புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!

புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைப்பு நடத்துவோர்!!

— கருணாகரன் —

கிளிநொச்சி நகரில் வடை வாங்கும்போது வடை வண்டிக்கருகில் இரண்டு போராளிகள் நின்றனர். தெரிந்தவர்கள்தான். இருவருடைய உடலிலும் போர்க்காயங்கள். போர்க்காலமும் சூழலும் மாறினாலும் அது உண்டாக்கிய வடுக்களும் பாதிப்பும் நீங்கவில்லை. ஒருவர் கூலி வேலை செய்கிறார். மற்றவருக்கு இந்தப் போகம் நெற்செய்கை கடுமையான நட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. இருவரும் களைத்து வாடிப்போயிருந்தனர். 

என்னைக் கண்டதும் ”எப்பிடியண்ணை இருக்கிறீங்கள்?” என்று கேட்டார் ஒருவர். 

“உங்களைப் போலத்தான்” என்றேன். 

“எங்கட கண்ணுக்கு முன்னால என்னவெல்லாம் நடக்குது பாத்தியளா? எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு வாழ வேண்டியதாப் போச்சு” என்றார் ஒருவர். 

கதை சுற்றிச் சுழன்று சமகால அரசியலுக்கு வந்தது. 

“எங்களை ஆமிக்காரனோ, அரசாங்கமோ தோற்கடிச்சதாக இப்ப நான் நினைக்கேல்ல. அதெல்லாம் நடந்து முடிஞ்ச சங்கதி. இப்ப எங்கட தமிழ் அரசியற் கட்சியள்தான் எங்களைத் தோற்கடிச்சுக் கொண்டிருக்கிது. அவனவன், எங்களையும் எங்கட இயக்கத்தையும் எங்கட போராட்டத்தையும் சில்லறைக்கு விற்கிறான்கள். சில்லறைக்கு விற்றுப் பிழைக்கிறான்கள்…இதைக் கேட்க வெளிக்கிட்டால் எங்களைத் துரோகி என்பான்கள். இல்லாவிட்டால், அரசாங்கத்தின்ரை ஆள் என்பான்கள். அதுக்குமேலயும் ஏதாவது கேட்டமெண்டால், எங்களைப் போட்டுக் குடுப்பான்கள். அவங்களுக்கு அப்பிடியான தொடர்பும் மறைமுகமாக இருக்கு. சனங்களுக்கு ஒரு முகமும் தங்களுக்கு ஒரு உறவுமாக இருக்கிறான்கள். இதாலதான் பல போராளிகளும் பேசாமல் உள்ளுக்குள்ள குமுறிக் கொண்டிருக்கினம்”  என்று அவர்களில் ஒருவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அது சாதாரண சொற்களாகப்படவில்லை. இதை ஒரு பொது யதார்த்த நிலையாகவே உணர்ந்தேன். ஏனென்றால் பெரும்பாலான போராளிகளின் நிலை இதுதான். இது தனியே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளின் நிலை மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த – அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடாத போராளிகளின் நிலையுமாகும்.

இதற்குக் காரணங்கள் பலவுண்டு. முக்கியமாக இந்தப் போராளிகள் தங்களுடைய கல்வியைத் தொடர வேண்டிய வயதில், படிப்பை இடைநிறுத்தி விட்டுப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டவர்கள். தொழிலைப் பழகக் கூடிய வயதில் போராட்டத்தில் இருந்தவர்கள். போராட்டம் சிதைந்து வழிமாறியபோது அல்லது தோற்கடிக்கப்பட்டபோது, இவர்கள் நடுத்தெருவில் கைவிடப்பட்டதைப் போலானார்கள். 

இவ்வாறிருந்த சிலர் புலம்பெயர்ந்து விட்டனர். அங்கே அவர்களும் நெருக்கடியான – மன உளைச்சலான வாழ்க்கையை வாழ நேரிட்டாலும் அவர்களுக்குப் பொருளாதாரத்தையாவது விருத்தி செய்யக் கூடிய வாய்ப்பிருந்தது. தங்களுடைய குடும்பங்களைச் சிரமங்களின் மத்தியிலும் ஈடேற்றிவிடக் கூடியதாக இருந்தது. 

