“கனகர் கிராமம்”        -முஸ்லிம் பெண்ணை எட்டி உதைத்தவர்         (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-19)

“கனகர் கிராமம்” -முஸ்லிம் பெண்ணை எட்டி உதைத்தவர்  (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம்-19)

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

                                                                                                                                        — செங்கதிரோன் — 

 கதை -6 

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்த புதைகுழி அமைந்துள்ள இடத்தைக் ‘கபுறடி’ என்பார்கள். ‘கபுறடி’ அரபுச் சொல்லாகும்.

   ஏறாவூரைச் சேர்ந்த மனநோய்வந்து பைத்தியம் ஆகிப்போன முஸ்லீம் பெண்ணொருத்தி அடிக்கடி வந்தாறுமூலை ஊருக்குள் வந்து போவதுண்டாம். வந்தாறுமூலை ஊர் மக்கள் அப்பெண்ணின்மீது இரக்கம்கொண்டு சாப்பாடு, தேனீர் கொடுப்பதுண்டு. இவ்வாறு அப்பெண் வந்தாறுமூலை ஊருக்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு நாளில் சாமித்தம்பியின் அண்ணன் முறையான ஒருவருக்கு கோபம்வரும்படி ஏதோஒரு காரியம் அப்பெண் செய்துவிட்டாள். சாமித்தம்பியின் அந்த அண்ணன் வயல் வேலை செய்பவர். அவர் அப்பெண் பைத்தியக்காரி என்பதைக் கருத்தில் கொள்ளாது கோபத்தில் காலால் உதைத்திருக்கிறார். காலால் உதைத்த மறுகணமே அப்பெண்ணைப்பிடித்திருந்த பைத்தியம் நீங்கிவிட்டது. 

 அதன்பின் அந்தப் பெண் சுய புத்தி பெற்றுத் தனது சொந்த பந்தங்களைத் தேடி ஏறாவூருக்குச் சென்றவர் அதன் பின்பு வந்தாறுமூலைப் பக்கமே தலைகாட்டவில்லை. ஆனால் , அப்பெண்ணைக் காலால் உதைத்தவருக்கு இடுப்புக்குக் கீழே வழக்கமில்லாமல்போய் நடக்க முடியாததாகிவிட்டதாம். ஒரு ஆறேழு மாதங்கள் அரைத்து அரைத்துத்தானாம் நடமாடியுள்ளார். ஒரு நாள் திடீரென்று ஏதோ மனதில் தோன்றி தன்னை ஏறாவூரிலுள்ள ‘கபுறடி’க்குக் கொண்டு போகச் சொல்லித் தன் உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன்படி அவரை ஒரு மாட்டுவண்டிலில் ஏற்றி அவர் சொன்ன இடத்திற்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்.  

 அந்த இடம் ‘அவுலியா’ ஒருவரை அடக்கம் செய்த சமாதி. அச்சமாதியில் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டையொன்றில் கால்களை வைத்தபோது கால்களை எடுக்கமுடியாமல் இழுத்துப்பிடித்துக் கொண்டதாம். சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் கட்டை தானாகவே காலை விட்டுக் கழன்றதாம். அவரை உறவினர்கள் மெதுவாகத் தூக்கி நிற்பாட்டியுள்ளனர். அப்போது ஓரளவு தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கூடியதாகவிருந்தது. வீட்டுக்குத் திரும்பிச் சிலநாட்களில் பழையபடி நடக்கத் தொடங்கிவிட்டார். 

 கதையைக் கேட்ட கதிரவேல் “அதுக்கும் விஷக்கல்லுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

 “அத இனித்தான் தம்பி சொல்லப் போறன். கதய நான் இன்னமும் முழுசா முடிக்கல்லயே” என்ற சாமித்தம்பி கதையைத் தொடர்ந்தார்.

