இனக்கொலை(?)! ஈழத்தமிழரை சர்வதேசம் கணக்கில் எடுக்காதது  ஏன்?                             (மௌன உடைவுகள்-65)

இனக்கொலை(?)! ஈழத்தமிழரை சர்வதேசம் கணக்கில் எடுக்காதது ஏன்? (மௌன உடைவுகள்-65)

— அழகு குணசீலன் —

இஸ்ரேலின் அரசபயங்கரவாதம் பாலஸ்தீனத்தில் மேற்கொள்கின்ற இனப்படுகொலை சர்வதேச  நீதிமன்றத்தை எட்டியிருக்கிறது.  மாரிஉறங்குகாலம் கழிந்து விழித்துக்கொண்டது போல்  தமிழ்த்தேசிய அரசியலுக்குள்  இது மீண்டும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது  புதிதல்ல முன்னர்  மியான்மார் -றோகின்யா இனப்படுகொலைகள் ICJ  ( International Court of Justice) விசாரணைக்கு வந்தபோதும் கேட்ட முணுமுணுப்புத்தான்.

தமிழ் இனப்படுகொலை பற்றி ஆரம்பத்தில்  வெளிப்படையாக பேசிய டயஸ்போரா அமைப்புக்கள்,  நாட்டில் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகள் தற்போது இது குறித்து பேசுவதற்கு “வெட்கப்படுகின்றன”. இந்த வெட்கம் ஒருபக்கத்தில் நியாயமானது. முள்ளிவாய்க்கால் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையில்  இவர்கள் சாதிக்க முடியாததை யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது பாலஸ்தீனம் சாதித்திருக்கிறது. இது வெட்கப்படவேண்டிய விடயம்தானே.

இதுவரை இது  தமிழர் விடயத்தில் சாத்தியமாகாததற்கு காரணம் வெறுமனே டயஸ்போரா அமைப்புக்களினதும், தமிழ்த்தேசிய கட்சிகளினதும் செயற்பாட்டு அரசியல் பற்றாக்குறை, பலவீனம் மட்டும்தானா? அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத -அரசியல் பலவீனம் விட்டுச்சென்ற கடந்தகால விளைவுகளுக்கு இதில் பொறுப்பில்லையா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது.  பாலஸ்தீனத்தின 

ஹமாஸ் அமைப்பு பயங்கரவாத இயக்கமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்று. விடுதலைப்புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு.

அப்படி இருந்தும் ஹமாஸின் சுடுகலன்கள் ஓயாது சுடுகின்ற நிலையிலும் பாலஸ்தீனத்தால் இந்த இனப்படுகொலை விசாரணை இலக்கை அடைய முடிந்திருக்கிறது. புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின்னரும், ஜனநாயக பாராளுமன்ற அரசியலுக்கு தமிழ்த்தேசிய கட்சிகள் சுதந்திரமாக திரும்பிய பின்னரும்,  டயஸ்போரா அமைப்புக்கள் உலகம் முழுவதும் இருக்கின்ற போதும்   நெதர்லாந்தின் – ஹேக் நீதிமன்றத்தின் வாசற்படியைக்கூட  ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய அரசியலும் தொடவில்லை.

இங்கு தான் புலிகளின் கடந்த கால ஆயுத -அரசியல் பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தை திரும்பிப்பார்க்க வேண்டி உள்ளது. பாலஸ்தீன விடுதலைப்போராட்டத்திலும், ஈழ விடுதலைப் போராட்டத்திலும் உள்ள வேறுபாடுகளை தேட வேண்டியதாகிறது.  விடுதலைப்புலிகளின் ஜனநாயக -பன்மைத்தன்மை அரசியலை மறுத்த “ஏகபோகம்” இங்கு முக்கிய காரணமாகிறது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் ஈழப்போராட்ட இலக்குகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய எந்த ஒரு போராட்டச் சக்திகளையும் புலிகள் விட்டுவைக்கவில்லை.

