கனகர் கிராமம் (அங்கம்-18)          ‘அரங்கம் ‘ தொடர் நாவல்

கனகர் கிராமம் (அங்கம்-18)  ‘அரங்கம் ‘ தொடர் நாவல்

(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)

               — செங்கதிரோன் —      

கதை-5

 பத்து வருடங்களுக்கு முன்பு சாமித்தம்பி முதன்முறையாக, கதிர்காமம் நடந்துவந்தபோது ஒருநாள் காலையில் காட்டுக்குள்ளே விளாம்பழம் பொறுக்கப் போனவராம். குனிந்து விளாம்பழம் பொறுக்கிக் கொண்டிருந்தபோது தன்னுடைய முதுகில் என்னவோ உரசியது போல உணர்ந்தவராம். திரும்பிப் பார்த்தபோது அது யானையொன்றின் தும்பிக்கையாம். தும்பிக்கையால் தன்னைச் சுருட்டிப் பிடிப்பதற்கு முன்பாகத் தான் எகிறிக் குதித்து ஓடத் தொடங்கிவிட்டாராம். அது . தனியன் யானை. ஆபத்தானதாம். அதுவும் விளாம்பழம் தின்னத்தான் வந்ததாம்.

காட்டுக்குள்ளேயிருந்து வெளியே ஓடிவந்த அவர் பாதையில் ஏறி எத்திசையில் ஓடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒட யானையும் பின்னால் அவரைத் துரத்தத் தொடங்கிற்றாம். தான் வேகமாக யானைக்கும் தனக்கும் இடையேயுள்ள இடைவெளித்தூரம் கூடிக்கொண்டுவந்ததால் தப்பி விடலாமெனத் தானும்  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓடினாராம்.

ஒரு மனிதனால் எடுத்த எடுப்பிலே குறைந்தது மணிக்கு இருபது மைல் வேகத்தில் ஓட முடியுமாம். போகப் போகக் களைத்து மனிதனுடைய வேகம் மணிக்குப் பத்துமைலாகக் குறைந்துவிடுமாம். ஆனால், யானை அப்படியல்லவாம். பத்துமைல் வேகத்தில் ஓடத்தொடங்கி போகப்போக வேகத்தைக் கூட்டி மணிக்கு நாற்பதுமைல் வரைக்கும் ஓடுமாம்.

தான் ஓடிக் களைத்து வேகம் குறைந்துவிட்டதால் ஒரு கட்டத்தில்  யானைக்கும் தனக்கும் இடையேயுள்ள தூரம் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்றாம். நேரான பாதையில் ஓடினால் யானை மனிதனைப் பிடித்து விடுமாம்.  யானையோடு மனிதன் நேர்ப்பாதையில் ஓடித்தப்ப முடியாதாம். இப்படியே ஓடினால் யானை தன்னைப் பிடித்துவிடும் எனப் பயந்துவிட்டாராம். 

சிறுவயதிலிருந்தே தந்தையாருடன் வந்தாறுமூலையிலிருந்து  வடமுனைக்காடு, புலுட்டுமான் ஓடை, விற்பனைமடுக் காடுகளுக்குள் வேட்டைக்குச் சென்றுவந்ததால் தகப்பனார் சொல்லிக் கொடுத்து இந்தக் கணக்கெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்ததாம்.

மனிதனுக்கு அமைந்திருப்பதுபோல கண்கள் நேராக இல்லாமல் யானையின் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருக்கும். ஓடும்போது  யானையால் நேராகப் பார்க்கமுடியாது. தலையை இடமும் வலமும் ஆட்டிக்கொண்டே ஓடும். அப்போதுதான் தான் துரத்திக் கொண்டிருக்கும் இலக்கைத் தன் பார்வையின் வீச்சுக்குள்ளே வைத்திருக்க முடியும். இந்தவிடயம் முன்பே சாமித்தம்பிக்குத் தெரிந்திருந்ததாம்.

 தனது வேகம் குறைந்து யனையின் வேகம் அதிகரித்து அது தன்னை அண்மித்துவிட்டதை உணர்ந்த சாமித்தம்பி ஓடிக்கொண்டே ஓரிடத்தில் யானையைத் திரும்பிப்பார்த்து அது இடதுபக்கம் தலையை ஆட்டியபோது தான் வீதியின் ஓரத்தில் வலப்பக்கத்திலிருந்த ஒரு பள்ளத்தில் குதித்து மறைந்து யானை துரத்திவந்த எதிர்த்திசையில் காட்டுக்குள்ளாலேயே ஓடித்தப்பிவிட்டாராம்.

