பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது      (வாக்கு மூலம் – 100)

பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது (வாக்கு மூலம் – 100)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்) 

    — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்  —

[‘அரங்கம்’ மட்டக்களப்பிலிருந்து அச்சு ஊடகமாக வெளிவர ஆரம்பித்த காலத்தில் தொடங்கி அது பின்னர் தனது தொடர்ச்சியை லண்டனிலிருந்து மின்னூடகமாக மாற்றிக் கொண்ட பின்னரும் தொடர்ச்சியாகச் ‘சொல்லத் துணிந்தேன்’ எனும் மகுடத்தின் கீழ் அரசியல் பத்தித் தொடரொன்றை 100 பத்திகளாக எழுதி நிறைவு செய்திருந்தேன்.

அதன் பின்னர் ‘வாக்குமூலம்’ எனும் புதியதொரு தலைப்பின் கீழ் அரசியல் பத்தித் தொடரை எழுதி வந்து இப்போது இப்பத்தியுடன் 100 பத்திகள் நிறைவுறுகின்றன. 

இப் பத்தித் தொடர்களுக்குக் களம் தந்த ‘அரங்கம்’ ஆசிரியர் பூபாலரட்ணம் சீவகனுக்கும் இப் பத்தித் தொடர்களைக் கிரமமாகத் தட்டச்சு செய்து தந்து உதவியது மட்டுமல்லாமல், அவ்வப்போது சில ஆலோசனைகளையும் வழங்கிச் செழுமைப்படுத்திய சகோதரர் பொன். பரமேஸ்வரன் (வந்தாறுமூலை-மட்டக்களப்பு) மற்றும் அவ்வப்போது சில ஆலோசனைகளைத் தந்து ஆற்றுப்படுத்திய இன்னுமொரு சகோதரர் கலாநிதி சு. சிவரத்தினம் ஆகியோருக்கும், மேலும் இந்தப் பத்தித் தொடர்களை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை வாசித்து அவ்வப்போது அவசியமான பின்னூட்டல்களை வழங்கி என்னை உற்சாகப்படுத்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ‘அரங்கம்’ வாசக அன்பர்களுக்கும் (பெயர்களைக் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு விடும்) எனது மனமார்ந்த நன்றிகள்.]

இனி, இம்முறைப் பத்தியின் (வாக்கு மூலம்-100) விடயத்திற்கு வரலாம். 

‘சொல்லத் துணிந்தேன்’ மற்றும் ‘வாக்குமூலம்’ ஆகிய இரு அரசியல் பத்தித் தொடர்களும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில்-அதன் அரசியல் செல்நெறியில் ஒரு பண்பு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்று அரசியல் கருத்தியலை விதைக்கும் இலக்கை வைத்தே எழுதப்பட்டன. விதைகளைத் தூவியதே இப்பத்திகளின் வேலை. அவை முளை விடுவதும்-வளர்ந்து விருட்சமாவதும் தமிழ் மக்களின் கைகளிலும் காலத்தின் கைகளிலும்தான் இருக்கின்றன.

இப் பத்தித் தொடர்களின் ஊடு பொருளாக, இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை உளப்பூர்வமாக இந்தியாவை அனுசரித்துப் போகவேண்டுமென்பதும் 1987 இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டே அதிகாரப் பகிர்வுக்கான பயணம் மீளவும் தொடரப்பட வேண்டுமென்பதுமே எப்போதும் இருந்து வந்துள்ளன. இதுவே இப்பத்தித் தொடர்களில், ‘கூறியது கூறல்’ குற்றத்தையும் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளன. 

இலங்கையிலிருந்து வெளிவருகின்ற தமிழ் அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையானவை கடந்த காலங்களில் தமிழ் மக்களை அறிவு பூர்வமான அரசியலை நோக்கி ஆற்றுப்படுத்தாமல் வெறுமனே 2009 வரை ‘புலிப்பாட்டு’ப் பாடுவனவாகவும் 2009 க்குப் பின்னர் புலிகளின் முகவர்களைப் பாடுவனவாகவுமே தமது ஊடக இருப்பைப் பேணி வந்தன. இப்போதும் அச் ‘சுருதி’ யில் மாற்றமெதுவும் இல்லை. 