 புலிகளுக்கு பின்னால் நின்று அனைத்து வன்முறைகளையும்,

 பயங்கரவாத நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களையும், ஜனநாயக மறுப்புக்களையும் நியாயப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொண்ட தமிழ்த்தேசிய கட்சிகளும், டயஸ்போரா அமைப்புக்களும் சர்வதேசத்தின் முன் வெட்கப்பட்டு, கூனிக்குறுகி நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்களுக்கு இனப்படுகொலை (?) குறித்து சர்வதேசத்தின் ஆதரவைக் கோருவதற்கான அருகதை உண்டா என்றால், இல்லை என்பதே பதிலாக முடியும். 

அப்பாவி சிங்கள மக்களும், முஸ்லீம் மக்களும் புலிகளால் கொல்லப்பட்டபோது வீரம் பேசியவர்கள் இவர்கள். இஸ்ரேலியர்கள் 600 பேர் இஸ்ரேலின் வன்முறை பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை என்று நீதிமன்றம் வந்து சாட்சியமளிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால்  இது பாலஸ்தீனர்களின் அரசியலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியல்லவா? தமிழின படுகொலைக்கு ஒரேஒரு சிங்களவரை அல்லது முஸ்லீமை  சாட்சியத்திற்கு கொண்டு வர தமிழ்த்தேசியத்திற்கு முடியமா?

பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கும், பாலஸ்தீன-  மேற்குகரை ஆட்சி அதிகார  அப்பாஷ் தலைமையிலான விடுதலை அமைப்புக்கும் கொள்கை முரண்பாடுகள் இருந்தபோதும் எந்த தரப்பும் பாலஸ்தீனவிடுதலையை குத்தகைக்கு எடுத்து ஏகபோக தனியுரிமை கோரவில்லை. ஹமாஸ் இஸ்ரேலுடனான சமாதான உடன்பாட்டை நிராகரித்தாலும், அப்பாஸின் நிர்வாகத்தை தடைசெய்யவில்லை. சர்வதேசம் அப்பாஸ் நிர்வாகத்தை அத்கீகரித்து பேச தயாராய் இருக்கிறது. காரணம் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பாலஸ்தீன தனியரசு நிர்வாகம்.

 இந்த வகையில்  புலிகள் இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டை நிராகரித்தாலும் , வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாண சபையின் இயக்கத்தை தடை செய்யாமல் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு மாற்று அரசியலை அங்கீகரித்திருந்தால்  ஒரு சமாந்தர ஜனநாயக அரசியல் இருந்திருக்கும். முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மக்களாலும், இந்தியாவிலும், சர்வதேசத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிர்வாகக்கட்டமைப்பு  வடக்கு கிழக்கில்  செயற்பட வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் புலிகளின் ஏகபோக அரசியல் மாற்று அமைப்புக்களையும் அழித்து அவர்களையும் அழித்து மக்களை சந்தியில் விட்டிருக்கிறது.

  சுய  பூகோள அரசியல் நலன் சார்ந்ததாயினும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஒரே நாடு இந்தியா.  அன்று இந்திய நலனை எதிர்த்த தமிழ்த்தேசியம் இன்று சீனாவுக்கு எதிராக அதை  அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.  பாலஸ்தீனத்தில் நெல்சன் மண்டேலா காலம் முதலான தென் ஆபிரிக்க உறவு போன்று, ஈழத்தில் இந்திராகாந்தி உறவு இருந்தது. இந்தியாவை சரியாகப் பயன்படுத்தும்  இராஜதந்திரம் இல்லாததினால்  புலிகளால் இந்திய முரண்பாடு வளர்க்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான புலிகளின் செயற்பாடுகள் நவீன உலகின் ஜனநாயக விழுமிய அரசியல் ஒழுங்கிற்கு எதிரானவை என்றே சர்வதேசத்தால் இனம்காணப்பட்டுள்ளது.