 தனது பார்வையிலிருந்து சாமித்தம்பியை தப்பவிட்ட யானை ஓட்டத்தை நிறுத்திக் கொஞ்சநேரம் நின்று நிதானித்துவிட்டு வீதியிலிருத்து விலகி காட்டுக்குள் இறங்கிவிட்டதாம். யானையின் முதுகில்பட்ட மரக்கிளைகள் ‘சடார் சடார்! என முறியும் சத்தம் சாமித்தம்பியின் காதில் கேட்டுக்கொண்டேயிருந்ததாம். தான் தப்பியது அருந்தப்பாம். கதிர்காமக் கந்தனின் கருணைதான் அதற்குக் காரணம் என யானை தன்னைத் துரத்தித் தான் தப்பிய கதையைச் சொல்லி முடித்தார். வெற்றிப் புன்னகையொன்று அவரது இதழ்க்கடையில் உதிர்ந்தது.

 பெரியவர் சாமித்தம்பி தன்னை யானை துரத்தி தான் அதிலிருத்து தப்பிய கதையைச் செல்லி முடித்ததும் கோகுலன் அவரிடம்,

“ஆனயச் சுட ஏலாதா? துவக்கிருந்தாச் சுடலாம்தானே”  என்று கேட்டான். அதற்குச் சாமித்தம்பி,  

“ஆனயச் சம்மா சுடேலாது தம்பி. அது சட்டப்படி குற்றம். பொலிஸ் புடிச்சா ஒண்டும் செய்ய ஏலாது. மறியலுக்குத்தான் போகோணும்” என்றார். 

 “ஆனயச் சுடுறது சட்டப்படி குற்றம்தான். அத நான் கேக்கல்ல. ஆனய துவக்கால சுட்டு உழுத்தேலாதா? அதத்தான் கேட்ட நான்” என்றான் கோகுலன்.

சாமித்தம்பி ஒரு அசட்டுச் சிரிப்பொன்றை அவிழ்த்தவாறு “எல்லாரும் ஆன சுடேலா தம்பி. ஆனைக்கெண்டு தோட்டா ஒண்டிரிக்கி. அதில ஒரேயொரு குண்டுதான் இரிக்கி. அது துவக்கு குழாயில பொறுத்துத்தான் பறந்து போகும். அப்பிடி பெரிய ஈயக்குண்டு. அதக் ‘குண்டுத் தோட்டா’ எண்டு சொல்ற. அதப் போட்டுத்தான் ஆனைக்குச் சுடோணும். அதுவும் இடம் பாத்துச் சுடோணும் தம்பி. சும்மா மான் மரைக்குச் சுடுறமாதிரி உடம்பில எங்கெண்டாலும் சுடேலாது. எல்லாருக்கும் அது தெரியாது. எனக்கு அது தெரியும்.” என்றார் சற்றுப் பெருமிதத் தொனியுடன்.

 “அதயும் எங்களுக்குச் சொல்லுங்களன்” என்றான் கோகுலன். 

“ஆனயிர கண்ணுக்குமேல நெத்தியில நடுவில ஒரு பள்ளம் இரிக்கும். சரியா அதக் குறிபாத்துச் சுடோணும். நடுநெத்தியில சுட்டாச்சரி. இல்லாட்டி காதுக்குக் கொஞ்சம் கீழ சுடோணும். அதுவும் இல்லாட்டி அதிர முன்னங்காலுக்கு  கொஞ்சம் தள்ளி வடிவாக் குறிபாத்துச் சுடோணும்”

 “நீங்க எப்பெண்டாலும் ஆன சுட்டிரிக்கீங்களா?” என்று பெரியவர் சாமித்தம்பியிடம் கேட்டான் கோகுலன்.

 “அதல்லாம் கேக்கப் போடா”  என்றவரிடமிருந்து நமட்டுச் சிரிப்பொன்று வெளிப்பட்டது.

“பெரியவரே ! கூமுன ஊராக்களோட நாம கதைக்கக்குள்ள தந்தமிரிக்கிற ஆனயக்கூட நாங்க கொல்லுறல்ல எண்டவங்க எலுவா. அதிர விளக்கமென்ன?” என்று கோகுலன் அடுத்ததாகக் கேட்டான்.

