இந்தியாவில் இலங்கையின் சட்டவிரோத குடியேறிகள்?          (மௌன உடைவுகள்-69)

இந்தியாவில் இலங்கையின் சட்டவிரோத குடியேறிகள்? (மௌன உடைவுகள்-69)

 — அழகு குணசீலன் —

” WILL THE MINISTER OF HOME AFFAIARS BE PLEASED STATE :

…….Whether steps are being taken to provide additional ruotes for Sri Lankan Citizens to aquare Indian Citizenship as done for certaine Communities through the Citizenship Amendment Act,2019; and

If so, the details thereof and if not the reasons therefor? ” 

இந்த கேள்வியை இந்திய லோக் சபாவில் 09.பெப்ரவரி 2021 இல்  உறுப்பினர்  எம். செல்வராஜ் கேட்டிருந்தார். இதற்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நித்தியானந் ராஜ் அளித்த பதில் கீழே.

“……….. Citizenship of India is governed by the provision of the Citizenship Act,1955 and rules thereunder. Any foreigner including a Sri Lankan Citizen may acqure Indian Citizenship by registration or Naturalization after fulfilling the eligiblity Creteria laid down in the Citizenship Act,1955 and the rules made thereunder.”

 லோக்சபா உறுப்பினர் எம்.செல்வராஜினால் கேட்கப்பட்ட கேள்வி 2019 குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பானதும், அதன் மூலம் அயல் நாடு களைச் சேர்ந்த, அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச இந்து மதத்தவர்களுக்கு  குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பானது. கேள்வியில் மேலதிக வழிமுறைகள் பற்றியும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராஜாங்க அமைச்சரின் பதிலானது 2019 திருத்த சட்டத்தை தவிர்த்து 1955 சட்டம் பற்றியே அமைவதுடன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறது. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் எவரும் இந்துமதத்வர் இல்லையா?

 சிங்கள கடும்போக்காளர்கள் விஜயன் கட்டு மரத்தில் வந்திறங்கியதையும் (?) மறந்து  தமிழர்களைப்பார்த்து  “கள்ளத்தோணிகள்” என்று அழைக்கின்றார்கள். தொப்புள் கொடி உறவு, பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட மொழி , கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட உறவுகள்   இலங்கை தமிழர்கள் என்று பேசுபவர்களும் “கள்ளத்தோணிகள்” என்றே அழைக்கிறார்கள். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் “சட்டரீதியற்றவர்கள்” (Illegal persons) என்று எவரும் இல்லை என்று அகதிகள் சார்ந்த சர்வதேச அரசியல் பேசும் போது  இந்திய அரசு குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டம் நடாத்துகிறது .

இராஜாங்க அமைச்சர்  நித்தியானந் ராஜ் தனது பதிலில் தமிழ்நாடு அரசை மேற்கோள் காட்டி 108 முகாம்களில்  58, 843 அகதிகள் இருப்பதாகவும், முகாம்களுக்கு வெளியே 34, 135 இலங்கைத்தமிழ் அகதிகள் பொலிஸ் பதிவுடன் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். நடைமுறை புள்ளி விபரங்களின்படி 104 முகாம்களில்  58,200 பேரும் , முகாம்களுக்கு வெளியே பொலிஸ் பதிவுடன் 33,200 பேரும் இருப்பதாக அறியமுடிகிறது. அதேவேளை ஒரிசாவில் – மல்கன்கிரியில் 54 இலங்கைத்தமிழ் அகதிகள் இருப்பதையும் அமைச்சர் உறுதி செய்துள்ளார். இவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர்கள் என்றும் இந்திய இராணுவத்துடன் வெளியேறியவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

இலங்கைத்தமிழ் அகதிகளில் 95 வீதமானோர் “ஆதார் கார்ட் “(Aadhaar Card) வைத்துள்ளனர். இது இந்தியாவில்  ஒருவருடங்களுக்கு அதிகமாக வாழும் அனைவருக்குமான ஒரு அடையாள அட்டை. பல்வேறு  தேவைகளுக்கும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 

78 வீதமான தமிழ் அகதிகள் இந்திய வங்கிகளில் வங்கிக்கணக்குகளைக் கொண்டுள்ளனர். ஒரு வீதத்தினர் இலங்கைக் கடவுச்சீட்டையும், மூன்று வீதத்தினர் இலங்கை தேசிய அடையாள அட்டையையும் வைத்துள்ளனர். முகாம்களில் இருப்பவர்களில் 45 வீதத்தினர் இந்தியாவில் பிறந்தவர்கள்.