 முன்னொரு காலத்தில் ஏறாவூரில் முஸ்லிம் பாம்புக் கடி வைத்தியர் ஒருவர் இருந்துள்ளார். அவர் விஷ வைத்தியத்திற்குப் பேர் போனவர். ஒரு நாள் ஒரு தமிழ்ப் பெண்ணுக்குப் பாம்பு கடித்து அவரது சிகிச்சையால் அப்பெண் காப்பாற்றப்பட்டாள். சில வருடங்களின் பின்னர் அந்தப் பெண்ணை மீண்டும் பாம்பு தீண்டியுள்ளது. அவ்வைத்தியரிடம் கொண்டு சென்றபோது சிறிது காலத்தின் முன்பு அவர் காலமாகி விட்டிருந்த செய்திதான் கிடைத்தது. அவர் அடக்கம் செய்யப்பட்ட ‘கபுறடி’ இருந்தது. பாம்பு தீண்டிய பெண் அந்த வைத்தியரிடமே சிகிச்சை பெறுவேன். அவர் இறந்துவிட்டிருந்ததால் அவருடைய ‘கபுறடி’ க்குத் தன்னைக் கொண்டு செல்லும்படி பிடிவாதமாக இருந்துள்ளாள். அந்தப் பெண்ணை இறந்துபோன அந்த வைத்தியரின் சமாதிக்குக் கொண்டு போய் அங்கே நடப்பட்டிருந்த கட்டையில் அந்தப் பெண்ணின் கால் வைக்கப்பட்ட போது ஆச்சரியப்படும் வகையில் அப்பெண்ணின் உடலில் பாம்பு தீண்டி ஏறிய விஷம் முழுவதும் அந்தக் கட்டையால் உறிஞ்சப்பட்டு அப்பெண் மீண்டும் உயிர் காப்பாற்றப்பட்டாள். இச்செய்தி பரவலாகி அதற்குப் பின்னர் அப்பகுதியில் பாம்புக் கடிக்கு உள்ளாகுபவர்கள் அங்கு சென்று அக்கட்டை மூலம் விஷம் நீங்கப் பெற்றுக் குணமடைந்து வருகிறார்களாம்.

 “அந்த இடம்தான் நான் துவக்கத்தில சொன்ன ‘கபுறடி’ ” என்று விளக்கம் சொன்னார் சாமித்தம்பி.

 “அது சரி பெரியசாமி! உங்கட அண்ணன் பைத்தியக்கார முஸ்லிம் பொம்புளைக்குக் காலால உதச்சொன்ன அவக்குப் பைத்தியம் சுகமானதுக்கும் அவருக்குக் கால் நடக்கேலாமப் போனதுக்கும் பிறகு அவர் ‘கபுறடி’ க்குப் போய்க் கட்டயில கால் வைக்க நடக்கக் கூடிய மாதிரிச் சுகம் வந்ததுக்கும் விஷத்துக்கும் என்ன சம்பந்தமெண்டு விளங்கல்லயே!” என்று தனது சந்தேகத்தை எடுத்துப் போட்டான் கோகுலன்.

  “நானும் அதக் கேக்கத்தான் இரிந்த” என்றான் கதிரவேல்.

 “அதிர விளக்கமென்னண்டாத் தம்பி அந்தக் ‘கபுறடி’ க் கட்டைக்கு ‘அற்புதம்’ காட்டும் விசேஷம் இரிக்கி. அங்க அடக்கம் செய்த பாம்புக் கடி வைத்தியர் ஒரு ‘அவுலியா’ ” என்றார் சாமித்தம்பி.

 ‘நான் துவக்கத்தில கேக்கணுமெண்டுதான் இரிந்த. இடயில கேள்வி கேட்டு கதய குழப்பப்படா எண்டுபோட்டு விட்டுத்தன். ‘அவுலியா’ எண்டா என்ன?” என்று கேள்வியை எழுப்பினான் கோகுலன்.

 “அவுலியா எண்டா தம்பிமாரே நம்மட சித்தர்கள் மாதிரி. அற்புதம் எல்லாம் காட்டுவாங்க. முஸ்லிமாக்களிலயும் அப்படியான ஆக்கள் இரிந்திரிக்காங்க. அவங்கள ‘அவுலியா’ எண்டுதான் அவங்க சொல்லுற. அவுலியாக்கள அடக்கம் பண்ணின ‘கபுறடி’ க்கு விசேஷமிரிக்கி. அது இப்படியான அற்புதங்கள் காட்டும்” என்றார் சாமித்தம்பி.