மிஞ்சி, தாய் நிலத்திலிருந்தவர்களில் மிகச் சிறிய தொகுதியினர் ஏதோ ஒரு சொந்தத் தொழிலில் இறங்கினார்கள். சிலர் பகுதியளவில் விவசாயம் செய்தனர். ஏனையோர் வாகனச் சாரதிகளாக, ஓட்டோ ஓட்டுநர்களாக, மேசன், தச்சுவேலை அல்லது கூலிகள் என்ற அளவில்தானுள்ளனர். இன்னொரு சாரார் வேலையே செய்ய முடியாத அளவுக்கு உடற்காயங்கள், அவய இழப்புகளுடன் இருக்கிறார்கள். சிலர் (300 க்கு மேற்பட்டோர்) உடலியக்கமே இல்லாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளனர். இப்படியிருப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். தொடர்ச்சியாகப் புலிகள் போரில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக இவ்வாறான பாதிப்புடையோர் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கணிசமான அளவுக்குப் பெண் போராளிகளும் உள்ளனர். இந்தப் பெண் போராளிகளில் பலர் மணவாழ்வைக் கடந்த வயதினராக தனித்து வாழும் நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இப்படி யதார்த்தச் சூழல் இருக்கும்போது இன்றைய அரசியல்  விடுதலைப் புலிகளின் போராற்றல் என்கிற வீரம், அதற்கான தியாகம் (உயிரிழப்பு) அதைக் கொண்டாடும் மாவீரம் – ‘மாவீரர்’ என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தப் போராளிகள் குமுறுகிறார்கள். தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் வைத்துப் பிழைக்கும் தமிழரசியலை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திட்டமிட்டுத் தமிழரசியல் புலிகளின் பிரதிநிதிகளாக இருப்போரின் நீக்கத்தை ஒரு பக்கம் செய்து கொண்டு, மறுபக்கம் புலிகள் இயக்கத்தின் போராற்றலையும் அதில் உயிரழந்தோரின் தியாகத்தைப் பயன்படுத்துவதையும் இவர்களால் ஏற்கமுடியாதிருக்கிறது.  அதாவது இந்த இரண்டகத் தன்மையை. 

ஆனாலும் என்ன செய்வது? இதை எதிர்ப்பதற்கும் மறுத்துரைப்பதற்கும் இவர்களிடம் எந்த அரசியற் பலமும் இல்லையே! மக்கள் கூட இவர்களைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதைக் காணோம். மக்களுக்கு அனைத்தும் தெரியும். ஆனால், அவர்கள் சுயாதீனமாக எழுச்சியடைய முடியாதிருக்கின்றனர். அதற்கொரு காரணம், இவர்களுக்கு ஆதரவளித்தால் அது ஆயுதப் போராட்ட அரசியலுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்பட்டு, அரசாங்கத்தின் கண்காணிப்பு வலயத்துக்குள் உள்ளாக்கப்படுவர் என்ற அச்சம். இன்னொன்று மிஞ்சி நிற்கும் போராளிகளிடையே ஒரு கட்டமைப்பு அரசியலின்மை. இதைக் கட்டமைப்பதற்கு போராளிகளுக்கும் உளத்தடைகளும் உண்டு. ஆளுமைப் பிரச்சினைகளும் உண்டு. 

இதையெல்லாம் பகுத்தாய்ந்து பார்த்து அரசியலைப் பேசுவோரும் இல்லை. அப்படியொரு சிந்தனையை முன்வைப்போரும் குறைவு. 

இதனால் ஊடகங்கள், பத்தி எழுத்தாளர்கள், மதத்தலைவர்கள் எல்லோரும் சுலபமாக தமிழ்த்தேசியம் என்ற இலகு நாடக அரசியலின் பக்கமாகச் சாய்ந்து விட்டனர். மெய்யான போராட்ட வாழ்வுக்குரியவர்கள் பின்தள்ளப்பட்டு விட்டனர். இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

இதற்கு நல்ல உதாரணம், 2009 க்குப் பின்னர் தமிழ் அரசியலில் முன்னிலை வகிப்போராகும். இவர்கள் புலிகளைக் கடந்த – போராட்ட அரசியலுக்கு அப்பாலானவர்கள். ஆனால், புலிகளின் தொடர்ச்சியாகத் தங்களைக் காண்பிக்க முயன்று கொண்டிருப்போர். இந்த யதார்த்தச் சூழலில் நம்மைப்  போன்ற தனியன்களால் என்னதான் செய்ய முடியும்?