79 வீதமானோர் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவில் வாழ்கிறார்கள். 21 வீதத்தினர் 20 க்கும்  அதிகமான ஆண்டுகள் அங்கு வாழ்கிறார்கள். இந்தியர்களை திருமணம் செய்த இருப்பவர்கள் 8 வீதம்.

இவர்களைப் பார்த்து இந்திய அரசாங்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் – கள்ளத்தோணிகள் என்று குற்றக்கூண்டில் நிறுத்துகிறது. 

2019 இல் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்த ஆவணத்தின்படி (உலகநாதன் VS இந்திய அரசு) “இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள். தமிழ் நாடு அரசு இதில் முடிவு செய்ய எதுவும் இல்லை. இது மத்திய அரசின் முடிவில் தங்கியுள்ளது. தொழில் நுட்ப ரீதியான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிக்கும் எவரும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள், அகதிகள் அல்ல”.  உண்மையில் இந்தியாவில் பிறந்தவர்களுக்கு இலங்கை ஒரு வெளிநாடு. இந்த அடிப்படையிலேயே  மேற்குலகம் தமிழ் அகதிகளின் பிள்ளைகளுக்கு இலகுபடுத்தப்பட்ட வழிமுறைகளில்  குடியுரிமை வழங்குகிறது. ஆனால் ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளின் உபகண்டத்தில்……….?

சரியான/ போதுமான ஆவணங்கள் இன்றி சட்டத்திற்கு முரணாக இந்தியாவுக்குள் அவர்கள் நுழைந்து இருந்தாலும் அவர்கள் இந்திய சட்ட நியதிகளுக்கு ஏற்ப பதிவுசெய்து இருக்கின்றனர். அவர்கள் சட்டரீதியாகவே அங்கு வாழ்கின்றனர். இந்த நடைமுறையையே மேற்குலக நாடுகள் பின்பற்றுகின்றன. சர்வதேச மட்டத்தில் சமூக, பொருளாதார, அரசியலில் மிக முக்கிய நாடாக – பிராந்திய வல்லரசாக உள்ள இந்தியா அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் 1951, 1967 பிரகடனங்களில் ஒப்பமிடவில்லை என்பது ஆச்சரியமாக இல்லையா?

இதற்கும் மேலாக இலங்கைத்தமிழ் அகதிகளை உருவாக்கியதிலும், யாம் இருக்க பயம் ஏன்? என்று  அவர்களுக்கு நம்பிக்கையூட்டியதிலும் இந்தியாவுக்கும் பங்குண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடையவில்லை. அகதிகளுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பது மட்டுமன்றி இலங்கையின் இன்றைய சூழலும், பல தசாப்தங்களாக பழகிவிட்ட இந்திய வாழ்வும், நாட்டில் உறவினர்கள், நண்பர்கள் இல்லாத நிலையும் அகதிகள் விருப்பத்துடன் திரும்புவதற்கான ஊக்கியாக அமையவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டிய ஒன்று. இலங்கை தமிழ் அகதிகளின் இந்திய குடியுரிமை கனவு கலைந்த நிலையில் ஆகக்குறைந்த பட்சம் அவர்களுக்கு  சர்வதேச கடவுச்சீட்டு வழங்க இலங்கை அரசு முன்வந்திருப்பது முக்கியமான ஒரு திருப்பம்.

1980 முதல் பல தடவைகள் அரசாங்கம் மாறியிருக்கிறது. பல கட்சிகளும், தலைவர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே இந்த முடிவை எடுக்கக்கூடியதாக இருந்துள்ளது. பாரம்பரிய உறவைக்கொண்ட  நாட்டை நம்பி தஞ்சம்கோரி அந்த நாட்டாலேயே நடுத்தெருவில் விடப்பட்ட நிலையில் இந்த “கடவுச்சீட்டு” முடிவை ரணில் அரசு எடுத்திருப்பது முக்கியமானது.

