்பட்டோரைக் கையாள முடியாமல் எதிர்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். ஒட்டுமொத்தமான கிளிநொச்சிச் சமூகத்தை இரண்டாகப் பிளவுறச் செய்தே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார். அரசியலுக்கு அப்பால் இணைந்து செயற்பட முடியாத ஒரு நிலையை கிளிநொச்சியில் சிறிதரன் உருவாக்கியிருப்பது பகிரங்கமான உண்மை. விவசாய அமைப்புகள், கலை, இலக்கியத் தரப்புகள், கூட்டுறவாளர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைத்திலும் இந்தப் பிளவைக் காணலாம். 

கிளிநொச்சியில் உள்ள அளவுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள பிற மாவட்டங்களில் இந்த மாதிரிப் பிளவுகளும் மோதல்களும் இல்லை. பலரும் இந்த நிலையைக் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.  

தேர்தல் மேடைகள் தொடக்கம் இலக்கியக் கூட்டங்கள் உட்பட பொது இடங்கள் வரையிலும் பிறரை அவமதித்தும் தூற்றியும் வந்திருக்கிறார் சிறிதரன். அவரை அடியொற்றி அவருடைய அடுத்த நிலையில் உள்ளவர்களும் இதைத் தொடருகின்றனர். இந்தளவுக்கு (இப்படியான ஒரு அரசியலை) வேறு எந்தத் தமிழ் அரசியற் தரப்பினரும் இப்போது செயற்படுவதில்லை. துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் வெளியைப் பிளவுறுத்தி வைத்திருப்பவர்கள் இருவர். ஒருவர் உதயன் பத்திரிகையின் பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சரவணபவன். மற்றவர் சிறிதரன். சரவணபவன் கட்சியிலிலும் அரசியலிலும் மிகப் பின்னடைந்து விட்டார். சிறிதரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். 

தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தன்னுடைய கட்சிக்குள்ளேயே ஆட்களை நோக்க முடியாது. அப்படிக் கையாளவும் முடியாது. ஆனால் அவருடைய உளம் தியாகி – துரோகி என்ற வகையில்தான் சிந்திக்கிறது. அவருடைய ஆதரவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இதனால்தான் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகிய பின், 2009 க்கு முன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டதைப்போன்ற ஒரு நிலையை உருவாக்கப் போகிறேன் என்றபோது பலரும் சிரித்தனர். மட்டுமல்ல, இதை மறுதலிப்பதாக, அப்படி ஒற்றுமை வேண்டுமென்றால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மறுத்துரைத்தனர். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் இந்தத் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் (துரோகிகள்) என்ற வகையில் சிறிதரன் நோக்கி வேலை செய்ததாகும். 

ஆகவே அவர் வைத்த எல்லா முட்களும் இப்பொழுது காலில் குத்தத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இருந்ததைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொன்னவருக்கு தன்னுடைய கட்சியையே ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை வந்திருக்கிறது. இப்பொழுது கட்சி நீதிமன்றப் படிக்கட்டில்  நிற்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில்லர் படத்தைப்போல அடுத்தடுத்த காட்சிகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அதாவது தமிழரசுக் கட்சி இன்றொரு வேடிக்கைப் பொருளாகி விட்டது. ஆம், புதிய தலைமையின் கீழ் கட்சி இரண்டாகப் பிளவுண்ட நிலையில் சந்திக்கு வந்துள்ளது.