— வீரகத்தி தனபாலசிங்கம் —
மரணத்தைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ஜனாதிபதி பிரேமதாச மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல.
அதற்கு ஒரு தசாப்தம் முன்னதாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது தென்னிலங்கையில் பட்டாசு கொளுத்திய சம்பவங்கள் பற்றியும் அறிந்தோம். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தீவிரமாக தலையீடுசெய்யத் தொடங்கிய காலகட்டம் அது.
முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க 1994 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது தமிழர்கள் மனக்கண் முன்னால் எரிந்து கிடந்த யாழ்ப்பாணம் பொதுநூலகம் நிச்சயமாக வந்திருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1996 ஆண்டு காலமானபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ, பிரதமராக இருந்த அவரது தாயார் சிறிமா பண்டாரநாயக்கவோ அஞ்சலிசெலுத்தப் போகவில்லை.
உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்தபோது தென்னிலங்கை முழுவதும் போர் வெற்றிக் குதூகலத்தில் வீதிகளில் நின்றது. இவ்வாறான பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.
மிகவும் பிந்திய சம்பவமாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் அகால மரணம் அமைந்தது.
அவரது மரணத்தைக் குதூகலித்துக் கொண்டாடி சமூக ஊடகங்களில் மாத்திரமல்ல, பிரதானபோக்கு ஊடகங்களிலும் கூட கருத்துக்கள் பதிவாகியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. காலையில் நித்திரைவிட்டு எழும்பும்போது நிசாந்தவின் மரணத்தைக் கேள்விப்பட்டது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா….? என்று கூட பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.
அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட செய்தியும் கூட வழமையான இரங்கல் செய்திகளை விடவும் வித்தியாசமாக இருந்தது.
இராஜாங்க அமைச்சரின் மரணம் எல்லோருக்கும் ஒரு பாடத்தைப் புகட்டியிருக்கிறது. உலகில் நிரந்தரமானது மரணம் ஒன்று மாத்திரமே என்று புத்தபிரான் எமக்கு போதித்திருக்கிறார். எதிர்பாராத ஒரு தருணத்தில் மரணம் வரும் என்ற சிந்தனையையும் புத்தபிரான் கொண்டிருந்தார் என்று கூறிய ஜனாதிபதி பைபிளை மேற்கோள் காட்டி ‘வெளிச்சத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு தனது சகோதரனை சபிப்பவன் உண்மையில் இருளிலேயே வாழ்கிறான்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நிசாந்தவின் மரணம் எல்லோருக்கும் பாடத்தைப் புகட்டியிருக்கிறது என்று விக்கிரமசிங்க கூறியது அவரின் வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமீறிய வேகத்தில் வந்ததால் விபத்துக்குள்ளாகி அவர் பலியானதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நிதானமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல என்பது நிச்சயம்.
பத்து நாட்களுக்கு முதல் நிசாந்த குருநாகலிலும் சிலாபத்திலும் இரு திருமண வைபவங்களில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை அவரது ஜீப் கொள்கலன் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது இடம்பெற்ற கோரவிபத்தில் அவரும் மெய்க்காவலரான பொலிஸ் உத்தியோகத்தரும் பலியானார்கள்.
நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் புத்தளம் மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான ஆராச்சிக்கட்டுவவில் கடந்த ஞாயிறன்று பெரும் எண்ணிக்கையான அரசியல்வாதிகள், ஆதரவாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.
அவர் மரணமடைந்த மறுநாள் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ” சனத் நிசாந்த ; அவர் நினைவு கூரப்படுவாரா? ” என்ற தலைப்பில் முன்பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டது. எமது நினைவுக்கு எட்டிய கடந்த காலத்தில் இலங்கையில் எந்தவொரு அரசியல்வாதியின் மரணத்தையும் அடுத்து இவ்வாறான ஒரு தலைப்புச் செய்தியை பத்திரிகை ஒன்று வெளியிட்டதாக நாம் அறியவில்லை.
48 வயதான நிசாந்தவின் அகால மரணம் அவரது இளம் மனைவியினாலும் நான்கு இளம் பிள்ளைகளினாலும் தாங்கிக்கொள்ள முடியாதது. துரதிர்ஷ்டவசமாக அவரது அரசியல் வாழ்வு பெரும்பாலும் எதிர்மறையான காரணங்களுக்காகவே நினைவுகூரப்படப்போகிறது. அதை ஒரு படிப்பனையாக அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்வார்கள் என்பது சந்தேகமே.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நிசாந்த 2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசியான நிசாந்த அவர்களைப் பாதுகாப்பதில் மாத்திரமல்ல பாராளுமன்றத்தில் சபையின் நடுவில் இறங்கி குழப்பம் விளைவிப்பதிலும் முன்னணியில் விளங்கினார்.
