தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்-பகுதி-4.       (வாக்கு மூலம்-99)

தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் அணி மேற்கிளம்ப வேண்டும்-பகுதி-4. (வாக்கு மூலம்-99)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்  )

சென்ற வாரத் தொடர்ச்சி (இறுதிப் பகுதி)

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —  

இனப் பிரச்சனைக்கான தீர்வைச் சிங்கள மக்களும் ஆதரிக்கக் கூடிய அரசியல் சூழலும் மக்களின் உளவியலும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா விஜயகுமாரணதுங்க ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் (1994-2004) சாதகமாக இருந்தன. மேலும், சந்திரிகாவின் அரசியல் பிரவேசம் மாகாண சபையின் ஊடாகவே-மேல் மாகாண முதலமைச்சராக-நிகழ்ந்ததால் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க வேண்டுமென்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அக்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியோ (1994-2000) -2001இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ (2001-2004)- மரபுவழிச் சமரொன்றில் ஈடுபட முடியுமான அளவுக்கு இராணுவச் சமநிலையோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளோ அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டன. 

13 ஆவது திருத்தத்திலும் பார்க்கக் கூடிய அதிகாரப் பகிர்வைக் கொண்டிருந்ததும், ஸ்ரீலங்கா பிராந்தியங்களின் ஒன்றியமாக இருக்கும்- Sri Lanka Shall be an Union of Regions – எனக் குறிப்பிடப்பட்டுச் ‘சமஸ்டி’க் குணாம்சத்தைக் கொண்டிருந்ததுமான, சந்திரிகா அரசாங்கம் கொணர்ந்த அரசியல் தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில் அப்போது யூ என் பி யுடன் சேர்ந்து நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்த்தது.

இன்று இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகவிருந்த தமிழரசுக் கட்சியும்- ரெலோவும்- ஈ பி ஆர் எல் எஃப் உம் (அப்போது ‘புளொட்’  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகப் புலிகளால் சேர்த்துக் கொள்ளப்படவில்லை) இன்று 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலைப் பற்றியும், அன்று இக்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தானும் ஒன்றாகவிருந்து பக்கப்பாட்டு பாடிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) சமஷ்டி பற்றியும் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு இப்போது கதை பேசுவது சந்தர்ப்பவாதமாகும். 

சர்வதேச சமூகத்தின் தலையீட்டைப் பொறுத்தவரை 2002 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் (அப்போது சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்தார்கள்) அதன் தொடர்ச்சியாகச் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் நோர்வே நாட்டு மத்தியஸ்தத்துடனும் (இந்தியாவின் மறைமுக ஆதரவுடனும்) உள்ளக சுய நிர்ணய உரிமையை வழங்க இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கைவரை நீண்ட பேச்சுவார்த்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிடிவாதத்தாலும் வீம்புத் தனத்தாலும் தன்முனைப்பினாலும் தோல்வியில் முடிந்தது. இதனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படக்கூடிய சந்தர்ப்பமும் இழக்கப்பட்டது. இப் பேச்சு வார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் பிரதித் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் (கருணா அம்மான்) ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையை அனுசரித்துப் போவதற்கு விரும்பியிருந்தபோதிலும் அது பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டது. 

‘மகாதேவி’ திரைப்படத்தில் வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா பேசும் ‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’ எனும்படியாகப் பிரபாகரன் ‘தமிழீழ’த் தனிநாட்டைத் தவிர அதற்குக் குறைந்த எதனையும் பரிசீலிப்பதற்குக்கூட-படிமுறை வளர்ச்சியாகப்  பரீட்சித்துப் பார்ப்பதற்குக்கூடத் தயாராக இருக்கவில்லை. 

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகத் தான் மட்டுமே இருந்து-தான் மட்டுமே போரை நடாத்தி-தமிழீழத் தனி நாட்டை அமைத்துத் தான் மட்டுமே அதனை ஆளவும் வேண்டுமென்ற தன்முனைப்பே பிரபாகரனை ஆட்கொண்டிருந்தது.

 ‘தமிழீழ’த் தனி நாட்டை அமைத்து தமிழ் மக்களைத் தான் மட்டுமே ஆள வேண்டும்; அதுவரைக்கும் தமிழீழத்தைச் சொல்லித் தமிழ் மக்களைத் தான் மட்டுமே ஆள வேண்டும் என்பதே பிரபாகரனின் உளவியலாக இருந்தது. தமிழ் மக்களை வாழவைக்க வேண்டும் என்பதைவிட அம்மக்களின் அழிவிலாவது தான் ஆள வேண்டும் என்கின்ற பிரபாகரனின் தன்முனைப்பே இன்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் நிர்க்கதியில் நிறுத்தியுள்ளது. தனிநாட்டுக் கோஷத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பிரபாகரன் மீது கொண்டிருந்த ‘தனிநபர் வழிபாடு’ம் (Hero Worship) இதற்குத் துணை போனது.

