— அழகு குணசீலன் —
1989 பெப்ரவரி 5ம் திகதி முதலான விகிதாசார பிரதிநிதித்துவ பாராளுமன்ற தேர்தல் முறை மற்றும் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யும் எவரும் தமிழரசுக்கட்சியின் தொடர்ச்சியான வீழ்ச்சியை அவதானிக்க முடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட பின்னர் தமிழரசுக்கட்சிக்கு, புலிகளால் வழங்கப்பட்ட ஆயுத அனுசரணையுடன் கூடிய மாற்று அரசியல் கருத்துச்சுதந்திரமறுப்பு “பாதுகாப்பு” காலத்தை தவிர்த்தே இதை நோக்க வேண்டும். இதுவே ஒரு ஜனநாயக அரசியலின் மக்கள் தீர்ப்பை அடையாளப்படுத்தும்.
2009 இல் புலிகளின் ஆயுதங்கள் தோற்றுப்போன நிலையில் மாற்று அரசியலுக்கான கதவு வடக்கு கிழக்கில் திறக்கப்பட்டது. அப்போது புலிகளின் பாதுகாப்புடன், புலிகளின் அரசியலைச்செய்த தமிழரசுக்கட்சியின் பலவீனமான அரசியல் மக்களால் இனம் காணப்பட்டது. விளைவு, மாற்று அரசியல் சக்திகளை மக்கள் சுதந்திரமாகத் தேடினர். அடையாளமும் கண்டனர். அந்த மாற்று சக்திகளுக்குப் பின்னால் மக்கள் திரட்சியும் ஏற்பட்டது.
யுத்தம் முடிந்த கையோடு களத்தில் நின்ற சரத் பொன்சேகாவை – தமிழ்த்தேசியத்தின் கருத்தின் படி -இனப்படுகொலையின் நேரடிப்பங்காளியை குற்றக்கூண்டில் ஏற்றுவதற்கு பதிலாக ஜனாதிபதி மாளிகையில் குடியேற்ற எடுத்த அரசியல் சாணக்கியத்தில் இருந்து தமிழரசின் வீழ்ச்சி ஆரம்பமானது. 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டிற்கு முன்னரும், பின்னரான புலிகளின் தோல்வி வரையான 2009 வரையான அசாதாரண யுத்தகாலத்தை தவிர்த்து நோக்குவதே தமிழரசின் வீழ்ச்சியை மதிப்பிடுவதற்கான பொருத்தமான காலப்பகுதியாகும்.
குறிப்பாக 2010, 2015,2020 பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பு இதற்கு சான்றாக அமைகிறது. 22, 16,10 என்ற இறங்கு வரிசையில் தமிழரசுக்கட்சியின் (கூட்டமைப்பு) வீழ்ச்சி தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மாற்று அணி, மற்றும் தமிழ்த்தேசிய எதிரணிகளிடம் தமிழரசுக்கட்சி 50 வீதத்திற்கும் அதிகமான தமது பிரதிநித்துவத்தை இழந்தது. மறுவளத்தில் 2010-2020 இடைப்பட்ட காலப்பகுதியில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களால் தமிழரசுக்கட்சி வடக்கு -கிழக்கில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2020 இல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 1,12,967 (34%) வாக்குகளை தமிழரசுக்கட்சி பெற்றிருந்த நிலையில் தமிழ்தேசிய மாற்று அணி 91, 320 (25%) வாக்குகளையும், தமிழ்த்தேசிய எதிரணியான இணக்க அரசியல் அணி 95,170 ( 27 %)வாக்குகளைப் பெற்றனர். இந்த இரு அணியினர் மட்டும் 1,86,490(42%) வாக்குகளைப்பெற்றனர். இந்த புள்ளி விவரங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வீழ்ச்சியை தெளிவாக பதிவுசெய்கின்றன.