ஒரு தடவை சபாநாயகரிடம் மன்னிப்புக்கோரிய அவர் ஜனவரி முற்பகுதியில் இரு வாரங்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாதவாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
மரணமடைவதற்கு முதல் நாள்கூட பாராளுமன்றத்தில் இணையவெளி பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியபோது சபையின் மத்தியில் இறங்கி நிசாந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சண்டித்தனத்தில் இறங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.
பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை கிளப்பிப் பேசும்போது சபைக்குள் அவர்களுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்தவராக நிசாந்த தனக்கொரு (அவப்) பெயரைச் சம்பாதித்துக்கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணவைபவத்தின் மின்கட்டணம் நீண்டநாட்களாக செலுத்தப்படாமல் இருந்தது. கடந்த வருடம் நிசாந்த தனது சொந்தப் பணத்தில் (பல இலட்சம் ரூபா) அந்த கட்டணத்தைச் செலுத்தி ராஜபக்சாக்கள் மீதான தனது விசுவாசத்தின் உச்சத்துக்குச் சென்றார்.
அறகலய மக்கள் கிளர்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர் நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்ட்டபோது அவர்களை நீதிபதிகள் பிணையில் விடுதலை செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நிசாந்த பொதுஜன பெரமுன தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றியபோது வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை சில நீதிபதிகள் விடுதலை செய்கிறார்கள் என்று கூறினார். அதற்காக அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் புத்தளம் மாவட்டத்தில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை தனது சகோதரருடன் சேர்ந்து தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் நீதிமன்றத்தில் நிசாந்தவுக்கு எதிராக வழக்கு ஒன்றும் இருந்தது.
அறகலயவின் உச்சக் கட்டத்தின்போது 2022 மே 9 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து தனது ஆதரவாளர்களை காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ வுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டபோது அந்த தாக்குதல்களின் முன்னணியில் நிசாந்த நின்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அமைதிவழியில் போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக இன்றைய பதில் பொலிஸ்மா அதிபருடன் (அன்று அவர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்) நிசாந்த காலிமுகத்திடலில் கதைத்துக்கொண்டு நின்றதைக் காண்பிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெகுதீவிரமாகப் பரவியது.
அந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக நாட்டின் பல பாகங்களிலும் மூண்ட வன்முறைகளில் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகளும் உடமைகளும் தீக்கிரையாகின. அதில் ஆராச்சிக்கட்டுவவில் இருந்த நிசாந்தவின் வீடும் அடங்கும்.
ராஜபக்சாக்களின் தவறான ஆட்சிமுறையின் விளைவாக மூண்ட பொருளாதார நெருக்கடியில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த நாட்டு மக்கள் மீது கொஞ்சமேனும் இரக்கம் காட்டாமல் தனது அரசியல் ஆசான்கள் மீதான விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு காலிமுகத்திடல் தாக்குதலை நிசாந்த முன்னின்று நடத்தியதை மக்கள் எந்தளவு ஆத்திரத்துடன் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதை அவரின் அகால மரணத்தக்கு பிறகு சமூக ஊடகங்களில் நிரம்பிவழிந்த பதிவுகள் வெளிக்காட்டின.
நிசாந்தவின் மரணத்தையடுத்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுப் பிரதிபலிப்புகளுக்கான காரணங்களாக ….. சட்டத்தின் ஆட்சியை மதிக்காமல் செயற்படுதல், சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று அரசியல்வாதிகளும் அவர்களின் கையாட்களும் நடந்ததுகொள்வது, அதிகார துஷ்பிரயோகத்தினாலும் உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெறுவதற்கு தடையாக அரசியல் செல்வாக்கு இருப்பது…. என்று பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.
” அரசும் அரசியல்வாதிகளும் மக்களை வதைக்கின்ற சமுதாயங்களில், அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யாத சமுதாயங்களில், மக்களின் துன்பங்களுக்கு காரணமான அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஊழலுக்கும் வன்முறைகளுக்கும் பொறுப்பான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனைப் பயமின்றி சுதந்திரமாக வாழ்கின்ற சமுதாயங்களில் அவர்களுக்கு நேரக்கூடிய அகால மரணங்களை மக்கள் இயற்கை வழங்கிய நீதி என்று மக்கள் திருப்தியடைகிறார்கள்.
