— சமுத்திரன் —
‘ பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு, 1939 — 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினேன். அதன் பின்னர் நான் அதனின்று வழுவவேயில்லை.’
இந்த வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறார் சண்முகதாசன் தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை. அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் ‘Political Memoirs of an Unrepentant Conmmunist ‘ எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது.
இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்கள் சண்முகதாசனின் அரசியல் வாழ்க்கை இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றுடன் மிகவும் பின்னிப்பிணைந்திருப்பதை உணருவர். அவர் கொண்டிருந்த சர்வதேச அரசியல் தொடர்புகள் பற்றியும் பல தகவல்களை அந்த நூல் தருகிறது.
பத்தொன்பது வயதுப் பல்கலைக்கழக மாணவனாக சண்முகதாசன் கம்யூனிஸ்டானபோது இலங்கையின் இடதுசாரி இயக்கம் நம்பிக்கை தரும் எழுச்சிமிகுந்த ஆரம்பக்கட்டத்தில் இருந்தது. ஆனால், அவர் 1993 ஆம் ஆண்டு தனது 73 வயதில் மரணிக்கும்போது அவருடைய தலைமையில் உருவான கட்சியும் இயக்கமும் தொடர்ச்சியான பல உடைவுகளுக்கு உள்ளாகிச் சிதறுண்ட நிலையில் இருந்தது போலவே நாட்டின் முழு இடதுசாரி இயக்கமும் சிதறுண்டு செல்வாக்கு இழந்தவண்ணமிருந்தது. அது ஒரு துன்பியல்கரமான நிலைவரம்.
இந்த வரலாற்றுக் காலவெளியில்தான் ‘சண்’ (Shan ) என்று பிரபல்யமடைந்த சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இடம்பெறுகிறது. அதை முழுமையாக ஆராய்வது எனது நோக்கமில்லை. ஆனால், அது நிச்சயமாக ஆராயப்படவேண்டிய ஒரு வரலாறுதான்.
சண்முகதாசன் மறைந்து 31 ஆண்டுகளாகின்றன என்று நண்பர் தனபாலசிங்கம் நினைவூட்டியபோது அவருடைய நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு 2020 ஆம் ஆண்டில் நான் பங்குபற்றிய இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்போது நான் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் எழுப்பிய கேள்விகளும் அத்துடன் கூடவே மனதுக்கு வந்தன. ஒரு நீண்ட கட்டுரையை எழுதவேண்டும் போலிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு சில குறிப்புகளை மட்டுமே பதிவிட முடிகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மானிப்பாயில் ஜூலை 3, 1920 பிறந்த நாகலிங்கம் சண்முகதாசன் 1993 பெப்ருவரி 8 ஆம் திகதி பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் மரணமடைந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் தனது மகளின் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த சண்முகதாசன் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்விகற்று 1938 –39 இல் கொழும்பில் இருந்த பல்கலைக்கழக கல்லூரிக்கு அனுமதிக்கப்படுகிறார். அங்கே அவர் வரலாற்றுத் துறையில் விசேட பட்டப்படிப்பை 1943 ஆம் ஆண்டில் முடித்துக்கொண்டபோது அது இலங்கைப் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றிருந்தது.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் இருந்து சண்முகதாசன் இடதுசாரி அரசியலில் ஈடுபட ஆரம்பிக்கிறார். விசேடமாக பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அவர் பங்குபற்றுகிறார். பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தில் மார்க்சிய லெனினிச நூல்களை நிறைய வாசிக்கிறார்.
அந்த நாட்களில் அவருடைய அரசியல் வளர்ச்சி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுத் திரும்பிய மூன்று இளம் கம்யூனிஸ்டுகளுடன் கிடைத்த உறவினால் துரிதப்படுத்தப்படுகிறது. பீட்டர் கெனமன், பொன்.கந்தையா, வைத்திலிங்கம் ஆகியோரே அந்த மூவருமாவர். அவர்கள் இங்கிலாந்தில் மாணவர்களாக இருந்தபோது அந்த நாட்டில் எழுச்சிபெற்றுவந்த பாசிச எதிர்ப்பு மற்றும் சோசலிச அரசியலினால் ஆகர்சிக்கப்பட்டார்கள். பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் இணைந்தார்கள். பல்கலைக்கழகத்தில் சண்முகதாசன் மாணவர் சங்கத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு மேலும் பிரபலமானார்.
இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜ கட்சி 1935 ஆண்டில் இருந்து இயங்கிவந்தது. 1939 இறுதி — 1940 ஆரம்பத்தில் சமசமாஜ கட்சி பிளவடைகிறது. இதன் விளைவாக 1943 ஜூலை 3 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிறக்கிறது. ஒரு தற்செயல் நிகழ்வாக அன்றைய தினமே சண்முகதாசனின் பிறந்ததினமாகவும் இருந்தது.
