கனகர் கிராமம்     ‘அரங்கம்’ தொடர் நாவல்​(அங்கம் – 20)

கனகர் கிராமம் ‘அரங்கம்’ தொடர் நாவல்​(அங்கம் – 20)

— செங்கதிரோன் —

    (அரசியல்-சமூக-வரலாற்று நாவல்)

குமுக்கன் ஆற்றங் கரையில் ‘கவிலித்த’ அம்மன் கோவில் அமைந்திருந்த இடத்தில் ஆற்றங்கரையோரம் அடுத்தடுத்திருந்த மருதமரங்கள் கிளைபரப்பியும் கோவிலின் சுற்றுப்புறம் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாகவும் இருந்தபடியால் யாத்திரீகர்கள் தங்கியிருந்த இடத்தில் சூரிய ஒளி விழுவதில் சற்றுத் தடைகளிருந்தன. அதனால் விடி வெளிச்சத்தைக் கொண்டு காலை புலர்வதை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

விடியும் முன்பாகவே, காடுகளிலிருந்து பறவைகள் விழித்துக் கொண்டு இரை தேடிக் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கின. பறவைகளின் ஒலி கேட்டு எழுந்த பெரியவர் சாமித்தம்பி பக்கத்திலே ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த கோகுலனையும் கதிரவேலையும் தட்டியெழுப்பி விட்டார்.

அதற்குமுன்பே, கோகுலனின் தாயாரும் கதிரவேலின் தாயாரும் நித்திரை விட்டெழுந்து தேனீர் தயாரிப்பதிலும் காலை உணவுத்தயாரிப்பிலும் ஈடுபடத்தொடங்கிவிட்டிருந்தனர். கோகுலனின் இளையக்காவும் எழுந்து குழந்தையின் தேவைகளைத் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

உறக்கத்திலிருந்து எழுந்த பெரியவர் சாமித்தம்பி கோகுலனையும் கதிரவேலையும் தட்டியெழுப்பிவிட்டுக் கிழக்குத்திசையை நோக்கினார். சூரியன் உதிப்பதற்கு அறிகுறியாய் கீழ்வானில் வெளிச்சம் தோன்றியது. ஆனாலும் யாத்திரீகர்கள் தங்கியிருந்த இடத்தில் இருள் முற்றாக விலகவில்லை.

நன்றாக விடிந்ததும் எல்லோரும் வழமையான தமது காலைக்கடன்களை முடித்த பின்னர், பயணத்தின்போது வழியில் காலை உணவாகச் சாப்பிடுவதற்கென்று முதல் நாளிரவு படுக்கைக்குப் போகும்போது நீரில் ஊறப்போட்ட கடலையை அவித்து எடுத்துக்கொண்டு வழமைபோல் காலைத் தேனீருடன் நாவலடி நோக்கிய நடை யாத்திரை அரோகரா! கோஷத்துடன் ஆரம்பமானது.

‘கவிலித்த’ அம்மன் கோவிலிருந்து புறப்பட்டுச் சிறிதுதூரம் வந்தபின் கதிர்காமம் செல்லும் காட்டுப்பாதை குமுக்கன் ஆற்றின் ஆழம் குறைந்த ஓரிடத்தில் குறுக்கறுத்தது. அந்த இடத்தில் ஆற்றில் முழங்காலளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று காவிவரும் மழைவீழ்ச்சியில் மார்கழி மாதத்தில் வெள்ளம் பிரவாகித்துச் செல்லும் குமுக்கன் ஆற்றில் மறுவருடம் பங்குனி மாதத்திற்குப் பிறகு தண்ணீர் வரத்துக் குறைந்து கதிர்காம யாத்திரை நடைபெறும் யூன்/யூலை மாதங்களில் முழங்காலளவு தண்ணீரே அக்குறுகலான இடத்தில் ஓடும். கதிர்காம யாத்திரீகர்கள் ஆற்றைக் கடப்பதற்கு அவ்விடம் வசதியானது.