அவர்களுடைய கைகளைப் பற்றி முதுகில் ஆதரவாகத் தடவி விட்டு விடைபெற்றுச் சென்றேன். அதற்கு மேல் என்னதான் என்னால் செய்ய முடியும்?

மாலையில் என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்த எழுத்தாள நண்பர் ஒருவருடன் கதைக்கும்போது இதைச் சொன்னேன். அந்தப் பக்கத்தில் கனத்த மௌனம். இயலாமையின், துயரத்தின் வேர்கள் அடியில் மெல்லப் படர்கின்றன என உணர்ந்தேன். 

இரவு நீண்ட நேரமாகத் தூக்கம் வரவில்லை. ஏராளம் எண்ணங்கள் அலைமோதின. கண்களிலிருந்து வந்த கண்ணீரைத் துடைத்தேன். விடியமறுத்து நீண்டு கொண்டிருப்பதாகத் தெரிந்தது இரவு.

(02)

மேற்படி நிலவரம், மேலே குறித்த இரண்டு போராளிகளுடைய வாழ்க்கை நிலையோ கருத்து மட்டுமல்ல. பல போராளிகளின் வாழ்நிலையும் கருத்து நிலையுமாகும். 

போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பொதுவாழ்வில் இணைக்கப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இதை அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும் தமிழ் அரசியற் தரப்பினரில் ஒரு பிரிவினராகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி போன்றவையும் ஆமோதிக்கின்றன. ஆனால், வெளியே நிலவரம் அப்படியல்ல. 

புனர்வாழ்வு என்று அரச தரப்புச் சொல்வதை மக்களோ போராளிகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதைத் “தடுப்பு” என்றே குறிப்பிடுகிறார்கள். “தடுப்பு முகாம் வாழ்க்கை” என்ற பொருளில். 

சர்வதேச சமூகத்துக்கும் அதன் நிறுவனங்களுக்கும் கணக்குக் காட்டுவதற்காகச் சில தொழில்சார் பயிற்சிகளை வழங்கியதோடு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர் என்ற லேபிளோடு அந்த வேலைத்திட்டம் முடிந்து விட்டது. 

தடுப்பிலிருந்து வெளியே வந்து சமூக வாழ்வில் இணைந்து கொள்வதற்கு பொருளாதார அடித்தளமோ, உரிய கல்வியோ இல்லாத நிலையில் இந்தப் போராளிகளால் என்னதான்  செய்ய முடியும்? என்ற போராளிகளின் கேள்விக்குப் பதில் இல்லை. 

இதற்கு மறுமுனையில் உள்ள தமிழ்த்தேசியத் தரப்புகள், இந்தப் போராளிகளின் துயர நிலையைப் பேசு பொருளாகவும் அவர்களுடைய வாழ்க்கையைக் காட்சிப் பொருளாகவுமே ஆக்க முற்பட்டனர். பதிலாக அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கை எதையும் செய்யவில்லை. அதைத் தமக்கான பொறுப்பாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. 

பதிலாக உயிர்த் தியாகம் செய்த போராளிகளை மாவீரர்களாகப் போற்றி (போற்றி போற்றி) அரசியலைத் தொடர்ந்தனர். உயிரோடுள்ள போராளிகளுக்கான பணிகளைச் செய்வது, அவர்களை மதிப்பது என்றால் அதற்காக பல விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதைப்போல பல ஏற்புகளுக்கும் முன்வர வேண்டும். இது இரண்டும் தமது நலனுக்கு எதிரானவை என்பதால் இதைத் தவிர்த்துக் கொண்டே தமது அரசியலை இந்தத் தரப்புகள்  செய்கின்றன. 

