— அழகு குணசீலன் —
தமிழரசுக்கட்சியின் அன்றைய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எப்போது “தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே இந்தக்கட்சி கலைக்கப்பட்டு இருக்கவேண்டும். தமிழ்மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய தகைமையை அது இழந்து விட்டது. எஸ்.ஜே.வி.யின் இந்த வார்த்தைகள் கட்சியின்,தலைமைத்துவத்தின் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமையை மறைத்து வீரவசனங்களைப்பேசி உசுப்பேத்திய அமிர்தலிங்கம் முதல் மாவை, சம்பந்தர் முதலான கூட்டம் மக்கள் நலன் சார்ந்து அன்றி அரசியல் வியாபாரத்திற்காகவே -பதவிக்காக வண்டியை கொண்டு இழுத்தது.
இந்த நிலையில் கடந்த அரை நூற்றாண்டு கால தலைமைத்துவ இயலாமை வட்டுக்கோட்டை தலைநகர் திருகோணமலையில் சந்திக்கு வந்திருக்கிறது. யாழ்.மேலாதிக்கம் அதிகார,பதவி வெறி பிடித்தது என்பதை தமிழரசு நிர்வாகத்தேர்வு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழரசில் தலைவர்தெரிவு பாரம்பரியம் போட்டியற்ற ஏகமனதானது (?) என்று காதிலே பூச்சுத்திய கதை பொய்யாகி ஒரு வாரமாகிறது. இந்த பொய்யை மறைக்க -தவிர்க்க முடியாத நிலையில் போட்டி இடம்பெறுவது ஜனநாயகமானது என்று மறு வளத்துக்கு கயிறு திணிக்கப்பட்டது. மொத்தத்தில் இங்கு “ஏகமனதும்” இல்லை ஜனநாயகமும் இல்லை. இந்த இரண்டும் கெட்டான் நிலைதான் தமிழரசின் இன்றைய நிலை.
27 ஜனவரி 2024 இல் திருகோணமலையில் நடந்த பொதுச்சபை கூட்டத்தில் அனைத்து சாணக்கியங்களும், குள்ளத்தனங்களும், சுத்துமாத்துக்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. பதவி வெறிக்கு கிழக்குமாகாண மக்களை பயன்படுத்துவதும், பலிக்கடாவாக்குவதும் யாழ்ப்பாண அரசியல் தலைமைகளின் வரலாறு. அதுவே ஆயுதப்போராட்டத்திலும் கொலைவெறியாகத் தொடர்ந்தது. தட்டிக்கேட்ட கிழக்குமாகாண மக்கள், சிவில் சமூகத்தினர், சமூகச்செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் துரோகிகளாக பட்டம் சூட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வால்பிடித்த கோடரிக்காம்புகளுக்கு பட்டம், பதவி வழங்கி ஆராதனை செய்யப்பட்டது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரி பதவிக்கு மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்கினார். தனக்கு தலைமைப்பதவிக்காக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். அ. அமிர்தலிங்கம் இராசதுரையின் தலைமைப்பதவியை தடுக்க காசி ஆனந்தனை கருவியாக்கினார். தொடர்ந்த இந்த பதவிவெறி வே.பிரபாகரனையும் விட்டு வைக்கவில்லை. இவர் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும். யாழ்.மையவாதத்தின் இரத்தம் இவருக்கும் தானே ஓடியது.
இந்த பதவிவெறி குணாம்சம் இன்னும் முடிந்த பாடில்லை. இரா.சம்பந்தர் எம்.பி. பதவியிலும், கூட்டமைப்பு பதவியிலும் இருக்க சாகாவரம்பெற்றவராம். மாவை சேனாதிராஜாவுக்கு தமிழரசின் தலைமைப்பதவியை விட்டு சுயமாக விலகும் எண்ணம் துளியும் இல்லை.
ஜனவரி 21, தலைவர் தெரிவுக்கு முன்னர் மத்திய குழுவை கூட்ட மாவை எடுத்த முயற்சி செயலாளர் சத்தியலிங்கம் சுகவீனம் (?) என்று அறிவித்ததால் சாத்தியப்படவில்லை. இதன் உள்ளார்ந்த நோக்கம் சூழ்நிலையைப் பயன்படுத்தி தலைவர் தெரிவை பின்போடுவது. தானே தலைவர் பதவியில் தொடர்வது. ஜனவரி 27. பொதுச்சபை கூட்ட குழப்ப சூழல் அதை அவருக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது.