விடுதலைப் புலிகளிடம் வீரமும்- துணிவும் – உயிர்த்தியாகமும்- போரியல் திறனும் – இராணுவக் கட்டுப்பாடும் இருந்திருக்கலாம். ஆனால், அவை எல்லாமே ஈற்றில் அவ் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் இருந்த பிடிவாதத்தினாலும்-  தன்முனைப்பினாலும் –  அறவிழுமியங்களை அடியோடு புறந்தள்ளிய அரசியல் இலக்குகள் இல்லாத-பின் விளைவுகளைப் பற்றிச் சிந்தியாத பழி தீர்க்கும் ஆயுத நடவடிக்கைகளாலும்-ஏகப்பிரதிநிதித்துவ மற்றும் ‘பாசிச’க் கொள்கையினாலும் தமிழ் மக்களுக்கு எதிர்மறையாகப் பேரழிவுகளையும் பின்னடைவையும் ஏற்படுத்திவிட்டு அவம் போயின.

இந்தியத் தலையீட்டினால் 1987இல் ஏற்பட்ட இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான 13 ஆவது திருத்தத்தையும் எதிர்த்துவிட்டு-பின்னர் சந்திரிகா அரசாங்க காலத்தில்         அரசு கொணர்ந்த ‘சமஷ்டி’க் குணாம்சம் கொண்ட அரசியல் தீர்வுப் பொதியையும் எதிர்த்துவிட்டு-சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடனும் இலங்கை அரசாங்கத்துடன் எட்டப்பட்ட உள்ளக சுய நிர்ணய உரிமையை வழங்கிய ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையையும் எதிர்த்து விட்டு இப்படிக் கிடைத்த எல்லாச் சந்தர்ப்பங்களையும் கெடுத்துவிட்டு இப்போது புதிய அரசியல் அமைப்பொன்றின் மூலம் தீர்வு வரும் எனக் கனவு காண்பது முழுக்க முழுக்க அரசியல் மதியீனம் ஆகும். 

இனிமேல் அகிம்சைப் போராட்டங்களின் மூலமாகவோ அன்றி மீண்டுமொரு ஆயுதப் போராட்டமொன்றினூடாகவோ அன்றி சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படக்கூடிய பேச்சுவார்த்தையொன்றினூடாகவோ அன்றி பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் நல்லெண்ணத்தினாலோ (இமாலயப் பிரகடனம் அதைத்தான் யாசிக்கிறது) இனப் பிரச்சனைக்கான தீர்வு என ஒன்று வரப்போவதில்லை.

மேலே கூறப்பட்ட யதார்த்தங்களையெல்லாம் தாண்டி அல்லது எட்டிக் கடந்து எந்த அரசியல் அற்புதமும் இலங்கை மண்ணில் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை. 

எது எப்படி இருப்பினும் இன்று இலங்கைத் தமிழர்களின் கையில் இருக்கக்கூடிய அதி குறைந்தபட்ச பாதுகாப்புக் கவசம் 13 ஆவது திருத்தமேயாகும். ஆனால், இதனைக்கூட இலங்கையின் எந்த அரசாங்கமும் தானாக முன்வந்து முழுமையாக அமுல்படுத்தப்போவதில்லையென்பதை இத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட 1988 இலிருந்து இன்றுவரையிலான முப்பத்தைந்து வருட கால அனுபவம் எண்பித்துள்ளது. 

இந்தப் பின்னணியில் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தி இந்தியாவே ஆகும். இந்தியாவை ஓரம் கட்டி விட்டு வேறு எந்தச் சர்வதேச நாடுகளோ அல்லது சக்திகளோ இதில் ஈடுபடப் போவதுமில்லை. மறுதலையாக இந்தியாவை ஓரம் கட்டும் எந்தச் செயற்பாடுகளும் வெற்றியளிக்கப்போவதுமில்லை. 

மேலும், இன்றைய இலங்கையின் தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் களநிலையில் உடனடியாக 13ஆவது திருத்தத்திற்கு மேல் இந்தியா நகரப் போவதுமில்லை. 

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத்) தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை நியாயமானதாக இருக்கலாம். ஆனால், நியாயங்களின் மற்றும் அறவிழுமியங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அரசியல் கலாசாரம் இப்போது உலகில் எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. ஒரு நாட்டின் அல்லது அரசின் அரசியல் – பொருளாதாரம் – பாதுகாப்பு நலன்களை முன் வைத்துத்தான் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் நலன் கருதி ஐக்கியப்படப் போவதில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது. அப்படி ஐக்கியப்படும்படியாக ஓர் அற்புதம் நிகழ்ந்தாலும் புலிசார் உளவியலிலிருந்து இக்கட்சிகள் எதுவும் மீளப் போவதும் இல்லை/விடுபடப் போவதுமில்லை. 