ஆனாலும், அண்மைக் காலமாக அதிலும் ஒப்பீட்டளவில் சில ஊடகங்கள் மாத்திரம் 

கொஞ்சக்காலமாக தமது வழமையான ‘சுருதி’ யைச் சற்று மாற்றி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த தீர்வுக்கான நடைமுறைச் சாத்தியமான-நேர்மறைச் சிந்தனைகளுடனான கருத்துக்களை ஓரளவுக்கேனும் முன்வைத்து வருகின்றன. ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் கருதப்படும் கட்சிகள் அதனைக் கண்டு கொள்ளாது தமது பழைய பாணியிலேயே பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

இதற்கிடையில், “அரசியல் அமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்ற விடயத்தில் “இப்போது பந்து ரணிலின் பக்கத்தில்தான் இருக்கின்றது. அது நிச்சயமாக தமிழ்க் கட்சிகள் பக்கத்தில் இல்லை”. என்று சில ஊடகங்கள் கூறிவருகின்றன.

 பந்து ரணிலின் பக்கத்திலும் இல்லை; தமிழ்க் கட்சிகளின் பக்கத்திலுமில்லை (இந்தியாவின் பக்கமும் இல்லை). அது நிச்சயமாகத் தமிழ் மக்களின் பக்கத்தில்தான் உள்ளது. அதனை விளங்கப்படுத்துவதே இப்பத்தியின் நோக்கமாகும்.

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்’ எனும் விடயத்தையிட்டு வாக்குமூலம் 96 (‘அரங்கம்’ 09.01.2024); வாக்கு மூலம்-97 (‘அரங்கம்’ 12.01.2024); வாக்கு மூலம்-98 (‘அரங்கம்’ 17.01.2024); வாக்கு மூலம்- 99 (‘அரங்கம்’ 24.01.2024) ஆகியவற்றில் நான்கு பகுதிகளாக எழுதப்பெற்ற கட்டுரைத் தொடரில் சுட்டிக்காட்டப்பட்ட அரசியல் யதார்த்தங்களை இப் பத்தியிலும் அவசியம் கருதி மீளவும் குறிப்பிட வேண்டியுள்ளது. அவை என்னவெனில், 

*ரணில் மட்டுமல்ல இலங்கையின் எந்த அரசுத் தலைவரும் அல்லது எந்த அரசாங்கமும் இந்தியாவின் தலையீடு அல்லது அழுத்தமில்லாமல் தானாக விரும்பி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதில்லை.

*ஈழநாடு குறிப்பிடும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் கட்சிகளை, இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரசன்னம் அற்றுப் போயிருந்தாலும்கூட இக் கட்சிகள் புலிகளுக்கு ஆதரவான-புலிகளின் அரசியல் நிலைப்பாட்டிலேயே தமிழர் அரசியலை முன்னெடுத்து வருவதால் இந்தியாவில் எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும்-யார் அரசுத் தலைவராக வந்தாலும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் புலனாய்வுத் துறையினரும் புலிகளின் முகவர்களாகவே முத்திரை குத்தியுள்ளனர். புலி முத்திரை குத்தப்பெற்ற பெற்றுள்ள இத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளை ‘சீரியஸ்’ஆக எடுத்து இந்தியா தலையீடு செய்யப் போவதில்லை.

எனவே, இந்தியா தலையீடு செய்வதற்கான மாற்று வழி யாது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். ஏனெனில், இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப் போவதில்லை.  

அந்த மாற்று வழி என்னவெனில், 2024இல் இருந்தாவது இலங்கை மண்ணில் நடைபெறும் அத்தனை தேர்தல்களிலும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் புலிகளின் முகவர்கள் அல்லாத தமிழ் அரசியல் கட்சி ஒன்றிற்கு அல்லது அவ்வாறான கட்சிகளின் கூட்டணிக்கு (Alliance) தமது முழுமையான அரசியல் அங்கீகாரத்தை வழங்கி வைப்பார்களாயின் அதனை அனுசரித்து இந்தியா தலையீடு செய்ய வாய்ப்பு உண்டாகும்.

ஆகவே, பந்து இப்போது தமிழ் மக்களின் பக்கத்தில் மட்டுமே உள்ளது. அது ரணிலின் பக்கமோ-தமிழ்த் தேசியக் கட்சிகளின் பக்கமோ-இந்தியாவின் பக்கமோ இல்லை. இதனைத் தமிழ் மக்கள் புரிந்து செயற்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு இன்று தேவையானது ‘புலி நீக்கம்’ செய்யப்பட்ட அரசியலாகும்.