கிழக்கில் தலைமைத்துவமும் தனிக்கட்சியும்…!   (மௌன உடைவுகள்-70)

கிழக்கில் தலைமைத்துவமும் தனிக்கட்சியும்…! (மௌன உடைவுகள்-70)

 — அழகு குணசீலன் —

கிழக்கு தமிழ் சமூகத்தின் உயிர்ப்பும்,துடிப்பும் கொண்ட இயங்குநிலை அரசியல் செயற்பாட்டிற்கு தனியான அரசியல் தலைமைத்துவமும், அரசியல் கட்சியும் அவசியம். இதன் மூலமே அது தனக்கே உரித்தான தனித்துவங்களைப்பேணியும் ,  தமக்கான சிறப்பு சமூக, பொருளாதார. அரசியல் தேவைகளை அடையாளம் கண்டும் செயற்பட முடியும். இந்த வகையில் கிழக்கில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி) கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி வருகிறது.

இலங்கைத்தீவின் எல்லாகட்சிகளிலும், தலைமைத்துவங்களிலும் இருக்கின்ற நிறைவும், குறைவும் ரி.எம்.வி.பி.யிலும் இல்லாமல் இல்லை. இவற்றிற்கு மத்தியிலும்  நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட கிழக்கிற்கும், அதன் மக்களுக்கும் ஒரு பிராந்திய கட்சியாக, தலைமைத்துவமாக ரி.எம்.வி.பி.  செயற்படுகிறது. இது வரலாற்று கடமை  மட்டும் அன்றி, வரலாற்று தேவையுமாகும். 

இது பற்றி தீடீரென மௌன உடைவுகள் இன்றைய சூழலில் பேசுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஒன்று: இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தேர்வில் கிழக்குக்கு எதிராக இடம்பெற்ற திட்ட மிட்ட செயற்பாடுகள்.

இரண்டு: இந்த அரசியல் சூழல் ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்களில் இடம்பெற்ற ஒரு முகநூல் பதிவு.

முனையூர் சிறிராம் என்பவரால் முகநூலில் இடப்பட்ட பதிவு இது:

“கிழக்கு மாகாணத்திற்கு தற்போதைய தேவை தலைமைத்துவமா? தனிக்கட்சியா? ”  என்ற கேள்வியை அந்தப்பதிவு எழுப்பியுள்ளது.

முனையூர் சிறிராமின் இந்தக் கேள்விக்கான மௌன உடைவுகளின் பதில் ” இரண்டும்” என்பதே. ஒரு கட்சியையும், அதன் தலைமைத்துவத்தையும் ஒரு செயற்பாட்டு அரசியலில் பிரித்து நோக்கமுடியாது.

அரசியல் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதில் சமூக, பொருளாதார,அரசியல் சூழலுக்கு பெரும் பங்குண்டு.இந்த சூழல்  “பூரணத்துவம்” அடையாமல் இருந்ததே அல்லது அதற்கான அடிப்படைகளை முழுமையாக கொண்டிருக்காது இருந்ததே கிழக்கின் அரசியல் தலைமைத்துவத்திற்கும், கிழக்கிற்கான தனிக்கட்சியின் தோற்றத்திற்கும் இருந்த தடையாகும்.

2004 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு அது வரை பூரணப்படுத்தப்படாமல் இருந்த சூழலை பூரணப்படுத்தியது. இருதரப்பு ஆயுத மோதல்களுக்கு இடையே ஒரு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலப்பதற்கான வாய்ப்பையும் ,இன்னும் சொல்லப்போனால் அன்றைய சூழலில் கட்டாய தேவையாய் இருந்த தற்காப்பு ஆயுதபலம் இதற்கு  பின்னணி அரசியல் பலமாகவும் அமைந்தது.