உயிர்த்தியாகம் செய்தோரை (மாவீரர்களை) மதிப்பது, நினைவு கூரல்களைச் செய்வது என்பது ஒரு சுடரேற்றதலுடன் நிறைவடையக் கூடியது. ஆனால், உயிரோடுள்ள போராளிகளையும் உயிரீந்த போராளிகளின் குடும்பத்தினரைப் பாதுகாத்துப் பராமரித்து, அவர்களுக்கான முன்னிடத்தை வழங்குவது என்பது அப்படியானதல்ல. அது தமது அதிகாரத்திலும் வசதி, வாய்ப்புகளிலும் பாதியைக்  கொடுப்பதாகும். இதற்கு இந்தத் தமிழ்த்தேசியத்தரப்பினர் தயாராக இல்லை. 

இதனால் போராளிகளாக இருந்தோர், புறமொதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போரோய்ந்து பதினைந்து ஆண்டு கழிந்த பிறகும் தீராத வலியோடும் தீர்க்கப்படாத பிரச்சினைகளோடும்தான் வாழ வேண்டியுள்ளது. 

இங்கேதான் நாம் ஒரு ஆழமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. போராட்டத்தையும் போராளிகளின் தியாகத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்த அரசியல்வாதிகளை ஏன் மக்கள் ஆதரிக்கிறார்கள்? ஊடகங்களும் பத்தியாளர்களும் ஏன் இதைக்குறித்துச் சிந்திக்க மறுக்கிறார்கள்? என. 

மக்களுக்கு எதைத் தெரிவது? எதை ஆதரிப்பது என்பதில் பலத்த குழப்பங்களுண்டு. அந்தளவுக்குத் தமிழ் அரசியற் களம் சிதைந்து போயுள்ளது. இல்லையென்றால் தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தில் பதினைந்துக்கு மேற்பட்ட அரசியற் கட்சிகள் குட்டிபோட்டிருக்க முடியுமா? இதைப்போலத்தான் மாற்று அரசியல், மக்களுக்கான அரசியல், நடைமுறைச் சாத்தியமான அரசியல் என்று சொல்வோரும் பல குழுக்களாகச் சிதைந்து நிற்க முடியுமா?

எல்லாவற்றையும் மக்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயமாகச் சிந்திக்காத வரையில் இந்தச் சுமையை மக்கள் தாங்கித்தானாக வேண்டும். 

இதுதான் வர்க்க நலன் என்பது. இப்பொழுது அதிகாரமற்ற தரப்பினராகப் போராளிகள் மாறியுள்ளனர். புதிய சூழல் (போருக்குப் பிந்திய சூழல்) அப்படிச் செய்து விட்டது. போருக்குப் பிந்திய நிலவரமானது ஆயுதப் போராட்ட அரசியற் பிரதிநிதிகளை அதிகம் விரும்பாத – அரசினால் இலகுவாகக் கையாளக் கூடிய சக்திகளையே அதிகம் விரும்பியது. ஆகவே அரசும் இவர்களுடைய எழுச்சியை, அரசியற் பிரசன்னத்தை விரும்பவில்லை. இப்போது அரங்கில் உள்ள அரசியல்வாதிகள் போராட்ட அரசியலுக்கு வெளியே இருந்தவர்கள். இவர்கள் சமூகத்தின் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்தோர். போராட்ட காலத்தில் அதற்கு  வெளியே நின்று தங்களைக் கல்வியாலும் பொருளாதார பலத்தினாலும் பிற செல்வாக்குகளாலும் கட்டியெழுப்பியோர். அதாவது பிரமுகர்களாகத் தம்மை வளர்த்துக் கொண்டோர். 

ஆகவே இப்போதுள்ளது பிரமுகர் அரசியலே. இது போராளிகள் என்ற சமானியர்களுக்கு அப்பாலானதாகி விட்டது. 

இதையெல்லாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திய மிதவாதத் தமிழ்த்தேசியத் தரப்புகள், தமது அரசியலில் உள்ள செயலின்மையையும் புதுமையின்மையையும் மறைத்துக் கொள்வதற்காக போராளிகளையும் அவர்களுடைய தியாகத்தையும் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தச் சாதுரியம் என்பது வஞ்சகமன்றி வேறில்லை.