தெளிவாக இருந்த ஆற்றுநீரில் சில யாத்திரீகர்கள் இறங்கி முகம் அலம்பிக் கொண்டிருந்தனர். சிலர் குந்தியிருந்து ஆற்றில் தலைதாழ்த்திக் குளித்துக்கொண்டும் சிலர் நீட்டி நிமிர்ந்து படுத்து அவர்களின் மேலால் ஆற்றுநீர் வழிந்தோடக் குளித்துக் கொண்டும் இருந்தார்கள். எல்லோரும் ஆற்று நீரில் தமது தமது உடல் அசதியை போக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆற்றுக் குளிப்பின் அருமை அறிந்த யாத்திரீகர்கள்.

ஆற்றின் இரு கரைகளிலும் நன்கு உயர வளர்ந்த மருதமரங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றின் அடி மண்ணை நீர் அரித்தோடியதால் வெளித்தெரிந்த பக்கவேர்களின் மேலால் நீர் வழிந்து செல்லும்போது சூரிய வெளிச்சத்தில் அவை வெள்ளிக் கம்பிகளாய்  கோலம்காட்டின.

ஆற்றுப்படுக்கையின் சில இடங்களில் மணல் வார்த்து நீர் மட்டத்துக்கு மேலால் ஆங்காங்கே திட்டுகளாகத் தலை நீட்டியிருந்தன. அந்தச் சிறுமணல்த் திட்டுகள் பசு மாடுகள் படுத்துக்கிடப்பது போலப் பார்வையில் பட்டன.

தண்ணீருக்குள்ளே ஆற்று மணலில் கால்கள் புதையச் சாமான்களின் பாரத்துடன் வண்டிலை இழுப்பதற்கு வண்டில் காளைகள் சிரமப்பட்டன. கால்களை நாட்டியமாடும் நடன மாதர்களைப்போல அங்கும் இங்கும் அப்படியும் இப்படியும் வைத்து அவதிப்பட்டன. வண்டில் சில்லுகளும் மணலில் புதைந்து வண்டில் அசைய மறுத்தது.

கோகுலனும் கதிரவேலும் ஆளுக்கொரு பக்கம்; நின்று வண்டில் சில்லுகளை முன்னோக்கி உருட்டச் சமகாலத்தில் கூடவந்த யாத்திரீகர்கள் சிலரைக் கூவியழைத்துச் சாமித்தம்பி அவர்களுடன் தானும் சேர்ந்து பின்னால் நின்று வண்டிலைத் தள்ள அங்கு நின்றிருந்த யாத்திரீகர்கள் அனைவரினதும் ‘அரோகரா’ ஒலியில் காடே அதிர வண்டில் இலேசாக ஆற்றைக்கடந்து அக்கரையைச் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏனையவர்கள் முழங்கால் தண்ணீரில் உடுப்புக்கள் நனையாவண்ணம் முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஆற்றைக்கடந்து அக்கரையை அடைந்தார்கள்.

இலங்கையின் கிழக்குமாகாணத்தின் பூகோள எல்லை தெற்கில் (தென் எல்லை)குமுக்கன் ஆறு(குமுக்கன் ஓயா)ஆகும். கிழக்கு எல்லைதான் வங்காள விரிகுடாக்கடல். வங்காள விரிகுடாக் கடலிலேயே குமுக்கன் ஆறு போய் விழுகிறது.

குமுக்கன் ஆற்றைக்கடந்ததும் யாத்திரை அணி இலங்கையின் ஊவா மாகாணத்திற்குள் கால் வைத்தது.

குமுக்கன் ஆற்றைக்கடந்து யாத்திரை அணி போய்க் கொண்டிருக்கையில் வழியில் கூமுனையிலிருந்து சுமார் ஐந்துகட்டைத் தூரமிருக்கும், பாதையின் வலது புறத்தில் பரந்த வெளியும் பரந்த குளமும் தென்பட்டன. பரந்த வெளியைச் சுற்றிவரக் காடு. குளத்தில் நீர் நிரம்பியிருந்தால் நீர்ப்பரப்பைச் சுற்றிநடந்துதான் பயணத்தைத் தொடர வேண்டியிருக்கும். ஆனால, கோகுலனின் தாயாரின் யாத்திரைஅணி சென்றவேளை நீர் வற்றியிருந்ததால் குழத்தின் ஆழமான நடுப்பகுதியில் மட்டும் சிறுகுளமாக நீர் தேங்கியிருந்தது. அச்சிறுகுளம் பாதையிலிருந்து சற்றுத்தூரத்தில் இருந்தது. பரந்த அக்குளத்தில் நீர் வற்றியிருந்ததால் நீர் வற்றியிருந்த குளப்பகுதியைக் குறுக்கறுத்து நடந்து செல்லக்கூடிய மாதிரி இருந்தது. பரந்த அக்குளத்தின் பிரதான பகுதியான அதன் நடுப்பகுதி எப்போதும் ஆழமாகவும் ஒரு போதும் வற்றாததாகவும் இருக்குமென்று சாமித்தம்பி கதையோடு கதையாக கூறியும் வைத்தார்.

