— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —
அவர் தனது இளமைக்காலங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஜே.வி.பி போன்ற அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். அதன் காரணமாக 1971 ஆம் ஆண்டு ஜேவிபியின் ‘சேகுவராப் புரட்சி’ இடம்பெற்றபோது அரச படைகளினால் பல்வேறுவிதமான நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
அதனால் அவர் திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றத் தொடங்கிய போதே ‘விடுதலைச் சந்திரகுமார்’ என அறியப்பட்டார். துறைமுகம் சார்ந்து மட்டுமல்ல திருகோணமலையின் தொழிற்சங்க போராட்டங்கள் அனைத்திலும் முன்னணி வீரராக அவரிருந்த காலங்களாக அவை இருந்தன.
திருமலையில் ‘தமிழ் பல்கலைக்கழகம்’ என்னும் முயற்சி ஒன்றை 1959ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சில ‘புத்தியீவிகள்’ மேற்கொண்டு வந்தமை சிலருக்கு நினைவிருக்கலாம். அதற்காக அவர்கள் திருகோணமலை மக்களின் காணிகளை மலிவு விலையிலும் இனாமாகவும் பெற்று அம்முயற்சியைத் தொடங்கியிருந்தனர். உள் துறைமுக வீதியில் ஐந்து ஏக்கரும் நகரை அண்மித்த உப்புவெளியில் 83 ஏக்கருமாக மொத்தம் 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக வடக்கு,கிழக்கு மாகாணமெங்கும் மிகவும் பரபரப்பாக தமிழ் மக்களிடையே நிதி வசூலும் இடம்பெற்றது. ஆனால் தமிழரசுக் கட்சியினரின் அரசியல் விளம்பரத்துக்காக பயன்பட்டமையைத் தவிர வேறெந்த நன்மையையும் இந்த தமிழ் பல்கலைக்கழக பெரும் கதையாடலால் கிடைக்கவில்லை. யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் பல்கலைக்கழகம் என்பது மெல்ல மெல்ல உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகப் போனது.
பல்கலைக்கழக நிர்மாணத்துக்காக திரட்டப்பட்ட நிதிகள் கொழும்பிலே நாவலர் மண்டபம் கட்டப்படுவதற்கும், திருமலையில் ஏழை மக்கள் வழங்கிய நிலங்கள் யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகளின் கையாடல்களுக்குமாக திருடப்பட்டன. பல ஆண்டுகள் கடந்தும் தமிழ் பல்கலைக்கழகம் கட்டப்பட்டதாயில்லை. இந்நிலை கண்டு கொதித்தெழுந்த இளைஞர் குழாமில் சந்திரகுமாரும் ஒருவராகும். எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் என்பவரை தலைவராகக் கொண்டும் இரா.கனகரெட்ணம், ந.மனோகரன் போன்றவர்களுடன் இணைந்தும் அந்நிலங்களில் ஒருபகுதியை பொறுப்பெடுத்து கூட்டுப்பண்ணை முயற்சிகளில் ஈடுபட்டார். சுமார் 60 விவசாயக் குடும்பங்கள் அதில் இணைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சம்மேளனத்தை அறிமுகம் செய்தார். அதனுடாக தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அவர்களின் சம்பளப் பிரச்சனைகளை வெற்றிகாணவும் இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகள் வாய்ப்பாக அமைந்தன.
இந்நிலையில் இப்பண்ணையை திருமலை சார்ந்த நிர்வாகக் குழுவினரிடம் இருந்து பறித்தெடுத்து காந்தியம் என்னும் தொண்டு நிறுவனத்திடம் தாரைவார்க்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் யாரெல்லாம் அந்நிலங்களை தமிழ் பல்கலைக்கழகம் என்னும் நன்னோக்கத்துக்காக வாரி வழங்கினார்களோ அவை அம்மக்களுக்கே மீள வழங்கப்படவேண்டும் என்னும் நிலைப்பாட்டில் சந்திரகுமார் போன்றவர்கள் உறுதியாக இருந்தனர்.