தமிழ்த்தேசிய மாற்று அணி என்று இங்கு குறிப்பிடப்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் அணிகளை கருதுகிறது. தமிழ்த்தேசிய எதிரணி என்பது அங்கயன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா அணிகளை கருதுகிறது. இன்னும் விரிவாக நோக்கினால் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மேலும் 20 வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றனர். ஆக, தமிழரசுக்கட்சியை மக்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 62 வீதத்தினால் நிராகரித்துள்ளனர்.
இனி, வன்னி தேர்தல் மாவட்ட நிலை என்ன? வன்னியில் தமிழரசுக்கட்சி 69, 916 (34%) வாக்குகளைப் பெற்ற போது, பாராளுமன்ற ஆசனங்களை பெற்ற பொதுஜனபெரமுன 42,524(21%), ஐக்கிய மக்கள் சக்தி 37,883(18%), ஈ.பி.டி.பி 11,310(5.5%) வாக்குகளையும், ஆசனம் அற்று தமிழ்த்தேசிய மாற்று அணி 17,021வாக்குகளையும் பெற்றனர். இது தமிழரசுக் கட்சியின் வடக்கின் இறங்கு முகத்திற்கு மற்றொரு சான்று. வன்னி நிர்வாக மாவட்டங்களில் உள்ள சிங்கள, முஸ்லீம் வாக்காளர்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், மறு பக்கத்தில் ரெலொ, புளட் வாக்கு வங்கியே தமிழரசை தூக்கி நிமிர்த்தியிருக்கிறது.
கிழக்கின் அரசியல் தொடர்பான இந்த தொடரில் வடக்கு பற்றி பேசுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. வடக்கு அரசியல் தலைமைகள் அங்கு எல்லாமே “வட்ட வடிவாகத்தான்” இருக்கின்றன, கிழக்கில் அப்படி இல்லை என்று கூறி தவறான அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல. தமிழரசின் வடக்கு அரசியல் அது காட்ட முற்படுவது போன்று வட்டவடிவாக இல்லை மாறாக “கோணல் மாணலாக” உள்ளது என்பதை கிழக்கு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவையின் நிமிர்த்தம் இங்கு வடக்கில் தமிழரசின் சரிவு பற்றியும் பேசவேண்டி உள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் கருணாவின் பிரிவுக்குப் பின்னர் கிழக்கிற்கான தனித்துவமான அரசியல் கட்சியும், தலைமைத்துவமும் காலத்தின் கட்டாயம் என்பது உணரப்பட்டது. இதன் வெளிப்பாடாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி) தோற்றம் பெற்றது. அதேவேளை இதுவரை ஜனநாயக மறுப்புக்கு உட்பட்டிருந்த மாற்று அரசியல் சிந்தனைகள் படிப்படியாக வெளியேவந்தன. இது இதுவரை கிழக்கில் புலிகளின் “பாதுகாப்பு வேலிக்குள்” வளர்ந்த தமிழசுக்கட்சிக்கும் – தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் பெரும் சவாலாக அமைந்தது.
புலிகளின் ஜனநாயக மறுப்புகள் பற்றி பேசாது, அந்த ஜனநாயக விரோத அரசியலை தமிழரசும்,சகபாடிகளும் நியாயப்படுத்தியதுடன் தங்களின் போட்டியற்ற ஏகபோக அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொண்டனர். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோற்றம் இந்தப் போலி ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தியது. தேசியக்கட்சிகளும் இந்த ஜனநாயக மீட்பு அரசியல் சூழலுக்குள் பிரவேசித்து இன்னொரு பக்கத்தால் தமிழரசின் கடந்த கால அரசியலை கேள்விக்குட்படுத்தியதுடன், கிழக்குமாகாணத்தில் இந்த அரசியலின் பொருத்தமற்ற தன்மையையும் வெளிப்படுத்தின. கிழக்கின் ஜனநாயக அரசியல் களத்தில் தமிழரசு மத்தளமாக அடிவாங்கியது.