பதவி ஆசை தில்லுமுல்லுகளுக்கு மத்தியில் நிர்வாகத்தெரிவை செல்லுபடியற்றதாக்கி, ஜனவரி 28 இல் நடக்கவிருந்த தமிழரசுக்கட்சி மாநாட்டை காலவரையின்றி பின்போட்டிருக்கிறார் மாவை. பழம் நழுவி பாலில் விழுந்த கதை. இதன் விளைவுகள் என்ன? தமிழரசுக்கட்சிக்கு மாவை சேனாதிராஜாவே உத்தியோகபூர்வ தலைவராக தொடர்வார். புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.சிறிதரன் பதவி ஏற்கும் வரை உத்தியோகபூர்வ தலைவர் அல்ல. சிறிதரனுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. ஆக, 21ம்திகதிக்கு முந்திய “பாரிசவாத” தமிழரசுக்கட்சி நிருவாகம்தான் இன்னும் தமிழரசுக்கட்சி நிருவாகம்.
ஜனவரி 27 சனிக்கிழமை அன்று திருகோணமலையில் நடந்திருப்பது என்ன? தமிழரசுக்கட்சியின் தலைவர் வடக்கை (யாழ்ப்பாணம்) சேர்ந்தவராக இருந்தால் செயலாளர் கிழக்கை (மட்டக்களப்பை) சேர்ந்தவராக இருக்கவேண்டும். இதை மட்டக்களப்பு தமிழரசாரே எழுதாத நியதியாக இதுவரை பெருமையடித்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்த நியதி தலைமையை வடக்கில் வைத்துக்கொள்வதற்கான ஒரு பொறி. இது இனிப்பு முலாம் பூசப்பட்ட கசப்பு. பெருமையடிக்க இதில் எதுவும் இல்லை. உண்மையில் இதன் உள்நோக்கம் எப்போதும் யாழ்ப்பாணத்துக்கே தலைமைப்பதவி. மட்டக்களப்புக்கு செயலாளர் என்பதுதான். இது உண்மை இல்லை என்றால் சி.மு.இராசமாணிக்கத்திற்கு முன்னரும், அல்லது பின்னரும் தலைவராக கிழக்கு மாகாணத்தவர் தெரிவு செய்யப்படாதது ஏன்? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. கடந்த 50 ஆண்டுகளாக கிழக்குக்கு தலைமைப்பதவி உரிமை மறுக்கப்பட்டுவந்துள்ளது .
தலைமைப்பதவிக்கு போட்டியிடவிருந்த சீ.யோகேஸ்வரன் சிறிதரனுக்கு ஆதரவு வழங்கியதால் கிழக்குமாகாண வாக்குகளால் சிறிதரன் சுமந்திரனை இலகுவாக வெற்றி பெற முடிந்தது. அதே வேளை வேட்பாளர் யோகேஸ்வரன் தொடர்பாகவும், அவர் சிறிதரனுக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் நடுநிலை தவறிய சுமந்திரனின் ஆதரவாளரான மேலாண்மை சிவஞானம் யோகேஸ்வரனை டம்மி என்று “இழக்காரமாக” பேசியிருந்தார். இது நடந்தும் சூடு,சொரணை இன்றி ஏதாவது ஒரு பதவிக்காத யோகேஸ்வரன் அன் கோ இன்னும் திருகோணமலைக்கு காவடி எடுக்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் பெயரை பொதுச்செயலாளர் வேட்பாளராக அறிவித்தவர் மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன். இவர்கள் தலைவர் தெரிவில் சிறிதரனை ஆதரித்தவர்கள் என்பதால் அதைத் தடுப்பதற்கான “சகுனி” திட்டத்தை சாணக்கியனும்,சுமந்திரனும் சேர்ந்து தீட்டினர். கூட்டத்தில் சாணக்கியனின் ஆதரவுடன் தான் செயலாளராக வருவதற்கு முயற்சி செய்துள்ளார் சுமந்திரன். கிழக்குக்கு வழங்கப்பட்ட போடுகாய் செயலாளரையும் சுருட்டும் எண்ணம். இது யாழ்மேலாதிக்க பிரதேசவாதமாகிவிடும் என்று பலரும் மந்திரம் ஓதியதால் பிளான் “B” யில் இறங்கினார்கள் சகுனிகள்.
அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் சாணக்கியன், திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் குகதாசன் இவர்களில் ஒருவர் செயலாளராக தெரிவு செய்யப்படுவதே சரியானது என்று வாதாடியுள்ளார் சுமந்திரன். நிரபராதியை குற்றவாளி என்று உள்ளே தள்ளுவதை தொழிலாக கொண்டவருக்கு இதில் வாதாடுவதில் என்ன கஷ்டம் கிடக்குது?
