— கருணாகரன் —
ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது.
இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1980 களின் அரசியலிலேயே உள்ளது. இதை தற்போதைய தமிழ் ஊடகங்கள், தமிழ் அரசியற் பத்தியாளர்களின் எழுத்துகள், அரசியற் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள், தலைவர்களின் அறிவிப்புகளில் தெளிவாகக் காணலாம். ஆகவே இதைக் கடந்து போருக்குப் பிந்திய Post – War Politics அரசியலை முன்னெடுப்பதற்கு தெளிவும் அதை முன்னெடுக்கும் உறுதிப்பாடும் அவசியம்.
அதில்லாத காரணத்தினால்தான் தீவிரவாதம் பேசும் சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக முடிந்தது. சிறிதரனும் தமிழரசுக் கட்சியும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது கடும்போக்காளர் கஜேந்திரகுமாரைச் சுற்றி. சிறிதரன் மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விக்கினேஸ்வரன் போன்றோரும் கஜேந்திரகுமாரின் அரசியற் பிரகடனத்துக்குப் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
அதை விட்டு தாம் வேறு நிரலில் நின்றால், தம்மை மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. மற்றும்படி இவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், கஜேந்திரகுமாரின் பருப்பு எங்கும் வேகப்போவதில்லை என்று. அப்படித் தெரிந்து கொண்டே அதைத் தொடர்கிறார்கள் என்றால், இவர்களுக்குத் தங்களுடைய அரசியலில், தமிழர்களுக்கான அரசியலில், இந்தக் காலத்துக்கான அரசியலில் நம்பிக்கையும் தெளிவும் இல்லை என்றே அர்த்தமாகும்.
எத்தகைய சவால்கள், நெருக்கடிகள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு துணிந்து நின்று தமது அரசியலை முன்னெடுப்பதே தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் அழகு. அதை இழந்தால் அவை தலைமைகளும் இல்லை. கட்சிகளும் இல்லை.
இந்தக் கட்சிகள் மேலும் தடக்குப் படும் இடங்களுண்டு. சரியோ பிழையோ இந்தக் கட்சிகளும் தலைமைகளும் தமக்கென்ற அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. உதாரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு பாராம்பரியமும் அரசியற் கொள்கையும் உண்டு. அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கும் புளொட்டுக்கும். ஆனால் இவற்றிற் சில அதைக் கைவிட்டு விடுதலைப்புலிகளின் ஒளியிலும் சிலபோது நிழலிலும் தமது அரசியலை மேற்கொள்கின்றன.
இதற்கு மிகக் கிட்டிய உதாரணம், கடந்த வாரம் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானதற்குப் பின்பு, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்திக் காட்சிப்படுத்தியதாகும்.
இதையிட்டு கடுமையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன. பதிலாகச் சில ஆதரவான குரல்களும் அங்கங்கே ஒலிக்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோபக் கனல் எறிப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக,
“வலிக்கிறது. கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது” என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாகச் செயற்பட்டவரும் தற்போது பசுமை ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ‘வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய’த்தின் நிறுவனருமான கணபதி சிறிதரன் (தரன்ஸ்ரீ) குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது, “ராணுவத்தின் முற்றுகையில் களத்தில் கழுத்துப் பகுதியில் விழுப்புண் அடைந்து கதைக்க முடியாது. காலில் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது என்ற நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் இருந்த எங்களுக்கு உரித்தான (போராளிகளின்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னோடு ஒன்றாகக் களமாடி, காயப்பட்டு நான்கு நாட்கள் கழித்து மரணத்தை அடைந்த நண்பனின் இறுதி நிகழ்வில் அவனுடைய உடலை நானும் சுமந்து விதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.