1970 களுக்கு பின்னர் தற்காப்பு  ஆயுத பலமின்றி கிழக்கு , வடக்கில் இருந்து பிரிந்து ஒரு அரசியல் தலைமைத்துவத்தையும், தனிக்கட்சியையும் கட்டி எழுப்புவது வெறும் கனவாகவே இருந்தது. இதனால்தான் அன்றைய  அரசியலில் கே.டபிள்யூ. தேவநாயகமோ, செ.இராசதுரையோ, அ.தங்கத்துரையோ, எம்.கனகரெட்டமோ இதைச் சாதிக்க முடியவில்லை. இவர்கள் சாதிக்காததை அன்றைய கருணாவும், பிள்ளையானும் சாதித்துக்காட்டினார்கள். முஸ்லீம் காங்கிரஸ் கூட  ஆயத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தற்காப்பு ஆயுதங்களை தூக்கவேண்டியிருந்த காலம் அது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிளவு  ரி.எம்.வி.பி யின் தோற்றத்திற்கும், கிழக்கில் ஒரு அரசியல் தலைமைத்துவம் உருவாகவும் காரணமாகியது. இது போன்ற மற்றோர் அரசியல் சூழல்  தற்போது கிழக்கில் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. கிழக்கை பொறுத்தவரை தமிழரசுக்கட்சிக்கு யார் தலைவர், யார் செயலாளர் என்ற பதவி “பங்கீடு” அல்ல முக்கியம். இந்த பங்கீட்டின் பின்னணியில் கிழக்கை புறக்கணிக்கின்ற, கிழக்கிற்கான அங்கீகரிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நிர்வாக உரிமையை மறுப்பதும், இயலுமானால் அதையும் வடக்கில் வைத்துக்கொள்ளும் மனநிலையுமே பேசப்படவேண்டியது. இதனால் தான் தமிழரசுக்கட்சியின் இன்றைய பதவிப்போட்டி மீண்டும் ஒரு 2004 ஐ கிழக்கில் திணிப்பதாக – கிழக்கின் அபிலாஷைகளை புறக்கணிக்கும் அரசியல் அநீதியாக அமைகிறது.

இது கிழக்கின் தமிழ்த்தேசிய – தமிழரசு அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி, கிழக்கின் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் விலாசமிடப்பட்ட  வடக்கு செய்தியாகும் . இந்த சூழலில் கிழக்கு மக்களுக்கு இருக்கின்ற தேர்வு கடந்த 75 ஆண்டுகளைப்போன்று நடக்கின்ற அநீதிகளையும், சமத்துவ மறுப்புக்களையும் தொடர்ந்தும் மூடிமறைத்து ” நாம் தமிழர்கள்” என்ற லேபலில்  அரசியல் செய்வதா…? இல்லை தங்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியையும், தலைமைத்துவத்தையும் கட்டமைப்பதா? என்பதாகும். இதற்கான தேர்வு மக்களுக்கு மட்டுமானது அல்ல, கிழக்கின் தமிழரசு அரசியல்வாதிகளுக்குமானதுதான்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வில் சுமந்திரன் தோல்வி அடைந்தார். அவரின் தோல்வி  சொல்லும் செய்தி என்ன….?  அவரின் கடந்தகால அரசியலுக்கு தமிழரசுக்கட்சியின் பொதுக்குழுவால்  வழங்கப்பட்ட பற்றுச்சீட்டே அந்த முடிவு. கிழக்கில் அநாவசியமான அவரின் அரசியல் தலையீடு கிழக்கு தமிழரசார் இடையே அவர்மீதான நம்பிக்கையை இழக்கச்செய்திருக்கிறது. ஜனநாயக வாக்கெடுப்பு முடிவையும், நம்பிக்கை இழப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் “மூக்கை தொடுவதற்கு தலைக்கு மேலால் சுற்றுகிறார்”. ஒரு பக்க நியாயங்களையும், காரணங்களையும் தேடுகிறார்.

சமந்திரனை தோற்கடித்ததில் ரி.எம்.வி.பி. முகநூல் போராளிகளின் பதிவுகள் குறிப்பிடத்தக்க செல்வாகை செலுத்தியுள்ளன என்பதை களநிலையை ஆய்வு செய்யும் எவரும் தவிர்த்து செல்ல முடியாது. காரணம் தமிழரசுக்கட்சிக்கு  யார் தலைவராக வேண்டும் என்ற அக்கறையல்ல. ஒரு வகையில் யாருக்கு “நஷ்டத்தை” ஏற்படுத்தலாம் என்ற மறைமுக அக்கறையாக இருக்கலாம்.   மட்டக்களப்பில் சுமந்திரனின் அநாவசியமான, நேர்மை அற்ற தலையீடுகள் ரி.எம்.வி.பி. ஆதரவாளர்களை ஆத்திரமூட்டியிருப்பதற்கு வாய்ப்புண்டு. மட்டக்களப்பில் சொந்த  தமிழரசாரே ஆத்திரப்படும் போது…….?

சுமந்திரனின் ஒப்புதல் வாக்குமூலமும் குறுக்கு விசாரணையும்….!

———————————–

எம்.ஏ. சுமந்திரன் தமிழரசின் புதிய தலைவர் சி. சிறிதரனுக்கு எழுதிய சீனி முலாம் பூசப்பட்ட கடிதம்  கூறுவது என்ன…….?