 பின்னர், “இதுக்கு மேல எனக்கு விளக்கம் சொல்ல தெரியா தம்பி. அத ஒரு முஸ்லிமாளிட்டதான் கேக்கோணும்” என்றவர், “இன்னொரு அவுலியாட கத சொல்லுறன் கேளுங்களன்” என்று கூறி கதை சொல்லத் தயாரானார்.

 கதை-7

இந்தச் சம்பவமும் ஏறாவூரில் உள்ள ஒரு மையவாடி ஒன்றில் (இடுகாடு) நடைபெற்றுள்ளது.

 பிரேதமொன்றை அடக்கம் செய்வதற்காகக் குழி வெட்டியபோது குழியிலிருந்து இரத்தம் வெளியேறியது. ஆச்சரியமடைந்தவர்கள் மேலும் மெதுவாகக் குழியை ஆழப்படுத்தியபோது அங்கே பழைமையான சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்ட பிரேதமொன்று அப்பழுக்கின்றி அன்றே புதைத்தது போல் மண்வெட்டி பட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறியபடி இருந்ததாம். இஸ்லாமியர்கள் பிரேதத்தை அடக்கம் செய்கின்றபோது கிட்டத்தட்ட முக்கோணம் போன்ற வடிவிலான மரப்பலகையொன்றால் மூடி அதன் பின்னரே மண்ணைப் போடுவர். அந்த மரப்பலகை இருந்த இடமும் தெரியவில்லையாம். பொதுவாக இவ்வாறான மனிதர்கள்தானாம் ‘அவுலியா’க்கள். இவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாம். இவர்கள் ‘இறைநேசர்கள்’ எனக் குறிப்பிடப்படுவர். இவர்கள் மதம் கடந்தவர்களாம். இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் குந்திய இடம் கோயிலாகும். இவர்கள் மரணமடைந்தாலும் அவர்களின் உடலைப் பஞ்சபூதங்கள் தீண்டுவதில்லையாம். நமது மட்டக்களப்பிலே காரதீவில சித்தானைக்குட்டிச் சாமியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவரும் அப்படியான ஒரு சித்தபுருசர்தான். அவரிடமும் பல முஸ்லிம்கள் சென்று நோய்க்குச் சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். அவரின் கதை கூறுவதென்றால் ஒரு தனி அத்தியாயம்.

 பெரியவர் சாமித்தம்பி கூறிய கதைகளைக் கேட்கக் கேட்க கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் வியப்பாகவும்- இதுவரை கேள்விப்படாத செய்திகளாகவும் இருந்தன. மொத்தத்தில் ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வே இருவருக்கும் ஏற்பட்டது.

 இச் சம்பவங்கள் எல்லாம் உண்மையில் நடந்திருக்கும் என்று நம்பலாமா? என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். பாம்புக் கடி பற்றியும்- பிரேதக் குழியிலிருந்து இரத்தம் வெளியேறியது பற்றியும் கதைகளைக் கேட்ட கோகுலனுக்கும் கதிரவேலுக்கும், இருட்டிலே-காட்டுக்குள்ளே இருந்த அவர்களுக்குச் சற்றுப் பய உணர்வும் எழத்தொடங்கிற்று. அருகருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவர்கள் பெரியவர் சாமித்தம்பி அமர்ந்திருந்த இடத்தை மிகவும் நெருங்கி அவர்கள் இருவரும் ஆளையாள் ஒட்டிக்கொண்டு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் அமர்ந்து கொண்டார்கள்.

 பெரியவர் சாமித்தம்பியோ தன்னிடம் கதை கேட்பதற்கு இருவரும் விரும்புகிறார்கள் என எண்ணிக்கொண்டே மேலும் சில கதைகளை அவிழ்த்தார்.