சற்று அருகில் சென்று  பார்த்தபோது வட்ட வடிவமான  அக்குளத்தின் கரையைச் சுற்றிவர பெருவாரியான முதலைகள் தங்கள் வால் பகுதிகளை நீருக்குள்ளும் வாய்ப்பகுதிகளைக் குளத்திற்கு  வெளியே தரையில் நீட்டிய படியும் படுத்துக்கிடந்து வெயில் காய்ந்து கொண்டிருந்தன. வட்டத் தாம்பாளமொன்றின் ஓரமாக ‘டிசைன்’ போட்டதுபோல குளமும் முதலைகளும் கோலம் காட்டின. வாயைப் பிளந்தபடி படுத்திருந்த சில முதலைகளின் வாய்க்குள்ளே சிறு குருவிகள் மிகவும் சுதந்திரமாகப் போய்வந்து கொண்டிருந்தன. இதை அவதானித்த கோகுலன், 

‘தண்ணி  குடிக்கிறத்துக்கெண்டு குளத்துக்கு வாற மான், மரை, மாடுகளப் புடிச்சி இழுத்துட்டுப் போய் விழுங்கிற முதல அதிர வாய்க்குள்ள போய் வாற குருவிகள ஒண்டும் செய்யிறல்லயா?’ என்று பெரியவர் சாமித்தம்பியிடம் கேட்டான்.

‘அது தம்பி! முதலர வாய்க்குள்ள போய் வாற குருவிகள் முதலர பல்லிடுக்கில இருக்கிற இறைச்சித் துண்டுகள கொத்தி எடுத்துத் தின்னத்தான் அப்படி போய்வாற. முதலைக்கும்; அது சுகமா இரிக்கும். குருவிகளுக்கும் சாப்பாடு. அதனால ஆளுக்கு ஆள் உதவி. மற்றது முதலர பசிக்குக் குருவிகள் காணுமா?’ என்று விளக்கம் சொன்னார் சாமித்தம்பி.

பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கித்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த முதலை – குருவி உறவை உதாரணம் காட்டலாம்.

குளம் இருந்த இடத்திற்கு நேரே எதிர்ப்பக்கத்தில் பாதையின் இடது புறம் இளைப்பாறிச் செல்லக்கூடியமாதிரித் தடித்து உயர்ந்து வளர்ந்து கிளை பரப்பி நிழல் தரும் படியாக பாரிய விருட்சமொன்று நின்றிருந்தது.

மரத்திற்குக் கீழே இளைப்பாறிக் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டுப் பயணத்தைத் தொடரலாம் என்று யோசனைவரக் கூடார வண்டில் அந்த மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டது.

கூமுனையிலிருந்து புறப்படும்போதே அவித்துக் கொணர்ந்திருந்த கடலை எல்லோருக்கும் பகிரப்பட்டுக் காலைச் சாப்பாட்டை அங்கேயே முடித்துக் கொண்டார்கள்.

வாகூரவட்டையிலே கதிரவேல் பிடுங்கி வந்த உப்புருவிக்கீரை குளத்தில் நீர் வற்றியிருந்த ஈர நிலத்தில் ஏராளமாய்ப் படர்ந்துகிடந்தன.

கதிரவேல் தனது தாயாரிடம் ‘உப்புருவி புடுங்கி வரட்டா’ என்று கேட்டான். அதற்கு அவனது தாயார, 

‘வேணாம் மனே! வாகூரவட்டையில் சாப்பிட்ட நாமதானே. நாவலடியிலயும் சுண்டிச் சாப்பிடலாம்தான். ஆனா நாவலடிக்கு நாம போய்ச் சேரக்குள்ள வாடிப்போயிரும். வேணாம்’ என்றார்.