புலிகளும், அவர்களின் பினாமிகளும்  “கண்களை மூடிக்கொண்டு பால்குடித்தபோது” இந்தியாவும், சர்வதேசமும் விழிப்பாக இருந்தன. இதில் புலிகள் நிதானத்தை கடைப்பிடித்திருந்தால் இனப்படுகொலை விவகாரத்தை இந்தியா ஊடாக வடக்கு கிழக்கில் அணுகக்கூடிய ஒரு நிர்வாகக்கட்டமைப்பு செயற்பட்டிருக்கும். இந்தியா அதன் வாக்குறுதிகளை வழங்குவதற்கான நெருக்கடியை அது வழங்கியிருக்கும். பக்கத்துத் தண்ணீரில் நஞ்சைக்கலந்து விட்டு ஆபத்துக்குதவாத தூரத்து தண்ணீரை நாடி காலம் கடத்த வேண்டிய தேவை தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்டிருக்காது. 

மேற்குலக நாடுகள் எவையும் தங்கள் நாடாளுமன்றத்தில் அல்லது உள்ளூராட்சி அமைப்புக்களில் இனப்படுகொலை பற்றி பேசலாம். ஆனால் இவை இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு போகத்தயாராய் இல்லை.  நீதி மன்றத்தின் சாதகமான தீர்ப்பு இன்றி இனப்படுகொலை சட்டரீதியான சர்வதேச அங்கீகாரத்தைப்பெற முடியாது. 

மேற்குலக நாடுகளின் நோக்கம் தங்கள் நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளைப்பெறுவதும் அதற்காக அவர்களை தங்கள்  கட்சியில் வேட்பாளர்காக  நிறுத்துவதும்தான். இந்த நடைமுறை அரசியலுக்கும் இலங்கை அரசியலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இது ஆட்சி அதிகார வர்க்கத்தின் பொதுக்குணாம்சம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளிட்ட எந்த ஒரு டயஸ்போரா அமைபுக்கும் தாங்கள் வாழுகின்ற மேற்குலக நாடுகளைக்கூட கையாளுகின்ற திறன் இல்லை. அந்த நாடுகள் தங்கள் தேவைக்கு இவர்களைக்கையாளுகின்றன.

 இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று கூறுகின்ற கனடா அதை  சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஏன் தயங்குகிறது? அல்லது இங்கிலாந்து ஏன் தயங்குகிறது? அமெரிக்க எஜமானின் கடைக்கண்பார்வை இல்லாமல் இவர்களால் இதைச்செய்யமுடியாது. சர்வதேசத்தில்  ஈழத்தமிழர்களுக்காக அமெரிக்காவை மீறிச் செயற்படக்கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. புலிகளின் வாலைப்பிடித்து தொங்கி தமிழ்த்தேசிய அரசியல் அதையும் தொலைத்துவிட்டு அநாதரவாக நிற்கிறது. அமெரிக்காவில் இயங்கும் (?) நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மேற்குலக டயஸ்போரா அமைப்புக்களும் இந்த இயலாமையை மறைத்து தங்களின் வெறுமையை நிறைவாக காட்சிப்படுத்துகின்றன. இதை அறியாத, அரசியல் மயப்படுத்தப்படாத மக்கள் மேற்கு நாடுகளின் தேசியக் கொடிகளை  வன்னியில் பறக்க விடுகின்றனர்.

பாலஸ்தீன மக்கள், போராட்ட அமைப்புக்களின் வேறுபட்ட அணுகுமுறைகளை ஆதரித்தாலும் ஒட்டு மொத்த பாலஸ்தீன விடுதலையில் ஒன்றாக நிற்கிறார்கள். இங்கு மக்கள் திரட்சி காணப்படுகிறது. அனைத்து இழப்புக்களையும் தாங்கி விடுதலையை நேசிக்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியலில் மக்கள் திரட்சி இல்லை. பொன்னும், பொருளும், ஆளும் தாருங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது.

