கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……!
(மௌன உடைவுகள்-72)
கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……!
(மௌன உடைவுகள்-72)
கிழக்கு அரசியல்:2 கிழக்கின் சமூக, அரசியல் ஐக்கியம்……!
(மௌன உடைவுகள்-72)
— அழகு குணசீலன் —
தமிழரசுக்கட்சியின் / தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சியும், மற்றைய தமிழ்த்தேசிய அணிகளை கிழக்கு மக்கள் முற்றாக நிராகரித்து இருப்பதும் , கிழக்கின் தனித்துவ அரசியல் தலைமைத்துவத்தை மக்கள் வேண்டி நிற்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடு. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியான கொள்கை -கோரிக்கை. இன்று அது வெறும் கோசம். இந்த நிலையில் கிழக்கின் தனித்துவ கட்சிகளுக்கும், தலைமைத்துவங்களுக்கும் முன்னால் உள்ள சவால்கள் என்ன? என்ற கேள்விக்கு சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவும், மற்றும் அரசியல் கட்சிகள் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புடனும் கூடிய ஒன்றுபட்ட செயற்பாடும் என்பதே பதிலாக அமையமுடியும்.
1980 களில் இருந்து ஆயுதப்போராட்டம் கிழக்கின் சமூகங்களுக்கு இடையிலான உறவை சீர்குலைத்திருக்கிறது. இந்த சீர்குலைவு 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. 2009 க்கு பின்னர் ஆயுதம் அற்ற சூழலில் கூட இதைச் சீர் செய்யக்கூடிய எந்த சரியான -பொருத்தமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாததால் சமூகத்தையும், அரசியலையும் தாண்டி கிழக்கின் பொருளாதாரத்திலும் ஒரு பரிணாம தாக்கத்தை அது காட்டி நிற்கிறது. இந்த சமூக, பொருளாதார, அரசியல் காயங்களை ஆறவைப்பதில் சகல சமூகங்களையும் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சிவில் சமூக அமைப்புக்களும் தோற்றுப்போயுள்ளனர். இதற்கான முக்கிய காரணம் இந்த தரப்பினர் அரசியல் தரப்பில் இருந்து போதுமான ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பதாகும்.
கொழும்பு ஆட்சியாளர்கள் சமூகங்களை பிரித்தாளுகிறார்கள் என்று யாழ் .தமிழ்த்தேசிய அரசியல் குற்றம் சாட்டுகின்றது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் கொழும்பு,, யாழ் அரசியல் தலைமைத்துவங்கள் இரண்டையும் குற்றம் சாட்டுகின்றன. இவற்றை விடவும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சக அயல் இனத்தவர்களை குற்றம் சாட்டுகின்றனர். இந்த இடைவெளிக்குள் நுழையும் சகல அரசியல் தலைமைகளும், கட்சிகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இந்த வாதங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். கொழும்பு கிழக்கின் இன உறவுவிரிசலை கண்டும் காணாது இருக்கிறது. அப்படி கண்டு கொண்டாலும் அது சிங்கள சமூகத்தின் நலனுக்கானதாகவே அமைகிறது.
தேர்தலுக்கு வரும் யாழ். தலைமைகள் கிழக்கு தமிழர்களைப்பார்த்து “நாங்கள் தான் உங்களுக்கு பாதுகாப்பு, எங்களோடு இணைந்து இருப்பதே ஒரேவழி” என்று கூறி – முஸ்லீம்கள் குறித்து அச்சத்தை ஏற்படுத்தி கிழக்கின் தனித்துவ அரசியல் உரிமையை மறுதலிக்கின்றனர்- கேள்விக்கு உட்படுத்துகின்றனர். மறுபக்கத்தில் கண்டி முஸ்லிம் தலைமை “நாங்கள் தான் உங்களுக்கு பாதுகாப்பு” என்று முஸ்லீம்களுக்கு சொல்லி தமிழர்கள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தென்னிலங்கை தேசிய கட்சிகளின் முஸ்லீம் தலைமைகளும் கிழக்கு முஸ்லீகள் தனித்துவமாகச் செயற்படுவதை விரும்பவில்லை. இதனால் இவர்கள் யாரும் கிழக்கில் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை விரும்புவதாகவோ, அதற்கான நீண்ட கால நோக்கிலான அரசியலைச் செய்வதாகவோ தெரியவில்லை. கிழக்கை முதன்மைப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் தமக்குள் மோதிக்கொள்கின்றன. குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக கொழும்பில் நீதிகோரி நிற்கின்றன.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் அக்கறையுள்ள தமிழ், முஸ்லீம் அரசியல் தலைமைகள் ஒன்று பட்டு செயற்படவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிழக்கு தனித்துவம் பேசுகின்ற, முஸ்லிம் கட்சிகளோ, தமிழ்கட்சிகளோ அவற்றின் தலைமைத்துவங்களோ ஒற்றுமையாக இல்லை. . விளைவு: தமிழ் தரப்புக்குள் தனித்துவத்தை தடுக்க வடக்கு நுழைகிறது. முஸ்லீம் தரப்புக்குள் தனித்துவத்தை தடுக்க தென்னிலங்கை நுழைகிறது. அத்துடன் தனித்துவம் பேசும் இரண்டு தரப்பையும் கொழும்பு தனக்கேற்றவாறு கையாளுகிறது.
