— அழகு குணசீலன்—
தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், யாழ்.மாவட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைத் தோற்கடித்திருக்கிறார் சிவஞானம் சிறிதரன். ஜனவரி 21ம்திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வில் இந்த “அதிசயம்” நடந்திருக்கிறது. சிறிதரன் பொதுச்சபை உறுப்பினர்களின் 184 வாக்குகளையும், சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுள்ளார். 47 மேலதிக வாக்குகளால் சுமந்திரனை தோற்கடித்திருக்கிறார் யாழ்.மாவட்ட சக பா.உ .சிறிதரன்.
இதில் பிராந்தியத்தில் இந்தியா வென்றிருக்கிறது – முதல் வாழ்த்து தெரிவித்திருப்பவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான். தமிழர்களை கையாளுவதில் சர்வதேசத்தில் அமெரிக்கா தோல்வி யுற்றிருக்கிறது. கிழக்கில் – மட்டக்களப்பில் யோகேஸ்வரன் வெற்றிபெற்றார், சாணக்கியன் தோற்றார்.சம்பந்தர் ஐயாவும்,மாவை சேனாதிராஜாவும் வெற்றி பெற்றார்கள். கலங்கிய குட்டையில் மீண்டும் வலைவீச மாவை சனிக்கிழமை (20.01.2024) அவசர கூட்டம் ஒன்றை கூட்ட எடுத்த முயற்சி உப செயலாளர் டாக்டரே சுகவீனமுற்றதால் பிசுபிசுத்து விட்டது. கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்க தன்னை தெரிவு செய்யுமாறு கோருவது மாவையின் மாற்றுத்திட்டம்.
கொழும்பு பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்,சஜீத்பிரேமதாச. ஆகியோருக்கு வலது கை கழன்று விழுந்தது மாதிரி படு தோல்வி.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு ஒரு முக்கிய “முள்” அகற்றப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொழும்பின் பின்கதவு பாராளுமன்ற அரசியல் கதவு சுமந்திரனுக்கு இனி அகலத்திறந்திருக்கமாட்டாது. தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலில் சுமந்திரனின் அரசியல் முக்கியத்துவம் குறைவடையும்.
சிங்கள கடும்போக்காளர்களுக்கு தலையிடிக்கு மருந்துத் துண்டு எழுதியிருக்கிறார் சிறிதரன்.
இது நாட்டிலும், புலத்திலும் பலரும் எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் மௌன உடைவுகள் எதிர்பார்த்த ஒன்றே. டிசம்பர் 20 ம் திகதி அரங்கத்தில் பதிவிடப்பட்ட மௌன உடைவுகள் 61 இல் சரியாக ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த களநிலையை – முடிவை மௌன உடைவுகள் பேசியிருக்கிறது. யோகேஸ்வரன் யாரை ஆதரிப்பார் என்பதையும் அடித்துச் சொல்லியிருக்கிறது. சட்ட அறிவு, மொழிப்புலமை, சர்வதேச தொடர்பு …. என்று பட்டியல்ப்படுத்தப்பட்ட தமிழர் அரசியல் தகுதிக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி வைத்தியத்தில் கிழக்குமாகாணத்தின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது.
டம்மி தாக்கம்…..!
—————-
வடக்கு முடிவுகளுக்கு தலையாட்டுவது கிழக்கின் கடந்தகாலவழக்கு. அந்த காலம் மலையேறி விட்டது என்பதை , தமிழ்த்தேசிய அரசியலில் யாரும் எதிர்பாராதவாறு தன்னை தலைமைப்பதவிக்கான வேட்பாளராக அறிவித்தார் மட்டக்களப்பு முன்னாள் பா.உ. சீனித்தம்பி- யோகேஸ்வரன். யோகேஸ்வரனின் இந்த அறிவிப்பு வடக்கு எதிர்பார்த்திருக்காத ஒன்று. இந்த ஆத்திரம் தான் சுமந்திரனை வேட்பாளராக உறுதிசெய்த ஆறுபேரில் ஒருவராக கையெழுத்து போட்ட சி.வி.கே.சிவஞானம் யோகேஸ்வரனை “டம்மி” என்று நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக கூறக்காரணம். இதை அவர்கூறி பல வாரங்கள் ஆகுகின்றபோதும் தமிழரசின் எந்த முக்கியஸ்தரும் இதைக் கண்டிக்கவில்லை. யாழ்.மேலாதிக்க அரசியலில் மட்டக்களப்பான் டம்மிக்குத்தான் தகுதி. இத்தனைக்கும் இவர்கள் தான் கடந்த 75 ஆண்டுகளாக டம்மி தமிழ்த்தேசிய அரசியல் பேசுபவர்கள்.