எனவே யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகள் அவர்களை சட்டம் கொண்டு மிரட்டி அடிபணிய வைக்க முயன்றனர். கூட்டுப் பண்ணை நிலங்களை விட்டு சந்திரகுமார் போன்றோரின் நிர்வாகத்தை அகற்றக் கோரி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் பண்ணை நிர்வாகம் சார்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக சந்திரகுமாருக்கு சில ஏக்கர் நிலங்களை வழங்குவதன் மூலம் அவரைச் சமாதானமாகி விலகச்செய்து புதிய நிர்வாகத்தை உருவாக்கி அந்நிலங்களை ஏப்பம் விட யாழ்-கொழும்பு மேட்டுக்குடிகள் எத்தனித்தனர். அந்த கையூட்டுச் சமரச முயற்சிக்கு பலியாகாத ஒரு மனிதனாக அவர் திகழ்ந்தார்.
தமிழ் பல்கலைக்கழகத்தின் பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அம்மண்ணின் பூர்வீக உரிமைகொண்ட மக்களின் பயன்பாட்டுக்காக மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக 1973 ல் தொடங்கிய போராட்டமானது 1980ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது. அக்காலங்களில் மிகச்சிறந்த பண்ணையொன்றை கட்டியெழுப்புவதில் வில்லியம்ஸ் தலைமையில் சந்திரகுமார் மற்றும் அவரது தோழர்களும் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.
இறுதியாக போலீசாரைக் கொண்டும் சட்டத்தைக்கொண்டும் துரத்தியடிக்க முடியாத நிலையில் காந்தியத்துக்கு ஆதரவான ஆயுதக்குழு ஒன்று களமிறக்கப்பட்டது. அதன்காரணமாக மிரட்டலையும் உயிர் அச்சுறுத்தலையும் சந்திரகுமார் எதிர்கொண்டார். திருமலை மக்களின் நிலங்கள் தமிழ் பல்கலைக்கழகமெனும் பெயரில் சிலரால் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்த போராடிய காரணத்தினால் சந்திரகுமார் தனது சொந்த நிலமான திருமலையை விட்டே விரட்டப்பட்டார்.
இறுதியாக கொழும்புத் துறைமுகத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். கொழும்பில் அவருக்கு வீடுவாசல் வசதிகள் என்று எதுவும் இருக்கவில்லை. கொழும்பு மாநகரத்து பாட்டாளிகளும் தொழிலாளிகளும் குவிந்து வாழும் ரயில் கடவையோரத்து சேரிப்புறமொன்றே அவருக்கு தஞ்சமானது. அங்கும் வந்தோமா, பிழைத்தோமா, குழந்தை குட்டியோடு வாழ்ந்தோமா, என்றில்லாமல் தன்னைச்சுற்றி வாழும் மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக ஓயாது குரல்கொடுத்தார். பல சமூகப் பணிகளை முன்னெடுத்தார். சேரிப்புறத்து மக்களின் நீர், மின்சாரம், நிலம் மற்றும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். அங்கு வாழ்ந்த விளிம்புநிலை மாந்தர்களின் பிரதிநிதியாக நாளும் பொழுதும் மாநகரசபைக்கும் அமைச்சு அலுவலகங்களுக்கும் திணைக்களங்களுக்கும் ஏறி இறங்குவதே அவரது நாளாந்த பணியாக இருந்தது.
1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் வருகையும் சிறிது காலத்தின் பின்னர் புலிகளுடனான இந்தியராணுவத்தின் மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருந்தன. புலிகள் இலங்கை இராணுவத்தோடும் ஏனைய இயக்கங்கள் இந்திய இராணுவத்தோடும் அணிசேர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பனிப் போர் நடந்துகொண்டிருந்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்த இளைஞர்கள் ஏதாவதொரு அணியின் சார்பின்றி உயிர்வாழ முடியாதநிலை. சுருங்கச்சொன்னால் கையில் ஆயுதம் இல்லாவிடின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாறாக எங்காவது கண்காணா தேசத்துக்குத் தப்பியோட வேண்டும். இதன்காரணமாக பல நூறு இளைஞர்கள் உயிரைக் காத்துக்கொள்ள கொழும்பிலே தஞ்சமடைந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக கிழக்கிலிருந்து வந்த இளைஞர்களுக்கு கொழும்புத் தமிழரிடையே சொந்தம் கொண்டாடக் கூடிய உறவுகள் மிக,மிகக்குறைவாகவே இருந்தது.
ஏன் இல்லையென்றே சொல்லலாம். கொழும்பில் வியாபாரிகளாகவோ, உத்தியோகஸ்தர்களாகவோ முன்பின் தெரிந்தவர்களென்று யாருமிலர். கொழும்பைத்தாண்டி வெளிநாடுகளுக்கு செல்வதென்பதும் அவர்களுக்கு இலகுவானதாயிருக்கவில்லை.