மத்திய செயற்குழு கூட்டத்தின் ஆரம்பத்தில் “கோடிப்புறத்தில்” சந்தித்தபோது : 

“…………… இரு அணிகளாக பிரிந்திருக்கும் கட்சி ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கள் சொன்னபோது, அப்படி நடப்பதாக இருந்தால் தாங்கள் தலைவராகவும், நான் செயலாளராகவும் இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொன்னேன். ஆனால் அது முற்று முழுதாக உங்களது கையிலேதான் இருக்கிறது என்பதையும் கூறினேன்……….”

“………. கிழக்கு மாகாணத்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பாப்பை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்  என்ற வினாவை எழுப்பியிருந்தீர்கள். அதனைக் கூட்டத்தின் போது மற்றவர்களோடு பேசித்தீர்ப்போம் என்று நான் கூறிய பின்னரே கூட்டம் ஆரம்பமானது.”

சுமந்திரன் அவர்களே…!

நீங்கள் தமிழரசுக்கட்சியின் தலைவர்பதவிக்கு போட்டியிட்டு பொதுச்சபையினால் நிராகரிக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா…..?

ஆம்! என்றால் கோடிப்புற”குசுகுசுப்பு” செய்து மீண்டும் செயலாளர் பதவியை பெறுவதற்கு நீங்கள் சிறிதரனுடன் பேரம்பேசுவதில் உள்ள அரசியல் நேர்மை,நீதி,நியாயம் என்ன? 

செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்தின் உரிமையாக இருக்கின்ற போதும், அதை உங்கள் கடிதத்தில்” எதிர்பார்ப்பு ” என்று நீங்கள் இருவரும் கொச்சைப்படுத்துவது ஏன்? உங்களுக்கு என்றால் அது உரிமை. மற்றவர்களுக்கு என்றால் அதே எதிர்பாப்பா…?

இப்போது கிழக்கில் குகதாசனுக்கு தானே செயலாளர் பதவி என்று சிலர் ஆறுதலடைகிறார்கள். ஆனால் அதற்காக மட்டக்களப்பு சுமந்திரன் எதிர் அணியினர் விலை கொடுக்க வேண்டியிருந்தது. உண்மையில்  இது தனியே கிழக்காகார் வடக்கின் தலையீடின்றி எடுத்திருக்க வேண்டிய முடிவு .காணப்பட்ட தலா ஒரு வருட இணக்கப்பாடு குறித்து சுமந்திரனின் கடிதத்தில் எதுவும் இல்லை. இதன் அர்த்தம் அந்த இணக்கப்பாட்டை  எழுத்துருவில் தவிர்ப்பதா ?

ஜனநாயக தேர்வில் தோல்வியை ஏற்பது பற்றியும் , தமிழரசு விதிகள் பற்றியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உங்களுக்கு  தலைவர் தேர்தலில் பொதுச்சபை வழங்கிய நீதியை ஏற்க முடியவில்லை. செயலாளர் பதவி கிழக்குமாகாணத்திற்குரியது என்ற. நியதியை பின்பற்ற முடியவில்லை.

இதை கிழக்கு மக்கள் தங்கள் அனுபவ அரசியலில் என்ன பெயர் கொண்டு அழைப்பது?

யாழ்.மேலாதிக்க கருத்தியல்…? கிழக்கு புறக்கணிப்பு…..?  கிழக்குக்கான  சமத்துவ உரிமை மறுப்பு….? யாழ்.பிரதேசவாதம்…..?  கிழக்குக்கு வடக்கு வழங்கும் போடுகாய் அரசியல் …… ?  இவை அனைத்தினதும் கூட்டு வடிவமே இந்த அபகரிப்பு அரசியல்.

இதில் இருந்து விடுபட , கிழக்கை கிழக்கான் தீர்மானிக்க கிழக்குக்கு தேவை தனியான அரசியல் கட்சியும், தனித்துவ அரசியல் தலைமைத்துவமும் என்பது இருபது ஆண்டு கடந்தும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் ஓடினாலும் உங்கள் சிந்தனை அடுத்தவனை ஆளுவதுதான்.

கிழக்கு மாகாணமும், தேசிய பட்டியலும்…..!

——————————————————————————–

வடக்கு கட்சிகள் கிழக்கில் வெற்றி பெறமுடியாது என்று நன்கு தெரிந்தும் ஏன் போட்டியிடுன்றன?  கிழக்கில் வாக்குகளைப்பிரித்து , கிழக்கு மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதே இதன் மறைமுகத்திட்டம். அடுத்தது அங்கொன்றும், இங்கொன்றுமாக போட்டியிட்டு ஆயிரம்… ஆயிரம் வாக்குகளை சேர்த்து கிழக்கு கட்சியின் வாக்குகளை பிய்த்துப் பிடுங்கி அதனூடாகவும் பிரதிநிதித்துவத்தை அபகரிப்பது. 