இந்த”டம்மி ” வார்த்தை பிரயோகம் இது வரை வடக்கால் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளையும் ஜீரண மாத்திரையைப் போட்டு மூடிமறைத்து வந்த மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு மானத்தையும், ரோசத்தையும் காலம் கடந்தாவது உணர்த்த ஒரு காரணமாக அமைந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், சிறிநேசன், மற்றும் முன்னாள் வேட்பாளர் உதயகுமார் ஆகியோருக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் வெட்கத்தை ஏற்படுத்தியது. இந்த வெட்கத்தை ஈடுசெய்ய அரியநேந்திரன்- சிறிநேசன் அணி மட்டக்களப்புக்கு செயலாளர் பதவி என்ற கோரிக்கையை முன்வைத்தது. கடந்த காலங்களில் சாணக்கியனின் வேட்டியில் தொங்கிய இவர்கள் யோகேஸ்வரனுடன் இணைந்து சிறிதரனை ஆதரிக்க முடிவுசெய்தனர். இந்த எதிர்பாராத திருப்பத்தை- டம்மி விளைவை வடக்கோ, சுமந்திரனோ, சாணக்தியனோ, ஏன் முன்னாள் மாநகரமுதல்வர் சரவணபவனோ எதிர்பார்த்திருக்கவில்லை.
அடுத்து, மட்டக்களப்பு அரசியல்வாதிகளை சிறிதரன் பக்கம் தள்ளிவிட்டதில் சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் பெரும் பங்குண்டு. சுமந்திரன் உடன் இணைந்து சாணக்கியன் தனியாக ஓடுவது, அவரின் தவறான வார்த்தைப் பிரயோகங்கள், சாணக்கியனின் அரசாங்க அதிகாரிகளை மதிக்காத சண்டித்தன அரசியல், தனது முடிவுகளை திணிக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மை அற்ற குள்ளத்தனம் போன்ற சுமந்திரனின் குணாம்சங்களை கடன்வாங்கிய நடவடிக்கைகள், அவரின் அரசியல் தனிநபர் ஒழுக்கம் என்பன தமிழரசின் மட்டக்களப்பு முன்னாள் பா.உ.க்கள் மூவரையும் இவ்வாறான ஒரு முடிவுக்கு துரிதப்படுத்தின என்று கூறலாம். இந்த சூழலை சமாளிக்க சுமந்திரனும் (54) சாணக்கியனும்(121) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வெறும் பானைகளை சுமந்தபோதும் திருகோணமலையில் தோல்வியைத்தவிர வேறொன்றுமில்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு…..!
எது எப்படி இருப்பினும் தமிழரசுக்கட்சியின் தலைவருக்கான இந்த தேர்தல் கிழக்கு டம்மியும் இல்லை,போடுகாயும் இல்லை, மட்டக்களப்பு என்பது தனியே சாணக்கியன் அல்ல என்பதை வடக்குக்கும் சுமந்திரன் அணிக்கும் உணர்த்தியிருக்கிறது.
சிங்கள அரசிடம் உரிமைகளுக்காக போராடப்புறப்பட்ட தமிழ்த்தேசிய கிழக்கு -மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசு தலைமைத்துவ நிர்வாக கட்டமைப்பில் தமக்கும் பங்குரிமை கேட்டு புறப்பட்டு இருக்கிறார்கள். இப்போதாவது கிழக்கின் உரிமைகளை கேட்பதும், அது மறுக்கப்படும் போது போராடுவதும் பிரதேசவாதம் அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் சரி. இதனால் தான் சிங்களம் “நாங்கள் இலங்கையர்கள்” என்பதும் யாழ்ப்பாணத்தலைமைகள் “நாங்கள் தமிழர்கள்” என்பதும் ஒரே மந்திரம் என்று கூறவேண்டி உள்ளது. தமிழர்கள் என்ற மாயமான் மந்திர கயிற்றால் கிழக்கை இனியும் கட்டிப்போட முடியாது.
சுமந்திரனின் தோல்விக்கு புலம்பெயர்ந்த தேசத்தின் தனிநபர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு செய்திருக்கின்றன. சுமந்திரன் தரப்பால் முன்வைக்கப்பட்ட “தகுதி” வாதத்தை தகர்ப்பதற்கு டயஸ்போரா உதவியாக இருந்துள்ளது. தலைமைத்துவம் என்பது ஆளுமை, இணங்கிப்போதல், பிரச்சினைகளை அடையாளம் காணல், காரணங்களை கண்டறிதல்,தீர்வுகளை தேடல், அவற்றை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றின் கூட்டுக்குணாம்சமே அன்றி கல்வி தகுதி சான்றிதழ்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நிலத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள், ஊடகங்கள் எடுத்துச் சொன்னபோது அது இந்த தகுதிமாயையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமந்திரனுக்கு எதிரான சிறிதரனின் தகுதி வாதத்தை நியாயப்படுத்தியது.