ஒரு வார்த்தை கூடத் சிங்களம் தெரியாது, அனைவரும் ஒவ்வொரு இயக்கங்களில் இருந்துவிட்டு தப்பித் பிழைத்து வந்தவர்களென்பதால் கொழும்புப் பெருநகரில் நடமாடும் அலுவலகக் காவலர்களைக் சீருடையில் கண்டாலே உடம்பெல்லாம் நடுக்கமெடுத்துவிடும். லொட்ஜுகள் என்றழைக்கப்படும் சிறிய சிறிய விடுதிகளில் தங்கினால் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. பணப்பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் இரகசியப் பொலிஸாரினதும் புலனாய்வுத் துறையினரதும் விசாரணைகள்,கைதுகள் என்று மறுபுறம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை.
இந்நிலையில்தான் கொழும்பை நாடி வரும் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அவர் அறிமுகமானார். நாட்டுக்காக போராடப்புறப்பட்டு நாட்டை விட்டே ஓடி ஒழிய வேண்டிய நிலையில் இளைஞர்கள் இருப்பதையெண்ணிப் பரிவு கொண்டார். தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியல் மீதும் விடுதலை இயக்கங்களின் வன்முறைகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் கொண்டிருந்தார். இந்த இளைஞர் கூட்டத்தை காப்பாற்ற வேண்டும், அவர்களது எதிர்காலத்துக்காக புதிய பாதைகளைத் திறக்க வேண்டும் என்று தர்ம ஆவேசம் கொண்டலைந்தார்.
தினமும் மட்டக்களப்பில் இருந்து வரும் உதயதேவி ரயிலுக்காக கொழும்பு கோட்டை இரயில் நிலைய வாசலில் காத்திருந்து இளைஞர்களுக்கு ‘கிழக்கின் சிந்தனையாளர்’ என்னும் துண்டுப்பிரசுரங்களை அவர் விநியோகித்துக்கொண்டிருப்பார். தானே எழுதி தனது சொந்தக் காசிலே பிரசுரித்து தானே வீதிவீதியாக தனது அரசியல் கருத்துக்களை பரப்பும் கொள்கை வெறி கொண்ட மனிதராக அவர் இருந்தார்.
சந்திரகுமார் அவர்கள் திருமலையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அவரது மனைவி மட்/கல்லாற்றைச் பிறப்பிடமாகக் கொண்டவர். அதன்காரணமாக பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த பலர் அவருடன் உறவுகொண்டாடி அவர் வீட்டிலேயே தஞ்சமடையத் தொடங்கினர்.
அவர்களில் பெரும்பானலானவர்கள் கல்லாறு, களுதாவளை, மாங்காடு, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், ஆரையம்பதி போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். காலம் செல்லச் செல்ல அவரது வீடு ஒரு அன்ன சத்திரமாகவே மாறிப்போனது.
வந்து சேரும் சில இளைஞர்களது கையில் பசையிருக்கும். ஆனால், பலரது நிலை சொல்லிமாளாதவை.
ஆனாலும் அவரது ஒற்றைச் சம்பளத்தில் ஒரு வேளைச்சோறாவது அனைவருக்கும் போடுவார். எதுவுமே வழியில்லாத பட்சத்தில் துறைமுக தேனீர்ச்சாலையில் மலிவுவிலை சோற்றுப் பார்சல்களுடன் வந்து நிற்பார். அவருக்கோ பீடியும் தேநீரும் கூடவே பேனாவும் பேப்பரும் இருந்தால் மட்டுமே போதும். இவையனைத்துக்கும் மேலாக எவ்வளவோ துன்பங்களுக்கும் மத்தியில் ஒருமுறைதானும் அவரோ அவரது மனைவியோ மனம் கோணுவதை யாரும் கண்டிருக்க முடியாது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை, தலைவர் சண்முகதாசன், தோழர் சிவராசா போன்றவர்களை கிழக்குமாகாண இளைஞர்களுக்கு அறிமுகம் செய்தார். மட்டக்களப்பின் நாடாளுமன்ற பிரதிநிதியாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் இருந்த தேவநாயகம் போன்றோரிடம் அவர்களை அழைத்துச்சென்று வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதில் அயராது உழைத்தார்.