நடக்கவே முடியாது. முழுமையாக கதைக்க முடியாது. இருந்தும் இறுதித் தருணத்தில் நண்பனின் வித்துடலுக்கு விடை கொடுப்பதற்காக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றேன். ஒன்றாகப் பழகி உணவு அருந்தி, அருகில் உறங்கி, களமாடிய நண்பனை விதைப்பதற்காக…
இப்பொழுது ஒவ்வொரு தடவையும் தாய்மண்ணுக்கு செல்லும்போதும் துயிலும் இல்லங்களுக்கு செல்வதற்கு நான் தவறுவதில்லை. இந்த தடவையும் நான்கு துயிலும் இல்லங்களுக்கு சென்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கே நான் புகைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் பல ஆயிரம் நினைவுகளை மட்டும் மனதுக்குள் சுமந்து கொள்வேன்… வலிகளோடு…
இன்று துயிலும் இல்லங்களும் அரசியல் மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கே விடுதலைக்காகப் போராடித் தம்மை அர்ப்பணித்த ஆன்மாக்கள் அமைதியாக உறங்க வேண்டும். அவற்றை அரசியல் நாடகத்தினால் குலைக்கக் கூடாது….” என்று தரன்ஸ்ரீ குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு, மாவீரர் நாளொன்றில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் சிறிதரன் மாவீரர்நாள் சுடரை ஏற்றியிருந்தார். அதற்குப் பின்னர் அவர் அப்படிச் கூடர் ஏற்றக் கூடிய சூழல் அங்கே இருக்கவில்லை. அதற்கு மக்களும் போராளிகளும் இடமளிக்கவில்லை.
ஆயினும் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தான் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அங்கே சென்று வழிபாட்டைச் செய்துள்ளார் சிவஞானம் சிறிதரன்.
இது பல தரப்பிலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு முன் புலிகளின் காலத்திலும் சரி பின்னரும் சரி, எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எந்தவொரு அரசியற் தரப்பும் மாவீரர் துயிலும் இல்லங்களைத் தம்முடைய அரசியல் மேடையாகப் பயன்படுத்தவில்லை என்கின்றனர் அவர்கள்.
மட்டுமல்ல, “பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போதும், போர்க்களத்துக்குச் செல்லும்போதும் கூட மாவீரர் துயிலுமில்லங்களை ஒரு அரசியற் களமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை. துயிலுமில்லங்களை அவர்கள் உயரிய இடத்தில் வைத்தே நோக்கினர் என்றும் கூறுகிறார்கள்.
ஆகவே இது தனியே தரன்ஸ்ரீயின் கவலை மட்டுமல்ல, வேறு பலருடைய கவலைகளும்தான்.
2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களுடைய கொள்கையை, சித்தாந்தத்தை முன்னெடுப்போர், அவற்றின் தொடர்ச்சியாளர்கள் தாமே என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு இன்று, தமிழ் அரசியல் வெளியில் அரசியல் நாடகமாடும் போக்கு வரவரக் கூடியிருக்கிறது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸினர் (கஜேந்திரன், கஜேந்திரகுமார் அணி) தொடக்கம், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் வரையில் சிலர் இந்த நாடக அரசியலை எந்தக் கூச்சமுமின்றி மேற்கொள்கின்றனர்.
புலிகளின் தொடர்ச்சி தாம் என்று சொல்லும் இவர்கள், விடுதலைப் புலிகள் முன்னெடுத்த எந்தவொரு அரசியல் செயற்பாட்டு வடிவத்தையும் தமது அரசியலில் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, புலிகள் போராடிக் கொண்டு – களத்தில் பெரும் சமராடிக் கொண்டே – மறுபக்கத்தில் சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். சூழலையும் பண்பாட்டையும் பாதுகாத்தனர். பொருளாதாரக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தனர். பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொறிமுறையை உருவாக்கிச் செயற்படுத்தினர். சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாதொழித்தனர். மண்ணகழ்வைத் தடுத்தனர். மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். ஊழலையும் பொறுப்பின்மையையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லையென்றாக்கினர். அவர்கள் உருவாக்கிய காடுகள் பல இடங்களிலும் இன்னும் உண்டு. பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரமுந்திரிகை, வேம்பு போன்ற தோப்புகள் வன்னியில் உள்ளன.
சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற ஒரு சமத்துவச் சமூகம் அப்போதிருந்தது.