.”அது தம்பி! நல்லா முதிந்த ஆண் யானைகளுக்கு முகத்தில தும்பிக்கைர அடியிலிருந்து கீழ் நோக்கி  இரண்டு பக்கத்தாலயும் நீளமாக நுனி வளஞ்ச வெள்ளநிறக் கொம்புகள் ரெண்டு முளச்சிருக்கும். அதத்தான் தந்தம் எண்டிர” என்று சாமித்தம்பி கதையைத் தொடங்க, கோகுலன் “அது எனக்குத் தெரியும்” என்று நாசூக்காகச் சொன்னான்.

‘ஆ’ என்று தலையாட்டிய சாமித்தம்பி “ஆனத்தந்தம் வில மதிப்புக் கூடின சாமான்தம்பி. இலேசில கிடைக்கமாட்டா. கிடைச்சாலும் சரியான வில” என்றார்.

கோகுலன்“ ஏன் அதுக்கு அவ்வளவு மதிப்பு?” என்று கேட்டான்.

ஊடுகளில ஆனத்தந்தம் இருந்தா செல்வம் தம்பி. அத வெளி நாடுகளுக்குக் கள்ளமா அனுப்பி கொள்ள காசி சம்பாதிக்கிற பெரிய யாவாரிமாரெல்லாம் இரிக்காங்க. பழயகாலத்தில இந்தியாவில இரிந்தும் இலங்கயில இரிந்தும் வெளிநாடுகளுக்கு கப்பலில ஏத்தி அனுப்பின சாமானுகளில ஆனத்தந்தமும் இரிந்திரிக்கி. வெளிநாடுகளில ஆனத்தந்தத்தில இருந்து அழகுச்சாமாங்கள் செய்ராங்க. அதுகளுக்கு நல்ல கிராக்கி. உங்களுக்குத் தெரியும்தானே தம்பி பணக்கார ஆக்கள்ற ஊடுகளில ‘செஸ்’ விளையாடுவாங்க. ‘செஸ்’ விளையாட்டில பாவிக்கிற குதிர, ராசா, ராணி காய்கள் மற்றது ‘கரம் போர்ட்’ விளையாட்டில இரிக்கிற வெள்ளநிறக் காய்கள் இதல்லாம் ஆனத்தந்தத்திலயும் செய்யிறாங்க. பொம்மகளும் செய்யிறவங்க. ஆனத்தந்தத்தில செஞ்ச புத்தரிர உருவப் பொம்மகளயும் பாத்திருப்பீங்கதானே. பொம்புளயல் போடுற வளையல்களும் ஆனத்தந்தத்தில செய்வாங்க. அழகுச் சாமான்கள்தான் கனக்கயா செய்வாங்க. அப்படிப் பெறுமதியான தந்தமிருந்தாலும் தாங்க சாப்பாட்டுக்குத் தவிர வேற எதுக்கும் காட்டு மிருகங்களக் கொல்றல்ல எண்டதத்தான் தம்பி அவங்க சொன்னவங்க” என்று நீண்ட விளக்கமொன்றச் சாமித்தம்பி கொடுத்தார். 

“ஆனயப் பத்தி கனக்கச் சொன்னீங்க. அதப்பத்தி வேறென்னயும் சொல்ல இரிக்கா? என்று கோகுலன் அவரைக் கேட்டான்.  

“ஓம்! தம்பி. ஆனயோட பழக்கமான ஆள் எண்டாலும்கூட சும்மா சேட்டவிட்டு அதக் கோபப்படுத்தப் போடா. தனக்குக் கெடுதல் செய்த ஆக்கள எத்தின வருசம் போனாலும் ஞாபகத்தில வச்சிரிந்து  பழிவாங்கிப்போடும்” என்றார்.

“ஆனப்பாகனுக்கு ஆனயாலதான் சாவு எண்டு அதுக்குத்தானா சொல்ற” என்று அவ்வளவு நேரமும் அமைதியாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த கதிரவேல் இடையிலே புகுந்து கேட்டான்.  

“அப்பிடி நடந்துமிரிக்கி தம்பி” என்றார் சாமித்தம்பி. 

 “மகாகவி பாரதியாரப் பழக்கப்பட்ட கோயில் ஆனதானே அடிச்சுக் கொண்ட” என்றான் கதிரவேல்.  அதற்குக் கோகுலன்  “அதுக்கு மதம் புடிச்சதாலதான் அப்பிடிச் செய்த” என்றான்.