அதே ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சையை எழுதி முடித்ததும் உடனடியாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகச் சேர்கிறார். அவர் சேருவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க தலைமையில் கட்சி உருவாக்கப்பட்டது. வைத்திலிங்கம் கட்சியின் கோட்பாட்டாளராகிறார். பீட்டர் கெனமன், கந்தையா, கார்த்திகேசன் மற்றும் பல அறிவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார்கள்.
கட்சியின் முழுநேர ஊழியராவதற்கு முடிவெடுத்தது பற்றிய சண்முகதாசனின் பதிவு அவருடைய இளமைக்கால இலட்சியக் கனவையும் சோசலிசம் மீதான திடமான நம்பிக்கையையும் அறிந்துகொள்ள உதவுகிறது.
பல்கலைக்கழக இறுதியாண்டுப் பரீட்சைக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக ஏற்கெனவே பட்டப்படிப்பை முடித்த ஒரு தோழரை சண்முகதாசன் சந்திக்கிறார். பல்கலைக்கழகத்துக்கு பின்னர் என்ன செய்வதாக உத்தசேம் என்று அவர் இவரைக் கேட்கிறார். அதற்கு இவர் அரசியல் வேலை செய்யும் நோக்கம் இருப்பதால் ஒரு ஆசிரியத் தொழிலைச் செய்யப்போவதாகப் பதிலளிக்கிறார்.
அப்போது அந்த தோழர் அப்படியானால் கட்சியின் முழுநேர ஊழியரானால் என்ன என்று கேட்கிறார். வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று சண்முகதாசன் கேட்கிறார். வாழ்க்கைச் செலவுக்கு கட்சி மாதம் அறுபது ரூபா வழங்கும் என்கிறார் தோழர். அதையடுத்து அவர் கட்சியின் முழுநேர ஊழியராகும் முடிவை எடுக்கிறார். அந்த முடிவு அவருடைய பெற்றோருக்கு பெரும் அதிருப்தியைக் கொடுக்கிறது.
பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கூடாக மகன் பல்கலைக்கழகப் பட்டதாரியாகுவதற்கு உதவிய பெற்றோர் அவர் நிருவாக சேவையில் அல்லது வேறொரு உயர்மட்ட அரச சேவையில் இணைந்து தன்னையும் குடும்பத்தையும் மேனிலைப்படுத்துவார் எனும் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தனர். ஆனால் பட்டதாரி மகனோ அறுபது ரூபா ஊதியத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவைசெய்வதற்கு முடிவெடுத்துவிட்டார்.
ஏமாற்றமடைந்த தாயார் மகனைப் பார்த்து ‘ உனது பிற்காலத்தில் நீ என்ன செய்வாய், சுகவீனமுற்றால் என்ன செய்வாய்’ என்று கேட்கிறார். அதற்கு சண்முகதாசன் ‘ அப்போது நாம் சோசலிசத்தை அடைந்துவிடுவோம். ஆகவே அது பிரச்சினை இல்லை’ என்று தன்னம்பிக்கை ததும்ப பதிலளிக்கிறார்.
கம்யூனிஸ் கட்சி உதயமாகி இருவாரங்கள் மாத்திரமே கடந்த நிலையில் இறுதியாண்டு பரீட்சை எழுதியதும் கட்சியின் சேவையாளனாக மாறிய சண்முகதாசன் அன்று ஆரம்பித்த அந்த நீண்ட அரசியல் வாழ்க்கை கட்சியினதும் இலங்கை இடதுசாரி இயக்கத்தினதும் வரலாற்றுடன் — அதன் எழுச்சியுடனும் வீழ்ச்சியுடனும் — பின்னிப் பிணைகிறது. அதில் சில முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிடவிரும்புகிறேன்.
1943 –1963 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் சண்முகதாசன் பங்காற்றியிருக்கிறார். பிரதானமாக இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தை கட்டிவளர்த்ததுடன் திறன்மிக்க தொழிற்சங்க அமைப்பாளராகவும் தலைவராகவும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். அதேபோல் தொழிலாளர்களுக்கும் இளம் சந்ததியினருக்கும் கோட்பாட்டு ரீதியான அரசியல் அறிவூட்டும் செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றினார். 1947 பொது வேலைநிறுத்தம், 1953 ஹர்த்தால் உட்பட பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் அவர் தலைமைத்துவப் பங்காற்றிய தொழிற்சங்க அமைப்பு ஒரு முக்கிய சக்தியாக விளங்கியது.