மியான்மார் இனப்படுகொலையை இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் ஆதரவுடன் காம்பியா ICJ க்கு எடுத்து வந்தது. தற்போது தென் ஆபிரிக்கா பாலஸ்தீன இனப்படுகொலையை கொண்டு வந்திருக்கிறது. பூகோள அரசியலுக்காக மியான்மார் இனப்படுகொலை விசாரணையை ஆதரித்த அமெரிக்கா, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலை விசாரணையை ஆதரிக்கவில்லை. மியான்மார் விவகாரத்தில் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரித்தானியா, கனடா என்பன காம்பியாவுடன் இணைந்து செயற்பட்டன. இந்த நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தொகை, உள்ள டயஸ்போரா அமைப்புக்களின் எண்ணிக்கை என்பனவற்றுடன் பார்க்கையில் வருடா வருடம் சைக்கிள் காவடியுடன், ஜெனிவாவில் கொடிபிடிப்பதுடன் எல்லாம் முடிந்து விடுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா சமர்ப்பித்துள்ள இனப்படுகொலை ஆவணம் 84 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் , 1948 ம் ஆண்டின் ஐ.நா. பிரகடனத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாகவும், அதற்கு வகைதொகையற்றவகையில் ஆதாரங்கள் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாலஸ்தீன மக்கள், குறிப்பாக பிள்ளைகள் மீதான கொலைகள், வீடழிப்பு, காஸாவில் இருந்து கட்டாய வெளியேற்றம், உணவு, நீர் விநியோகம், மருந்து, வைத்தியவசதிகளுக்கானதடை,  கற்பிணிப்பெண்கள் – குழந்தைகளுக்கான பாதிப்புகள், பாலஸ்தீன பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விபரங்கள் தென் ஆபிரிக்காவினால் பட்டியல் இடப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் 75 ஆண்டுகால இனவெறி, 56 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, 16 ஆண்டு காலமாகத்தொடரும் பாலஸ்தீனதேசத்திற்கு எதிரான செயற்பாடுகள் என்பனவும் தென்னாபிரிக்க ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இங்கு தென்னாபிரிக்கா நீதிமன்றத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை இனப்படுகொலையா? இல்லையா? என்பது குறித்த நீதிமன்றதீர்ப்பல்ல.  அது நீண்ட காலத்தில் காணப்படவேண்டியது. அதற்கு முன்னர் இஸ்ரேல் மேலும்  குற்றங்களை செய்வதை தடுக்க ICJ அவசரமாக தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கபடுவது நிறுத்தப்படவேண்டும். இது தண்டனையின்றி இஸ்ரேலால் தொடர்ந்தும் மீறப்படுகிறது என்று அந்த ஆவணம் கூறுகிறது. 

15 நீதிபதிகளால் இனப்படுகொலை குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது தரப்பு வாதத்தை ஆரம்பித்து தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டை  நிராகரிக்கவேண்டும் என்று நீதிமன்றைக் கேட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, ஜேர்மனி, ஜமேக்கா, ஜப்பான், லெபனான், மொரோக்கோ, சொலவாக்கியா, சோமாலியா, உகண்டா நாடுகளை நீதிபதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இஸ்ரேல் இந்த வழக்கை “அபத்தமானது”, “இரத்த அவதூறு” என்று கூறியுள்ளது. வழக்கை தாக்கல் செய்த  தென்னாப்பிரிக்க நீதிபதி “காஸாவில் 23,000 மக்களை கொன்றதை இஸ்ரேலின் “தற்காப்பு” நடவடிக்கை என்று எவ்வாறு கூறமுடியும் என்று  சந்திப்பொன்றில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் அன்ரனி பிளிங்கனிடம்  திருப்பிக்கேட்டு தற்காப்பு வாதத்தை நிராகரித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக மலேசியா, துருக்கி, ஜோர்டான், பொலிவியா, மாலைதீவு, நமீபியா, பாகிஸ்தான், கொலம்பியா, மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு OIC கருத்து வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தென்னாப்பிரிக்காவின் இந்த செயல் விருப்பத்திற்குரியதல்ல. இவை இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என்று கூறியுள்ளன. வழக்கம் போல் இஸ்ரேலைப்பாதுகாப்பதற்கான அனைத்தையும் இவை அமெரிக்கா தலைமையில் செய்ய வாய்ப்புள்ளது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா…..?