உப்புருவிக் கீரையைப் போலச் சுண்டிச் சாப்பிடக்கூடிய ‘எழுத்தாணிப்புல்’ லும் அப்பகுதியில் முளைத்துப் படர்ந்திருப்பதைச் சாமித்தம்பி, கோகுலன் கதிரவேல் இருவருக்கும் காட்டி வைத்தார்.

எல்லோரும் காலைச் சாப்பாட்டையும் கோகுலனின் இளையக்காவின் குழந்தைக்கு உணவூட்டியும் முடித்துப் பாத்திரங்களையும் இறக்கிய ஏனைய சாமான்களையும் வண்டிலில் ஏற்றியபின் பயணம் தொடர்ந்தது.

பயணம் இப்போது நாவலடி வைரவர் கோவிலை இலக்குவைத்துத் தொடங்கிற்று.

போகும் வழியில் பாதையின் இரு மருங்குகளிலும் ஆங்காங்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை மஞ்சள் குளித்ததுபோல பொன்னவரைச் செடிகள் பூத்துச் சொரிந்து நின்றன.

பாணமையிலிருந்து புறப்பட்டு வந்த வழிநெடுகிலும் பொன்னவரை மரங்களும் ஆங்காங்கே பூத்துக் கிடந்திருந்தாலும் இப்போதுதான் அவை கோகுலனின் கவனத்தை ஈர்த்தன. பொன்னவரைப் பூக்களுக்குள் கருவண்டுகள் புகுந்து புகுந்து வெளியேறின.

பெரியவர் சாமித்தம்பி பொன்னவரைச் செடிகளைச் சுட்டிக்காட்டி இது ‘சலரோக நோய்காரருக்குச் சொல்லிய மருந்து’ என்றார்.

செடியொன்றின் அருகில் சென்று இலைகளும் பூக்களும் உள்ளங்கை கொள்ளுமளவிற்கு ஆய்ந்துவந்து அவர் அவற்றைக் காட்டி அவற்றை வெந்நீரில் ஊற வைத்துத் தேநீர் போலக் குடித்து வந்தால் சலரோக நோய்க்காரர்களுக்கு நல்லதெனச் சான்றிதழ் வழங்கினார்.

‘இந்தியாவிலே தமிழ்நாட்டில் இதை ‘ஆவாரம்பூ’ என்று தான் சொல்லுவாங்க’ என்றான் கோகுலன்.

கதிரவேல் ‘சிங்களத்தில இத “ரணவறாமல்” என்றிர’ என்றான்.

பொன்னவரைச் செடியைக் கோகுலனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அது சலரோக (நீரிழிவு) நோய்க்கு மருந்து என்ற தகவல் அவனுக்குப் புதியதாகவேவிருந்தது.

யாத்திரை அணி நடுப்பகல் தாண்டி மத்தியானம் ஒரு மணி போல்தான் நாவலடி வைரவர் கோவிலடியை வந்து தட்டியது. இடையிலே வரும் வழியில் பரந்தவெளியில் (வெட்டையில்) வைத்து காலை உணவாகக் கடலை சாப்பிட்டிருந்த போதிலும்கூட வழமையாக நடந்த தூரத்தைவிட இன்று இருமடங்கு தூரம் நடந்த களைப்பில் எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கிற்று.

வந்ததும் வராததுமாகக் கூடார வண்டிலை அவிழ்த்துச் சாமான்களை இறக்கிச் சமையல் வேலைகளைத் தொடங்கினர்.

கோகுலனும் கதிரவேலும் ஓடிச் சென்று அடுப்புகளையும் மூட்டி விறகுகளும் சேகரித்து வந்து கொடுத்தனர்.

பெரியவர் சாமித்தம்பி தானாகவே முன்வந்து திருவிலையையும் தேங்காயையும் எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் கீழிருந்து அகலமான தட்டமொன்றில் தேங்காயைத் துருவத் தொடங்கினார.;

இரண்டு அடுப்புகள் ஆயத்தம் செய்யப்பட்டன. கோகுலனின் தாயாரும் கதிரவேலின் தாயாரும் ஒரு அடுப்பில் சோறும் மற்ற அடுப்பில் கறியும் ஆக்கத் தொடங்கினார்கள்.