1963 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சார்பு என்றும் சீனச்சார்பு என்று இரண்டாக பிரிகிறது. நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்து மறைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக அவருக்கு பின் வந்த குருஷேவ் 1956 ஆம் ஆண்டு முன்வைத்த ‘தனிநபர் வழிபாடு ‘ விமர்சனத்தை தொடர்ந்து உலக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இடம்பெற்ற உட்கட்சி விவாதங்கள் 1963 ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பகிரங்கமான பிளவாக உருவெடுத்தன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பு நிலைப்பாட்டை எடுத்து போராடிய சண்முகதாசன் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதைத் தொடர்ந்து கட்சி இரண்டாகப் பிளவடைகிறது. விக்கிரமசிங்க, கெனமன், வைத்திலிங்கம் மற்றும் ஆரம்பகாலத் தலைவர்கள் சோவியத் சார்புக் கட்சியின் முக்கிய தூண்களாகிறார்கள். சண்முகதாசன் தலைமையில் மார்க்சிய — லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிறது. பாராளுமன்றப் பாதையூடாக சோசலிசம் எனும் கருத்தியலை நிராகரித்து மாவோயிச புரட்சிகரக் கட்சியாக அது அறியப்படுகிறது.
பிளவின்போது கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பெரும் பகுதி சண்முகதாசனைப் பின்பற்றி புரட்சிகர அணியுடன் இணைகிறது. புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி பற்றிய கதையாடல்கள் மீளுயிர் பெறுகின்றன. சண்முகதாசன் தீவிரமாகச் செயற்படுகிறார். வேறு பல வேலைகளுக்கு மத்தியிலும் அரசியல் வகுப்புகளையும் நடத்துகிறார்.
1960 களில் கட்சி மேற்கொண்ட பல முன்னெடுப்புகளில் இரண்டு பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஒன்று, மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி அரசியல்மயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த செங்கொடிச் சங்கத்தின் செயற்பாடுகள். மற்றையது, யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட அணிதிரட்டலும் போராட்டமும்.
இவை சந்தர்ப்பவாத பாராளுமன்ற தேர்தல் அரசியலின் ஆதிக்கத்திற் குள்ளாகிவிட்ட இலங்கையின் இடதுசாரி அரசியலுக்கு மாற்றாக ஒரு அணிதிரட்டல் போராட்ட மரபை மீளக்கண்டுபிடிக்கும் நம்பிக்கை தரும் முன்னெடுப்புகளாக அமைந்தன. ஆனால் குறுகிய காலத்தில் கட்சிக்குள் பிரச்சினைகள் வலுவடைவதற்கான அறிகுறிகள் பகிரங்கமாகின.
ஒன்றுக்குப் பின் ஒன்றாக பிளவுகள் இடம்பெற்றன. புதிய கட்சிகளும் குழுக்களும் தோன்றின. இவற்றிடமிருந்து சண்முகதாசனின் தலைமை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த பிளவுகள் சில பற்றி அவர் தனது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். ஆனால், உண்மை என்னவெனில் அவர் தலைமை தாங்கிய கட்சி தொடர்ந்து பலவீனமடைந்தது.
1990 களின் முற்பகுதியில் சண்முகதாசனின் நூல் பற்றி நான் எழுதிய விமர்சனத்தை லண்டனில் இருந்து வெளிவரும் ‘ Race and Class ‘ சஞ்சிகை பிரசுரித்தது. அதில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் பற்றிய எனது விமர்சனத்தை முன்வைத்திருந்தேன். தமிழ் விடுதலைப் போராட்டம் பற்றி அவர் எழுதிய விமர்சனம் சரியானதே. ஆனால் அவருடைய கட்சி ஏன் போராடத் தவறியது என்ற கேள்வியை நான் எழுப்பியிருந்தேன்.
1976 ஆம் ஆண்டில் மாவோவின் மரணத்துக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள் சண்முகதாசனுக்கும் சீனக்கட்சிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிய உறவின் முடிவுக்கு காரணமாயின. ஆயினும், அவர் மாவோயிசத்தின் மீதான நம்பிக்கையில் இருந்து வழுவவில்லை. 1980 களில் சர்வதேச மாவோயிச அமைப்புகளின் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த அமைப்புகள் அவரை ஒரு தலைவராக மதித்தன. ஆனால், இலங்கையில் தனது கட்சியின் தேய்வை அவரால் தடுக்கமுடியவில்லை.
பல காலமாக உலகின் பல்வேறு மட்டங்களில் மார்க்சியவாதிகள் மத்தியில் இருபதாம் நூற்றாண்டின் சோசலிசம் மற்றும் அதை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றிய விமர்சனங்களும் மீள்மதிப்பீடுகளும் இடம் பெற்றுவருகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் பற்றிய மீள்கற்பிதங்களை நோக்காகக் கொண்டே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விமர்சனப் பார்வையில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் மதிப்பீடு செய்யப்படும்போது சண்முகதாசனின் வகிபாகமும் மீள்மதிப்பீட்டுக்கு உள்ளாகும். அவருடைய பங்களிப்புகள் பற்றிய பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், தவிர்க்கமுடியாத ஒரு முடிவை முன்கூட்டியே சொல்லிவிடலாம். அதாவது சண்முகதாசன் இறுதிவரை சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியாக இருந்தார்.