கிழக்கின் இந்தச் சூழலில் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற தமிழ்க் கட்சிகளும், தலைமைகளும் முதலில் தமக்குள் ஒன்று பட வேண்டும். மறுபக்கத்தில் தனித்துவத்தைப் பேண முஸ்லீம் கட்சிகளும், தலைமைத்துவங்களும் தமக்குள் ஒன்று படவேண்டும். இது முதல்கட்டம்.
அடுத்த கட்டம் பொதுவான ஒரு கொள்கையின் கீழ் இரு தரப்பினரும் கொள்கை அடிப்படையிலாவது ஒரு இணக்கத்தை காணவேண்டும்.
இது எழுதுவதுபோன்று, அல்லது பேசுவது போன்று அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் அரசியலில் அறத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்தால் அடையமுடியாத இலக்கும் அல்ல. இது ஒரு கரடுமுரடான, ஏற்ற இறக்கங்களை கொண்ட, வளைவுகளையும், நெளிவுகளையும் , பள்ளம், படுகுழிகளையும் கொண்ட ஒரு கஷ்டமான அரசியல் பாதை.
கிழக்கு மாகாணத்தில் தனித்துவம் பேசுகின்ற அரசியல்தலைமைகள் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை கவனத்தில் எடுத்து தீர்க்கமான ஒரு செயற்பாட்டு அரசியலுக்கு பொது இணக்கம் காணவேண்டும். குறிப்பாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள், வியாழேந்திரன் அணி, கருணா அணி, அகில இலங்கை தமிழர் மகாசபை போன்றவை இந்த ஒன்றிணைந்த செயற்பாட்டில் தங்கள் பங்களிப்பை வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும். கிழக்கின் தனித்துவம் பேசிக்கொண்டு, அதே தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசியல் அணிகளுடன் ஒரு கூட்டு வேலைத்திட்டத்திற்கு தயாராக இல்லை என்றால் அது கிழக்கின் தனித்துவ அரசியலுக்கு பலம் சேர்க்கும் அரசியலாக அமையாது.
கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே அந்த கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளன. அதற்கான மாற்றை வேண்டி நிற்கின்றன. இந்த வாய்ப்பை கிழக்கு அரசியல் பயன்படுத்த வேண்டுமானால் தமிழ்த்தேசிய அரசியல் முரண்பாடுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 2020 தேர்தலில் கிழக்கில் மேற்குறிப்பிட்ட சக்திகள் ஒன்றிணைந்து, ஒரு கூட்டாக ஒரு தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் கிழக்கின் தேர்தல் முடிவுகளில் இன்னும் சாதகமான தாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஆகக் குறைந்த பட்சம் தேசிய கட்சியொன்றில் கிழக்கு அரசியலை முதன்மைப்படுத்தி போட்டியிட்ட வியாழேந்திரனை ஒரு புரிந்துணர்வுடன் தவிர்த்துக் கொண்டாலும், தமிழர் மகாசபை அணியுடன் ரி.எம்.வி.பி. ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியாமல்போனது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
அம்பாறையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் போட்டி தவிர்ப்பு இருந்தது ஆனால் ஆதரவு இருக்கவில்லை என்று தமிழர் மகாசபை குறை கூறுகிறது. தங்களது பட்டியலுக்கு ஒரு வேட்பாளரைக்கேட்டிருந்தபோதும் அதைக்கூட ரி.எம்.வி.பி. செய்யத்தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுபக்கத்தில் மட்டக்களப்பில் கருணா அணி தனித்து போட்டியிட்டதால் கிழக்கு அரசியலுக்கான வாக்குகள் பிரிக்கப்பட்டன. இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியவையே.
திருகோணமலையில் தமிழர் மகாசபை வெறும் 652 வாக்குகளை மட்டுமே பெறக்கூடியதாக இருந்தது. மட்டக்களப்பிலும் சுயேட்சை இல.10 பெற்ற வாக்குகள் 1303 மட்டுமே. சுயேட்சை குழு ஒன்று பெற்ற அதிகூடிய வாக்குகள் இவை.அம்பாறையில் தமிழர் மகாசபை 29,379 (கருணா) வாக்குகளைப்பெற்றது.