கோகுலனின் இளையக்கா குழந்தையைப் பாதுகாப்பான ஓரிடத்தில் பாய் போர்வை தலையணையெல்லாம் போட்டு வளர்த்திவிட்டு சமையல் வேலைக்கு அவவும் உதவினார்.

தேங்காயைத் துருவிக் கொடுத்துவிட்டு அருகிலுள்ள பற்றைக்காடுகளுக்குள்; நுழைந்த பெரியவர் சாமித்தம்பி திரும்பி வரும்போது கையில் இலை குழைகளுடன் வந்தார்.

கோகுலன் அதைக் கண்டு விட்டு ‘என்ன சாமி! தெய்வம் ஆட போறயளா’ என்றான்.

பசியை மறந்து எல்லோரும் ‘கொல்’ லென்று சேர்ந்து சிரித்தார்கள்.

சாமித்தம்பியும் சேர்ந்து சிரித்துக்கொண்டே ‘இது பசுமுல்ல. சொதி வெச்சா நல்லா இரிக்கும் புள்ள’ என்று கூறி ஆய்ந்து வந்த முல்லைச் செடிக் கொத்துக்களைக் கோகுலனின் இளையக்காவிடம் நீட்டினார்.

‘முல்லய எங்களுக்குத் தெரியாதா சாமி. பொத்திவில்  அறுபதாம் கட்டையடியில கச்சான் சேன செய்யக்குள்ள முல்ல மட்டுமில்ல கானாந்தி-கார இலச் சொதியெல்லாம் சாப்பிட்டிருக்கம். நல்ல ருசி’ என்ற கோகுலன் தொடர்ந்து, 

‘நீங்க கொத்துக் குழையோட வர எங்க தெய்வம் ஆட போறயளோ என்டு சும்மா பகிடிக்குக் கேட்டனான்’ என்று கூறிச் சிரித்தான்.

‘தம்பி நல்ல பகிடிக்காரன்’ என்று மற்றவர்களைப் பார்த்துச் சொல்லி அவரும் பதிலுக்குச் சிரித்துவிட்டு அப்பால் சென்றார்.

உகந்தையிலிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் முதல் நாளும் இரண்டாம் நாளும் ஐந்து அல்லது ஆறு கட்டைத் தூரம்தான் ஒரு நாளைக்கு நடந்தனர.; ஆனால் இன்று காலை கூமுனையிலிருந்து புறப்பட்டு வழமையிலும் பார்க்க இரட்டிப்புத் தூரமாகப் பன்னிரண்டு கட்டைத் தூரம் நடந்து நாவலடி வைரவர் கோவிலடியை வந்து சேர்ந்ததில் அனைவரும் வழமைக்கு மாறாகச் சற்றுக் கூடுதலாகக் களைப்படைந்திருந்தார்கள்.

சமையல் முடிந்து சாப்பிட்டு விட்டுத் தரையில் சாய்ந்து படுத்தவர்கள் பின்னேரம் ஐந்து மணிபோல்தான் கண்விழித்தார்கள்.

பகல்தூக்கம் போட்டு எழுந்ததும் அனைவருக்கும் தேநீர் பரிமாறப்பட்டது.

மத்தியானம் மீதியாய் இருந்த கறிகளுடன் ஒரு சோறு ஆக்கி எடுத்தால் இராச்சாப்பாட்டைத் சமாளித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த கோகுலனின் தாயாரும் கதிரவேலின் தாயாரும் பொழுது பட்டு இருட்ட முதல் சோற்று அடுப்பை மூட்டினார்கள்.

பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் கோவிலிருந்து யாத்திரை புறப்பட்ட நான்காம் நாள் இராத்தங்கல் நாவலடி வைரவர் கோவிலடியில் அமைந்தது.

வழமைபோல் அருகருகே தமது படுக்கையைத் தயார் செய்து கொண்ட கோகுலன், கதிரவேல், பெரியவர் சாமித்தம்பி மூவரும் இராச்சாப்பாட்டை முடித்துப் படுக்கைக்குச் செல்லும்முன் எரியும் “தீனா” வொன்றைச் சுற்றி அடுப்புக் கற்கள் மாதிரி அமர்ந்து கொண்டு கதைக்கத் தொடங்கினார்கள். கோகுலன்தான் கதைக்குப் பிள்ளையார் சுழி போட்டான்.

(தொடரும்….அங்கம்-21)