இலங்கையில் இறுதியுத்தத்தில் தமிழர்களுக்கு  எதிராக நடந்தது இனப்படுகொவையா? இல்லையா? என்பதை இறுதியில் தீர்மானிப்பது நீதிமன்றம். அதற்கு முன்னர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு பாதிக்கப்பட்ட தரப்பை அல்லது ஆதரவான தரப்பை சார்ந்தது.  தமிழன் இல்லாத நாடில்லை என்று  “தமிழண்டா….” அரசியல் செய்கின்ற தமிழ்த்தேசிய அரசியல் இது விடயத்தில் உள்ளும், வெளியும் தோற்றுப்போய்விட்டது.

“இனப்படுகொலை” என்ற வார்த்தையை யாரும் உச்சரிக்கலாம். 1948 பிரகடனத்தின் பிரகாரம் இனப்படுகொலை என்று வரையறுப்பதற்கு அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதைச் செய்யாமல் அந்தநாடு சொல்கிறது….. இந்த நாடு சொல்கிறது….. என்பதெல்லாம் சர்வதேச சட்டவரையறைக்கு உட்பட்டவை அல்ல. இலங்கையில் இனப்படுகொலையை நிருபிக்க ஆதாரங்கள் இல்லை என்பதை தமிழரசு தலைமை வேட்பாளர்களுள் ஒருவரான சுமந்திரன் எம்.பி. எப்பவோ சொல்லிவிட்டார். சொன்னது மட்டும் அன்றி தமிழரசுக்கட்சி இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டு விட்டது.

 தமிழரசுக்கு  எதிர் அரசியல் செய்யும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப்படுகொலை விவகாரத்தை பாரப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆதாரங்கள் இல்லை என்பவர்களை சாடுகிறது.  இதுவரை சர்வதேச நீதிமன்றத்தை நோக்கிய நகர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எத்தனை அங்குலம் நகர்ந்துள்ளார்?  இதே நிலைதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், டயஸ்போரா அமைப்புக்களும் உள்ளன. இனப்படுகொலை பேச்சளவில் உள்ளதேயன்றி செயலளவில் இல்லை. இதற்கு காரணம் இவர்களுக்கு சர்வதேச நேசசக்திகள் இல்லை. இனப்படுகொலையை நிருபிப்பதற்கான போதுமான ஆதாரங்களும், சாட்சியங்களும் இவர்களகளிடம் இல்லை. இதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்காமல் “இனப்படுகொலை” என்ற வார்த்தை நிலத்திலும், புலத்திலும் கட்சி அரசியல் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

1990 களில் நிலவிய முப்பதாண்டுகளுக்கு முந்திய பூகோள அரசியல்  பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும்  இன்று இல்லை. இந்த சூழலில் இந்தியாவால் கூட  இலங்கை இனப்படுகொலை (?) விடயத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அது மட்டுமன்றி இலங்கையில் நிகழ்ந்தது  இனப்படுகொலையா…..? என்ற கேள்வி இந்தியாவுக்கு மட்டும் அன்றி சர்வதேசத்திற்கும் உண்டு.  அதையும் மீறி ஒரு அதிசயம் நடந்தால் அது  சீன – இலங்கை -ரஷ்ய அரசியல் உறவுக்கு எதிரான ஒரு அரசியல் பழிவாங்கலாகவே இருக்கும்.