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தபோது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலை நடாத்துவதிலும் மாகாண சபைகளை உருவாக்குவதிலும் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு பெரிதாக அக்கறையிருக்கவில்லை. எனினும் இந்தியாவின் நெருக்குதலுக்கு பணிந்து அவர் தேர்தலை அறிவித்தார். புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் ஒரே அணியில் நின்று போட்டியிட முன் வந்தன. புலிகளோ தேர்தலை நிராகரித்தனர். போட்டியிடுபவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தனர். எனவே ஏனைய மிதவாத தரப்பினர் எவரும் போட்டியிட முன்வரவில்லை. இதனைச் சாட்டாக கொண்டு இலங்கையரசு தேர்தல்களை இழுத்தடிக்க முற்பட்டது. ஆனால் சந்திரகுமார் இலங்கை- இந்திய ஒப்பந்தத்ததை பயன்படுத்தி ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். எப்படியும் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான தேவநாயகம் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
அவ்வேளையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கியதேசிய கட்சி செயலிழந்து காணப்பட்டது. ஆனாலும் அவரது முயற்சியை அவர் கைவிடவில்லை. மட்டக்களப்பின் ஐ.தே.க அரசியல் பிரமுகர்களான மாணிக்கப்போடி, ரிஸ்வி சின்னலெப்பை, ஈஸ்வரன் போன்றோர்களுடன் உரையாடி தேர்தலில் களமிறங்கும் முயற்சியை சாத்தியமாக்கினார். எனினும் போதிய வேட்பாளர்களை இணைத்துக்கொள்ள முடியாத சூழலில் தானே முன்வந்து கிழக்கின் சிந்தனையாளர்கள் குழாமின் சிலரையும் இணைத்துக்கொண்டு ஐ.தே.க சின்னத்தில் முதலாவது வடக்கு- கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். எவ்வித அரசியல் பலமோ பொருளாதாரப் பலமோ இல்லாத நிலையிலும் படுதோல்வி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டும் அத்தனை உயிராபத்துகளையும் எதிர்கொண்டு மாகாண சபை உருவாக்கத்தை சாத்தியப்படுத்தவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிட்டார். இதன் காரணமாக கிழக்கின் சிந்தனையாளர் குழாமில் ஒருவரான தோழர் தில்லையம்பலம் புலிகளால் கொல்லப்பட நேர்ந்தது.
காலப்போக்கில் இந்த கிழக்கின் சிந்தனையாளர் குழுமம் விரிவடைந்தது. சில இளைஞர்களின் துணையுடன் ‘உண்மைகள்’ என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்றை அவர் தொடங்கி நடாத்தினார். 1989-1990களில் இப்பத்திரிகை வெளிவந்தது. அதனை கொழும்பு ரயில் நிலையங்களிலும் செட்டியார் தெரு வீதிகளிலும் நாளும் பொழுதும் தன் தோழர்களுடன் அலைந்து விற்றுத்திரிந்தார். அப்பத்திரிகையில் இந்திய இராணுவம்-புலிகள் மோதல்கள் குறித்தும் பல செய்திகளும் விமர்சனக் கட்டுரைகளும் வெளிவந்தன. தமிழ் தேசியமென்பது யாழ்-மேட்டுக்குடிகளின் பெருங்கதையாடல் என்பதை விளக்கி பல கட்டுரைகளை அதில் எழுதினார். கிழக்கின் தனித்துவ தன்மைகளை அதன் பல்லின போக்குகளை கையாள தமிழ் தேசியவாதத்தால் ஒருபோதும் முடியாது என்று அன்றே ஆரூடம் சொன்னார்.
தொடர்ந்து வந்த காலங்களில் தேனீ இணையத்தளத்திலும் பல கட்டுரைகளை எழுதினார். தினக்குரல் பத்திரிகையிலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.
அவர் அன்று மட்டுமல்ல தனது 76ஆவது வயது வரை அரசியல் பணியை கைவிட்டாரில்லை. மரணப்படுக்கையில் வீழும் காலம் வரை முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ‘போராட்டம்’ பத்திரிகையை நாடெங்கும் விற்றுத்திரிந்தார்.
சந்திரகுமார் அவர்களது அரசியல் வாழ்வானது ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதிலோ தலைவராக மேலெழுந்து நிற்பதிலோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் ‘கம்யூனிஸம்’ என்பதும் ‘புரட்சி’ என்பதும் முதலில் நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் ஒழுக்கம் என்பதை வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றவர் அவர். அவரது மரணம் ஒரு சாதாரண மனிதனின் முடிவல்ல. ஒரு தனிமனிதப் பேரியக்கத்தின் முடிவாகும்.