 “தம்பிமாருக்கும் கனக்க விசயம் தெரியும்போல. நாய்க்கு விசர் பிடிக்கிறமாதிரி ஆனைகளுக்குச் சிலநேரத்தில மதம்புடிக்கிற. மதம் புடிச்ச ஆனைகளுக்குக் காதுக்குக் கிட்டால கண்ணாமண்டயால  ஒருசாதியா நீர் ஒழுகுமாம். அத ‘மதநீர்’ எண்ற. கண்டிப் பெரகராவிலயும் ஒருதரம் ஊர்வலத்தில போன ஆனைக்கு மதம் புடிச்ச எண்டு கேள்விப்பட்டிருக்கன். கதிர்காமத் திருவிழாவிலயும் அப்பிடி ஒருதரம் நடந்த” என்றார் சாமித்தம்பி. சொல்லிவிட்டுச் சிறுநீர் கழிக்கவென்று எழும்பிப் போனார்.

சிறுநீர் கழிக்கவென்று எழுந்து ஒரு ஒதுக்குப்புறமாய்க் காட்டோரம் போனவர் சிலநிமிடங்களில் கோகுலன் , கதிரவேல் ஆகியோரைத் திரும்பிப்பார்த்துக் கையைக்காட்டி இரகசியத் தொனியில் தொண்டைக்குள்ளாலே  “கெதியா வாங்க” என்று அவசரமாய் அழைத்தார்.

 கோகுலனும் கதிரவேலும் அவரமாக எழுந்து அவரருகில் சென்றார்கள். இருட்டில் ஒரு இடத்தைக் குறிவைத்துச்  சுட்டிக்காட்டி “அங்க பாருங்க தம்பி” என்றார் இரகசியமாக. அவர் சுட்டிக் காட்டிய  இடத்தை நோக்கியபோது நீண்ட பாம்பொன்று இருட்டில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது.

“என்ன பாம்பு”  என்றான் கோகுலன்.

 “இரிட்டில என்ன பாம்பெண்டு மதிக்கேலாம இரிக்கித் தம்பி. நல்ல காலம் நான் தப்பின. மூத்திரம்  போய்த்தித் திரும்பக்குள்ள கண்டிட்டன். இல்லாட்டி மிரிச்சிரிப்பன். கட்டாயம் கடிச்சித்தான் இரிக்கும்”  என்றார் சாமித்தம்பி.  பின்,

கோகுலனிடமும் கதிரவேலிடமும் “வாங்க தம்பி போவம். முருகன் அப்பிடி ஆபத்தொண்டும் தரமாட்டான்” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அமர்ந்து தேனீர் குடித்த அடுப்படியை நோக்கி நடந்தார்.  

 மீண்டும் அடுப்படிக்கு வந்தவர்கள் தரையில் அமர்ந்தவாறு மீண்டும் கதைக்கத் தொடங்கினர்.  

கதிரவேல், “தச்செயலா அந்தப் பாம்ப நீங்க, மிதிச்சி கிதிச்சிக் கடிச்சிருந்தா  விடிஞ்சொன்ன கூமுன ஆக்களிட்டதான் உங்கள கொண்டுபோக வந்திரிக்கும். அவங்களிட்டதான் விஷக்கல், வேர், மூலிக எல்லாம் இரிக்கி. அத எப்பிடிப் பாவிக்கிற என்ற வைத்திய முறயளும் அவங்களுக்குத்தான் தெரியும். இல்லாட்டி பொத்துவிலுக்கு மாத்தயாவரிட்டத்தான் கொண்டுபோக வந்திரிக்கும். அல்லாட்டித் திருக்கோவில் விஷக்கல்லுக்குத்தான் கொண்டு போயிருக்கோணும். வாகன வசதி இல்லாம அவ்வளவு தூரம் கொண்டு போறண்டா சும்மாவா?” என்றான்.

“நல்லகாலம் கடிச்சிராத” என்றான் கோகுலன்.  

 “ஓம் தம்பி!, விஷக்கல்ல எனக்கும் தெரியும். எங்கட ஊர்ப்பக்கம் மட்டக்களப்பில ஏறாவூர் என்ற இடத்தில- வந்தாறுமூலயில படிக்கிற உங்களுக்கு ஏறாவூரத் தெரியாம இரிக்குமா – அங்க தம்பி! முஸ்லீம் பகுதிக்குள்ள ‘கபுறடி’ எண்டிற இடமொண்டிரிக்கி. அதப்பத்தியும் இப்ப விஷக்கல்லப் பத்திக் கத வந்தபடியாச் சொல்லோணும்” என்ற முன்னறிவித்தலுடன் யானைக் கதையை விட்டு விஷக்கல் கதைக்குத் தாவினார் சாமித்தம்பி.  

(தொடரும் அங்கம்…19)