— வீரகத்தி தனபாலசிங்கம் —
முன்னாள் அமைச்சரும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகள் முறையையும் ஒழிக்கவேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
‘ பாத்ஃபைண்டர் பவுண்டேசன் ‘ என்ற அமைப்பின் தாபகரான அவர் உயர்ஸ்தானிகராக புதுடில்லிக்கு 2021 பிற்பகுதியில் செல்வதற்கு முன்னதாக தனது அந்த நிலைப்பாட்டை அடிக்கடி வெளிப்படுத்தினார். இந்தியாவில் பதவியில் இருந்த காலத்தில் அதைப் பற்றி பெரிதாகப் பேசியதாக அறியவரவில்லை. ஆனால், தனது இரண்டரை வருடப் பதவிக்காலம் முடிந்து கொமும்பு திரும்பியதும் மீண்டும் மாகாணசபை முறைகள் ஒழிப்பு குறித்து தீவிரமாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதில் அரசியல் கட்சிகள் இறங்கியிருக்கும் நிலையில், எதிர்வரும் தேசிய தேர்தல்களில் கட்சிகள் அவற்றின் விஞ்ஞாபனங்களில் மாகாணசபை முறை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அவர் கடந்த வாரம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.
2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவும் அரசியல் கட்சிகளிடம் 13 வது திருத்தத்தை ரத்துச் செய்து மாகாணசபை முறையை ஒழிப்பது குறித்த நிலைப்பாட்டை விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்தவேண்டும் என்று மொரகொட கேட்டிருந்தார். ஆனால் எந்த கட்சியும் அவ்வாறு செய்யவில்லை.
மொரகொடவின் அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் மாகாணசபைகளை ஒழித்து அவற்றின் அதிகாரங்களை மீள ஒழுங்கமைக்கப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற அவரின் முன்னைய நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
“உள்ளூராட்சி சபைகள் குடிமக்களுக்கு நெருக்கமாகச் செயற்படுவதால் சமுதாய மட்டத்தில் பிரச்சினைகளை கையாளக்கூடிய சிறப்பான நிலையில் அவை இருக்கின்றன. 2 கோடி 20 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட ஒரு சிறிய நாட்டுக்கு மாகாணசபை போன்ற இன்னொரு நிருவாக அடுக்கு தேவையற்றது.
“மாகாணசபைகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் இலங்கையின் ஆட்சிமுறையையும் பெ்ருளாதாரத்தையும் மறுசீரமைத்து நவீனமயப்படுத்தும் முழுமையான செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அமையவேண்டும். மாகாணசபைகளுக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களையும் பங்கும் ஈடுபாடும் கொண்ட மற்றைய தரப்புகளையும் உள்ளடக்கிய மாவட்ட மட்டத்திலான கட்டமைப்பு ஒன்றின் ஊடாக சிறியதும் செயற்திறன் மிக்கதுமான — மக்களின் ஈடுபாட்டுடன் கூடிய நிருவாகம் ஒன்றை உருவாக்கமுடியும்.
மாகாணசபைகள் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதே 13 வது திருத்தத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த கட்டமைப்பு பெரும் செலவுக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் செயற் திறனற்றதாகவும் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகின்றதாகவும் மாறிவிட்டது.
“இன,மத, பிராந்திய பல்வகைமை தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒரு செனட் சயையை / மேல்சபையை அமைக்கமுடியும்” என்று அறிக்கை கூறியது.
இந்தியாவில் இருந்து திரும்பியதும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த மொரகொட மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதற்கு வேறு மார்க்கம் இன்றி மாகாண சபைகளுக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் எதிரான நிலைப்பாட்டை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார் போலும்.
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு எப்போதுமே தென்னிலங்கையில் எவரும் அரசியலில் துரிதமாக செல்வாக்கு பெறுவதற்கான சுலபமாக ஆயுதமாக விளங்குகிறது. 13 வது திருத்தத்தை பிரதான சுலோகமாக முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தேசியவாத வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்னோடி ஏற்பாடாக மொரகொடவின் திட்டம் அமைகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மொரகொடவின் வாதங்கள் எவையாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளராக களமிறங்கக்கூடிய எவரும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 திருத்தம் தொடர்பில் எந்தவொரு நிபை்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குளைப் பெறுவது சாத்தியமில்லை என்று நம்பப்படும் சூழ்நிலையில் அவர்கள் சிறுபான்மைச் சமூகத்தவர்களின் வாக்குகளைக் கூடுதல்பட்சம் பெறுவதில் அக்கறை காட்டுவார்கள் என்பது நிச்சயம். 13 வது திருத்தம் தொடர்பில் அவர்களின் நிலைப்பாடுகள் எவ்வாறானவையாக இருந்தாலும் மிகவும் இக்கட்டான ஒரு தேர்தலில், மொரகொடவின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தங்களது வாய்ப்புக்களைச் சேதப்படுத்தக்கூடிய எந்த நிலைப்பாட்டையும் எடுக்கமாட்டாரகள் என்று நம்பலாம்.
அதேவேளை, பெரும்பான்மைச் சமூகத்தையும் சிறுபான்மைச் சமூகங்களையும் அன்னியப்படுத்தாத நிலைப்பாடுகளை எடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இறுதியாக கடந்த டிசம்பரில் மூத்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றமே புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வுக்கான செயன்முறைகளை முன்னெடுக்கும் என்று அறிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முக்கியமான விவகாரமாக வெளிக்கிளம்பாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளும் தந்திரமான நோக்கத்துடனேயே அவர் அந்த அறிவிப்பைச் செய்தார் என்பதில் சந்தேகமில்லை.