 கதை-8

வந்தாறுமூலையில் வயல் வெளிக்குள் ஒரு தென்னம் தோட்டம் இருந்தது. அங்கும் ஒரு பாம்புக்கடி வைத்தியர் இருந்தார். அவர் கையாண்ட பாம்புக் கடிக்கான சிகிச்சை முறை சற்று வித்தியாசமானது. பாம்பு தீண்டியவரைச் சிகிச்சைக்காக அவரிடம் கொண்டு சென்றால் எத்தனை நாளில் சுகம் வர வேண்டும் என்று கேட்பாராம். மூன்று நாட்கள் என்று கூறினால் தனக்குள்ளே ஏதோ மந்திரித்துக் கொண்டு பாம்பு தீண்டியவரின் தலையைப் பிடித்து அவரது நெற்றியின் மீது தனது நெற்றியாலே மூன்று முறை முட்டு அடிப்பாராம். அதன்பின் தன் மனைவியிடம் நோயாளிக்குத் தயிரும் சோறும் கொடுக்கச் சொல்வாராம். பாம்பு தீண்டியவர் மூன்று நாட்களும் வைத்தியரின் வீட்டிலேயே தங்கியிருப்பாராம். இடையில் வேறு எந்த விதமான சிகிச்சையும் இல்லையாம். மூன்று நாட்கள் கழிந்த பின் சுகம் அடைந்த நோயாளியை வீட்டுக்கு அனுப்பி வைப்பாராம். இப்படிப்பட்டவர்கள் ‘சித்தர்’களாம் என்றார்.

 கதை கூறி முடித்த பெரியவர் சாமித்தம்பி “கொஞ்சம் பொறுங்க தம்பிமாரே! என்று கூறி எழுந்து மீண்டும் சிறுநீர் கழிக்கவென்று தனது வலதுகைச் சுட்டு விரலால் ‘ஒன்று’ எனக் காட்டிவிட்டு ஒதுக்குப்புறம் போனார். “கவனம் சாமி. பாத்துப் போங்க. பாம்பயும் கண்ட நீங்க” என்று அவரை எச்சரிக்கை செய்தான் கதிரவேல்.

 சிறுநீர் கழித்து விட்டுத் திரும்பி வரும்போது கதிரவேல் கொட்டாவி விடுவதைக் கண்ட சாமித்தம்பி “தம்பிமாருக்கு நித்திர வந்தித்துப்போல. கதிர்காமம் நடக்கத் தொடங்கின புறகு வேட்டைக்குப் போறத்த விட்டுத்தன் மக்காள். நீங்க கேட்ட படியா பழய கதயெல்லாம் சொன்னநான்” என்றவர் சிறிது இடைவெளி விட்டு திடீரென்று விஷக்கல்லுக் கதையை முடித்துக் கொண்டவராய்,

 “ஆ! சொல்ல மறந்திட்டன். ஆன தண்ட தலையில தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும்” என்று கூறியபடி, போர்வையை மீண்டும் இழுத்து உடலைப் போர்த்தியவாறு வசதியாகப் பாயில் உடலைக் கெளித்தார்.

 “இனி எல்லாரும் நித்திரயக் கொள்ளுவம். விடிய வெள்ளன நாவலடிக்கு வெளிக்கிடவும் வேணும். நாவலடிக்குக் கொஞ்சம் தூரம் தம்பி. இஞ்சரிந்து பன்னெண்டு கட்ட மட்டில வரும்” என்று கூறிப் போர்வைகளுக்குள் தன்னை முழுதாக முடக்கிக் கொண்டு கண்களை இறுகமூடி “முருகா!” என்றார்.

 கோகுலனும் கதிரவேலும் தத்தம் இடங்களில் அருகருகே படுத்து அவர்களும் போர்வைகளுக்குள் முடங்கினார்கள்.

 குமுக்கன் ஆற்றின் மறுகரையில் காட்டு மிருகங்கள் வந்து நீர் அருந்திச் செல்லும் அசுப்புகள் அன்றிரவு முழுவதும் இருந்து கொண்டேயிருந்தன.

(தொடரும்…….. அங்கம்-20)