இந்த மூவரில் தான் சீனியர் எனக்குத்தான் செயலாளர் பதவி என்று தனக்குத்தானே குகதாசனும் ஆஜரானார். எப்படியோ சிறிநேசன் செயலாளராவதை தடுப்பதே சகுனிகளின் திட்டம். யோகேஸ்வரன் அணி பலமாக இருந்ததாலும், மட்டக்களப்புக்கு நன்றிக் கடன்செலுத்த வேண்டிய தேவை சிறிதரன் தரப்புக்கு இருந்ததாலும் பிளான்” B” பிசுபிசுத்தது. ஆனால் சிறிதரனுக்கோ தான் பதவி ஏற்பதற்கு பொதுச்சபை கூடியாகவேண்டும் என்பதால், ஒரு கட்டத்தில் சிறிநேசனை குகதாசனுக்கு விட்டுக்கொடுக்க சொன்னதால் மட்டக்களப்பார் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கூட்டத்தில் குழப்பமும் கூச்சலும் ….. தனது பதவியை தக்க வைக்க தன்னை ஏற்றிய கிழக்கு ஏணியை தள்ளிவிடும் தந்திரோபாயம்.
கூட்டத்தில் நிலவிய குழப்பத்தால் மாவை சேனாதிராஜா கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்ததும் ஒருபகுதி உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய நிலையில் மாவையையும் மீறி கூட்டத்தை நடாத்தி இருக்கிறார் சுமந்திரன். அந்த வாக்கெடுப்பில் தான் குகதாசன் 113 வாக்குகளையும், சிறிநேசன் 104 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் வாக்குகளை கணக்கிட்ட (கைஉயர்த்தும் வாக்கெடுப்பு) சுமந்திரன் இரண்டு கைகளை உயர்த்தியவர்களையும், அங்கத்தவர்கள் அற்ற மண்டபத்தில் உணவு பரிமாற்றம், மற்றும் கடமையில் இருந்தவர்களின் கைகளையும் சேர்த்து கணக்கிட்டுள்ளார். இந்த சுமந்திரன்தான் இணைய வழி பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் வாசிக்க தெரியாதவர்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியவர். இவருக்கு கணக்கு. … ? தெரிந்ததெல்லாம் கள்ளக்கணக்கு!
இந்த குளறுபடியில் மாவை திட்டவட்டமாக கூட்டத்தைப்பின்போட்ட நிலையில் “கட்சிக்கு எதிராக வழக்குப்போடுவேன்” என்று தனது அப்புக்காத்து தனத்தையும் காட்டியுள்ளார். “ஏலுமென்டால் போடு மேன்” என்றாராம் சிறிதரன்.
இதற்கெல்லாம் முன்னர் நிர்வாகத்தேர்வை மத்திய குழு தேர்வு செய்து பட்டியலை பொதுச்சபையில் வாசித்தபோது பொதுச்சபை மத்திய குழுவின் நியமனங்களை நிராகரித்து செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு கோரியுள்ளது. அந்த கணக்கெடுப்பில்தான் சட்டாம்பி தப்புக்கணக்கு போட்டுள்ளார். மத்திய குழு பட்டியலில் பொதுச்செயலாளராக குகதாசன். சிறிநேசனுக்கு இணைப்பொருளாளர்பதவி. ஐந்து துணைத்தலைவர்களில் கலையரசன், அரியநேத்திரன் இருவர். ஐந்து இணைச்செயலாளர்களில் சாணக்கியனும், சரவணபவனும். மட்டக்களப்பாருக்கான இந்த போடுகாய் பதவிப்பங்கீடட்டிலும் கோஷ்டி அரசியலையும், குள்ளத்தனங்களையும் காணமுடிகிறது. செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சிறிநேசனுக்கு இணைச்செயலாளர் பதவி கூட வழங்கப்படாத அளவுக்கு கதவுக்கு பின்னால் திட்டம் வலுவாக இருந்துள்ளது.
தமிழரசு யாப்பு என்ன உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், பொதுச்சபையே அதிகாரம் மிக்கது. மத்திய குழுவை நியமிப்பதும் பொதுச்சபைதான். பாரம்பரிய பழக்க தோஷத்தில் பதவிகளை மத்திய குழுவுக்குள் பங்கிட்டுக்கொண்டு அதற்கு பொதுச்சபையில் அங்கீகாரம் கோரியதே அனைத்துக் குழப்பங்களுக்கும் அடிப்படைக்காரணம். அதனால் வெளிப்படைத்தன்மையற்ற, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்த வழிமுறையை பொதுச்சபை நிராகரித்திருக்கிறது. இதனால் கிழக்குக்கு எதிரான சுமந்திரன் அணியின் திட்டம் தோல்வியில் முடிந்தது.
பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.
இல்லையேல்……
கட்சியை கலைத்துவிட்டு கடையை மூடுவதற்கான காலம் இன்னும் அதிக தூரத்தில் இல்லை.