ஆதலால், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் இத்தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப் படுத்துவதிலும் அவற்றிடையே கூட்டமைப்பை ஏற்படுத்த முயற்சிப்பதிலும் ஈடுபடுவது வெறுமனே காலத்தையும் சக்தியையும் உழைப்பையும் வீணாக்கும் செயற்பாடாகும். 

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் திருந்தப் போவதில்லை. திருத்த முயல்வது முயற்கொம்பு. எனவே, அவர்களுக்குப் பின்னால் மினக்கெடுவதை விட்டுவிட்டு மக்கள் தாமாகவே திருந்தவும் வேண்டும்; தீர்மானங்களை எடுக்கவும் வேண்டும். 

இந்த யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டால், இந்தியாவை முழுமையாக அனுசரித்துப் போகக் கூடிய-13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை மட்டுமே தற்போதைக்கு உளப்பூர்வமாக வலியுறுத்தக் கூடிய-அதேவேளை இந்தியாவும் நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில் புலிகளின் முகவர்கள் அல்லாத-ஓரளவு சிங்கள சமூகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளும் மறைமுகமாகவேனும் ஆதரிக்கக் கூடிய ‘மாற்று அரசியல்’ அணியொன்றினை (தமிழ்த் தேசியக் கட்சிகளை விடுத்து) 2024 இலிலாவது வடக்குக் கிழக்குத் தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டும்.

இதனை விடுத்து தொடர்ந்து அரசியல் நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் கற்பனைகளிலும் கனவுகளிலும் சஞ்சரித்துக் கொண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளையே நம்பிக்கொண்டும் ஆதரித்துக்கொண்டும் இருந்தால் தொடர்ந்தும் இழப்புகளையே இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் நிலையைப் பட்டு வேட்டிக்குக் கனவு கண்டு ஈற்றில் இடுப்பில் கட்டியிருந்த கோவணத்துண்டையும் இழந்த நிலைமை என அரசியல் அவதானிகளால் கூறப்படும் கூற்று நிரூபணமாகியும் விடும்.

எனவே, தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024 ஆம் ஆண்டில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பரீட்சார்த்தமாகவேனும்-ஒரு மாற்றத்திற்காகவேனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கட்சிகளை முற்றாக நிராகரித்து அதற்கு மாற்றாகப் புலிகளின் முகவர்கள் அல்லாத மாற்று அரசியல் அணியை அல்லது அவ்வாறான ஒரு மாற்று அணி/கூட்டு ஏற்படாதவிடத்து பொருத்தமான தனிக் கட்சியொன்றைத் தாமாகவே அடையாளங்கண்டு (அத்தனிக்கட்சி தமிழர்களின் அரசியல் பொதுவெளியில் 2015இல் மாற்று அரசியல் கருத்தியலை விதையூன்றி அதனை முளைவிட்டு வேரூன்றச் செய்வதற்காகச் சாத்தியமான வழிகளிலெல்லாம் உழைத்துவரும் ‘அகில இலங்கை தமிழர் மகாசபை’ யாகக் கூட இருக்கலாம்) தமது முழுமையான அரசியல் அங்கீகாரத்தை அந்த அணிக்கே அல்லது தனிக்கட்சிக்கே இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் வழங்கிவைத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியலில் ஒரு ‘மாற்றம்’ நிகழ வாய்ப்புண்டு. 

இந்த அரசியல் யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு இவ் அரசியல் பத்தியிலே மாற்று அரசியல் அணிக் கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள-புலிகளின் முகவர்கள் அல்லாத கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கல்விமான்கள்-துறைசார் நிபுணர்கள்-அரசியலாளர்கள்-சமூக மற்றும் ஆன்மீகச் செயற்பாட்டாளர்கள்-எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகச் செயற்பாட்டாளர்கள் – தொழிலதிபர்கள் – சிறுவர்த்தகர்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – ஏனைய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இந்த மாற்று அரசியலின்-செயற்பாட்டு அரசியலின் பின்னே அணி திரளவேண்டும். அப்படியில்லாமல் ‘இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன’ என அக்கறையில்லாமல் அலட்சிய மனப்பாங்கோடு இருந்துவிட்டு இந்தியா அக்கறை காட்டவில்லை-சர்வதேச சமூகம் புதினம் பார்க்கிறது-சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்று பின்னர் கூறுவதில் அர்த்தமேயில்லை. 

(‘தமிழர் அரசியல் பொதுவெளியில் 2024 முதல் மாற்று அரசியல் மேற்கிளம்ப வேண்டும்’ எனும் தலைப்பிலான (வாக்குமூலம்- 96,97,98,99 முறையே பகுதி 1,2,3,4) கட்டுரை முற்றுப்பெறுகிறது)

(