இனி நடக்கப்போவது என்ன…….?
———————————-
இந்த தமிழரசு தலைவர் தேர்தல் முடிவு வென்றவரும், தோற்றவரும் என்னதான் ஒற்றுமை பற்றி பேசினாலும் கட்சியில் ஒரு உடைவை, இரண்டு குழுக்களை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி பெற்றவர் என்ற வகையில் சிறிதரன் கவனமாகச் செயற்பட்டாலும், சுமந்திரனின் கடந்தகால சூதாட்ட வரலாறு அவரின் வார்த்தைகளை -வாய்மையை நம்பமறுக்கிறது. மாவை, சம்பந்தர் தலைமைகளின் கீழ் தன்னை முதன்மைப்படுத்தியது போன்று தற்போதும் செய்யமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவிக்கு கிழக்கில் இருந்து குகதாசன் (திருகோணமலை), சிறிநேசன் (மட்டக்களப்பு) ஆகிய இருவரது பெயர்களும் ஆலோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாணக்கியனை சிறிநேசனுக்கு எதிராக களமிறக்க சுமந்திரன் முயற்சிக்ககூடும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பது இவர்களுக்கு பொருந்தாது என்பதே கடந்தகாலம். மட்டக்களப்பில் இரு தமிழரசு அணிகள் ஒன்று சாணக்கியன் அணி, அதற்கு மாற்றாக யோகேஸ்வரன் அன் கோ அணி நீறுபூத்த நெருப்பு இனித்தான் எரியப்போகிறது. சாணக்கியன் மீதான பிரமை யோகேஸ்வரன் வைத்த குண்டால் தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பழிவாங்கல் அடுத்த மாநகரசபை, மாகாண சபை, பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலில் வெளிப்படும்.
இந்தத் தேர்தல் யாழ்.மேலாதிக்கம் கிழக்கை கருத்தில் கொள்வதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது.
கிழக்கு தமிழரசார் தங்களின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற தேவையை உணர்த்தி உள்ளது.
கிழக்கு, வடக்கு கிழக்கு அரசியலின் பங்குதாரராக மட்டும் அன்றி அதன் திசையையும் திருப்பக்கூடிய “சுக்கான்” ஆகவும் உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய அரசியல் பேசுகின்ற, சனிக்கிழமை (20.1.2024) வெளியான சிறிதரனின் ஊடக அறிக்கை பேசுகின்ற தாயகம்- வடக்கு கிழக்கு இணைப்பு, தேசியம், சுயநிணயம் ..,.. இவற்றில் எதையும் அவரின் தலைமையின் கீழும் தமிழ்த்தேசியம் அடையப்போவதில்லை.
சீனாவுக்கு எதிரான இலங்கை அரசியலில் சிறிதரன் மிகவும் இலகுவான கருவியாக பயன்படுத்தப்படுவார். இது இப்போதே நடைபெறுகிறது.
மொத்தத்தில் வடக்கு – கிழக்கில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான மணி இனி உரத்து ஒலிக்கும். சிறிதரன் கூறுவது போன்று பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கலாம், எதற்காக?? தேர்தல் கூட்டுக்காக. இது இன்றைய பாராளுமன்ற அரசியலில் எதிர்பார்க்கின்ற அளவுக்கு கதிரைகளை அதிகரிக்க வாய்ப்பில்லை.
தமிழ் மக்கள், தமிழ்த்தேசியத்தின் – தமிழரசுக்கட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இந்த தலமைப்போட்டியினாலும், தனிநபர் வசை பாடுதல்களாலும், வெளிப்படுத்தப்பட்ட வண்டவாளங்களாலும் இழக்கப்பட்டுள்ளது. வீழ்ந்து கிடக்கின்ற தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை சிறிதரனின் இடத்திற்கு சுமந்திரன் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் தூக்கி நிமிர்த்த முடியாது.
விசேடமாக கிழக்கின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் பிரதேசவாதம் அல்ல என்பதை மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலாளர் தேர்வுக்காக விடுத்த கோரிக்கை உறுதிசெய்திருக்கிறது. இது கிழக்கை முதன்மை அரசியல் தளமாகக்கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
நீங்கள் எந்த கட்சியிலும் இருப்பது உங்கள் ஜனநாயக உரிமை. ஆனால் கிழக்கின் உரிமைகள் வடக்கால் பறிக்கப்படுவதை – சொந்த இனத்தால் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருந்து விடாதீர்கள். இதுவும் சிங்களம் தமிழர் உரிமையை மறுப்பதும் ஒன்றல்ல.
இது தமிழன், தமிழன் உரிமையை மறுப்பது……!
கிழக்கான் என்பது மட்டுமே இதற்கு காரணம்….!!
.
—————————–
******************************