இது தான் கடந்த 2020 தேர்தலில் சுமார் ஆயிரம் வாக்குகளால் ரி.எம்.வி.பி. மட்டக்களப்பில் ஒன்றும், தேசியப்பட்டியலில் கஜேந்திரகுமாரின் கட்சியிடம் ஒரு பிரதிநிதித்துவத்தையும் இழக்க காரணமாக அமைந்தது. தேர்தல் முடிந்து கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த கட்சியினர் மட்டக்களப்பில் – கிழக்கில் பெற்ற வாக்குகளுக்காக இந்த மக்களுக்கு ஒதுக்கிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு எவ்வளவு? செய்த அபிவிருத்தி என்ன?  ஊர்வலங்களில் பின்னால் போவது தான் எங்கள் வேலையா…..? என்பதை கிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டியது காலத்தின் அரசியல் அழுத்தம்.

அம்பாறையிலும்  தமிழரசுக்கட்சி போட்டியிட்டு கிழக்கு கட்சியின் பிரதிநிதித்துவத்தை தடுத்தது. கருணாவைத் தடுக்கிறோம் என்று அந்த மக்களின் பிரதிநிதித்துவத்தை தாரை வார்க்க காரணமாக இருந்தவை இந்த வடக்கு கட்சிகள். உண்மையில் தமிழரசுக்கட்சி அம்பாறை மக்கள் தங்களால் இழந்த பிரதிநிதித்துவத்தையும் வழங்கி, கிழக்கிற்கு தேசியப்பட்டியலையும் வழங்கி இருக்கவேண்டும். துரைராசசிங்கம் தனக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்து அவசர அவசரமாக கலையரசனை நியமித்தால் கிழக்கு தப்பியது. இது வடக்கில் இன்னும் பேசுபொருளாகவே இருக்கிறது. அஜீரணக்கோளாறு…..!

இப்போது வடக்கு கட்சிகளின் பின்னால் தமிழர்  பெயரால் போகின்ற அரசியல் வாதிகள் மற்றொரு பாடத்தை படித்திருக்கிறார்கள். சுமந்திரனும், சிறிதரனும் இவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். இனிமேலாவது எமது அரசியல் வாதிகள் கிழக்கின் அரசியல் தனித்துவம் பற்றி சிந்திப்பதற்கும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் காலம் கடந்துவிடவில்லை.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த – மட்டக்களப்பு அணியினர் மத்திய குழுவில் மௌனம் சாதித்து விட்டு, பொதுச்சபையின் பலம் அறிந்த பின்னரே வாக்கெடுப்பு கோரினார்கள் என்பதை சும்ந்தினனின் ஒப்புதல் வாக்குமூலம் உறுதி செய்கிறது. இது இவர்களின் வழக்கமான திட்டமிடாத,முன்னேற்பாடற்ற அரசியல் பலவீனத்தை வெளிப்படுத்திறுள்ளது.

கிழக்கின் தனித்துவ கட்சியாக,தலைமைத்துவமாக ரி.எம்.வி.பி.யின் கடந்த இருபதாண்டுகால அரசியல் அடைவுகள் பற்றி ஆய்வு செய்யப்படவேண்டும். இது மட்டக்களப்பு மாநகரசபை காலம், கிழக்குமாகாண சபைக்காலம், பாராளுமன்ற அரசியல்காலம் என பிரித்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்  அதன்மூலமே தனிக்கட்சியினதும்,தலைமைத்துவத்தினதும் வெற்றி தோல்வியை மதிப்பிட முடியும். இந்த ஆய்வில் முக்கியமானது அந்தந்தகால சூழல். இது கிழக்கு, இலங்கை, பிராந்திய, சர்வதேச சூழல்களுடனும்,  கொரோனா, பொருளாதார நெருக்கடி, சமகால யுத்தங்கள், இந்து சமுத்திர பிராந்திய பூகோள அரசியலின் தாக்கங்களுடன், தேசிய அரசியல் கொள்கை மாற்றங்களையும் உள்வாங்கி ஆய்வு செய்யப்படவேண்டும். 

அவ்வாறான முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வே கிழக்கின் தனிக்கட்சி,தலைமைத்துவ அடைவை மதிப்பிடுவதற்கான சிறந்த அணுகுமுறையாகும். இந்த பாரிய பணிக்கான பொறுப்பு ரி.எம்.வி.பி. யையும்,  அதன் தலைமையையும் சார்ந்ததே!

கிழக்கின் இன்றைய தேவை, தனியானகட்சியும், தனித்துவமான தலைமைத்துவமும்….! 

இது வரலாறு தரும் பாடம்….!!