விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு.

1.        இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி  இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப்  பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு.

2.        இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள்,  ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும்  முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்  தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது.                            அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும்.

3.        இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை.

4.        ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5.        எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு  உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன.

6.        சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது,  கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

7.        சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள்.

8.        புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி.

9.        விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள்.

இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன.

ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும்.

விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால்  (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்)  தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர்.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு  75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது.

அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது.

விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி.

அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி.

ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன.

பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது.

உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.

நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.

புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும்.

இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது  ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய  யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது.

விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான  இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில்  சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால்,

ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? 

“விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது.

பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது.

காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.