200 அகதிகளுக்கு இலங்கையின் சர்வதேச கடவுச்சீட்டு கடந்த 19.தை.2024 அன்று வழங்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்துள்ள 900 பேரில் இது முதற்கட்ட நடவடிக்கை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் சர்வதேச பயணம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு சில வாய்ப்புக்களையும், வசதிகளையும் அவர்களுக்கு வழங்கும். முக்கியமாக மூன்றாவது நாட்டிற்கு பயணிப்பதற்கு இலங்கை சென்று செல்லவேண்டிய நிலை இல்லாமல் போகிறது. மொத்த  அகதிகளில் 900பேர் ஒரு வீதம் மட்டுமே எனினும் இந்த வசதி பல வாய்ப்புகளை வழங்கக்கூடியது. 

இந்தியப்பிரதமர் மோடிக்கு கடிதம், ஜெய்சங்கர் வருகை, சீத்தா ராமன் வருகை, அண்ணாமலை வருகையுடன் கூடிய சந்திப்புக்களில் எல்லாம் காவடி எடுத்த தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழ் அகதிகளை மறந்தே செயற்பட்டன. நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்த போதெல்லாம் இலங்கை அரசுடன்  “ஒற்றுமையாக” பேசுங்கள் என்பதே பதிலாக இருந்தது. இப்போது சிறிதரனின் தலையில்  இந்த ஒற்றுமை கட்டப்பட்டுள்ளது.

அகதிகள் நாடு திரும்புவதையும் தமிழ்த்தேசியம் விரும்பவில்லை. திரும்பினால் அமைதி நிலவுகிறது என்றாகிவிடும் என்பதால் சுயலாப பிச்சைக்கார அரசியலுக்காக சர்க்கரை பூசினார்கள், கொசுக்கள் மொய்த்தன. இந்தியாவை பொறுத்தமட்டில் குடியுரிமை வழங்கினால் வாக்குகள் திராவிடக்கட்சிகளுக்கு சென்றுவிடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை பாண்டி பஜார் (19.மே.1982), சூளைமேடு (18. ஒக்டோபர் 1987), சென்னை (19.யூன்.1991), திருப்பெரும்புத்தூர்  (21.மே.1991)  என்பன மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத வன்முறைகள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு முக்கியமானது என்பதிலும்  மாற்று கருத்தில்லை. ஆனால் 2009 மே மாதத்திற்கு பின்னரும், பத்தாண்டுகள் கழித்து 2019 இல் அயல்நாட்டு இந்துக்களுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், இலங்கைத்தமிழர்களை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இங்குதான் பிராந்திய பூகோள அரசியல் புகுந்து விளையாடுகிறது. இலங்கை , சிங்கள பௌத்த நட்பு நாடாக இல்லாமல், இந்தியாவுக்கு அச்சுறுத்தலான, பகையான இஸ்லாமிய அயல்நாடாக இருந்திருக்க வேண்டும். தமிழ் அகதிகள் இஸ்லாமிய நாடொன்றில் பிறக்காதது அவர்கள்  செய்த குற்றம்.

உலகின் குடியேற்ற வரலாறே கள்ளத்தோணியில் தான் தொடங்குகிறது. கொலம்பஸ் விசா அனுமதி பெற்றா அமெரிக்காவில் இறங்கினார். ஐரோப்பியர்கள் இந்தியா, இலங்கையில் எந்த விசாவுடன் இறங்கினார்கள். அது போன்று அகதிகளின் வரலாறு கள்ளத்தோணிகளில் இருந்து பிரிக்கமுடியாதது. வியட்னாம் (BOAT PEOPLE)  அகதிகள்,  ஆபிரிக்க நாடுகளில் இருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் எல்லோரும் கள்ளத்தோணிகள்தான். போரில் தப்பித்துச் செல்லும் இவர்கள்  சாதாரண சூழ்நிலையில் போன்று ஆவணங்களை சுமக்க முடியுமா?  இல்லை ஆசிய, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களிடம்  சுமக்க ஆவணங்கள்தான் இருக்கிறதா?

இதைத்தான் சட்டரீதியற்றவர்கள் என்று எந்த மனிதரும் இல்லை என்று சர்வதேச அகதி அமைப்புக்கள் கோருகின்றன. சட்டத்தினால் சட்டவிரோத குடியேறிகளாக – கள்ளத்தோணிகளாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை ரணில் அரசு வழங்கும் கடவுச்சீட்டு இந்திய அரசிடம் இருந்து பிணையெடுக்கட்டும்.