இதில் ஒரு சிலவற்றைக் கூட தற்போதைய அரசியற் தரப்புகள் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நான்கு மரக்கன்றுகளைக் கூட நட்டுப் பராமரித்து வளர்க்க முடியாத நிலையில்தான் இவை உள்ளன. காடழிப்பும் மணல் அகழ்வும் சட்டவிரோத மது உற்பத்தியும் மதுப்பாவனையும் கட்டற்று அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் வெளியே இருந்து வந்து யாரும் செய்யவில்லை. அவ்வளவும் வடக்கில் – நம்முடைய சூழலில் உள்ளோரே செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொன்னால், இந்தத் தரப்பினரின் ஆதரவாளர்களிற் பலர் இவ்வாறு சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி போன்ற நீதி மன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிற மணல் மற்றும் மரங்களையும் கொண்டு வந்தோரையும் ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் நம்முடைய சூழலைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து கொண்டே புலிகளின் அரசியலைத் தொடர்வதாகப் பாவ்லா காட்டுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தின் நிலை சற்று வேறு. அங்குள்ள சமூகச் சூழலின் அடிப்படையில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலவரம் வேறாக இருந்தது. அங்கும் இப்பொழுது மணல் அகழ்வும் சூழல் சிதைப்பும் சாதாரணமாகியுள்ளது.
சரி, இன விடுதலை சார்ந்து புலிகளின் அரசியல் கோரிக்கையோடு பயணிப்பதாக இருந்தாலும் அதை முன்னெடுப்பதற்கான அரசியற் கட்டமைப்பும் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. வெறுமனே வாய்ச்சவாடல்களைச் செய்து இலங்கை அரசையும் சிங்கள இனவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? ஆக அதுவும் பொய்யான நாடகமே!
தவிர, விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் இன்னும் நிர்க்கதியான நிலையில்தான் வாழ்கின்றனர். மாவீரர் குடும்பங்கள் பலவும் நெருக்கடியான வாழ்க்கையில் உள்ளனர். அவர்களைப் பராமரிப்பதற்கான, அவர்கள் சுயமாக வாழக்கூடிய ஏற்பாடுகளைக் கூட இவர்கள் செய்யவில்லை. அதற்கான எந்தப் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது.
ஆனால், மேடைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் புலிகளின் இன்றைய பிரதிநிதிகள் போலத் தம்மைக் காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்காக புலிகள் தரப்பில் போராடி சாவினைத் தழுவிக் கொண்ட திலீபன் நினைவுநாள் தொடக்கம் புலிகளால் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் மாவீரர்நாள் வரையிலும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றனர்.
இதனுடைய உச்சக்கட்டமாகவே தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனின் துயிலுமில்ல நாடகமும் நடந்தேறியுள்ளது. தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும்.
யுத்தத்தின்போது படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. “அது மிகமோசமான ஒரு பண்பாட்டுச் சிதைப்பு. அதற்காக எப்போதும் சிங்கள மக்களும் அவர்களுடைய வரலாறும் தலைகுனிய வேண்டும்” என்று அப்போது அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார்.
உண்மையும் அதுதான். என்னதான் எதிர்த்தரப்பாக இருந்தாலும் எவருடைய புதைகுழிகளையும் நினைவிடங்களையும் சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அப்படிச் செய்தால் அதொரு பண்பாட்டு அழிப்பே. நிச்சயமாக அரசியல் பண்பாடு வீழ்ச்சியடையும் இடங்களிலேயே இவ்வாறான செயல்கள் நிகழ்ந்தேறும்.
ஏறக்குறைய அப்படியான ஒரு பண்பாட்டுச் சிதைப்பே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பதுமாகும். தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது.
அப்படி இந்த அரசியல் தரப்பினர் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், (கவனிக்கவும், உருவாக்கிக் கொள்ளல் அல்ல. உருவகித்தல் என்பதை) புலிகளைப் போலச் செயற்திறனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் வாய்ச்சொல் வீரர்களாக இருப்பது பொருத்தமற்றது. அது புலிகளுடைய இயல்புக்கும் அடையாளத்துக்கும் மாறானது. எதிரானது.
(குறிப்பு – இந்தக் கட்டுரை புலிகளை தமது அரசியல் எஜமானர்களாகக் கருதிக் கொண்டு அல்லது புலிகளின் தொடர்ச்சி தாம் என்று உருவகித்துக் கொண்டு செயற்படும் அரசியற் தரப்பினைக் குறித்த விமர்சனங்களுக்காக எழுதப்பட்டது)