2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் மொத்த வாக்காளர் தொகையில் 77 வீதம். இதில் தமிழரசுக்கட்சி – கூட்டமைப்பு 79,468 வாக்குகளை (27%) பெற்றது. இந்த நிலையில் தமிழ்த்தேசிய மாற்று அணி 4960, வாக்குகளையும், தமிழ்த்தேசிய எதிரணிகள் 1,01,116 வாக்குகளையும் பெற்றன. இதில் ரி.எம்.வி.பி. 67,692 (23%) வாக்குகளையும், பொதுஜன பெரமுன 33,424(11%) வாக்குகளையும் பெற்றன. இலங்கைத்தேசிய அரசியல் நீரோட்டத்தில் முதல் பிரவேசம் என்ற வகையில் ரி.எம்.வி.பி.யின் இந்த பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது. இந்த பாய்ச்சலுக்கான சந்தர்ப்பத்தை புலிகளினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் கடந்த கால கிழக்கு தொடர்பான தவறான அரசியலே வழங்கியிருந்தது.
இவற்றிற்கும் அப்பால் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக ஐக்கிய சமாதான முன்னணி 31,054, (10%) வாக்குகளைப் பெற்றிருந்தது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428வாக்குகளைப்பெற்று 11வீதத்தை எட்டியது. மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பெரும்பாலான தமிழ்மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் நிறுவுகின்றன. இது புலிகளின் பாதுகாப்பில் வளர்ந்த தமிழரசுக்கட்சிக்கும் கூட்டாளிகளுக்கும் பெரும் சவாலாக அமைந்தது. அந்த சவாலை தமிழரசுக்கட்சியும், கூட்டாளிகளும் இன்று தனித்தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் தமிழ்த்தேசிய மாற்று அணிகள் போட்டியிடாத நிலையில் கூட தமிழரசு – கூட்டமைப்பு 25,255 (7%) வாக்குகளையே பெறமுடிந்தது.அகில இலங்கை தமிழர் மகாசபை 29,379(8%)வாக்குகளை பெற்று தமிழரசு அணியை தோல்வியுறச் செய்தது. மொத்தத்தில் இரு தரப்பும் பிரதிநிதித்துவம் அற்ற நிலையில் தோல்வி அடைந்தனர். அம்பாறை மாவட்ட தமிழர்கள் சுமார் 55,000 வாக்குகளை அளித்திருந்தும் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறமுடியவில்லை.
ஆனால் 38,911 வாக்குகளை பெற்ற தேசிய காங்கிரஸ்க்கு ஒரு இடம் கிடைத்தது. அம்பாறையில் தமிழ்மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அங்கு நீண்ட காலமாக தமிழ்மக்களின் அரசியலில் அக்கறை கொண்ட ஊர்க்கட்சிக்கு வாய்ப்பை வழங்கி, வந்திறங்கிய ஊரார் கட்சி போட்டித்தவிர்ப்பை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இங்கு விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் சொந்த ஊராரா….? அல்லது வந்தான் வரத்தாரா….? வடக்கில் இப்படியொரு நிலைக்கு வாய்ப்பில்லை. கிழக்கின் -அம்பாறையின் நிலையை நன்கு தெரிந்தும் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும், கிழக்கிற்கு எதிரான மேலாண்மையினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதேயன்றி அம்பாறை தமிழ்மக்களின் நலன் சார்ந்து அல்ல.