இந்த விபரங்கள் மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி.யும், அம்பாறையில் அகில இலங்கை தமிழர் மகாசபையும் பலமாக இருந்திருப்பதைக் காட்டுகின்றன. மாறாக திருகோணமலையில் இரு தரப்பும் மிகப் பலவீனமாக இருந்திருக்கிறார்கள். மட்டக்களப்பில் போட்டி தவிர்ப்பு செய்து கருணா அணி ரி.எம்.வி.பி. க்கு ஆதரவளித்திருந்தால் அந்த 1303 வாக்குகள் ஏற்படுத்தியிருக்கக்கூடியதாக்கம் எவ்வாறு அமைந்திருக்கும்.?
இவ்வாறான ஒரு பொது இணக்கப்பாடு காணப்பட்டிருந்தால் சிலவேளைகளில் இன்னும் சில சுயேட்சைகளை தவிர்த்திருக்கவும், கிழக்கின் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கும். அரசியல் பேரம்பேசுதல் பலத்தின் அடிப்படையிலானது. யாருக்கு, எந்த கட்சிக்கு எங்கு பலம் இருக்கிறது என்பதை புறம்தள்ளி ஒரு இணக்கப்பாட்டை காணமுடியாது. இதனால் இந்த விடயத்தில் தமிழர் மகாசபையும் பேரம்பேசலில் யதார்த்தமாக இருந்திருக்கவேண்டும். இன்னொரு பக்கத்தில் கடந்த தேர்தலில் பிள்ளையான் சிறையில் இருந்ததால் தானே நேரடியாக சில விடயங்களை கையாள முடியாத நிலை இருந்ததாகக் கூறப்படுவதையும் முற்றாக நிராகரிக்க முடியாது.
எது எப்படியோ இனிவரும் காலங்களில் இவை படிப்பினையாக அமையவேண்டும். இந்த படிப்பினையில் இருந்து ரி.எம்.வி.பி.மட்டும் அல்ல தமிழர் மகாசபையும், கருணாவும் ஏன் வியாழேந்திரனும் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. மட்டக்களப்பு தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக “வியாழேந்திரன் வெற்றி பெறுவார், பிள்ளையான் தோல்வியடைவார்” என்று கருணா சோதிடம் சொன்னார். ஒரு அரசியல் தலைமைத்துவத்தின் அரசியல் சாணக்கியத்தில் இந்த வார்த்தைகளின் பெறுமதி என்ன….? கிழக்கின் அரசியல் ஐக்கியத்தில் இதன் பங்கு என்ன?
கிழக்கில் சமூகங்களுக்கு இடையிலான ஐக்கியமானது பெருமளவுக்கு அரசியலாலேயே சிதைக்கப்படுகிறது. இது தேர்தல் காலத்தில் இன்னும் மோசமாக இடம்பெறுகிறது. இதனால் கடந்த கால அனுபவங்கள் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அரசியல் ஐக்கியத்தின் ஊடாகவே ஒரளவுக்காவது தணிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் சமூகச் செயற்பாட்டாளர்களும், சிவில் அமைப்புக்களும் கட்சி அரசியல் வலையில் சிக்கி உள்ளனர். உறவைச் சிதைப்பவர்கள் அரசியல்வாதிகளே. இதனால் தேர்தலுக்கு முன்னதாக தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையே ஒரு வெளிப்படையான இணக்கப்பாடு கிழக்கில் சாத்தியமற்றது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் கிழக்கின் பொதுவான, பிரத்தியேகமான பிரச்சினைகளில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன.
கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் பதவியில் இருந்தபோது , ஹிஸ்புல்லாவுடன் கொண்டிருந்த அரசியல் உறவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ்க்கு முதலமைச்சர் பதவியை நிபந்தனைகள் அற்று வழங்கியிருந்த காலத்திலும் கிழக்கின் சமூகங்களுக்கு இடையிலான உறவுகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் நாயும், பூனையும் விளையாடவில்லை.
எனினும் அரசியல்வாதிகளின் வெளிப்படைத்தன்மை அற்ற,நேர்மையற்ற செயற்பாடுகள் அவ்வப்போது சமூகங்களுக்கு இடையே முரண்பாட்டை தோற்றுவித்துள்ளன. இதனால் கிழக்கின் சமூக உறவும்,நல்லிணக்கமும் அரசியல் நல்லிணக்கத்தில் தங்கியிருக்கிறது.
தொடரும்…….!