” வன்முறையும் துஷ்பிரயோகமும் வழமையானதாக மாறும்போது மனிதவாழ்வின் பெறுமதி தாழ்ந்துவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் துஷ்பிரயோகங்களைச் செய்த ஒருவர் மரணமடையுமபோது பொதுவெளியில் பிரதிபலிப்புகளும் அதேயளவுக்கு குரூரமானவைாயாகவே இருக்கும்.
” மனிதாபிமானப் பண்புடைய சமுதாயத்தை, மற்றவர்களின் உணர்வுகளை மதித்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளக்கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமானால் , அதற்குரிய பண்புகளை முதலில் அரசு வெளிக்காட்டவேண்டும். சட்டத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பதுடன் பொறுப்புக்கூறக்கூடியத்கவும் அரசாங்கம் இருக்கவேண்டும். அரசு மனித உரிமைகளைக் களங்கப்படுத்தும்போது சமுதாயத்திடமிருந்து நயநாகரிகமான பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியாது ” என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் ( முன்னைய ருவிட்டர் ) பதிவொன்றைச் செய்திருந்தார்.
அந்த பதிவை சில ஆங்கிலப் பத்திரிகைகள் நிசாந்தவின் மரணம் தொடர்பாக எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் மேற்கோள் காட்டியிருந்தன.
இவ்வாறாக சமூக ஊடகங்களில் வெளியான பல பதிவுகளை உதாரணமாகக் கூறமுடியும். இத்தகைய பதிவுகள் மனிதத்தன்மை அற்றவை என்றும் கீழ்த்தரமானவை என்றும் கண்டனம் செய்யும் பதிவுகளையும் காணமுடிந்தது. அரசியல் அவதானிகள் சிலரும் மரணத்தைக் கொண்டாடிய பதிவுகளை கடுமையாக விமர்சனம் செய்து எழுதுகிறார்கள்.
நிசாந்தவின் இறுதி ஊர்வலம் சென்ற பாதையோரங்களில் பெருந்திரளாக மக்கள் கூடிநின்று அஞ்சலி செய்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதை நிச்சயமாக நிசாந்தவின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் எழுதவில்லை. மரணத்தைக் கொண்டாடும் மனநிலை மீதான வெறுப்பையே அவ்வாறு அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.
அரசியல் வர்க்கம் மீதான தங்கள் வெறுப்பை வெளிக்காட்டுவதற்கு நிசாந்தவின் மரணம் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.
என்னதான் மனிதாபிமானப் பண்புகளைப் பற்றி நாம் பேசினாலும், பழிபாவத்துக்கு அஞ்சாத போக்குகள் நிறைந்த இன்றைய அரசியல் வாழ்வில் மரணங்களும் கூட குரூர திருப்தியுடன் நோக்கப்படும் ஒரு கலாசாரம் வளர்ந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.
நிசாந்த விபத்தில் பலியான சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்ததாக கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சினிமாப் பாணியில் சொல்வதானால் அவர் அழுதுகொண்டே சிரித்திருப்பார் அல்லது சிரித்துக்கொண்டே அழுதிருப்பார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணச்செய்தி வெளியான கையோடு வேட்பாளர் பட்டியலில் அவருக்கு அடுத்தவராக இருப்பவரின் பெயரும் செய்திகளில் வந்துவிடுகிறது. இறுதிச்சடங்கு முடியும் வரையாவது அதைப் பற்றிய செய்தியை வெளியிடாமல் இருக்கும் ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைக் கூட ஊடகப்பரப்பில் காணமுடியவில்லை.
அரசியல் கலாசாரம் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கிறதோ சமூகவாழ்வின் சகல அம்சங்களிலும் அதேயளவுக்கு எதிர்மறையான சிந்தனைப் போக்குகள் வளருகின்றன. என்னதான் மதங்களின் மாண்புகள் பற்றி நாம் பேசினாலும் அவற்றினால் இதுவிடயத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தி சமூகத்தை வழிநடத்த முடிவதில்லை. போட்டாபோட்டி நிறைந்த இன்றையை சமூக வாழ்வில் பாரிய தார்மீக வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது.
மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் என்றோ ஒரு நாள் மரணமடையத்தான் வேண்டும். ஆனால், உயிருடன் இருக்கும் காலத்தில் எமது வாழ்க்கை முறையின் மூலமாக நாம் எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியமானது.
இதனிடையே, புத்தளம் மக்களும் நாட்டு மக்களும் பொதுஜன பெரமுன தலைவர்களும் கேட்டுக்கொண்டால் நிசாந்த விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசியலில் இறங்குவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக அவரின் மனைவியான சட்டத்தரணி சமாரி பிரியங்கா பெரேரா கூறியிருக்கிறார் என்பதையும் கவனிக்க நாம் தவறக்கூடாது.
(வீரகேசரி வாரவெளியீடு)