13 வது திருத்தத்தை அரசாங்கம் இரு வருடங்களில் படிப்படியாக முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று கடந்த வருட முற்பகுதியில் அறிவித்த ஜனாதிபதி தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அதைப் பற்றி பேசுவதைக் கைவிட்டார்.
அரசாயலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் 13 வது திருத்தத்தை ஒன்றில் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று கூறிய விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது புதிய அரசியமைப்பு திருத்த யோசனையொன்றை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்து அந்த திருத்தத்தை ஒழித்துவிடலாம் என்று யோசனையும் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கடும்போக்கு சிங்கள தேசியவாதக் கொள்கைகளைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அவ்வாறு செய்வதற்கு முன்வரவில்லை.
13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறப்போய் இறுதியில் அதற்கு எதிராக தென்னிலங்கையில் முன்னரை விடவும் கூடுதல் எதிர்ப்பு அலை கிளம்புவதற்கு வழிவகுத்தது தான் மிச்சம் என்று ஜனாதிபதி மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.
பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கே உரியது என்று ஒரு கட்டத்தில் கூறிய ஜனாதிபதி பிறகு தற்போதைய பாராளுமன்றத்தின் மூலமாக அது விடயத்தில் எதையும் செய்யமுடியாது என்பதை தெரிந்துகொண்டு, இப்போது அடுத்த பாராளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பிரச்சினையில் இருந்து தனக்கு ஒரு இடைவேளையைத் தேடிக்காண்டார்.
இம்மாத ஆரம்பத்தில் வட மாகாணத்துக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் யாழ்நகரில் துறைசார் நிபுணர்களுடனான சந்திப்பு ஒன்றில் வைத்து 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கைளைப் பொருளாதார அபிவிருத்திக்கு மாகாணங்கள் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அதிகாரப் பரவலாக்கம் என்பது வெறுமனே ஒரு அரசியல் கோட்பாடாக மாத்திரம் அன்றி ஒரு பொருளாதார யதார்த்தமாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் அங்கு கூறினார்.
அந்த அதிகாரங்களை மாகாணசபைகள் பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தும்போது மத்திய அரசாங்கம் தலையீடு செய்யாது என்ற ஜனாதிபதியின் யாழ்நகர் அறிவிப்பை விமல் வீரவன்ச, கெவிந்து குமாரதுங்க போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் 13 பிளஸை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கிறார் என்று திரிபுபடுத்தி வியாக்கியானம் செய்யத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
அதேவேளை, 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீரவுக்கான அடிப்படையே அல்ல என்று நீண்டகாலமாகக் கூறிவந்த தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைக்கால ஏற்பாடாக அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தர்களை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்திடம் கடந்த வருடம் கோரிக்கை விடுத்தனர். அந்தத் திருத்தம் தொடர்பில் இதுவே அவர்களின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் முயற்சியில் 13 வது திருத்தத்தின் வடிவில் இருக்கும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை இல்லாமல் செய்துவிடக்கூடும் என்ற ஒரு சந்தேகம் நீண்டகாலமாக நிலவுகிறது.
ஆனால், அதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக காணி அதிகாரம் போன்ற சில ஏற்பாடுகளை ரத்துச் செய்யும் நோக்குடன் 13 வது திருத்தத்தில் கைவைப்பதற்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள் இந்தியாவில் அன்று பதவியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
சிங்களவர்கள் மாத்திரமல்ல, தமிழர்களும் கூட விரும்பாத ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கொழும்பை வலியுறுத்திக் கொண்டிருக்கவேண்டிய என்ன தேவை இந்தியாவுக்கு இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒரு நாள் எழவே செய்யும்.
தற்போதைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக இலங்கை அரசாங்கம் ஒன்று முயற்சிக்கும் பட்சத்தில் மாறிவரும் புவிசார் அரசியல் நிர்ப்பந்தங்களின் மத்தியில் அதை தடுப்பதற்கு இந்தியா எந்தளவுக்கு கரிசனை காட்டும் என்பது இன்னொரு கேள்வி.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களைச் சம்பந்தப்படுத்துவதை இனிமேலும் கொழும்பு விரும்பவில்லை என்பதை புதுடில்லி நன்கறியும். இலங்கையில் தனது கேந்திர முக்கியத்துவ நலன்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வலிமை கொண்டதாக தமிழ் அரசியல் சமுதாயம் இல்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ளாமலும் இல்லை.
எமது இனப்பிரச்சினையில் 1980 களில் இந்தியா நேரடியாகத் தலையீடு செய்தபோது நிலவிய கெடுபிடி யுத்தக்கால சூழ்நிலைக்கும் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கும் பின்னரான தற்போதைய சூழ்நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகள் இந்தியாவின் முன்னைய தலையீடு பற்றிய பிரமையில் இருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.
இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கு தற்போது இருக்கும் அக்கறையின் மட்டத்தைப் பற்றிய தமிழ்க் கட்சிகளின் புரிதல் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வக் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை. இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்று அடிக்கடி கூறிக்கொள்வதில் தமிழ்த் தலைவர்கள் குறிப்பாக முதுபெரும் தலைவர் சம்பந்தன் ஒருவித திருப்தியைக் கண்டுகொள்கிறார்கள்.
13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.
உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா?
அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.
(வீரகேசரி வாரவெளியீடு )