திருகோணமலையில் தமிழரசுகடசி 39,579 (19%) வாக்குகளைப் பெற்று தப்பித்தவறி ஒரு இடத்தை காப்பாற்றிக்கொண்டது. தமிழரசுக்கு எதிரான இரு அணிகளும் வெறும் 4 வீதமான வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. இதில் தமிழ்த்தேசிய மாற்று அணி 4370 வாக்குகளையும், தமிழ்த்தேசிய எதிரணி 3775 வாக்குகளையும் பெற்றனர். இவ்வாறு வெற்றிவாய்ப்பே இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும் வடக்கு கட்சிகளான ஈ.பி.டி.பி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்மக்கள் தேசிய முன்னணி போன்றவை கிழக்கில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து தேசியப்பட்டியலுக்கு பிச்சை எடுக்கின்றனர். இந்த அரசியலை இலங்கையின் அரசியல் வரலாற்றில் கிழக்குமாகாண அரசியல் வாதிகள் வடக்கில் செய்ததில்லை. அரசியலில் இதை ஒரு அத்துமீறிய பிரவேசமாகவே கொள்ள வேண்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வடக்கு தமிழர்கள் போதுமான அளவு வாழ்கிறார்கள். அப்படியிருந்தும் ஏதோவொரு காரணத்தை கூறி வடக்கு கட்சிகள் போட்டியைத் தவிர்த்துக்கொள்கின்றன. கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை, சஜீத்பிரேமதாசவை-மனோகணேசனை ஆதரிப்பதாக அல்லது கொழும்புக்கிளையின் தமிழரசுக்கட்சி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜாவை ஒதுக்குவதாக இது இருந்தது. ஆனால் அதே விட்டுக்கொடுப்பை கிழக்கில் செய்வதற்கு தமிழ்த்தேசிய அரசியல் தயாராக இல்லை.
வடக்கு கட்சிகள் கொழும்பில் மேற்கொண்ட போட்டி தவிர்ப்பு யாரின் நலன்களை பேணுவதற்காக? அப்பட்டமாக சஜீத் பிரேமதாசவுக்கு முட்டுக்கொடுப்பதற்காத்தானே. கொழும்பில் ஒரு முகமும், கிழக்கில் ஒரு முகமும் ஏன்? இந்த சில்லறைகள் மட்டக்களப்பில் 4,960 வாக்குகளையும், திருகோணமலையில் 4,370 வாக்குகளையும் பிரித்துள்ளனர். இவர்களின் இந்த குள்ளநரி அரசியலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி தான் பெற்ற மொத்தவாக்குகளை 67,766 ஆக உயர்த்தி ஒரு தேசியப்பட்டியல் அங்கத்துவத்தைப் பெற்றது. அதே போல் சிங்கள பௌத்த அடிப்படைவாத கலகொட அத்தே ஞானசார தேரோவின் பொது பல சேனா 67,758 வாக்குகளைப்பெற்று ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்றது.
ஆனால்….. ! 67, 692 வாக்குகளைப்பெற்ற ரி.எம்.வி.பி.க்கு தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 74 வாக்குகளால் கஜேந்திரகுமார் மட்டக்களப்பிற்கான தேசியப்பட்டியலை சுருட்டிக்கொண்டார்.
அது மட்டுமல்ல இவர்கள் மட்டக்களப்பு வாக்குகளை பிரித்ததால் 67,758 வாக்குகளை பெற்ற ஞானசாரதேரர் ரி.எம்.வி.பி.யை விடவும் 66 வாக்குகளை அங்கும், இங்கும் மேலதிகமாக பொறுக்கி ஒரு ஆசனத்தை பெற வழிவகுத்தவர்கள் இந்த தமிழ்ச்தேசிய சில்லறைகள்.
மட்டக்களப்புக்கு கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியலை சிங்கள பௌத்த அடிப்படைவாதிக்கு வழங்கி விட்டு தமிழ்த்தேசியம் பேசுவதற்கும், வடக்கு கிழக்கு இணைப்பைக் கோருவதற்கும் இவர்களுக்கு இருக்கின்ற அருகதை என்ன?
இது, இனிவரும் காலங்களில் கிழக்குமாகாண மக்கள் சிந்திக்க வேண்டிய முக்கிய அரசியல் போக்கு.
தொடரும்………!